முன்னோக்கு

எப்ஸ்டீன் கோப்புகள் அமெரிக்க தன்னலக்குழுவின் குற்றத்தன்மையை வெளிப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 1997-ல் நியூ யோர்க் நகரில் நடைபெற்ற விக்டோரியாஸ் இரகசிய ஏஞ்சல்ஸ் விருந்தில் ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் பெல்ஜிய மாடல் இன்கிரிட் செய்ன்ஹேவ் ஆகியோருடன் டொனால்ட் ட்ரம்ப் (இடது). [Photo: House Oversight]

கடந்த வெள்ளிக்கிழமை நீதித் துறையானது, நிதி முதலீட்டாளரும் பாலியல் கடத்தல்காரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட வீடியோக்களும், 1,80,000 படங்களும் அடங்கும்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்காக சிறு பிள்ளைகளை கடத்தி, ஒரு விபச்சார வளையத்தை நடத்தி வந்த எப்ஸ்டீனுக்கும், டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டிஷ் மன்னரின் இளைய சகோதரர், தற்போதைய உலகின் மிகப்பெரிய பணக்காரர் (எலோன் மஸ்க்) மற்றும் முன்னாள் உலகின் மிகப் பெரிய பணக்காரர் (பில் கேட்ஸ்) ஆகியோருக்கும் இடையிலான தொடர்புகளை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களில் பின்வருபவர்களும் அடங்குவர்: முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (”பிரபு எனக் குறிப்பிடப்படுபவர்) இவர் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படங்களில் காணப்படுகிறார் மற்றும் இவர்களது தொடர்பைப் பற்றி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் மின்னஞ்சல்களிலும் இடம் பெற்றுள்ளார்; படங்களிலும் தொடர்பு ஆவணங்களிலும் காணப்படும் பிரிட்டிஷ் பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன்; கூட்டங்கள் மற்றும் இரவுநேர விருந்துகள் குறித்த கால அட்டவணைகள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னாள் கருவூலச் செயலாளர் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தலைவர் லோரன்ஸ் சம்மர்ஸ்; 2008-ல் எப்ஸ்டீன் தண்டனை பெற்ற பிறகும் அவரது நியூ யோர்க் மாளிகையில் தங்கியிருந்ததாக விவரிக்கப்படும் முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் எஹுத் பராக்; மற்றும் நியூ யோர்க் ஜெயண்ட்ஸ் (அமெரிக்காவிலுள்ள ஒரு கால்பந்து அணி) அணியின் இணை உரிமையாளரான பில்லியனர் ஸ்டீவ் டிஷ்—இவருக்குப் பெண்களை ஏற்பாடு செய்வது பற்றிய எப்ஸ்டீன் விவரிக்கும் மின்னஞ்சல்களில், இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

இவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனன் மற்றும் பல பில்லியனர்கள், நிதியாளர்கள், பிரபலங்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் எப்ஸ்டீனின் தொடர்புப் புத்தகங்களிலும், விமானப் பயணப் பதிவுகளிலும் இடம்பெற்றுள்ளன. இதில் பெயர் குறிப்பிடப்பட்ட சிலர் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்தாலும், இந்தக் கோப்புகள் உலகளாவிய மேல்தட்டு வர்க்கத்தினர் எப்ஸ்டீனின் குற்றவியல் சாம்ராஜ்யத்துடன் எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தார்கள் என்ற அதிர்ச்சிகரமான சித்திரத்தை வழங்குகின்றன.

