மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகின்றது. மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ நிக்கோல் குட் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு எதிராக நடந்த பாரிய போராட்டங்கள், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையை எழுப்பியுள்ளன. இது அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களில் ஈடுபடப்போவதற்கான ஒரு முன்னோடியாகும்.
தற்போது, மேற்கு கடற்கரையில் 31,000ம் கெய்சர் செவிலியர்களும், நியூ யோர்க் நகரில் 15,000 செவிலியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கெய்சர் நிறுவனத்தில், மேலும் 3,000ம் தொழில்நுட்ப வல்லுநர்களும் மருந்தாளுநர்களும் செவிலியர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிக்க உள்ளனர். இந்த வேலைநிறுத்தங்களுக்குப் பரந்த ஆதரவு கிடைத்து வருகிறது. ஏனெனில், தொழிலாளர்கள் ஒரு தன்னலக்குழுவை எதிர்கொள்கிறார்கள் என்பதையும், அதன் ஒட்டுண்ணித்தனமான சமூக நலன்களே இந்த நெருக்கடியின் மையமாக இருக்கின்றன என்பதையும் மக்கள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தங்கள் அளவு, தீவிரம் மற்றும் காலநீட்டிப்பில் வளர்ந்து வருகின்றன. நியூ யோர்க் நகரில், கூட்டாக வேலையிலிருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், மூன்று வாரங்களாக இந்த வெளிநடப்பு தொடர்கிறது. பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து வேலைநிறுத்தத்தை முறியடிக்க தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கப் போவதாக நிர்வாகம் பகிரங்கமாக விளம்பரம் செய்து வருகிறது. புரூக்ளின் மருத்துவமனை மையத்தில் — செவிலியர்களுக்கு இன்னும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை, ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவம் அவர்களை வேலைநிறுத்தம் செய்ய விடாமல் தடுத்துள்ளது — நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக மருத்துவக் காப்பீட்டு வசதியை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தாங்கள் மற்றவர்களுக்கு வழங்கும் அதே சிகிச்சையைச் செவிலியர்கள் தாங்களே பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமூகத்தின் மீது ஆளும் வர்க்கம் தொடுத்துள்ள போரில் செவிலியர்கள் முன்னணியில் உள்ளனர். பெருநிறுவனங்களின் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக, பெருந்தொற்று காலத்தில் பொதுச் சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்த அரசாங்கம் மறுத்ததன் விளைவுகளை அவர்கள் அனுபவித்துள்ளனர். இப்போது, நாடு முன்பை விட மிகக் குறைந்த அளவே தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 26 கோடி அமெரிக்கர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் (ICE) தடுப்பு முகாம்களில் தட்டம்மை (Measles) நோய் பரவல் அதிகரித்து வருவதால், அமெரிக்கா தட்டம்மை இல்லாத நாடு என்ற அந்தஸ்தை இழக்கும் நிலையில் உள்ளது.
தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரும் ஒரு போராட்டத்திற்கான அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர்:
- இந்த வியாழக்கிழமை, 10 வளாகங்களைக் கொண்ட கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பு முழுவதிலும் உள்ள 40,000ம் பட்டதாரி மாணவர்கள் வேலைநிறுத்தத்திற்கான அங்கீகார வாக்கெடுப்பைத் தொடங்குகின்றனர்.
- ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் மூன்றில் இரண்டு பங்கிற்குப் பொறுப்பான 30,000ம் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டன.
- கலிபோர்னியாவின் பெரும்பாலான முக்கிய பள்ளி மாவட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் காலாவதியாகிவிட்டன. சான் பிரான்சிஸ்கோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் ஏற்கனவே வேலைநிறுத்தத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஸ்டாப் & ஷாப் (Stop & Shop) நிறுவனத்தில் பணியாற்றும் 30,000ம் ஐக்கிய உணவு மற்றும் வணிகத் தொழிலாளர்களுக்கான (UFCW) முக்கிய ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் காலாவதியாக உள்ளது.
