முன்னோக்கு

2026 தேர்தல்களில் மோசடி செய்ய அல்லது அவற்றை ரத்து செய்ய ட்ரம்ப் தயாராகி வருகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் மத்திய அரசின் பகுதியளவு பணிநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் செலவு மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புன்னகைக்கிறார், செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 3, 2026. [AP Photo/Alex Brandon]

வலதுசாரி இணைய ஒலி வரிசை ஒன்றில் திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, 2026 தேர்தல்களில் முறைகேடு செய்வதற்கான அல்லது அவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதற்கான தீவிர முயற்சியின் அறிகுறியாகும். குடியரசுக் கட்சி தேர்தல்களை “தேசியமயமாக்க” வேண்டும் என்றும், ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் மாநிலங்களில் “வாக்கெடுப்பைத் தன்வசப்படுத்த” வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

கடந்த செவ்வாயன்று, வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோதும், பின்னர் புதன்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்ட NBC நியூஸின் ரொம் லாமாஸ் உடனான நேர்காணலிலும் ட்ரம்ப் தனது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார். ட்ரம்ப் தனது உரையில் ஆப்பிரிக்க அமெரிக்க மேயர்களைக் கொண்ட, சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் நகரங்களான டெட்ராய்ட், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா ஆகியவற்றை “ஊழல் நிறைந்தவை” என்று இனவெறி அடிப்படையில் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

குறிப்பிடத்தக்க வகையில், 2020 தேர்தல் குறித்த ட்ரம்பின் இடைவிடாத பொய்களுடன் லாமாஸ் எந்த கருத்து வேறுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களில் தேர்தல் செயல்முறையைத் கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் முயற்சி அரசியலமைப்பை அப்பட்டமாக மீறுவதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டவில்லை. ஊடக நிறுவனங்கள் மீதான பில்லியனர்களின் பிடி இறுகி வரும் நிலையில் —CBS மற்றும் வாஷிங்டன் போஸ்டில் நடக்கும் ஆட்குறைப்புகள் இதற்கு தற்போதைய உதாரணங்கள்— பல மில்லியன் சம்பளம் வாங்கும் “பத்திரிகையாளர்கள்” புதிய ஒழுங்குமுறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.

வாக்களிக்கும் உரிமை உட்பட அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்காகத் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் ஒரு பிரச்சாரத்தின் சமீபத்திய படிதான் ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல்களாகும். இதில் காங்கிரஸ் தேர்தல் மாவட்ட எல்லைகளை முறையற்ற வகையில் மாற்றியமைத்தல், வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் மற்றும் தபால் மூலமான வாக்குகளுக்குத் தடை விதிக்கும் சட்டத்தை பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றுவது, மற்றும் வாக்காளர்களைத் தகுதியிழப்பு செய்யும் நோக்கில் மத்திய அரசு அதிகாரிகள் தலையிடுவதற்காக, மாநிலங்களின் வாக்காளர் பட்டியலை ஒப்படைக்க நீதித்துறையை கோருவது போன்றவைகளும் அடங்கும்.

மிகவும் சமீபத்தில், ஜோர்ஜியாவின் புல்டன் மாவட்ட (அட்லாண்டா) தேர்தல் அலுவலகத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) முகவர்கள் சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையை FBI துணை இயக்குனர் ரொம் பெய்லி மற்றும் தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் ஆகியோர் நேரடியாகக் கண்காணித்தனர். 2020 தேர்தலில் சீனா தலையிட்டதாகக் கூறிவரும் கப்பார்ட் ஏற்படுத்திக் கொடுத்த தொடர்பின் மூலம், ட்ரம்ப் நேரடியாக FBI முகவர்களிடம் பேசியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும், 2020 தேர்தலில் பைடென் நிர்வாகத்தால் நாட்டிற்குள் அழைத்து வரப்பட்ட “சட்டவிரோத குடியேறிகளின்” வாக்குகளால், தான் தோற்றதாக ட்ரம்ப் கூறும் பொய்யான வாதங்களுக்கு ஆதரவாகவே உள்ளன. உண்மையில் குடியுரிமை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது, மிகச் சிலரே அதற்கு முயற்சி செய்கிறார்கள். இது “பெரும் மாற்றீட்டுக் கொள்கை” எனும் பாசிசக் கொள்கையுடன் தொடர்புடையது. வெள்ளை இன மக்களை திட்டமிட்டு “மாற்றியமைப்பதற்காக” ஆபிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்குள் கொண்டு வரப்படுகிறார்கள் என்று இந்தக் கொள்கை கூறுகிறது.

