ஐரோப்பாவின் பீரங்கித் தீவனம்: பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கட்டாய இராணுவச் சேவை அறிமுகமும் விரிவாக்கமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கோபன்ஹேகனுக்கு வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோவெல்டேயில் உள்ள ரோயல் டென்மார்க் இராணுவத்தின் முகாம்களுக்கு அருகிலுள்ள பயிற்சிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிப் பயிற்சிகளின் போது, இளம் கட்டாயப் படையினர்கள் புல்வெளியில் காத்திருக்கிறார்கள், டென்மார்க், புதன்கிழமை, ஜூன் 11, 2025. [AP Photo/James Brooks]

வரவிருக்கும் நாட்களில், ஜேர்மனியில் உள்ள 18 வயது இளைஞர்கள் புதிய இராணுவச் சேவைக்காகத் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களில் பெரும்பாலோர் இந்தச் செய்தியை திகிலுடனும் அச்சத்துடனும் எதிர்கொள்வார்கள். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கட்டாய இராணுவச் சேவையின் படிப்படியான மறு அறிமுகம், மிக நேரடியான அர்த்தத்தில் போருக்கான தயாரிப்பைக் குறிக்கிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக இளைஞர்கள் போரிடவும், கொல்லப்படவும் மற்றும் சாகடிக்கப்படவும் போகிறார்கள்.

இந்தத் திட்டம் இளைஞர்களிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடு தழுவிய அளவில் நடந்த பாடசாலை வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களும் இளம் தொழிலாளர்களும், மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக அடுத்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்வதுக்கு திட்டமிட்டுள்ளனர். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, கட்டாய இராணுவச் சேவைக்கு எதிரான போராட்டத்திற்கு, ஒட்டுமொத்த போர்த் தயாரிப்புகள் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான போராட்டமும், சோசலிச நிலைப்பாட்டின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தைத் திரட்டுவதும் அவசியம் என்று வலியுறுத்துகிறது. இந்த வேலைநிறுத்தங்கள் பள்ளிகளில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும். இது, ஐரோப்பா தழுவிய போர்-ஆதரவுக் கொள்கைக்கு எதிரான வேலைநிறுத்த இயக்கத்தின் ஒரு பொறிப் புள்ளியாக மாறக்கூடும்.

கிரேக்கத்தில், தற்போதுள்ள இராணுவச் சேவையை மேலும் கடுமையாக்குவதற்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களும் கடந்த டிசம்பர் நடுப்பகுதியிலும், மீண்டும் கடந்த வாரமும் போராட்டம் நடத்தினர். வெள்ளிக்கிழமை அன்று, கிரேக்க நாடாளுமன்றம் “புதிய யுகத்தை நோக்கிய ஆயுதப் படைகளின் மாற்றத்திற்கான வரைபடம்” என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இது 12 மாத இராணுவச் சேவைக்கான பதிவை 17 வயதிலேயே தொடங்க வழிவகை செய்கிறது, இதன் மூலம் இளைஞர்கள் பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே இராணுவத்தில் சேர்வதுக்கு கட்டாயப்படுத்தப்பட முடியும்.

18 வயதிலேயே உடனடியாக இராணுவத்தில் சேருபவர்கள் 12 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் “மட்டும்” பணியாற்றினால் போதும். இந்த “சலுகை” இளைஞர்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இராணுவத்திற்குள் ஈர்க்கும் நோக்கம் கொண்டதாகும். பல்கலைக்கழகப் படிப்பு அல்லது தொழிற்பயிற்சி காரணமாக இராணுவச் சேவையைத் தள்ளிப்போட விண்ணப்பிப்பவர்கள் இப்போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்: பல்கலைக்கழக மாணவர்கள் 25 வயது வரை மட்டுமே (அல்லது ஐந்து அல்லது ஆறு வருடப் படிப்புகளுக்கு 26 அல்லது 27 வயது வரை) இராணுவச் சேவையில் இருந்து விலக்கு பெற முடியும். முனைவர் பட்ட மாணவர்களுக்கு 30 வயது வரையிலும், தொழிற்கல்வி மாணவர்களுக்கு 21 வயது வரையிலும் மட்டுமே இந்த விலக்கு அளிக்கப்படுகிறது.

