அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிந்து வெனிசுவேலா எண்ணெய் வளத்தைத் தனியார்மயமாக்குகிறது: "21 ஆம் நூற்றாண்டு சோசலிசத்தின்" முட்டுச்சந்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஜனவரி 25, 2026 அன்று புவேர்ட்டோ லா குரூஸ் சுத்திகரிப்பு ஆலையில் PDVSA எண்ணெய் தொழிலாளர்களுடன் பேசுகிறார்.  [Photo: presidencialve]

சரியாக நான்கு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்கச் சிறப்புப் படைப் பிரிவினர் வெனிசுவேலாவிற்குள் ஊடுருவி, அந்நாட்டின் மிகவும் பாதுகாப்பான இடமான தியுனா கோட்டையை (Fort Tiuna) உடைத்து, நடைமுறையில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸைக் கடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அன்று முதல், அமெரிக்க ஊடகங்களில் இந்தத் தம்பதியினரின் நிலை குறித்த செய்திகள் மறைந்துவிட்டன. அவர்கள் புரூக்ளினில் உள்ள ஒரு மோசமான மத்திய கூட்டாட்சி அரசின் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா சுமத்தியுள்ள ஜோடிக்கப்பட்ட “போதைப்பொருள் பயங்கரவாதம்” தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்து அவர்கள், ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். மீண்டும் மார்ச் 17 அன்று, முந்தைய மனுக்களுக்காக விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

மதுரோ தம்பதிகளின் மகன், நிக்கோலஸ் மதுரோ குவேரா, அமெரிக்க வழக்கறிஞர்கள் மூலம் தந்தை அனுப்பிய செய்தியைப் பகிரங்கப்படுத்தியுள்ளார். அதில் மதுரோ, தானும் தனது மனைவியும் நலமுடன் இருப்பதாகவும், “நாங்கள் உயிரைப் பாதுகாப்போம், அதிகாரத்தைத் தக்கவைப்போம் மற்றும் புரட்சியைக் காப்போம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரோ மற்றும் புளோரஸின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அமெரிக்க சட்ட நடைமுறை ஆமை வேகத்தில் நகர்ந்தாலும், ஜனவரி 3 தாக்குதலுக்குப் பிறகு “புரட்சியைக் காப்பது” என்பது ஒரு மாயை என்பது மிக விரைவாகத் தெரிந்துவிட்டது. வெனிசுவேலா ஒரு அரைக்-காலனியாக மாற்றப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயத்திற்கும், அமெரிக்க எரிசக்தி நிறுவனங்களின் இலாப வேட்டைகளுக்கும் முற்றிலும் அடிபணிந்த நாடாக மாறியுள்ளது.

இது குறித்து ஜனவரி 28 அன்று செனட் வெளியுறவு உறவுக் குழுவிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த சாட்சியத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரோவின் முன்னாள் துணை ஜனாதிபதியும், தற்போது “இடைக்கால ஜனாதிபதியாக” இருப்பவருமான டெல்சி ரோட்ரிக்கேஸுடன் இணைந்து செயல்படும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவை ரூபியோ நியாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு செய்ததன் மூலம், உள்நாட்டுப் போர் ஏற்படும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார். “எங்கள் தடைகளால் அசைய முடியாமல் இருக்கும் எண்ணெய் வளத்தின் மூலம், அமெரிக்காவின் நலன்கள் வெனிசுவேலா மீது திணிக்கப்படும்” என்றும் அவர் கூறினார். உலகில் அதிகப்படியான உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ள வெனிசுவேலா, ஏற்றுமதி வருமானத்தில் 90 சதவீதம் இந்த எண்ணெய் வளத்தையே சார்ந்துள்ளது.

வெனிசுவேலாவின் எண்ணெய் விற்பனையில் ஏகபோக உரிமையைக் கோரும் அமெரிக்காவின் அவமானகரமான மற்றும் ஊழல் மலிந்த முறையை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் விவரித்தார். இதன்படி, எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் கத்தாரில் உள்ள ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்கில் வைக்கப்படும். வெனிசுவேலா அரசாங்கம், “எங்களுக்கு எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தேவை” என்று ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். “அந்தப் பணத்தை எதற்கெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதை அமெரிக்கா முன்கூட்டியே தீர்மானிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். மீதமுள்ள பணம் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகவே இருக்கிறது.