ஒரு நிதி முதலீட்டாளரான எப்ஸ்டீன், பல தசாப்தங்களாக சர்வதேச பாலியல் கடத்தல் கும்பலை நடத்தி வந்தார். தனக்காகவும் தனது செல்வாக்கு மிக்க செல்வந்த நண்பர்களுக்காகவும் வயது குறைந்த சிறுமிகளை அவர் கடத்தி வந்தார். 2008-ல் புளோரிடாவில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட பிறகு, ட்ரம்பின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், அரசுத் தரப்பு வழக்கறிஞருமான அலெக்ஸ் அகோஸ்டாவால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகக் குறைவான தண்டனையுடன் கூடிய காலத்திற்கான ஒப்பந்தத்தை எப்ஸ்டீன் பெற்றார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் 30 பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டிருந்தும், அந்த ஒப்பந்தத்தின்படி எப்ஸ்டீன் ஒரு மாவட்டச் சிறையில் வெறும் 15 மாதங்கள் மட்டுமே தண்டனை அனுபவிக்கவும், பகல் நேரத்தில் வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்பட்டார். 2019-ல் டெய்லி பீஸ்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, ட்ரம்ப்பின் இடைக்கால அதிகாரிகளிடம் அகோஸ்டா கூறுகையில், “எப்ஸ்டீன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும், அவர் தனது அதிகார வரம்பிற்கும் மேலானவர் என்றும் தன்னிடம் கூறப்பட்டதால்” இந்த ஒப்பந்தத்தைச் செய்ததாகத் தெரிவித்தார். “எப்ஸ்டீன் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்றும், அவரை விட்டுவிடுமாறும் எனக்குச் சொல்லப்பட்டது” என்று அகோஸ்டா கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஜூலை 2019-ல் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் எப்ஸ்டீன் மீண்டும் மத்திய அரசினால் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 10, 2019 அன்று, மன்ஹாட்டனில் உள்ள பெருநகர சீர்திருத்த மையத்தில் அவர் தனது சிறை அறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். எந்தவொரு தீவிரமான விசாரணையும் இன்றி, அரசாங்கமும் ஊடகங்களும் உடனடியாக அதைத் தற்கொலை என்று அறிவித்தன.

ஏராளமான ஆதாரங்கள் இருந்தபோதிலும், முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் வணிகத் தலைவர்களில் எப்ஸ்டீனின் வாடிக்கையாளர்கள் எவர் மீதும் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை.

ட்ரம்பின் 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய அளவில் நிதி வழங்கிய எலோன் மஸ்க், இந்த ஆவணங்கள் முழுவதும் இடம் பெற்றுள்ளார். அவரது பெயர் 1,000-க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. வயது குறைந்த சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியதை எப்ஸ்டீன் ஒப்புக்கொண்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 2012-ல் மஸ்க் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “உங்கள் தீவில் எந்த நாள்/இரவு மிகவும் அதிரடியான களியாட்டம் நடக்கும்?” என்று அவர் கேட்டுள்ளார்.

டிசம்பர் 2013-ல், மஸ்க் மீண்டும் எப்ஸ்டீனைச் சந்திக்க முயன்றுள்ளார். “விடுமுறை நாட்களில் நான் பி.வி.ஐ/செயின்ட் பார்ட்ஸ் (BVI/St. Bart’s) பகுதியில் இருப்பேன். உங்களைச் சந்திக்கச் சரியான நேரம் எது?” என்று அவர் எழுதியுள்ளார். அதற்கு எப்ஸ்டீன், “உங்களை அழைத்து வர நான் ஹெலிகாப்டரை அனுப்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார். ஜனவரி 2014-ன் தொடக்கத்தில் அந்தத் தீவிற்குப் பயணம் செய்வது தொடர்பாக எப்ஸ்டீன், மஸ்க் மற்றும் எப்ஸ்டீனின் உதவியாளர் லெஸ்லி கிராஃப் ஆகியோருக்கு இடையே தொடர்ந்து ஒருங்கிணைப்பு நடந்ததை அடுத்தடுத்த மின்னஞ்சல்கள் காட்டுகின்றன.

எப்ஸ்டீனின் தீவுக்கு வருமாறு விடுக்கப்பட்ட தொடர் அழைப்புகளை தான் “நிராகரித்துவிட்டதாகவும்”, அங்கு ஒருபோதும் சென்றதில்லை என்றும் 2019-ல் வேனிட்டி ஃபேர் இதழுக்கு மஸ்க் அளித்த வாக்குமூலத்தை இந்த மின்னஞ்சல்கள் முறியடிக்கின்றன. கடந்த வார இறுதியில், இந்த மின்னஞ்சல்கள் குறித்த செய்திகளை “பொய்” என்றும், இந்த ஆவணங்களை மக்களின் “கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி” என்றும் மஸ்க் சாடினார்.