கிரேக்கத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் தங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் படிப்பைத் தவிர பகுதிநேர வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் படிப்பை முடிப்பதில்லை. நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், எதிர்காலத்தில் அவர்கள் ஒரு முழு ஆண்டு இராணுவச் சேவைக்காகத் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள். இது அவர்களின் கல்வி உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் சமூக நலத்திட்ட உதவிகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களின் பட்டப்படிப்பைப் பெறுவதிலும் தாமதத்தை உண்டாக்கும்.

40 வயதிற்கு மேல் மட்டுமே (முன்னதாக 33 வயது) ஒருவர் இராணுவ சேவையிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள பணம் செலுத்த முடியும்—இதற்கான கட்டணம் மாதத்திற்கு 1,500 யூரோக்கள் [$US 1,746] (முன்னதாக 810 யூரோக்கள் [$US 943]) என்ற அதிக விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் பணியாற்றியவர்கள் இப்போது 60 வயது வரை (முன்னதாக 45 வயது வரை) இருப்புப் படையில் (reserve) நீடிப்பார்கள். அத்துடன், மனநல பாதிப்புகளை அங்கீகரிப்பது கடினமாக்கப்பட்டு வருவதுடன், பெண்களுக்கான தன்னார்வ இராணுவச் சேவையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏதென்ஸ் நகரில் உள்ள டசின் கணக்கான மாணவர் சங்கங்கள் ஜனவரி 8 அன்று போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. இந்தச் சட்டம், கிரேக்க இராணுவத்தை “நேட்டோ திட்டங்களில் மிகவும் தீவிரமாக பங்கேற்க” தயார்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது. “இந்த விதிமுறைகளின் மூலம், பெரும் நிறுவனங்களின் இலாபத்திற்காக இளைஞர்களைப் போர்க் களங்களுக்கு அனுப்பவும், அவர்களை மிக விரைவாகப் போரில் பயன்படுத்தவும் அவர்கள் விரும்புகிறார்கள்” என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்:

ஐரோப்பா முழுவதும் கட்டாய இராணுவச் சேவை நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. பல நாடுகள் இராணுவச் சேவையை விரிவுபடுத்தியுள்ளன, அல்லது மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன, அல்லது அதற்கான திட்டங்களை வைத்துள்ளன. இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரில் இராணுவ மீள் ஆயுதபாணியாக்கம் மற்றும் மூன்றாம் உலகப் போருக்குத் தயாரிப்பதில் இருந்து நேரடியாக விளைகிறது, இது முழு ஐரோப்பிய கண்டத்தையும் ஒரு போர்க்களமாக மாற்றும்.

2025-ஆம் ஆண்டில், 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்பது நாடுகள் —கிரேக்கம், சைப்ரஸ், ஆஸ்திரியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா மற்றும் ஸ்வீடன்— கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டிருந்தன. லாட்வியா 2024-ல்தான் 11 மாத இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தியது என்றாலும், இந்த நாடுகள் அனைத்தும் தங்களின் தற்போதைய இராணுவச் சேவையை கிரேக்கத்தைப் போலவே விரிவுபடுத்தி வருகின்றன.

உதாரணமாக, டென்மார்க்கின் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் இராணுவச் சேவையின் காலத்தை நான்கு மாதங்களிலிருந்து 11 மாதங்களாக உயர்த்தியுள்ளதுடன், இந்த ஆண்டு முதல் பெண்களுக்கும் கட்டாய இராணுவ சேர்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

குரோஷியா, 2008 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டாய இராணுவச் சேவைக்கு மீண்டும் திரும்புகிறது. பெயரளவில் எதிர்க்கட்சியாக இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சியினரும் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இந்த ஆண்டு முதல், ஆண்கள் மீண்டும் இரண்டு மாத அடிப்படை இராணுவப் பயிற்சியை முடிக்க வேண்டும்.

பிரான்சில் 1997-ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்ட கட்டாய இராணுவச் சேவை, இன்னும் மீண்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆனால், பிரெஞ்சு ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கடந்த நவம்பரில் இராணுவத்தினர் மத்தியில் பேசும்போது, இந்த செப்டம்பர் மாதம் முதல் புதிய “தன்னார்வச் சேவை” அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். பிரான்சில், “தாய்நாட்டின் பாதுகாப்பு” என்ற பெயரில் 18 முதல் 25 வயது வரையிலான ஆண்கள் மற்றும் பெண்களை 10 மாத இராணுவச் சேவைக்குச் சேர்க்கும் பணி, கடந்த சில நாட்களாக தொடங்கியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் தன்னார்வலர்களின் எண்ணிக்கை குறைந்தது 10,000ம் ஆக உயரும்.