இடைக்கால ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசாங்கம் “மிகவும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக” ரூபியோ பாராட்டினார். மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் வெனிசுவேலாவின் அடர்த்தியான கச்சா எண்ணெயைத் திரவமாக்கத் தேவையான நாப்தா (Naphtha) போன்ற கரைப்பான்களை நேரடியாக அமெரிக்காவிடமிருந்தே வாங்க அந்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு, வெனிசுவேலா இவற்றை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வந்தது.

வாஷிங்டனும் கராகஸும் (வெனிசுவேலாவின் தலைநகர்), “ஈரானின் பிரசன்னம், சீனாவின் செல்வாக்கு மற்றும் ரஷ்யாவின் பிரசன்னம் ஆகியவற்றை வெனிசுவேலாவிலிருந்து அகற்றுவது குறித்து தீவிரமாகப் பேசி வருவதாக” ரூபியோ குறிப்பிட்டார்.

இன்னும் முக்கியமாக, மதுரோவிற்குப் பிந்தைய அரசாங்கம் வெனிசுவேலாவின் “எரிசக்தி தொடர்பான சட்டத்தில்” மின்னல் வேகத்தில் கொண்டு வந்த “சீர்திருத்தத்தை” ரூபியோ வரவேற்றார். இந்த புதிய சட்டம், எண்ணெய் துறையில் தனியார் முதலீடுகளுக்கு ஹியூகோ சாவேஸ் காலத்தில் விதிக்கப்பட்டிருந்த பல கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டியுள்ளதாக அவர் அறிவித்தார்.

விமர்சகர்களின் கூற்றுப்படி, கடந்த வியாழக்கிழமை வெனிசுவேலாவின் தேசிய சபையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்ட இந்த “சீர்திருத்தம்”, இன்னும் மோசமானது. இது வெனிசுவேலாவை அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின்னோக்கித் தள்ளியுள்ளது. அதாவது 1976-ல் நடந்த தேசியமயமாக்கலுக்கு முன்பும், ஏன் 1943-ல் முதல் ஹைட்ரோகார்பன் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பும் இருந்த நிலைக்கு நாட்டை கொண்டு சென்றுள்ளது. அப்போதைய சட்டம்தான் அரசுக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையே “50-50” இலாபப் பகிர்வு முறையை ஏற்படுத்தியிருந்தது.

சிலர் கூறியபடி, இந்த நிலைமையை ஒப்பிட வேண்டுமென்றால் நாம் 1930-களின் சர்வாதிகாரி ஜுவான் விசென்ட் கோமேஸின் காலத்திற்குத் தான் செல்ல வேண்டும். அப்போது கோல்ப் (Gulf), ரோயல் டச்சு ஷெல் (Royal Dutch Shell) மற்றும் ஸ்டாண்டர்ட் ஆயில் (Standard Oil) ஆகிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் வெனிசுவேலாவின் 98 சதவீத எண்ணெய் துறையைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கோமேஸின் சொந்தப் பையை நிரப்பவும், தனது அரசியல் ஆதரவாளர்களுக்குப் பணம் கொடுக்கவும், அவரது கொடுங்கோல் பொலிஸ் அரசு எந்திரத்தை நடத்தவும் தேவையான பணத்தை மட்டுமே அந்நிறுவனங்கள் வழங்கின.