பில் கேட்ஸ் தொடர்பான தகவல்களும் இதில் முக்கியமாக இடம் பெற்றுள்ளன. 2013-ஆம் ஆண்டு மின்னஞ்சல் ஒன்றில், எப்ஸ்டீன் பில் கேட்ஸை மிரட்டியது போலத் தெரிகிறது. கேட்ஸின் பாலியல் ரீதியாக பரவும் நோய் (STD) குறித்த மின்னஞ்சல்களை அழிப்பதற்கான கோரிக்கைகள், மெலிண்டா கேட்ஸிற்கு ரகசியமாக வழங்குவதற்காக நுண்ணுயிர் எதிர்ப்பு சக்திகளுக்கான மருந்துகள் கோரியது மற்றும் வெளிப்படையான பாலியல் விவரங்கள் ஆகியவற்றை எப்ஸ்டீன் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு கோடிக்கணக்கான டாலர்களை வழங்குமாறும், தனக்கு ஒரு வீட்டினை வாங்கித் தருமாறும் எப்ஸ்டீன் கேட்ஸிடம் பரிந்துரைத்துள்ளார். மெலிண்டா கேட்ஸ் பின்னர் பகிரங்கமாகத் தெரிவிக்கையில், தனது கணவருக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான உறவே விவாகரத்துக்குக் காரணம் என்றும், எப்ஸ்டீனை “தீயவன்” என்றும் விவரித்தார்.

நியூ யோர்க் ஜெயண்ட்ஸ் கால்பந்து அணியின் இணை உரிமையாளரான பில்லியனர் ஸ்டீவ் டிஷ், எப்ஸ்டீன் தண்டனை பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகும், பாலியல் உறவுக்காகப் பெண்களை ஏற்பாடு செய்ய எப்ஸ்டீனின் உதவியைக் கோரிய மின்னஞ்சல்களும் இந்தக் கோப்புகளில் உள்ளன. எப்ஸ்டீன் தனது செல்வாக்கு மிக்க உயரடுக்கு வாடிக்கையாளர்களின் அறிவோடு தொடர்ந்து மனிதக் கடத்தலில் ஈடுபட்டு வந்தார் என்பதை இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. ஸ்டீவ் டிஷ், நியூ யோர்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானியால் மீண்டும் நியமிக்கப்பட்ட நியூ யோர்க் நகர பொலிஸ் (NYPD) கமிஷனர் ஜெசிகா டிஷ்ஷின் உறவினர் ஆவார்.

இந்தக் கோப்புகள் எப்ஸ்டீனின் வலையமைப்பு சர்வதேச அளவில் பரவியிருந்ததை உறுதிப்படுத்துகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, முகம் மறைக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் மீது படுத்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். பிரிட்டனில், புதிய தொழிற் கட்சியின் முக்கிய சிற்பியான பீட்டர் மேண்டல்சன், எப்ஸ்டீனிடமிருந்து மூன்று முறை தலா 25,000ம் டாலர் பெற்றிருந்தது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, தனது கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

நீதித் துறையால் எப்ஸ்டீன் கோப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட சமீபத்திய புகைப்படத் தொகுப்பில், அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் மீது குனிந்த நிலையில் இருக்கும் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்.  [Photo: House Oversight Committee]

வர்த்தகச் அமைச்சர் ஹோவர்ட் லூட்னிக் என்பவரும், எப்ஸ்டீனின் குடியிருப்பில் ஒரு “மசாஜ் மேசையை” பார்த்த பிறகு 2005-லேயே அவரோடனான உறவைத் துண்டித்துவிட்டதாகக் கூறி, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றார். இருப்பினும், எப்ஸ்டீன் தண்டனை பெற்ற பிறகு 2012 வரை லூட்னிக் அவருடன் மின்னஞ்சல் தொடர்பில் இருந்ததை ஆவணங்கள் காட்டுகின்றன. டிசம்பர் 2012இல் ஒரு மின்னஞ்சலில், லூட்னிக் தனது குடும்பம் மற்றும் 7 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுடன் பயணம் செய்தபோது, கரீபியன் பகுதியில் இரவு விருந்துக்கான திட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார்.

