மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரான் மீது வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரும் இராணுவ நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தல்களை உலக சோசலிச வலைத்தளம் வன்மையாகக் கண்டிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசிச, சர்வாதிகாரியாகத் துடிக்கும் ஜனாதிபதி —அவரது சொந்த வார்த்தைகளின்படியும் நியூ யோர்க் டைம்ஸ் செய்தியின்படியும்— ஈரான் மீது ஒரு உடனடி இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருகிறார்.
“ஈரானிய மக்களைப் பாதுகாப்பதற்காகவே” ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துகிறது என்ற மிகவும் சிடுமூஞ்சித்தனமான மற்றும் அபத்தமான சாக்குப்போக்கின் கீழ், இது பகட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
வெனிசுவேலா மீது ட்ரம்ப் கட்டவிழ்த்துவிட்ட குற்றவியல் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டு, அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டு, அந்நாட்டின் பெரும் எண்ணெய் வளம் கைப்பற்றப்பட்ட சில நாட்களிலேயே, அவர் ஈரான் மீது போரைத் தொடங்குவதுக்கு, சில நாட்கள் அல்லது அநேகமாக சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமையன்று டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பென்டகன் ஜனாதிபதி ட்ரம்பிடம் “தெஹ்ரானிலுள்ள இராணுவம் அல்லாத இடங்கள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை” முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ட்ரம்ப் தானாகவே ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாகப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை, வெனிசுவேலாவின் எண்ணெயை வாஷிங்டன் கைப்பற்றியது குறித்து கலந்துரையாடிய அமெரிக்காவின் உயர்மட்ட எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடனான கூட்டத்தின் இடையே, “அவர்களுக்கு எங்கே வலிக்குமோ அங்கே நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்குவோம்” என்று அவர் அறிவித்தார்.
டிசம்பர் 29 அன்று, வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமருடனான போர்க்கால ஆலோசனைக் கூட்டத்தை ட்ரம்ப் நடத்தியபோது, அவரும் அவரது உதவியாளர்களும் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு ஈரானின் அணுசக்தி திட்டத்தையே காரணமாகக் குறிப்பிட்டனர். இப்போது, எவ்விதக் கட்டுப்பாடுமற்ற சிடுமூஞ்சித்தனத்தோடு, ஈரான் மீதான தாக்குதலை நியாயப்படுத்த, அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் அவர், ஹிட்லரின் பாணியில் தன்னை ஒரு “விடுவிப்பாளராக” (liberator) முன்னிறுத்துகிறார்.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியால் உருவான வெகுஜனப் போராட்டங்கள் டிசம்பர் 28 முதல் ஈரானை உலுக்கி வருகின்றன. மேலும் சமீபத்திய நாட்களில் இவை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் ஷியா மதகுருமார்கள் தலைமையிலான முதலாளித்துவ தேசியவாத ஆட்சி, பெருகிய முறையில் ஒடுக்குமுறையுடன் பதிலளித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை முதல், அது இணையம் மற்றும் செல்போன் சேவைகளை முடக்கி, பெருமளவிலான கைதுகளை மேற்கொண்டுள்ளது மற்றும் போராட்டங்களை வன்முறை மூலம் ஒடுக்கி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, “நாசகாரர்கள்” மற்றும் “சதிகாரர்களுக்கு” முன்னால் அரசாங்கம் “பின்வாங்காது” என்று உறுதியளித்தார். போராட்டங்களில் பங்கேற்கும் எவரும் “கடவுளின் எதிரி” என்று கருதப்படுவார்கள் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மரண தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் ஈரானின் அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு வெளியே உள்ள மனித உரிமை அமைப்புகள், டசின் கணக்கானவர்கள் முதல் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் வரை கொல்லப்பட்டதாகப் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளன. அரசாங்கம் தன் தரப்பில், ஒரு டசினுக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதையும், பொலிஸ் நிலையங்கள் மீதான ஆயுதமேந்திய தாக்குதல்கள் என்று அது விவரிக்கும் சம்பவங்களையும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
இஸ்லாமியக் குடியரசின் இந்த அடக்குமுறை —இதுவே அந்த ஆட்சியின் சமூக ஆதரவுத் தளம் சுருங்கி வருவதைக் காட்டுகிறது— மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாக அடிபணியாத ஈரான் மீது மேற்கத்திய ஊடகங்கள் காட்டும் இடைவிடாத விரோதப் போக்கு ஆகியவற்றின் காரணமாக, ஈரானில் நடக்கும் போராட்டங்களைப் பற்றிய துல்லியமான சித்திரத்தைப் பெறுவது கடினமாக உள்ளது.
