முன்னோக்கு

2026-இல் சோசலிசத்திற்கான போராட்டத்தை ஆதரியுங்கள்: உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) புத்தாண்டு நிதிக்கு பங்களிப்பு செய்யுங்கள்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

உலக சோசலிச வலைத் தளமானது, அதன் புத்தாண்டு நிதிக்கு உங்களால் இயன்ற அளவு பெரும் நிதிப் பங்களிப்பை வழங்குமாறு, தனது வாசகர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.

2025-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து, 2026-ஆம் ஆண்டு தீவிரமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் தொடங்குகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழான அமெரிக்கா, உலகெங்கிலும் போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக எதிர்ப்புரட்சியை நோக்கித் தள்ளும் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்குகிறது. குண்டர்கள், பாசிஸ்டுகள் மற்றும் தன்னலக் குழுக்களின் அரசாங்கத்திற்குத் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். பென்டகன் தற்போது இலத்தீன் அமெரிக்கா முழுவதும் இராணுவ மோதலுக்குத் தயாராகி வருகிறது. உண்மையில் இது, படுகொலைகளாகக் கருதப்படும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் செய்து வருவதோடு, மேலும், வெனிசுவேலாவிற்கு எதிரான போருக்காகத் தன்னைத் தயார்படுத்தியும் வருகிறது. அமெரிக்காவிற்குள் ட்ரம்ப் நிர்வாகம், கெஸ்டாப்போ (Gestapo நாஜி ஆட்சியின் கீழ் இருந்த கொடூரமான இரகசிய பொலிஸ் படை) பாணியிலான சோதனைகளில் புலம்பெயர்ந்த குடும்பங்களை சுற்றி வளைத்துப் பிடித்து வருகிறது, அரசியல் எதிர்ப்பைக் குற்றமாக்குகிறது மற்றும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

ஐரோப்பாவில், ஆளும் வர்க்கங்கள் ரஷ்யாவுடன் போரில் ஈடுபடப் போவதாகத் தங்களை திறம்பட அறிவித்துள்ளன. முக்கிய வல்லரசுகள் இராணுவத் தயாரிப்புகளை வேகமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன; ஜேர்மன் ஆளும் வர்க்கம், ஹிட்லரின் மூன்றாவது பேரரசின் (Third Reich) குற்றங்களைக் கழுவித் துடைத்துவிட்டு, பாரிய அளவில் மீண்டும் ஆயுதபாணியாகி வருகிறது. அதே நேரத்தில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் விரிவடைந்து வரும் போர் முயற்சிகளுக்காகப் பில்லியன் கணக்கான நிதியைக் கொட்டுகின்றன. அதே நேரத்தில், மத்திய கிழக்கில், காஸாவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இனப்படுகொலை அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் முழு ஆதரவுடன் தொடர்கிறது.

வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் போர் உந்துதல் என்பது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது தொடுக்கப்படும் போரிலிருந்து பிரிக்க முடியாதது. கடந்த ஆண்டு, பாரிய பணிநீக்கங்கள், சமூகத் திட்டங்கள் மீதான கொடூரமான தாக்குதல் மற்றும் கற்பனை செய்ய முடியாத அளவிலான சமூக சமத்துவமின்மை ஆகியவற்றைக் கண்டுள்ளது. ஏகாதிபத்திய வெளிநாடுகள் மீதான போர் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தைத் தவிர, தான் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு ஆளும் வர்க்கத்திடம் வேறு தீர்வுகள் எதுவும் கிடையாது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு உலகம் முழுவதும், அதிகரிக்கும் கோபம் மற்றும் எதிர்ப்பின் பல வெளிப்பாடுகளை கண்டுள்ளது. ட்ரம்ப்பிற்கு எதிராக “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற மில்லியன் கணக்கான மக்கள்; காஸா இனப்படுகொலைக்கு எதிராகப் போராடிய கோடிக்கணக்கான மக்கள் என இவை நீள்கின்றன. ஆப்பிரிக்காவில், பல நாடுகளில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தச் சூழலில், உலக சோசலிச வலைத் தளம் மிகவும் அவசியமானதாக உள்ளது. உலக சோசலிச வலைத் தளமானது, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அத்தியாவசிய அரசியல் பிரச்சினைகள் குறித்து தினசரி கருத்து மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களில் தீவிரமாகத் தலையீடும் செய்து வருகிறது. அமெரிக்காவில் தபால் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் பாரிய பணிநீக்கங்கள் மற்றும் தொழில்சார் படுகொலைகளுக்கு எதிராக நடத்தும் போராட்டம்; ஜேர்மனியில் பாசிசத்தின் மீள் எழுச்சி மற்றும் அதிதீவிர வலதுசாரி AfD கட்சியின் ஊக்கவிப்பிற்கு எதிராக இளைஞர்களின் பெரும் போராட்டங்கள்; ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட மனிதாபிமானப் பேரழிவிற்குப் பதிலளிக்கும் விதமாக இலங்கையில் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் கோபம்; மற்றும் எண்ணற்ற பிற எதிர்ப்பு வெளிப்பாடுகள் இதில் அடங்கும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களுக்குள் ஒரு வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்கைக் கொண்டு வரும் உலக சோசலிச வலைத் தளம், பிரச்சினையின் மூலக் காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையின் முடிவை இலக்காகக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்திற்காகப் போராடுகிறது.

