இலங்கையில் டிட்வா சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

டிட்வா சூறாவளி தாக்கி ஐந்து நாட்களுக்குப் பிறகும், 2 டிசம்பர் 2025 அன்று இலங்கையின் கொழும்பில், வெல்லம்பிட்டியவில் அவிஸ்சாவலை வீதியில் வெள்ள நீர் வடியவில்லை.

இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ள டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, இலங்கை வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான பேரழிவின் பிடியில் சிக்கியுள்ளது. உத்தியோகப்பூர்வ மரண எண்ணிக்கை 486ஐத் தாண்டியுள்ளது, 341க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது, உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் நம்பிக்கைகள் மங்கி வருவதைக் காட்டுகின்றன. இறுதி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் படி, வெள்ளிக்கிழமை காலை (6 மணி) நிலவரப்படி, 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 64,483 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 233,015 பேர் தற்போது சுமார் 1,441 தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,303 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும், 52,489 பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளும் பெண்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் மக்களில் 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள் அடங்குவர் என்று யுனிசெஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நோய் பரவல், ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் கடுமையான உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவற்றின் அபாயங்கள் கூர்மையாக அதிகரித்து வருவதாக அது எச்சரித்தது.

உத்தியோகபூர்வமாக பதிவான மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் கடுமையாக பாதிக்கப்பட்ட மத்திய மலையக மாவட்டங்களான கண்டி (118 பேர்), நுவரெலியா (89) மற்றும் ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை (83) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இங்கு பெருந்தொகையான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிதைந்து வரும், பிரிட்டிஷ் காலத்து லயின் அறைகளில் வசிக்கின்றனர்.

2004 சுனாமியை நினைவூட்டும் வகையில் இதயத்தை பிளக்கும் காட்சிகள் இப்போது இலங்கை முழுவதும் வெளிவருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் முன்னர் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கும்போது அதிர்ச்சியூட்டும் கணக்குகள் தொடர்ந்து வெளிவருகின்றன.

இடிபாடுகளில் இருந்து டஜன் கணக்கான உடல்கள் மீட்கப்பட்டதாக உறவினர்கள் விவரிக்கின்ற அதேநேரம், சவக்கிடங்குகள் நிரம்பியுள்ளதாலும் ஊழியர் போதாமையாலும் பல பிரதான மருத்துவமனைகள் சடலங்களை கொண்டு வருவதை நிறுத்துமாறு குடும்பங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில், சிதைவு காரணமாக -தலைகள் அல்லது விரல்கள் போன்ற பாகங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன- உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுகின்றன.

இந்த மோசமான நிலைமைகளுக்கு மத்தியில், சமூகங்கள் உயிரிழந்தவர்களை பெரும்பாலும் பலரை ஒரே புதைகுழியிலும் மருத்துவ பரிசோதனை இல்லாமலும், உடனடியாக அடக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை, குடும்பங்களிடையே கோபத்தையும் விரக்தியையும் தூண்டுகின்றன.

உடல்கள் இன்னும் மீட்கப்பட்டு வருவதோடு பல பகுதிகளுக்கான போக்குவரத்து இன்னமும் தடைபட்டுள்ளதால், உண்மையான மரண எண்ணிக்கை நிச்சயமற்றதாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள்தொகை பதிவுகளுடன் ஒப்பிடுவது மட்டுமே, இறுதியில் துன்பத்தின் அளவை தீர்மானிப்பதற்கான ஒரே வழியாக இருக்கலாம். புல்டோசர்கள் மற்றும் கனரக இயந்திரங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, குடியிருப்பாளர்கள் மண்வெட்டிகள் மற்றும் வெறும் கைகளால் இடிபாடுகளை தோண்டி எடுப்பதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களும் காட்டுகின்றன.

சில பகுதிகளில் வெள்ள நீர் குறைந்து வந்தாலும், மத்திய மாகாணத்தில் நூற்றுக்கணக்கான பிரதான வீதிகள் மற்றும் ரயில் வலையமைப்பின் பெரும்பகுதி நீரில் மூழ்கி அல்லது கடுமையாக சேதமடைந்து, போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய், மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது. இரண்டாம் நிலை மற்றும் குறுகிய வீதிகள் இடிந்து விழுந்ததாலும், அடித்துச் செல்லப்பட்டதாலும் அல்லது வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் தடைப்பட்டதாலும் பல கிராமங்கள் அருகிலுள்ள நகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.

2 டிசம்பர் 2025 அன்று டிட்வா சூறாவளிக்குப் பிறகு, இலங்கையின் கொழும்பில் உள்ள வெல்லம்பிட்டியில் ஒரு கவச வாகனத்தில் இராணுவம் ரோந்து செல்கின்றது.