இதன் பகிரங்கமான நவ-நாஜிக்களின் பதிப்பில், இத்தகைய பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் யூத பில்லியனர்கள் என்று கூறப்படுகிறது. ட்ரம்பின் சற்றே மெருகூட்டப்பட்ட பதிப்பில், அது ஜனநாயகக் கட்சியாக உள்ளது. “அவர்கள் தங்களது ஆட்களை, மில்லியன் கணக்கான மக்களை அனுப்பியுள்ளனர்,” என்று திங்களன்று புலம்பெயர்ந்தவர்களைக் குறிப்பிட்டு ட்ரம்ப் கூறினார். “நாம் அவர்களை வெளியேற்ற வேண்டும். ஒருவேளை குடியரசுக் கட்சியினர் அவர்களை வெளியேற்றவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் ஒரு குடியரசுக் கட்சியாளராகத் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2026 தேர்தல்களுக்கு எதிரான ட்ரம்பின் பிரச்சாரமானது, ஜனவரி 6, 2021 அன்று நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அடிப்படையாக இருந்த 2020 “திருடப்பட்ட தேர்தல்” பொய்களையும், முகமூடி அணிந்த, கனரக ஆயுதம் ஏந்திய குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மற்றும் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறை (CBP) முகவர்களால் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தற்போதைய அரசு பயங்கரவாதத்தையும் ஒன்றிணைக்கிறது.

இதன் இறுதி முடிவு, ட்ரம்ப் எதிர்ப்பு மற்றும் குறிப்பாக சிறுபான்மை வாக்காளர்களை அச்சுறுத்த போலீஸ் பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி தேர்தலை முறைகேடு செய்வதாகவே இருக்கும். ட்ரம்பின் முன்னாள் உதவியாளரான பாசிசவாதி ஸ்டீவ் பானன், ட்ரம்பின் கருத்துக்களை வரவேற்றதோடு, நவம்பர் மாதத்தில் வாக்குச் சாவடிகளை ICE முகவர்கள் “சூழ்ந்து கொள்ள” வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மாறாக, இத்தகைய வழிமுறைகள் வேலை செய்யவில்லை என்றால், நாட்டின் சில பகுதிகளில் விழும் வாக்கு முடிவுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அறிவிக்கக்கூடும். அல்லது, கடந்த மாதம் ஒரு நேர்காணலில் அவர் கூறியது போல, அவரது நிர்வாகத்தின் “மாபெரும் வெற்றியை” காரணம் காட்டி தேர்தல்களை முற்றிலுமாக ரத்து செய்யலாம்.

1789-ல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, அமெரிக்கா இடைவெளியின்றி ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காங்கிரஸிற்கும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதிக்குமான தேர்தல்களை நடத்தி வருகிறது. பெருமந்தநிலை, வெளிநாட்டுப் போர்கள் மற்றும் உள்நாட்டுப் போர் காலத்தில் கூட வாக்குப்பதிவு நடைபெறுவதைத் தடுக்கவில்லை. சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் இந்த ஆண்டில், ட்ரம்ப் தேர்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் பற்றி பகிரங்கமாகச் சிந்திக்கிறார் என்றால், அதற்கு அமெரிக்க முதலாளித்துவம் சந்தித்து வரும் மிகப்பெரிய அளவிலான நெருக்கடியே காரணமாகும்.

ட்ரம்ப் ஒரு தனிநபராக அல்ல, மாறாக ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக செயல்படுகிறார். உலக சோசலிச வலைத் தளம் கடந்த வாரம் எழுதியது போல்:

சர்வாதிகாரத்திற்கான ட்ரம்பின் சதித்திட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது —இதில் மினியாபோலிஸ் நிகழ்வுகள் ஒரு பகுதி மட்டுமே— ஒரு ஜனாதிபதியாக அவர் முதலாளித்துவ தன்னலக்குழுவின் பிரதிநிதியாகவே பேசுகிறார் மற்றும் செயல்படுகிறார். தொடர்ச்சியாகத் தீவிரமடைந்து வரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல், தன்னலக்குழு அனைத்து ஜனநாயக மற்றும் சட்டப்பூர்வ நெறிமுறைகளையும் முறித்துக் கொள்கிறது. இந்த உண்மையை மறைப்பதும், பொதுமக்களுக்கு மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றுவதும், கீழிருந்து எழும் எந்தவொரு சுயாதீனமான இயக்கமும் உருவாவதைத் தடுப்பதுமே ஜனநாயகக் கட்சியினரின் பங்காகும்.

மினியாபோலிஸில் ட்ரம்பின் இந்த கொடூரமான நடவடிக்கைகள் சாத்தியமானதற்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், குறிப்பாக வாஷிங்டனிலும் உள்ள ஜனநாயகக் கட்சி அதிகாரிகளின் கூட்டுச்சதி, மௌனம் மற்றும் கோழைத்தனமே காரணமாகும். தேர்தல்களை “கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது” குறித்து ட்ரம்ப் பேசி சில மணிநேரங்களிலேயே, பென்டகன் மற்றும் பிற அமெரிக்க அரசுத் துறைகளுக்கான 1.2 டிரில்லியன் டாலர் நிதியுதவிக்கு பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைமை வாக்களித்து ஒப்புதல் அளித்தது. இதில் ICE மற்றும் CBP முகவர் அமைப்புகளை உள்ளடக்கிய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான குறுகிய கால நிதி நீட்டிப்பும் அடங்கும்.