டிசம்பர் 12-ஆம் தேதி, WSWS, சோசலிசம் AI- எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியது. இது கல்விக்கும், செயற்பாட்டிற்குமான ஒரு கருவியாகும். இது, தொழிலாளர் வர்க்கத்தின் தினசரி அனுபவங்களை கடந்த கால புரட்சியின் பாடங்களுடன் இணைத்து, எதிர்காலப் போராட்டத்திற்குத் தயார்படுத்துகிறது.

பெருநிறுவனங்கள் பாரிய பணிநீக்கங்களைச் செய்யவும், போர் தொடுக்கவும் மற்றும் எதிர்ப்புகளைத் தடுக்கவும் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் நிலையில், சோசலிசம் AI அதற்கு நேர்மாறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது: தொழிலாள வர்க்கத்திற்கு கல்வி கற்பிக்கவும், ஒழுங்கமைக்கவும் மற்றும் அணிதிரட்டவும் இந்த மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு (augmented intelligence) பயன்படுத்தப்படுகிறது.

இந்த வலிமைமிக்க கருவியானது, உங்களது ஆதரவு இன்றி சாத்தியமாகி இருக்காது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. சோசலிசம் AI தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டு, பிற கருவிகளுடன் சேர்த்து WSWS-இன் ஒவ்வொரு பகுதியிலும் ஒருங்கிணைக்கப்படும். புதிய அம்சங்களும் கருவிகளும் ஏற்கனவே தயாரிப்பில் உள்ளன. ஆனால், இப்பணியைத் தொடர —உலக சோசலிசத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்யவும் பலப்படுத்தவும்— எங்களுக்கு உங்களது நிதி உதவி தேவைப்படுகிறது.

அதனால்தான் நாங்கள் இன்று உங்களிடம் இதைக் கேட்கிறோம்: WSWS புத்தாண்டு நிதிக்கு உங்களால் இயன்ற தாராளமான நிதிப் பங்களிப்பை வழங்குங்கள்.

உங்களின் பங்களிப்பானது, WSWS பல மொழிகளில் தினசரி வெளியாவதைத் தொடர்ந்து உறுதி செய்யும்; மிக அவசரமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்த ஆழமான அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு நிதியளிக்கும்; உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் இணைய வழி மற்றும் நேரடி கூட்டங்கள், பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆதரிக்கும்; அரசியல் கல்வி மற்றும் அமைப்பிற்கான தொழில்நுட்பக் கருவிகளின் வளர்ச்சியை முன்னெடுக்கும்; அத்துடன் ஒரு புதிய தலைமுறை புரட்சிகர சோசலிசப் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கவும் அவர்களைத் தயார்படுத்தவும் உதவும்.

எமது வாசகர்கள் அனைவரும் சோசலிசம் AI-க்கு சந்தா செலுத்தி, அதை உங்கள் தினசரி அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். கட்டணச் சந்தாக்கள் இந்தக் கருவியை இயக்குவதற்கான செலவுகளைச் சமாளிக்க உதவுகின்றன. இருப்பினும், WSWS முற்றிலும் இலவசமாகவே தொடர்கிறது; நாங்கள் 100 சதவீதம் எமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நன்கொடைகளையே நம்பியுள்ளோம்.

2026-ஆம் ஆண்டில், அனைத்தும் நாம் என்ன செய்கிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது. சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு அமைப்பும் அரசியல் முன்னோக்கும் தேவை. எதுவும் தானாக நடந்துவிடாது. முதலாளித்துவம் மனிதகுலத்தை மீண்டும் ஒரு முக்கியமான கேள்விக்கு முன்னால் நிறுத்தியுள்ளது: அது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா? என்ற கேள்வியாகும்.

ஒரு நிலைப்பாட்டை எடுங்கள். இன்றே உங்கள் நன்கொடையை வழங்குங்கள். உலக சோசலிச வலைத் தளத்தின் புத்தாண்டு நிதிக்கு ஆதரவளியுங்கள். உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன், தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்கும் போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள்.

Loading