- நகரத் தபால் ஊழியர்களுக்கான அடுத்த ஒப்பந்தத்திற்கான பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள் இந்த மாதம் தொடங்குகின்றன. ஏற்கனவே தபால் ஊழியர்களின் உயிரைப் பறித்துள்ள அபாயகரமான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, பிப்ரவரி 22 அன்று போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
- இந்த ஆண்டு முழுவதும், சுரங்கப்பாதை தொழிலாளர்கள் உட்பட நூறாயிரக்கணக்கான நியூ யோர்க் நகர பொதுத்துறை தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் மே மாதத்தில் காலாவதியாகவுள்ளன.
- மேலும், செப்டம்பர் 1 அன்று, 25,000ம் எஃகுத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் காலாவதியாக உள்ளன.
தொழிலாள வர்க்கத்தின் அணிகளுக்குள் மிக ஆழமாகச் சென்றடையும் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 1980-களில் திணிக்கப்பட்ட காட்டிக்கொடுப்புகள் மற்றும் தோல்விகளைத் தொடர்ந்து, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டுவந்த போராட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க – உண்மையில் உலகளாவிய - முதலாளித்துவ வரலாற்றில் மிக ஆழமான நெருக்கடி தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தள்ளுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கம் வரலாற்றின் எந்த முந்தைய கட்டத்தையும் விட மிகப் பெரியதாகவும், சர்வதேச அளவில் இணைக்கப்பட்டதாகவும், புறநிலை ரீதியாக சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.
ட்ரம்பிற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிரான இந்த இயக்கம், தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை ஆதாரமாகக் கொண்டு நிலைநிறுத்தப்பட வேண்டும். தற்போது நடைபெற்று வரும் வேலைநிறுத்தங்கள் ஆதரிக்கப்பட வேண்டும், விரிவுபடுத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்துத் தொழில்துறைகளிலும் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இந்தப் போராட்ட இயக்கம், தொழிலாள வர்க்கத்தின் அபாரமான பொருளாதார வலிமையை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டு, தெளிவான வர்க்க நனவு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு நோக்குநிலையை வளர்த்தெடுக்க வேண்டும். போராட்டக் களத்தில் இறங்கியுள்ள மாணவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவினரைத் தன் பின்னால் ஈர்த்து, சர்வாதிகாரத்திற்கு எதிரான சண்டையில் முன்னணி சக்தியாகத் தொழிலாள வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் பொருள், சர்வாதிகாரத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தை, தொழிலாள வர்க்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நலன்களுக்கான பாதுகாப்போடு இணைப்பதாகும். ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலுக்கும், ஒரு பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் சமூக மேலாதிக்கத்திற்கும் இடையிலான இயல்பான தொடர்பை அங்கீகரிப்பதே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மூலோபாயத்தின் அடிப்படையாக அமைய வேண்டும்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), நாடெங்கிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதன் மூலமாக, தொழிலாளர்களின் சுயாதீனமான முன்முயற்சியை அபிவிருத்தி செய்ய முனைகிறது. நம்பகமான களப் பணித் தொழிலாளர் தலைவர்களைக் கொண்ட இந்தக் குழுக்கள், தொழிலாளர்களுக்கு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், மூலோபாயத்தைத் திட்டமிடவும், தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் தேவையான வழிவகைகளை உருவாக்கும்.
இந்தக் குழுக்களின் ஒரு முக்கியமான அம்சமானது, வளர்ந்து வரும் இந்த இயக்கத்தைத் தடம்புரளச் செய்ய அல்லது ஒடுக்க முயலும் அனைத்து சக்திகளிடமிருந்தும் அவை தங்களைச் சுயாதீனமாக வைத்திருப்பதாகும். போராட்டங்களின் போது ஆதரவளிப்பது போல் பேசினாலும், ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் திரைமறைவில் போராட்ட எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் வேலை செய்து வருகின்றனர். வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு கட்சியாக, ஜனநாயகக் கட்சி இருப்பதால், ட்ரம்பிற்கு எதிரான எதிர்ப்பு ஒரு பெரும் சமூகக் கொந்தளிப்பாக மாறிவிடுமோ என்பதுதான் அவர்களின் முக்கிய அச்சமாக இருக்கிறது. அப்படி மாறினால், ட்ரம்ப் அல்லது அவர்களால் கூட அதைக் கட்டுப்படுத்த முடியாது.