வெனிசுவேலா தனது நிலத்தடி வளங்கள் மீது பெயரளவில் மட்டுமே இறையாண்மையைத் தக்கவைத்துள்ள அதேவேளையில், இந்த “சீர்திருத்தம்” எண்ணெய் எடுப்பு மற்றும் வணிகமயமாக்கல் மீதான முழுக் கட்டுப்பாட்டையும் வாஷிங்டனிடமும் பெரும் எண்ணெய் நிறுவனங்களிடமும் ஒப்படைத்துவிட்டது. இதன் மூலம் எண்ணெய் யாருக்கு விற்கப்பட வேண்டும், என்ன விலைக்கு விற்கப்பட வேண்டும் மற்றும் வருவாயில் எவ்வளவு பங்கு நாட்டிற்குச் சேர வேண்டும் என்பதை அமெரிக்காவே தீர்மானிக்கும்.

வெனிசுவேலா அதிகாரிகளின் தரப்பிலிருந்து, இந்த பிற்போக்குத்தனமான சரணாகதியை நியாயப்படுத்திப் பேசுவது, அவர்களின் வெட்கமற்ற தன்மையையும் நயவஞ்சகத்தையும் அப்பட்டமாகக் காட்டுகிறது. “இடைக்கால ஜனாதிபதி” டெல்சி ரோட்ரிக்கேஸ் மற்றும் அவரது சகோதரரும் தேசிய சபையின் தலைவருமான ஜோர்ஜ் ரோட்ரிக்கேஸ் ஆகியோர், அரசுக்குச் சொந்தமான PDVSA எண்ணெய் நிறுவனத் தொழிலாளர்கள் மத்தியில் அடுத்தடுத்து வாய்வீச்சு ஆனால் ஏமாற்றுத்தனமான உரைகளை நிகழ்த்தினர்.

வாஷிங்டனின் காலனித்துவக் கொள்கையை அப்பட்டமாக வெளிப்படுத்திய ஒரு அறிக்கைக்குப் பதிலளிக்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸ் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதித்துறை அமைச்சரான ஸ்கொட் பெசென்ட், டாவோஸ் நகரில் நடந்த நேர்காணல் ஒன்றில், “தற்போது வெனிசுவேலாவின் கொள்கைகளை அமெரிக்காவே வழிநடத்துகிறது. வாஷிங்டனின் உத்தரவுகளைப் பின்பற்றி நாட்டை வழி நடத்துவதற்காகவே, முந்தைய ஆட்சியின் சில நபர்களை நாங்கள் அதிகாரப் பதவிகளில் விட்டுவைத்துள்ளோம்” என்று கூறினார்.

சாராம்சத்திலும் தொனியிலும், பெசென்ட்டின் இந்தக் கருத்துக்கள், ட்ரம்ப் உட்பட இதர அமெரிக்க அதிகாரிகளின் ஏகாதிபத்திய அறிவிப்புகளில் இருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. இருப்பினும், இந்தச் சூழலில், நிதி அமைச்சரின் அந்த அநாகரீகமான வார்த்தைகளையே ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொண்ட இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்கேஸ், ஒரு சவாலான தொனியில் பேசினார். “வெனிசுவேலா அரசியலில் வாஷிங்டனின் உத்தரவுகள் இனி போதும்! வெனிசுவேலா அரசியலும் மக்களுமே எங்கள் கருத்து வேறுபாடுகளையும் உள்நாட்டு மோதல்களையும் தீர்த்துக் கொள்ளட்டும்,” என்று அவர் அறிவித்தார்.

அதே மூச்சில், “அமெரிக்காவாக இருந்தாலும் சரி அல்லது உலகின் வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, அவர்களின் எரிசக்தி திட்டங்களைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை,” என்றும் அவர் வலியுறுத்தினார். அதாவது, “நாங்கள் வாஷிங்டனின் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்தாலும், உள்நாட்டு அரசியல் விவகாரங்களை மட்டும் எங்களைக் கையாள விடுங்கள்” என்பதே அதன் உட்பொருளாகும்.

