முன்னோக்கு

நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் பாசிச உரைக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் பதில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

செவ்வாயன்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தில் (U.S. Capitol) பிரதிநிதிகள் சபையின் அறையில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாட்டின் நிலை குறித்த உரையை ஆற்றுகிறார். பிப்ரவரி 24, 2026. [AP Photo/Alex Brandon]

அமெரிக்காவில், கடந்த 150 ஆண்டுகளாக முதலாளித்துவ இருகட்சி முறை அமலில் உள்ள நிலையில், ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளையும் நலன்களையும் உண்மையாகவே எதிர்க்கும் எவருக்கும் மக்களிடம் பேசும் உரிமை மறுக்கப்படுகிறது. இருப்பினும், ட்ரம்பின் நாட்டின் நிலை குறித்த உரை மற்றும் அதற்கு ஜனநாயகக் கட்சியினர் அளித்த பதில் ஆகிய இரண்டிற்கும் எதிராக, தொலைக்காட்சியில் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு சோசலிச சமத்துவக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தால், நாங்கள் இதையே கூறியிருப்போம்.

*****

இனிய மாலை வணக்கம். சோசலிச சமத்துவக் கட்சி (SEP), நாட்டின் நிலை குறித்த எங்களது மதிப்பீட்டை முன்வைக்கக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை வரவேற்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிநிதியாகப் பேசும் நான், எனது இந்த உரையை அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள எங்களது வர்க்க சகோதர சகோதரிகளுக்கும் முன்வைக்கிறேன். நீங்கள் எங்களது எதிரிகள் அல்ல. முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், அதிகார வெறிபிடித்த தன்னலக்குழுவால் தொடுக்கப்படும் எந்தவொரு போரையும் அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்க்கிறார்கள், அதில் பங்குகொள்ள அவர்கள் விரும்பவில்லை.

நீங்கள் இதுவரை பார்த்தது —உங்களால் அதைச் சகித்துக்கொள்ள முடிந்திருந்தால்—அது ஒரு விகாரமான மற்றும் தரம் தாழ்ந்த காட்சியாகும். அங்கே ட்ரம்ப் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக வெறுப்பு, மிரட்டல்கள் மற்றும் ஆத்திரங்களைக் கக்கிக் கொண்டிருந்தார். ஸ்பீல்பெர்க் இயக்கிய ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு காட்சி உண்டு. அதில் சிறந்த தீவிரவாதத் தலைவர் தாடியஸ் ஸ்டீவன்ஸ், ஒரு இழிவான பிற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினரைத் திட்டுகிறார். அவர் “ஒரு ஒழுக்கச் சிதைந்த பிணம்... மனிதனை விட ஒரு ஊர்வன வகை உயிரிக்குச் சமமானவர்” என்று ஸ்டீவன்ஸ் பிரகடனப்படுத்துகிறார். ட்ரம்ப் தனது தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, பல்லி போன்ற உதடுகளை நக்கிக்கொண்டு, தனது முட்டாள்தனங்களை உளறிக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது, ஸ்டீவன்ஸின் அந்த வார்த்தைகளே என் நினைவுக்கு வந்தன.

பின்னர் அங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஒருசில விதிவிலக்குகளைத் தவிர, அவர்கள் மற்றொரு சிறந்த அமெரிக்கரான மார்க் டுவைனின் வார்த்தைகளை மெய்ப்பிக்கிறார்கள். அவர் ஒருமுறை “அமெரிக்காவிற்கே உரிய பிரத்யேகமான குற்றவாளி வர்க்கம் என்று ஒன்று இருக்குமானால், அது நாடாளுமன்றம்தான் என்பதைப் புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபித்துவிட முடியும்” என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அரங்கின் ஒரு பக்கத்தில் குடியரசுக் கட்சி பாசிஸ்டுகளின் கூட்டம் அமர்ந்திருந்தது. அவர்கள் தங்கள் பியூரர் (Führer-நாஜித் தலைவர்) மூச்சு விடுவதற்காக நிறுத்தும் போதெல்லாம், தங்கள் இருக்கைகளிலிருந்து குதித்தெழுந்து ‘USA, USA!’ என்று கத்திக் கொண்டிருந்தனர் — இது “வெற்றிக்கு வாழ்த்துக்கள்” (நாஜி முழக்கம் Sieg Heil) என்பதன் அமெரிக்கப் பதிப்பாகும்.