ஆனால், ஈரானில் உள்ள எந்தவொரு முற்போக்கான போக்கும் ட்ரம்பின் “ஆதரவை” உடனடியாக நிராகரிக்க வேண்டும், அமெரிக்காவின் உடனடி இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலைக் கண்டிக்க வேண்டும். மேலும் ஈரானின் பொருளாதாரத்தை நெரிக்கும் தண்டனைக்குரிய தடைகளை உடனடியாக நீக்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.
ஈரானியத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளிடையே ஆழமான சமூகக் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாமியக் குடியரசு என்பது ஒரு அடக்குமுறை முதலாளித்துவ ஆட்சியாகும். 1979 புரட்சியின் விளைவாக, ஷாவின் கொடுங்கோன்மைமிக்க அமெரிக்க-சார்பு முடியாட்சியின் சர்வாதிகாரம் தூக்கியெறியப்பட்ட பின்னர், அனைத்து இடதுசாரி மற்றும் சுயாதீன தொழிலாள வர்க்க அமைப்புகளையும் வன்முறையில் ஒடுக்கியதன் மூலமே இந்த ஆட்சி பலப்படுத்தப்பட்டது.
சமீபத்திய ஆண்டுகளில், டிசம்பர் 2017-ல் வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக வெடித்த பாரிய போராட்டங்கள் முதல், ஈரானியத் தொழிலாள வர்க்கம் ஒரு போராடும் சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய மாதங்களில் சுரங்கத் தொழிலாளர்கள், எண்ணெய் நிறுவனத் தொழிலாளர்கள், சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் ஈரானில் காண முடிகிறது.
எவ்வாறெனினும், தற்போதைய போராட்ட அலை தொழிலாளர்களால் தொடங்கப்படவில்லை. மாறாக, அயதுல்லா கொமேனியே ஒப்புக் கொண்டதைப் போல, அவர்கள் பஜாரிகளுக்குள்ளே, அதாவது ஈரானிய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த கடைக்காரர்கள் மற்றும் வணிகர்களிடையே தொடங்கின. இவர்கள் பாரம்பரியமாக, கொமேனியின் வார்த்தைகளிலேயே சொல்லப்போனால், இந்த ஆட்சியின் ஒரு தூணாக இருந்து வருபவர்கள்.
தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாதவர்களில் ஒரு பகுதியினர் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தப் போராட்டங்களுக்குள் இழுக்கப்பட்டுள்ள போதிலும், தொழிலாள வர்க்கம் பெருந்திரளாக இதில் தலையிடவில்லை. மிக முக்கியமாக, தனது சொந்த கோரிக்கைகளை முன்வைக்கும் மற்றும் தனது சொந்த வர்க்கப் போராட்ட முறைகளைக் கையாளும் ஒரு சுயாதீன சக்தியாக அது இன்னும் செயல்படவில்லை.
மாறாக, இந்தப் போராட்டங்கள் பெருகிய முறையில் ஒரு வலதுசாரித் தன்மையைப் பெற்று வருவதையே அனைத்தும் உணர்த்துகின்றன. ஈரானுக்குள்ளும், வெளியேயும், பரந்த பிராந்தியத்திலும் உள்ள பிற்போக்குத்தனமான, ஏகாதிபத்திய சார்பு சக்திகளும், வாஷிங்டன் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய தலைநகரங்களும் இவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன.
ஈரானியத் தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2011 இல், எகிப்திய புரட்சியை உந்தித்தள்ளிய எந்தவொரு சமூகக் குறைகளையும் தீர்க்கத் தகுதியற்றவராக, எகிப்திய ஜனாதிபதி முகமது மோர்சி நிரூபிக்கப்பட்டபோது, 2013-ல் அவருக்கு எதிராக எழுந்த பாரிய எதிர்ப்பானது, முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த பிரிவினராலும் இராணுவத்தினராலும் சுரண்டப்பட்டது. இது, ஜெனரல் அல்-சிசி தலைமையிலான ஒரு காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தது. அது, இன்றுவரை தொடர்ந்து ஆட்சி செய்கிறது.