ரோட்ரிக்கேசின் சகோதரர் ஜோர்ஜ் ஆற்றிய உரை இன்னும் கூடுதலான வாய்வீச்சும், முரட்டுத்தனமும் கொண்டதாக இருந்தது. ஒருபுறம், தங்களை “அதிதீவிரப் புரட்சியாளர்கள்” என்று சொல்லிக்கொண்டு, நாட்டின் எண்ணெய் வளத்தைத் திருடித் தங்கள் பைகளை நிரப்பிக்கொண்டு தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்த அதிகாரிகளை அவர் கண்டித்தார். ஆனால், அவர் குறிப்பிடும் அந்தப் பெயர் சொல்லாத குற்றவாளிகள், இந்த ரோட்ரிக்கேஸின் உடன்பிறப்புகளின் நெருங்கிய கூட்டாளிகள் அன்றி வேறு யார்? அங்கிருந்த எண்ணெய் தொழிலாளர்களிடம் ஜோர்ஜ் தனது பாட்டி சொன்னதாக ஒரு பழமொழியைக் கூறினார்: “பூனை என்ன நிறமாக இருந்தால் என்ன, அது எலியைப் பிடித்தால் சரி.”

உலக அரசியல் மற்றும் வரலாற்றில் சிறிதளவேனும் அறிவாற்றல் உள்ள எவருக்கும் — ரோட்ரிக்கேஸிற்கு அதைவிட அதிகமான அறிவே உண்டு — இந்தப் பழமொழி முன்னாள் சீனக் கம்யூனிசக் கட்சித் தலைவர் டெங் சியாவோபிங் முன்வைத்த ஒரு முக்கியமான முழக்கம் என்பது தெரியும். 1949 புரட்சிக்குப் பின் உருவாக்கப்பட்ட உருக்குலைந்த தொழிலாளர் அரசின் தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகள் மற்றும் பொருளாதாரத் திட்டமிடலின் எஞ்சியிருந்த பகுதிகளை அகற்றுவதற்கும், சீனாவை உலக முதலாளித்துவத்துடன் ஒருங்கிணைப்பதற்கும் அவர் இதைப் பயன்படுத்தினார். வெனிசுவேலாவின் சூழலில், இந்த வாக்கியத்தின் சுருக்கம், “வெனிசுவேலா தனது எண்ணெயைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் அதைக் கட்டுப்படுத்துகின்றனவா என்பது முக்கியமல்ல, அரசாங்கத்தின் கஜானாவிற்குப் பணம் வந்து சேரும் வரை எதைப் பற்றியும் கவலையில்லை” என்பதாகும்.

செனட் விசாரணையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ சாட்சியமளித்தபோது நடந்த மிக முக்கியமான தருணங்களில் ஒன்று, வெளியுறவு உறவுக் குழுவின் தலைவர் செனட்டர் ஜிம் ரிஷின் தொடக்கக் கேள்வியுடன் வந்தது. இடாஹோவைச் சேர்ந்த அந்த குடியரசுக் கட்சி உறுப்பினர், இந்த விசாரணை “இரகசியமான சூழலில்” நடக்கவில்லை என்றாலும், ஜனவரி 3 தாக்குதலுக்கான “அடித்தளம்” எவ்வாறு அமைக்கப்பட்டது என்பது குறித்து ரூபியோ தன்னிடம் கூறியதை இந்தக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினார். “நீங்களும் ஜனாதிபதியும் அங்குள்ள தரப்பினருடன், குறிப்பாக மதுரோ அகற்றப்பட்ட பிறகு பொறுப்பேற்கப் போகும் தரப்பினருடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் என்று நீங்கள் என்னிடம் சொன்னதைக் கேட்டு நான் நம்பமுடியாத அளவிற்கு ஈர்க்கப்பட்டேன்,” என்று அவர் அறிவித்தார்.

ரூபியோ இதற்கு நீண்ட பதிலொன்றை அளித்தார். ஆனால், அதில் நேரடித் தகவல் ஏதுமில்லை. அவர் மதுரோவை ஒரு பொய்யர் என்றும், வாஷிங்டன் ஒப்பந்தம் செய்ய முடியாத ஒருவர் என்றும் நீண்ட நேரம் சாடினார். மதுரோ கடத்தப்பட்ட பிறகு “பொறுப்பேற்கப் போகும் தரப்பினருடன்” ஜனவரி 3-க்கு முன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை விவரிப்பது அமெரிக்க நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் தெளிவாக நம்பினார்.