இந்த சக்திவாய்ந்த நபர்கள் —முழு அரசாங்கங்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களை நடத்துபவர்கள்— எப்ஸ்டீன் என்றால் என்னவென்று தங்களுக்குத் தெரியாது என்று கூறுகின்றனர். என்ன முட்டாள்தனம். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்! அவரது தொடர்புகளின் அளவு மற்றும் அவரது வலையமைப்பின் அசாதாரணமான வீச்சு ஆகியவை ஆளும் வர்க்கத்தின் குணாதிசயத்தையே பறைசாற்றுகின்றன.

ஆவணங்கள் வெளியிடப்பட்டாலும், எவை வெளியிடப்படுகின்றன, எந்தத் தகவல்கள் மறைக்கப்படுகின்றன என்பது உட்பட ஒவ்வொரு அம்சமும் ஏமாற்றுத்தனத்தால் சூழப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட 20 பேர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில்: “இந்தச் சமீபத்திய எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் விற்கப்படுகின்றன, ஆனால் உண்மையில் இது எஞ்சியிருப்பவர்களை அம்பலப்படுத்துகிறது. மீண்டும் ஒருமுறை, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களும் அடையாளங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன, ஆனால் எங்களைத் துஷ்பிரயோகம் செய்த ஆண்கள் இன்னும் மறைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறார்கள்” என்று எழுதியுள்ளனர்.

மிகவும் அடிப்படையான அரசியல் கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமலேயே உள்ளன. இது ஆளும் வர்க்கத்தின் கைகளில் இருக்கும் வரை பதிலளிக்கப்பட மாட்டாது. எப்ஸ்டீன் ஒரு தனிப்பட்ட நபர் அல்ல. அவர் யாருடைய நலன்களுக்காகப் பணியாற்றினார்? அவர் CIA, மொசாட் அல்லது வேறு ஏதேனும் உளவு அமைப்பிற்காகப் பணியாற்றினாரா? எப்ஸ்டீன் “உளவுத்துறைக்குச் சொந்தமானவர்” என்ற அகோஸ்டாவின் கூற்று இதுவரை விசாரிக்கப்படவே இல்லை.

இதில் சம்பந்தப்பட்ட நபர்களைத் தாண்டி, எப்ஸ்டீன் ஊழல் ஒரு சமூக வர்க்கத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவின் தன்னலக்குழு ஒட்டுண்ணித்தனம், சூதாட்டம் மற்றும் மோசடி மூலம் தனது செல்வத்தைக் குவித்துள்ளது. இது, அதன் சமூக இருப்பிலும், செல்வத்தைப் பெறும் முறையிலும், அமெரிக்க அரசியலின் உச்சியில் இருக்கும் ஒரு குற்றவியல் வர்க்கம் ஆகும். இவர்களின் சொத்துக்கள், நிதியியல் சூழ்ச்சி, மோசடி, போர் இலாப வேட்டை மற்றும் பில்லியன் கணக்கான மக்களை சுரண்டுதல் ஆகியவற்றின் விளைபொருளாகும்.

இந்த தன்னலக்குழு தன்னை சட்டத்திற்கு மேலானதாகக் கருதுகிறது. இந்த வர்க்கத்தின் உருவமாகத் திகழும் ட்ரம்ப், ஒரு வெட்கக்கேடான குற்றவாளி, ஜனநாயக நெறிமுறைகளை அவமதிப்பவர், பாசிச வன்முறையை வெளிப்படையாகத் தூண்டுபவர் மற்றும் போருக்குச் சதி செய்பவர். அவரது நிர்வாகம், அரசியலமைப்பை ஒரு பயனற்ற காகிதமாகவும், சர்வதேச சட்டத்தைப் பொருத்தமற்றதாகவும் கருதுகிறது. துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், குடிமகன் அல்லது குடிமகன் அல்லாத எவரையும் “முழுமையான விலக்குரிமையுடன்” கொலை செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அது அறிவிக்கிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் அரசியல், சமூக, சட்ட மற்றும் தார்மீகச் சீரழிவில் மூழ்கிக் கிடக்கிறது. எப்ஸ்டீன் ஊழல் அந்த வர்க்கத்திற்கு அதன் முகத்தையே கண்ணாடியில் காட்டுகிறது.

Loading