இதனால்தான் ஜனநாயகக் கட்சியினர், அரச ஒடுக்குமுறையையும் கொலைகளையும் முன்னின்று நடத்தும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) ஆகிய அமைப்புகளுக்குத் தொடர்ந்து நிதி வழங்க வாக்களித்துள்ளனர்.
சமூக எதிர்ப்பைக் கவர்ந்து கட்டுப்படுத்துவதற்காகவே முன்னிறுத்தப்படும் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த மற்றும் அதைச் சுற்றியுள்ள “இடது” என்று சொல்லிக்கொள்ளும் நபர்களிடமிருந்தும் சுயாதீனமாக இருப்பது அவசியமாகும். ஜோஹ்ரான் மம்தானி தன்னை ஒரு “சோசலிஸ்ட்” என்று கூறிக்கொண்டதன் அடிப்படையில் நியூ யோர்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் பதவியில் இருக்கும் காலத்தை வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு உறுதியளிப்பதிலும், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பைச் சந்தித்து “பொதுவான உடன்பாடுகளை”க் கண்டறிய உறுதியளிப்பதிலுமே செலவிட்டுள்ளார்.
ஒரு விளம்பரத்திற்காகச் செவிலியர்களின் போராட்டக் களங்களில் மம்தானி ஆரம்பத்தில் தோன்றியிருந்தாலும், செவிலியர்களைக் கூண்டோடு வேலையை விட்டு நீக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க ஆளுநர் ஹோச்சுல் அவசரகால அதிகாரங்களை நீட்டித்தது போன்றவற்றின் போது அவர் மௌனமாக இருந்தார்.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் திட்டமிட்ட நாசவேலைகளைத் தொழிலாளர்கள் முறியடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க முயல்கிறது. ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அதிகரித்து வரும் அழைப்புகளுக்குத் தொழிற்சங்க அதிகாரிகள் அச்சம் மற்றும் விரோதத்தையே பதிலாக அளிக்கின்றனர். ஏனெனில் அத்தகைய இயக்கம் அவர்களின் பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்கள், பெருநிறுவன மேலாண்மை மற்றும் அரசாங்கத்துடனான ஆழமான உறவுகள் உட்பட அவர்களின் நிதிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.
மினியாபோலிஸில் நடந்த சுங்க அமலாக்கத் துறையினரின் கொலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம் (UAW) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “வேலைநிறுத்தம் செய்வதற்கான எமது சுதந்திரம் அல்லது சிறந்த வாழ்க்கையைப் பெறுவதற்காகப் போராடும் உரிமை அடுத்ததாக அச்சுறுத்தப்படலாம்” என்று ஒப்புக்கொண்டது. ஆனால், இதனுடன் எந்த ஒரு உறுதியான நடவடிக்கையும் எடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர். நடைமுறையில், ட்ரம்பின் பொருளாதாரத் தேசியவாதத்தை ஆதரிக்கும் UAW அதிகாரத்துவம், தான் பாதுகாக்கிறோம் என்று உரிமை கோரும் அதே உரிமையை ஒடுக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
மினியாபோலிஸில், பாசிச அச்சுறுத்தல் நிலவும் சூழலிலும் கூட, பல தசாப்தங்களாக ஒப்பந்தங்களில் எழுதப்பட்டுள்ள “வேலைநிறுத்தம் செய்யக்கூடாது” என்ற விதிமுறைகளுக்குத் தொழிலாளர்கள் தொடர்ந்து கீழ்ப்படிய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. சிக்காகோவில், ஆசிரியர் சங்கம் உள்ளூர் சில்லறை வணிக நிறுவனங்களில் பள்ளி நேரத்திற்குப் பிறகு போராட்டங்களை நடத்த அழைப்பு விடுத்தது. அதே சமயம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த உறுப்பினர்களின் முகநூல் கருத்துகளைத் தீவிரமாக நீக்கியும் வந்தது.
தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடையே மேலோங்கிய அணுகுமுறையை சான் டியாகோ ஆசிரியர் சங்கம் பயன்படுத்திய அந்த அவதூறான வாசகம் சுருக்கமாகக் கூறுகிறது: “இப்போதே கீழ்ப்படியுங்கள், பின்னர் துக்கப்படுங்கள்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “இப்போது அடிபணி, எப்போதும் போராடாதே என்பதே இதன் பொருளாகும்.
நியூ யோர்க் நகரில், நியூ யோர்க் மாநில செவிலியர் சங்கம் (NYSNA) திட்டமிட்டே இந்த வேலைநிறுத்தத்தை 15 மருத்துவமனைகளில் வெறும் 4 இடங்களில் மட்டுமே மட்டுப்படுத்தியுள்ளது; மற்ற இடங்களில் ஒப்பந்தங்கள் எட்டப்படாமலேயே வெளிநடப்புப் போராட்டங்களை ரத்து செய்துள்ளது. கெய்சர் பெர்மனென்டே (Kaiser Permanente) நிறுவனத்தில், UNAC/UHCP சங்கம் முக்கியமாக தொழிலாளர்-மேலாண்மை கூட்டாண்மையை பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது. இது தொழிற்சங்க கஜானாவிற்கு மில்லியன் கணக்கான டாலர்களை வாரி இறைக்கும் ஒரு பெருநிறுவன ஆதரவுத் திட்டமாகும்.
இந்த தொழிற்சங்க எந்திரம் பெருநிறுவன அரசியல் ஸ்தாபனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவருமே முன்னெடுக்கும் அதே தேசியவாத “அமெரிக்கா முதலில்” என்ற திட்டநிரலை ஆதரிக்கிறது. இந்த நெருக்குதலிலிருந்து விடுபட, தொழிலாளர்கள் இந்த நஞ்சை நிராகரிக்க வேண்டும். மேலும் சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.
தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ள வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெறும் ஒப்பந்தப் பிரச்சினைகளால் மட்டும் தூண்டப்படவில்லை. மாறாக சகித்துக் கொள்ள முடியாத சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையால் ஏற்பட்ட ஆழமான கோபத்தால் உருவானவை. உழைக்கும் மக்கள் மளிகைச் சாமான்களுக்கும் வீட்டு வாடகைக்கும் இடையில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று திணறிக்கொண்டிருக்கையில், ஒரு சிறிய நிதிய தன்னலக்குழு மலைக்க வைக்கும் செல்வத்தைக் கட்டுப்படுத்துகிறது.
அதிகாரத்துவத்தின் பிடியை உடைத்து, அதிகாரத்தைச் சாமானிய தொழிலாளர்களிடம் ஒப்படைக்கவும், உண்மையான ஜனநாயக முடிவெடுக்கும் அதிகாரத்தை நிலைநாட்டவும் கூடிய குழுக்களைக் கட்டியெழுப்புவதை IWA-RFC ஊக்குவிக்கிறது.
அத்தகையதொரு இயக்கம் பெருநிறுவனங்களை மட்டுமல்ல, அவற்றின் செல்வம் மற்றும் அதிகாரத்தைப் பாதுகாத்துவரும் அரசியல் அமைப்புமுறையையும் எதிர்க்க வேண்டும். இந்த ஊழல் நிறைந்த அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் இருந்துகொண்டு தொழிலாள வர்க்கம் தனது நலன்களை முன்னெடுக்க முடியாது. தொழிலாள வர்க்கம் தனது சொந்த அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும். இலாபத்திற்காக அல்லாமல் சமத்துவம் மற்றும் மனிதத் தேவைகளின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்கப் போராட வேண்டும்.
இதன் பொருள் முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களைக் இலக்கு வைப்பதாகும். தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டத்தை, பில்லியனர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, பொருளாதாரத்தைத் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது. பாசிச வலதுசாரிகளின் தூண்களாகவும், பாரிய சுரண்டல்கள் மூலம் இலாபமீட்டுபவர்களாகவும் இருக்கும் எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்றவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான நிதிக்கு பயன்படுத்த வேண்டும்.