மக்ரோன், “இந்தச் சேவை மூன்று இலக்குகளைக் கொண்டுள்ளது: எமது தேசத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது, எமது தேசத்தின் மீள்திறனை அதிகரிப்பது மற்றும் எமது இளைஞர்களுக்கான பயிற்சியை ஒருங்கிணைப்பது” என்று அறிவித்தார். ஜேர்மனியைப் போலவே, ரஷ்யாவிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலுக்கு எதிராக, ஒருவர் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற சாக்குப்போக்கை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த சமூகத்தையும் இராணுவமயமாக்குவது இங்கே நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த “தன்னார்வச் சேவை” என்பது கட்டாய இராணுவச் சேவையின் ஆரம்பக் கட்டம் மட்டுமே ஆகும். அரசாங்கத்தின் பார்வையில், தளவாட ரீதியாகவும் நிதி ரீதியாகவும் இது இன்னும் உடனடியாகச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் மக்ரோன், “ஒரு பெரிய நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், தன்னார்வலர்களைத் தாண்டி மற்ற அனைவரையும் இராணுவத்திற்குத் திரட்டவும், இராணுவச் சேவையைக் கட்டாயமாக்கவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது” என்று வலியுறுத்திக் கூறினார்:

இத்தாலியில், கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில், ஆளும் பாசிசக் கட்சியான இத்தாலிய சகோதரக் கட்சியை (Fratelli d’Italia) சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ ஒரு புதிய இராணுவச் சேவையை முன்மொழிந்தார். இதன் தொடக்க இலக்கு 10,000 தன்னார்வலர்களைச் சேர்ப்பது, பின்னர் ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை 40,000 ஆக உயர்த்துவதாகும். அதே நேரத்தில், இத்தாலி இராணுவச் செலவினங்களை அதிகரித்து வருவதுடன், டிஜிட்டல் போருக்காக ஒரு புதிய “சைபர் இராணுவத்தை” (cyber army) உருவாக்க விரும்புகிறது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட கட்டாய இராணுவச் சேவைக்கு இத்தாலிய மக்களிடையே பரவலான எதிர்ப்பு நிலவுகிறது. கடந்த ஜூலை மாதம், சமூக முதலீட்டு ஆய்வுகள் மையம் (CENSIS) நடத்திய கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தாலி நேரடியாக ஒரு போரில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சுகின்றனர். இராணுவச் சேவைக்கு தகுதியான வயதில் உள்ள இத்தாலியர்களில் 16 சதவீதம் பேர் மட்டுமே நாட்டிற்காக ஆயுதம் ஏந்தத் தயாராக உள்ளனர். 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் தங்களை அமைதிவாத மனச்சான்றுடன் எதிர்ப்பவர்கள் என்று வர்ணிக்கின்றனர். மேலும் 19 சதவீதம் பேர், பிற வழிகளில் இராணுவச் சேவையிலிருந்து தப்பிக்க முயல்கின்றனர்.

இத்தாலியின் போர்க் கொள்கைக்கு எதிரான பிரமாண்டமான எதிர்ப்பின் ஒரு பகுதியாக, இந்த கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு நிராகரிப்பு உள்ளது. இது, கடந்த ஆண்டு போர்த் திட்ட பட்ஜெட்டுக்கும், காஸா இனப்படுகொலைக்கும் எதிராக நடந்த வலிமையான வேலைநிறுத்தங்களில் தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதற்கு ஆதரவாக, இத்தாலியர்களில் 17 சதவீதம் பேர் மட்டுமே பேசியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் ஒரு கணக்கெடுப்பை மேற்கோள் காட்டியுள்ளது.