மேற்கத்திய ஊடகங்கள் இப்போது ஷாவின் மகனான “பட்டத்து இளவரசர்” ரேசா பஹ்லவிக்கு போராட்டக்காரர்கள் அளிக்கும் ஆதரவை முன்னிலைப்படுத்துகின்றன. 1978 முதல், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அவர், இஸ்லாமியக் குடியரசின் எதிர்ப்பாளர்களுக்கு “நகர மையங்களைக் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு” அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்ற தனது மிரட்டல்களை நிறைவேற்றுமாறு ட்ரம்பிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க சார்பு முடியாட்சி மீண்டும் வருவதை போராட்டக்காரர்கள் ஆதரிப்பதாகக் காட்டப்படும் சில வீடியோ கிளிப்புகள் போலியானவை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எது எப்படியிருந்தாலும், ஈரானிய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பகுதியினர், ஷாவின் ஆட்சிக் காலத்தைப் போலவே, வாஷிங்டனின் அடிவருடியாகச் செயல்படும் ஒரு கொடுங்கோன்மை முடியாட்சி மீண்டும் வரவேண்டும் என ஏங்குகிறார்கள் என்பதை நிராகரிக்க எந்தக் காரணமும் இல்லை.
இதற்கிடையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேலுடனும் பகிரங்கமாக அணிசேர்ந்துள்ள குர்திஷ் தேசியவாதிகள் ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சக்திகள் வெற்றி பெற்றால், அவை ஒரு புதிய-காலனித்துவ ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வரும். அத்தகைய ஆட்சி, பல தசாப்தங்களாக ஈரானிய மக்களுக்கு எதிராக இடைவிடாத ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதாரப் போர் பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளிடமே ஈரானின் எண்ணெய் வளங்களை ஒப்படைக்கும். சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலுக்கு ஈரானை ஒரு தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கும். மேலும், தொழிலாள வர்க்கத்தை ஈவுஇரக்கமின்றி சுரண்டி ஒடுக்கும்.
ஈரானியத் தொழிலாள வர்க்கத்தால் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையோ அல்லது இஸ்லாமியக் குடியரசின் பொருளாதார இழப்பு மற்றும் அரசியல் ஒடுக்குமுறையையோ பொறுத்துக்கொள்ள முடியாது. ஏகாதிபத்தியம், இஸ்லாமியக் குடியரசின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஈரானிய முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாகத் தலையிட வேண்டும்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள், தங்கள் பங்கிற்கு, ஈரான் மீதான தொடர்ச்சியான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை தளராத உறுதியுடன் எதிர்க்க வேண்டும் —அது நேரடி இராணுவத் தாக்குதலாக இருந்தாலும், இரகசிய நடவடிக்கையாக இருந்தாலும், முதலாளித்துவ மற்றும் மதகுருமார்களின் ஏகாதிபத்திய சார்பு பிரிவினரைச் சாதகமாகப் பயன்படுத்துவதாக இருந்தாலும் அல்லது தொடர்ச்சியான பொருளாதாரப் போர் முறையாக இருந்தாலும் சரி அயராது எதிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும், போரின் மூலமும், அரசு பயங்கரவாதம் மற்றும் ஆட்சி மாற்றத்தின் மூலமும், அமெரிக்காவின் தடையற்ற மேலாதிக்கத்தின் கீழ், ஒரு “புதிய மத்திய கிழக்கை” உருவாக்குவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலின் கூறுகளே ஆகும். இதில், அதன் இஸ்ரேலிய சியோனிச தாக்குதல் நாயும் (attack dog) உடந்தையாக உள்ளது. ஈரானை சூறையாடும் நோக்கம், வெனிசுவேலா மீதான ட்ரம்பின் தாக்குதல் மற்றும் அதன் எண்ணெய் வளங்களை கைப்பற்றியதைப் போலவே, சீனா மற்றும் பிற மூலோபாய எதிரிகளுடனான போருக்கான வாஷிங்டனின் தயாரிப்புகளிலிருந்து பிரிக்க முடியாததாகும்.
இஸ்லாமியக் குடியரசுடன் கணக்குத் தீர்ப்பது ஈரானியத் தொழிலாள வர்க்கத்தின் கடமையாகும். ஆனால் ட்ரம்ப், அவரது பெயரளவு ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களின் மகுடம் சூட்டிய கைக்கூலியான ரேசா பஹ்லவி ஆகியோர் ஈரானிய மக்களை அடிமைப்படுத்தவே விரும்புகிறார்கள்.
கொமேனியும், இஸ்லாமியக் குடியரசின் மதகுருமார்கள் தலைமையிலான ஸ்தாபகமும், தங்களது அடக்குமுறை மற்றும் தவறான ஆட்சியை நியாயப்படுத்த ட்ரம்பின் ஆக்கிரமிப்பையும் அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், உட்பூசல்களால் பிளவுபட்டுள்ள ஈரானிய ஆட்சி, அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எந்தவொரு முற்போக்கான பதிலையும் வழங்க முற்றிலும் இலாயக்கற்றது என்பதை நிரூபித்துள்ளது. ஏனெனில், இறுதி ஆய்வில் இதுவே ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாகும். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அதன் எதிர்ப்பு என்பது, ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டல் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமே.