மேலும், பல பிராந்தியங்களில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதனால் உயிர் பிழைத்தவர்கள் உதவிக்கு அழைக்க முடியாமல் போனது. மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து கூறிக்கொண்டாலும் உணவு, குடிநீர் மற்றும் வெளியேற்றத்திற்கான தொடர்ச்சியான வேண்டுகோள்கள், மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த நிவாரண நடவடிக்கை இல்லாததை எடுத்துக்காட்டுகின்றன.

களனி ஆறு பெருக்கெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் வாழும் இலட்சக்கணக்கானோர் - பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நகர்ப்புற ஏழைகள் - அரசாங்கம் சரியான நேரத்தில் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் தவறிய பின்னர், அவர்களாகவே இடம்பெயர்ந்துள்ளனர். 70 சதவீதம் கடல் மட்டத்திற்கு கீழே அமைந்துள்ள கொலன்னாவ, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இங்கு 1 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அரசாங்க அமைச்சர்கள் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்திய போதிலும், அவர்கள் இல்லாத நிலையில் வீடுகள் அல்லது உடமைகளைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியில் பலர் கூறுகின்றனர். தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகம் உட்பட ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், நீண்டகாலமாக வாக்குறுதியளித்த வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டன. பணக்கார தொழில்துறை சார்ந்தவர்கள் மற்றும் முதலீட்டாளர்களால் தேடப்படும், வணிக ரீதியாக மதிப்புமிக்க நிலத்தில் இருந்து தொழிலாள வர்க்க சமூகங்கள் வெளியேறுவதற்கு நெருக்குவதற்காக அதிகாரிகள் இந்தப் பகுதியைப் புறக்கணித்ததாக குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலட்சக்கணக்கானோர் பேரழிவு ஏற்பட்டபோது அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர, அனைத்தையும் இழந்துள்ளனர். பல ஆண்டுகளாக கடின உழைப்பால் வாங்கிச் சேர்த்த தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ள நீர் மற்றும் நிலச்சரிவுகளால் அடித்தளங்களும் சுவர்களும் பலவீனமடைந்துள்ளதால், வீடுகள் இன்னும் உடையாமல் இருக்கும் இடங்களில் கூட, அவற்றின் ஸ்திரத்தன்மை நிச்சயமற்றதாக உள்ளன.

ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நீரில் மூழ்கியுள்ளன, அவற்றின் உபகரணங்கள் மற்றும் சரக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. பலருக்கு, மறுகட்டமைப்பு செய்ய முடிந்தால், அதுவும் பல ஆண்டுகள் ஆகலாம். போதுமான உதவி இல்லாமல், பலர் திவால்நிலையை எதிர்கொள்கின்றனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகவால் கடமையில் இறக்கப்பட்டுள்ள 25,000 துருப்புக்களைத் தவிர, கிட்டத்தட்ட எந்த முறையான மீட்புக் குழுக்களும் களத்தில் இல்லை. கிராமவாசிகள், தொழிலாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்களுமாக தப்பிப்பிழைத்தவர்களே உதவிகளை வழங்கிக்கொள்கின்றனர். அன்புக்குரியவர்களின் இழப்பை நினைத்து வருத்தப்படும் அதேவேளை, அவர்கள் உணவு, உடை, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வருகின்றனர். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தாங்களாகவோ அல்லது அண்டை வீட்டாரின் உதவியுடன் வீடுகளை சுத்தம் செய்து திருத்திக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பேரழிவின் முழு பொருளாதார செலவும் இன்னும் தெரியவில்லை. செவ்வாயன்று, டெய்லி மிரர் பத்திரிகை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, 'எல்லாத் துறைகளிலும் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிக்க உலக வங்கியுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது' என்று கூறியதாக மேற்கோள் காட்டியது. பாலங்கள், ரயில் பாதைகள், வீதிகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தொழில்துறைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, இறுதிச் செலவு நூற்றுக்கணக்கான பில்லியன் ரூபாய்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய திசாநாயக, மீட்புக்கான செலவை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள வெகுஜனங்களே தாங்க வேண்டி வரும் என்பதை சமிக்ஞை செய்தார். இழிந்த முறையில் அவசரகால நிலையை நியாயப்படுத்திய அவர், 'நமது நாட்டை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப' 'சட்டப் பாதுகாப்பு மற்றும் நிதி ஒதுக்கீட்டை வழங்குவது' அவசியம் என்று கூறினார். அவசரகால அதிகாரங்களை அடக்குமுறையாகப் பயன்படுத்த மாட்டோம் என்று அவர் உறுதியளித்த போதிலும், நாட்டை 'மீண்டும் கட்டியெழுப்புதல்' என்ற போர்வையில் ஆழமான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்பது உறுதி.

திங்களன்று, திசாநாயகவின் அமைச்சரவை, புனரமைப்பை மேற்பார்வையிடும் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக, 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான' நிதி என்பதை உருவாக்க ஒப்புதல் அளித்தது.