2009-ல் கட்டாய இராணுவச் சேவை ரத்து செய்யப்பட்ட போலந்தில், அரசாங்கம் நாடு தழுவிய இராணுவப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் பள்ளி மாணவர்கள் முதல் ஓய்வூதியம் பெறுவோர் வரை 400,000 பேருக்குப் போர்க்காலப் பயிற்சி அளிக்க அது விரும்புகிறது. உக்ரேன் போரின் பின்னணியில் போலந்தில் தீவிரமான போர்ப் பிரச்சாரம் மற்றும் இராணுவ மீள் ஆயுதபாணியாக்கம் நடந்தபோதிலும், இங்கும் பெரும்பாலான மக்கள் இராணுவச் சேவைக்கு ஆதரவாக இல்லை. ஆகஸ்ட் 2025-ன் ஒரு கருத்துக் கணிப்பின் அடிப்படையில், யூரோ நியூஸ் வெளியிட்ட செய்தியில், 49.1 சதவீதம் பேர் போர் ஏற்பட்டால் தானாக முன்வந்து நாட்டைப் பாதுகாக்க மறுத்துவிட்டதாகவும், 6.1 சதவீதம் பேர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. போர்க் களத்திலுள்ள அகழிகளுக்கு (trenches) முதலில் அனுப்பப்பட வேண்டிய 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே, இந்த முடிவு இன்னும் தெளிவாக இருந்தது: 69 சதவீதம் பேர் இராணுவத்திற்குச் செல்ல விரும்பவில்லை.

2007-ல் கட்டாய இராணுவச் சேவை ரத்து செய்யப்பட்ட ருமேனியாவில், தொழில்முறை இராணுவத்தில் இளம் இருப்புப் படையினரை நிரப்புவதற்காக, 2026 முதல் 18 முதல் 35 வயதுடைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நான்கு மாத தன்னார்வ இராணுவச் சேவையை கடந்த அக்டோபரில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. மாதம் 400 முதல் 600 யூரோக்கள் ஊதியம், இலவச தங்குமிடம், உணவு, மருத்துவக் காப்பீடு மற்றும் போனஸ் ஆகியவற்றால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். சிதைந்து போயுள்ள இந்த பால்கன் நாட்டில், பல இளைஞர்கள் வறுமையில் வாடுவதைக் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு வஞ்சகமான மிரட்டலாகும்.

இந்தத் தன்னார்வ அல்லது கட்டாய இராணுவச் சேவை மாதிரிகள் அனைத்தும் ஒரே குறிக்கோளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பாவின் இளைஞர்களை ஒரு நேரடிப் போருக்கு இராணுவ ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் விரைவாகவும் முழுமையாகவும் தயார் செய்யப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் கிழக்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா அல்லது மத்திய கிழக்கில் கொள்ளையடிக்கும் ஆவேசத்துடன் ஒரு போரைத் தொடங்கி, சீனாவுக்கு எதிராகப் போரைத் தூண்டும்போது, ஐரோப்பிய சக்திகள் வெறும் கையுடன் நிற்க விரும்பவில்லை. அவர்கள் தங்கள் சொந்த ஏகாதிபத்திய மற்றும் கொள்ளையடிக்கும் நலன்களைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள், ரஷ்யா அல்லது அமெரிக்காவிற்கு எதிராக “ஐரோப்பிய அமைதி இலட்சியங்களைப் பாதுகாப்பது” என்பதில், முற்றிலும் எந்த தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ட்ரம்ப்பைப் போலவே, அவர்களும் அதிக மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் இலாப ஆதாரங்களைப் பெறுவதிலேயே குறியாக உள்ளனர். இதற்காக, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, மில்லியன் கணக்கான இளைஞர்களை ஐரோப்பாவின் போர்க் களங்களில் பீரங்கித் தீவனமாக பலிகொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர்.

ஆனால் அவர்களின் பலவீனமான புள்ளி, மக்களிடையே கொழுந்துவிட்டு எரியும் போருக்கு எதிரான எதிர்ப்பாகும். ஜேர்மனியில் பாடசாலை வேலைநிறுத்தம், கிரேக்கத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் மற்றும் காஸா இனப்படுகொலைக்கு அளிக்கப்படும் ஆதரவிற்கு எதிராகப் பல நாடுகளில் இடம்பெற்றுவரும் வேலைநிறுத்தங்கள் ஒரு தொடக்கம் மட்டுமே. இவை, மீண்டும் ஆயுதம் ஏந்துதல் மற்றும் போர் வெறி கொண்ட முதலாளித்துவ ஐரோப்பாவையும், வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஐரோப்பாவையும் எதிர்த்து, ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான பொதுப் போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த, எல்லைகளற்ற ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தின் ஆரம்பப் புள்ளியாக மாற வேண்டும்.

Loading