இந்த உரையாடல், மதுரோ கடத்தப்படுவதற்கு முன்பே இடைக்கால ஜனாதிபதி ரோட்ரிக்கேஸின் உடன்பிறப்புகளும், ஒருவேளை வெனிசுவேலா தலைமையின் பிற நபர்களும், ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, வாஷிங்டனுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனர் என்ற அறிக்கைகளுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது.

“மாதுரோ வெளியேற வேண்டும்”

கடந்த மாதம் தி கார்டியன் இதழில் வெளியான செய்தி, இவற்றில் மிகவும் வெளிப்படையான உண்மைகளைத் தாங்கி வந்தது. ரோட்ரிக்கேஸ் உடன்பிறப்புகளுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை அறிந்த பல பெயரிடப்படாத நபர்களை மேற்கோள் காட்டி அந்த இதழ் வெளியிட்ட செய்தியில், “மதுரோவின் வெளியேற்றத்தை தாங்கள் வரவேற்போம் என்று அமெரிக்க மற்றும் கத்தாரி அதிகாரிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் அவர்கள் இரகசியமாக முன்னரே உறுதி அளித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் அந்த பிரிட்டிஷ் நாளிதழிடம் கூறுகையில், தான் பதவியை பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக டெல்சி ரோட்ரிக்கேஸ் வாஷிங்டனிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்: “மதுரோ வெளியேற வேண்டும் என்பதே டெல்சியின் தகவலாக இருந்தது.” பேச்சுவார்த்தைகளை அறிந்த மற்றொரு நபர் அவரை மேற்கோள் காட்டி, “அதன்பிறகு (மதுரோவிற்குப் பின்) என்ன நடந்தாலும் நான் ஒத்துழைப்பேன்,” என்று டெல்சி கூறியதாகத் தெரிவித்தார்.

அந்த அறிக்கை மேலும் கூறுகையில், “மதுரோ வெளியேற்றப்பட்ட பிறகு அமெரிக்காவிற்கு உதவுவதாக ரோட்ரிக்கேஸ் குடும்பத்தினர் உறுதியளித்த போதிலும், அவரைப் பதவியிலிருந்து கவிழ்க்க அமெரிக்காவிற்கு நேரடியாக உதவ அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டது.

“இடைக்கால ஜனாதிபதி” (டெல்சி ரோட்ரிக்கேஸ்) ஒரு மெல்லிய கோட்டை வரைந்திருக்கலாம். ஆனால், மதுரோ மற்றும் புளோரஸைக் கைப்பற்ற நடத்தப்பட்ட அந்த “குறையற்ற”, “துல்லியமான” இராணுவ நடவடிக்கைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் கிளம்பாததற்கு, வெனிசுவேலா பாதுகாப்புப் படைகளுக்குள் உள்ள கூறுபாடுகளின் ஒத்துழைப்பே காரணம் என்ற சந்தேகம் அங்கு வலுவாக உள்ளது.

இந்த அனுமானத்திற்கு வெனிசுவேலாவிற்கான மாஸ்கோ தூதர் செர்ஜி மெலிக்-பாக்தசரோவ் வலுவான ஆதரவை அளித்தார். ரஷ்யத் தொலைக்காட்சியான Rossiya-24-க்கு அளித்த பேட்டியில், வெனிசுவேலா அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் அமெரிக்க உளவுத்துறையுடனான அவர்களின் கூட்டுச் செயல்பாட்டின் காரணமாகவே இந்த அமெரிக்க நடவடிக்கை வெற்றி பெற்றதாக அவர் கூறினார். இந்தச் செயல்களை “துரோகம்” என்று வர்ணித்த அவர், ஜனவரி 3 தாக்குதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த ஒத்துழைப்பு தொடங்கிவிட்டது என்றார். “அமெரிக்க உளவுத்துறைக்காக முறையாகப் பணியாற்றியவர்களின்” பெயர்கள் மாஸ்கோவிற்குத் தெரியும் என்றும் அவர் உரிமை கோரினார்.