குறிப்பாக, தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை அமைத்தல், வளங்களை ஒதுக்குதல் மற்றும் நிதியை வழங்குதல் ஆகியவற்றைச் செய்யும் அதன் நிர்வாகக் குழுவில், இலங்கையின் சில பணக்கார வணிகர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களில் ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகராக துமிந்த ஹுலங்கமுவ (இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்); மோகன் பண்டிதகே (ஹேலிஸ் குழுமத்தின் தலைவர்); மற்றும் கிரிஷான் பாலேந்திரா (ஜோன் கீல்ஸின் தலைவர்) ஆகியோர் அடங்குவர். சர்வதேச நாணய நிதிய திட்ட நிரலின் தீவிர ஆதரவாளர்களான அவர்கள் அனைவரும், 'மறுசீரமைப்பு' நிதிகள், சூறாவளியால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதை விட, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதில் அக்கறை கொண்டவர்கள் ஆவர்.

இந்த பேரழிவு, வளிமண்டலத் திணைக்களத்தின் ஆரம்ப எச்சரிக்கைகளை அலட்சியம் செய்த ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு மட்டுமன்றி, இழந்த வெகுஜன ஆதரவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த துயரத்தைப் பயன்படுத்த இப்போது முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும், ஏற்கனவே ஒரு அரசியல் நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ளது

திங்களன்று, ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) ஏனைய கட்சிகளும் பாராளுமன்ற வெளிநடப்பு செய்து, அவசரக் கொள்கை பிரதிபலிப்புகள் குறித்த விவாதத்தை அரசாங்கம் தடுத்ததாகக் குற்றம் சாட்டினர். நிர்வாகம் ஆரம்பகால முன்னறிவிப்புகளில் செயல்படத் தவறிவிட்டதாக அவர்கள் கூறினர். இது உண்மையானதாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் எதுவும் தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் வித்தியாசமாக பதிலளித்திருப்போம் என்று நம்பத்தகுந்த முறையில் கூற முடியாது. கடந்த கால, காலநிலை தொடர்பான பேரழிவுகளின் போது இதே கட்சிகளின் தலைமையிலான முந்தைய அரசாங்கங்களின் தோல்விகளை மில்லியன் கணக்கான இலங்கையர்கள் தெளிவாக நினைவில் வைத்துள்ளார்கள்.

இன்றும் கூட, முந்தைய பேரழிவுகளில் அனைத்தையும் இழந்த பலருக்கு இன்னும் சரியான வீட்டுவசதி இல்லை. பல தசாப்தங்களாக, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், காலநிலை மாற்ற அச்சுறுத்தலைப் புறக்கணித்து, மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளை நிராகரித்து, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை கைவிட்டன. 2022 பொருளாதார சரிவு மற்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து இன்னும் மீண்டு வரப் போராடும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏற்கனவே ஒரு மிகப்பெரிய சுமை சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தப் புதிய பேரழிவு தாக்கியுள்ளது.

சமீபத்திய உலக வங்கி அறிக்கையின்படி, இலங்கையில் வறுமை 2019 முதல் 11.3 சதவீதத்திலிருந்து 24.5 சதவீதமாக இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு, அடிப்படைத் தேவைகள் கட்டுப்படியாகாததாகிவிட்டன. டிட்வா சூறாவளிக்குப் பிறகு, காய்கறி விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளதோடு பிற அத்தியாவசியப் பொருட்கள் அதைத் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏழைகளை பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்குள் தள்ளும்.

தென்கிழக்கு ஆசியா முழுவதும் சுமார் 1,000 மக்களைக் கொன்ற ஒரு பரந்த புயல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் டிட்வா சூறாவளியின் பேரழிவு எண்ணிக்கை, காலநிலை பேரழிவின் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்துகிறது. இலங்கையில், முன்கூட்டிய எச்சரிக்கைகள் இல்லாமை, சிதைந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளமையும் ஒரு இயற்கை நிகழ்வை ஒரு பாரிய சமூகப் பேரழிவாக மாற்றியுள்ளது.

உலக அரங்கில், COP30 உச்சிமாநாட்டில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா இல்லாததும், உச்சிமாநாட்டில் வெற்று வாக்குறுதிகளின் அணிவகுப்பும், முதலாளித்துவ அரசாங்கங்களும் நிறுவனங்களும் புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாகக் குறைக்கவோ அல்லது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அர்த்தமுள்ள பாதுகாப்பிற்கு நிதியளிக்கவோ மாட்டார்கள் என்பதை நிரூபிக்கின்றன. முடிவு தெளிவாக உள்ளது: தொழிலாள வர்க்கம் இலாபத்தை அன்றி, மனிதத் தேவையின் அடிப்படையில் சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்கான போராட்டத்தை ஏற்பாடு செய்யாவிட்டால், காலநிலையில் ஏற்படும் பேரழிவுகள் ஏழைகளைக் கொன்று கொண்டே இருக்கும்.

Loading