பல தசாப்தங்களாக, இஸ்லாமியக் குடியரசின் அரசியல் ஸ்தாபகம், இரு பிரிவுகளாகக் கசப்புடன் பிளவுபட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஹஷேமி ரப்சஞ்சானி மற்றும் அவரது சீடரான முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, இப்போது தற்போதைய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஆகியோரின் தலைமையிலான ஒரு பிரிவு, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, கொள்கைவாதிகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினரின் (IRGC) தலைமையிலான மற்றொரு பிரிவு, ஏகாதிபத்தியத்துடன் கடுமையாகப் பேரம் பேசுவதற்காக சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை விரும்புகிறது. கொமேனி ஒரு போனாபார்ட்டிச (Bonapartist) ஆட்சியாளராகச் செயல்பட்டு, ஒரு சமயம் ஒரு பிரிவையும் மறுசமயம் மறுபிரிவையும் ஆதரித்துக் கொண்டு, ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஈரானியத் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கும் இடையில் சூழ்ச்சியாகக் காய்களை நகர்த்தி வருகிறார்.
புரட்சிக்கு அடுத்தடுத்த காலக்கட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கும் கிராமப்புற மக்களுக்கும் வழங்கப்பட்ட சமூகச் சலுகைகளை இரு பிரிவினருமே திட்டமிட்டு அழித்துவிட்டனர். இவர்கள் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான நவ தாராளவாதக் கொள்கைகளை அமல்படுத்தியதன் மூலம், சமூக சமத்துவமின்மை அதிகரித்து வரும் சூழலில் வறுமையையும் பொருளாதார பாதுகாப்பின்மையையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், ஏகாதிபத்தியத்துடனான ஈரானின் மோதலால் ஏற்படும் முழுச் சுமையையும் உழைக்கும் மக்களின் முதுகில் ஏற்றவே இரு பிரிவினரும் முயன்றுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் நடந்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பிறகும், ட்ரம்புடன் ஒரு இணக்கப்பாட்டை எட்ட தெஹ்ரான் தனது முயற்சிகளை இரட்டிப்பாக்கியது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது நிராகரிக்கப்பட்டது. இந்தத் அலட்சியப்போக்கு வர்க்க இயக்கவியலில் வேரூன்றியுள்ளது —தொழிலாள வர்க்கத்திடமிருந்து எழும் அச்சுறுத்தலே இந்த ஆட்சியின் மிகப் பெரிய பயமாகும்.
மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தைத் தோற்கடிக்க, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் —முஸ்லீம்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், அரபுகள், துருக்கியர்கள், குர்துகள், இஸ்ரேலியர்கள் மற்றும் ஈரானியர்கள் என அனைவரும்— அனைவருக்குமான சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், அனைத்து முதலாளித்துவ ஆட்சிகள் மற்றும் அவை வளர்க்கும் வகுப்புவாத மற்றும் மதப் பிரிவினைகளுக்கு எதிராகவும், ஒன்றுபட்டு அணிதிரள வேண்டும். இஸ்லாமியக் குடியரசு ஆட்சியின் பிற்போக்குத்தனமான இஸ்லாமிய முறையீடுகள் மற்றும் ஷியா ஜனரஞ்சகக் கருத்தியலின் அடிப்படையில் இதைச் செய்ய முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
நவீன ஈரானின் முழு வரலாறும் —20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியலமைப்பு புரட்சியின் தோல்வி மற்றும் 1953 இல் மொசாடெக்கின் தேசியவாத ஆட்சி தூக்கியெறியப்பட்டது முதல் 1979 ஈரானிய புரட்சி திசைதிருப்பப்பட்டு அடக்கப்பட்டது மற்றும் இஸ்லாமிய குடியரசின் 47 ஆண்டுகள் வரை— ஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரே சாத்தியமான மூலோபாயம் நிரந்தரப் புரட்சியின் மூலோபாயமே என்பதை நிரூபிக்கிறது.
லியோன் ட்ரொட்ஸ்கியால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட இந்த நிரந்தரப் புரட்சி மூலோபாயம், 1917 ரஷ்யப் புரட்சியையும், புரட்சி தனிமைப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்து, இறுதியில் முதலாளித்துவத்தை மீட்டெடுத்த தேசியவாத ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் உயிர்ப்பித்தது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாளித்துவப் புரட்சிகளுடன் தொடர்புடைய ஜனநாயகக் கடமைகளை —தேசிய சுதந்திரம், ஒற்றுமை மற்றும் மதத்தையும் அரசையும் பிரித்தல் உட்பட— தொழிலாளர் அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலமும், உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