இதே கருத்துக்களை ஐ.நா-வுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா, கடந்த வாரம் அதே தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் எதிரொலித்தார்: “வெனிசுவேலாவில் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு துரோகம் நடந்துள்ளது, அதைப்பற்றி அவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள். சில உயர் அதிகாரிகள் அடிப்படையில் ஜனாதிபதியை காட்டிக்கொடுத்துவிட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

மதுரோவின் தனிப்பட்ட தலைவிதி விஷயத்தில் ஒரு துரோகம் நடந்திருக்கலாம் என்றாலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் குண்டர்தனமான நடவடிக்கைகளுக்கு அவர் ஏதேனும் மாறுபட்ட பதிலை அளித்திருப்பார் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. மதுரோ மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரின் அறிக்கைகளும் தெளிவுபடுத்துவது போல, வாஷிங்டன் கேட்ட அனைத்தையும் வழங்க மதுரோ தயாராகவே இருந்தார். அவர் ஜனாதிபதி பதவியைத் துறந்து வெனிசுவேலாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஒரே முட்டுக்கட்டையாக இருந்தது.

அனைத்திற்கும் மேலாக, வெனிசுவேலாவின் எண்ணெயைச் சுரண்டுவதற்காக “முற்றுகை-எதிர்ப்பு” நடவடிக்கையின் கீழ் மதுரோ அரசாங்கத்திற்கும் செவ்ரான் (Chevron) நிறுவனத்திற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தமே, இப்போது நடைபெற்று வரும் ஒட்டுமொத்த தனியார்மயமாக்கலுக்கான ஒரு முன்னோடியாக அமைந்தது.

ஜனவரி 3 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான முன்னேற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை உந்து சக்தி, ரோட்ரிக்கேஸ் குடும்பத்தினரின் அல்லது இராணுவ அதிகாரிகளின் துரோகம் மட்டுமல்ல; மாறாக, சாவிஸ்மோ (chavismo) மற்றும் அதன் “21-ஆம் நூற்றாண்டு சோசலிசம்” அடைந்துள்ள வரலாற்று முட்டுக்கட்டைதான் காரணமாகும். பொதுவாகச் சொன்னால், இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் இளஞ்சிவப்பு அலை (Pink Tide) என்று அழைக்கப்படும் இடதுசாரி இயக்கங்களின் வீழ்ச்சியே இது.

சாவேஸின் ஆட்சியின் உச்சக்கட்டத்தில், எண்ணெய் விலையேற்றத்தால் கிடைத்த உபரி வருமானத்தைக் கொண்டு, சமூகத்தின் மிக ஏழ்மையான பிரிவினருக்குப் பயனளிக்கும் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி வழங்க சாவிஸ்தா அரசாங்கத்தால் முடிந்தது.

ஆனால், சாவேஸின் மரணம் மற்றும் மதுரோவின் வருகையைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைச் சரிவு மற்றும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக, வறுமை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அரசாங்கம் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தியது.

இதன் விளைவாக, வெனிசுவேலா அந்தப் பிராந்தியத்திலேயே மிகவும் ஏழ்மையான மற்றும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக மாறியது. நாட்டின் 31 சதவீத செல்வம் வெறும் 1 சதவீத செல்வந்தர்களிடம் குவிந்தது. அதே சமயம், மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோரிடம் வெறும் 3.6 சதவீதச் செல்வம் மட்டுமே இருந்தது.

அடிப்படை மட்டத்தில், “பொலிவேரியப் புரட்சி” வெனிசுவேலாவின் பொருளாதாரத்தின் வரலாற்றுச் சாபத்தைத் தீர்க்கத் தவறிவிட்டது: அதாவது, ஒரே ஒரு மூலப்பொருளான பெட்ரோலிய ஏற்றுமதியை மட்டுமே பெருமளவில் சார்ந்து இருப்பது; அதிலும் பெரும்பகுதி அமெரிக்காவிற்கே சென்றது. இது உலகளாவிய எரிசக்தி சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும், அமெரிக்காவின் தடைகளுக்கும், வாஷிங்டனின் இராணுவ முற்றுகைக்கும் நாட்டை எப்போதும் பாதிப்புக்குள்ளாகவே வைத்திருந்தது.