2026 தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் பெரும் தோல்வியைச் சந்தித்தால் அது தனது நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் என்று ட்ரம்ப் அஞ்சுவதில் சந்தேகமில்லை. ஆனால், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் ஜனநாயகக் கட்சி இடங்களைக் கைப்பற்றுவது குறித்து அவர் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஏனெனில், அவர் நீண்ட காலத்திற்கு முன்பே ஜனநாயகக் கட்சியினரை எடைபோட்டுவிட்டார். 2016 வெற்றியைத் தொடர்ந்து ட்ரம்பை முதன்முதலில் வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற பாரக் ஒபாமா, இது ஒரு “உட்புற மோதல்” போன்றது என்றும், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் “ஒரே அணியில்” இருப்பவர்கள் என்றும் கூறினார். ஜனவரி 6-ல் நடந்த தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகும், தனக்கு ஒரு “வலிமையான குடியரசுக் கட்சி” தேவை என்று கூறியவர் பைடென். மேலும், ICE மற்றும் CBP-யின் வன்முறைக்கு ஜனநாயகக் கட்சியினரின் எதிர்வினை என்பது வெறும் வழக்குத் தொடர்வதும் கைகளைக் பிசைந்துகொள்வதுமாக மட்டுமே உள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் இதழ், ட்ரம்பிற்கு முன்பாக ஜனநாயகக் கட்சியினரின் பணிவை வெளிப்படுத்தியது. 2026 தேர்தலுக்கான அவரது அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி தலையங்கம் எழுதிய அந்த இதழ், வாக்காளர் அடையாள அட்டைத் தேவையை விமர்சிக்கும் ஜனநாயகக் கட்சியினரைக் கண்டிப்பதிலிருந்தே தனது தலையங்கத்தை எழுதியது. “2020 ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வாக்கு இயந்திரங்களைக் கைப்பற்ற தேசியப் பாதுகாப்புப் படையை அனுப்பாததற்குத் தான் வருந்துவதாக” ட்ரம்ப் டைம்ஸிடம் கூறியதை அந்தத் தலையங்கம் குறிப்பிட்டிருந்தது. ஆயினும்கூட, இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவோம் என்ற இந்த மறைமுக அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக, அதிக மக்கள் தேர்தல் பணியாளர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்ற வேண்டும் என்று கோருவதைத் தவிர நியூ யோர்க் டைம்ஸால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

ட்ரம்ப் ஒரு பாரிய பாசிச இயக்கத்திற்கு கட்டளையிடவில்லை. மாறாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியால் எதைச் சாதிக்க முடியவில்லையோ, அதை நிர்வாகப் பிரிவின் ஆயுதப் படைகளைப் பயன்படுத்தி ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ அவர் முயல்கிறார். இதற்குத் தடையாக இருப்பது ஜனநாயகக் கட்சி அல்ல, மாறாக அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள தொழிலாள வர்க்கமே ஆகும்.

ICE மற்றும் CBP முகவர்களின் கொலைவெறித் தாக்குதலுக்கு எதிராக மினியாபோலிஸில் வெடித்த பாரிய போராட்டத்தைக் கண்டு இந்த வருங்கால சர்வாதிகாரி அஞ்சுகிறார். மேலும், நாடு முழுவதும் செவிலியர்களின் வேலைநிறுத்த அலையில் காட்டப்படும் வர்க்கப் போராட்டத்தின் தீவிரம், ஆட்குறைப்புகள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரம் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் நனவில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் கண்டும் அவர் அஞ்சுகிறார்.

சர்வாதிகார அச்சுறுத்தலை ஜனநாயகக் கட்சி மூலம் எதிர்த்துப் போராட முடியாது. ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியினரைப் போலவே நிதிய தன்னலக்குழு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை நிலைநிறுத்துகிறது. இந்த போராட்டத்துக்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வு தேவைப்படுகிறது.

அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்கள், பாரிய போராட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் முன்னோக்கிய பாதையைக் காட்டுகின்றன. ட்ரம்பின் சர்வாதிகாரப் போக்கைத் தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்டு, தொழில்துறைகள், பிராந்தியங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு நனவுடன் தயாராக வேண்டும். நிதிய தன்னலக்குழுவின் அதிகாரத்தை உடைப்பதையும், சமூகத்தைச் சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கித் தள்ளும் முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறிவதையும் இலக்காகக் கொண்டு தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

Loading