இப்போது, டெல்சி ரோட்ரிக்ஸின் கீழ் இருக்கும் சாவிஸ்மோ, வாஷிங்டனால் இயக்கப்படும் ஒரு பொம்மை அரசாங்கமாக மாறியுள்ளது. அதன் பொருளாதார, இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தும் அமெரிக்காவால் தீர்மானிக்கப்படுகின்றன. இதற்கு இணையான ஒரு அப்பட்டமான நவீன காலனித்துவ ஆதிக்கத்தைப் பார்க்க வேண்டுமானால், அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த கியூபா (1903-1934), நிகராகுவா அல்லது ஹைட்டி ஆகியவற்றின் வரலாற்றிற்குத்தான் நாம் திரும்பிச் செல்ல வேண்டும்.

இந்த அரசாங்கத்தின் முக்கிய சுதந்திரமான செயல்பாடு என்பது, அதன் முக்கிய ஆதரவுத் தளங்களான பாதுகாப்புப் படைகள் மற்றும் பொலிபூர்சுவாசி (boliburguesía) எனப்படும் ஒரு செல்வந்தர் அடுக்கின் நலன்களைப் பாதுகாப்பதே ஆகும். இந்தப் பொலிபூர்சுவாக்கள், அரசாங்க ஒப்பந்தங்கள், ஊழல் மற்றும் நிதிய ஊக வணிக சூதாட்டங்கள் மூலம் தங்களது சொத்துக்களைக் குவித்த வெனிசுவேலாவின் முதலாளிகள் ஆவர்.

ஹியூகோ சாவேஸால் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் அவமானகரமான பாதையினால், வெனிசுவேலா தொழிலாள வர்க்கம் மிகக் கடுமையான விலையைக் கொடுத்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர், மில்லியன் கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர், மேலும் ஊதியத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் “எதிர்ப்புரட்சியாளர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

வெனிசுவேலாவில் “பொலிவேரியப் புரட்சி” ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலைக்கு மற்றும் சோசலிசத்திற்கு கூட சில புதிய பாதையைத் திறந்துவிட்டது என்ற பிரமைகளை வளர்த்த பப்லோவாத மற்றும் மொரேனோய்ட் அமைப்புகள் உட்பட, அனைத்து போலி-இடது குழுக்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தையும் சாவிஸ்மோவின் தலைவிதி அம்பலப்படுத்தியுள்ளது.

மாறாக, இது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு இலத்தீன் அமெரிக்கா வழங்கியுள்ள மற்றொரு துன்பகரமான மற்றும் விலைமதிப்பற்ற எதிர்மறை நிரூபணமாகும். ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட நாடுகளில், முதலாளித்துவ புரட்சியுடன் தொடர்புடைய ஜனநாயக மற்றும் தேசியப் பணிகளை, அந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையின் கீழ் நிறைவேற்ற முடியாது என்று ட்ரொட்ஸ்கி நிறுவினார். ஏனெனில், இந்த வர்க்கம் உலக முதலாளித்துவத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதுடன், கீழிருந்து எழும் புரட்சியைக் கண்டு அஞ்சுகிறது. மாறாக, இந்தப் பணிகளைத் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே மேற்கொள்ள முடியும். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி, தனது புரட்சியைச் சர்வதேச அளவில் விரிவுபடுத்த முயலும் அதே வேளையில், சோசலிச நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்.

சாவிஸ்மோவின் வீழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த இளஞ்சிவப்பு அலை இயக்கத்தின் தோல்வியிலிருந்து கிடைக்கும் கசப்பான பாடங்கள், தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினரால் உள்வாங்கப்பட வேண்டும். ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்பும் போராட்டத்தை மேற்கொண்டுவரும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) கிளைகளுக்கு, இந்தப் பாடங்கள் மிக அவசியமானதாகும்.

Loading