மறுபுறம், போலி எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் கோழைத்தனமான பிரதிநிதிகள், மடியில் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். “வியாதி பிடித்தவர்கள்”, “பைத்தியக்காரர்கள்”, “எமது நாட்டை அழிக்கும்” “ஏமாற்றுக்காரர்கள்” என்று வர்ணித்த ஒரு மனிதனிடமிருந்து சுமார் இரண்டு மணி நேரம் வெளிப்படையான அவமானங்களையும், வசவுகளையும், தூண்டுதல்களையும் அவர்கள் சகித்துக் கொண்டு செயலற்று அமர்ந்திருந்தனர். அவரது உரை முடிந்ததும், அவர்கள் சபையிலிருந்து மெதுவாக வெளியேறினர். பின்னர் முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரியும், வேர்ஜீனியா மாநில ஆளுநருமான அபிகாயில் ஸ்பான்பெர்கரிடம் ஒலிவாங்கி ஒப்படைக்கப்பட்டது. அவர் “மலிவு விலை” மற்றும் “திறமையான மேலாண்மை” குறித்து தூக்கத்தை வரவழைக்கும் ஒரு மறுப்புரையை வழங்கினார்.

2026-ல் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை இதுதான். ஒரு பாசிச ஜனாதிபதி மற்றும் அவருக்கு இணங்கிப் போகும் ஓர் எதிர்க்கட்சி. ஒரு ஆளும் வர்க்கமானது, அதன் அத்தியாவசியங்களில் —இலாபத்தைப் பாதுகாத்தல், போரை நடத்துதல், தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குதல்— ஒன்றுபட்டு, கொள்ளையடிப்பதில் எந்தக் குழுவிற்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள்.

கடந்த 25 ம் திகதி இரவு, அந்தச் சபையில் இருந்த எவருமே உங்களுக்காகப் பேசவில்லை.

பாசிசத்திற்கு எதிரான, ஏகாதிபத்திய போருக்கு எதிரான, மற்றும் பில்லியனர் தன்னலக் குழுவினரின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் — கேபிடோல் நாடாளுமன்ற கட்டிடத்தின் பளிங்கு மண்டபங்களில் இருந்து உருவாகப்போவதில்லை. அது கீழிருந்து வரும் — தொழிற்சாலைகள், பொதிகளை வைக்கும் குடோன்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் உழைக்கும் மக்கள் உண்மையில் வசிக்கும் தொழிற் பகுதிகளிலிருந்து அது வரும். இது ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலிலிருந்து மட்டுமே வரும். இல்லையெனில், அது கடந்து போய்விடும்.

ட்ரம்ப்பின் உரை முழுக்க முழுக்க அப்பட்டமான பொய்களின் தொகுப்பாக இருந்தது. பொருளாதாரம் “முன்பெப்போதும் இல்லாதவாறு கர்ஜிக்கிறது” என்றும் “விலைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன” என்றும் அவர் அறிவித்தார். பெட்ரோல் விலைகள் மற்றும் அந்தரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட முதலீட்டு வாக்குறுதிகள் குறித்து அவர் தம்பட்டம் அடித்தார். வேலைவாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் வரிகள் குறித்த தனக்கு சாதகமான மற்றும் கையாளப்பட்ட புள்ளிவிவரங்களின் வரிசையை அவர் அடுக்கிக் கொண்டே போனார். இவற்றை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் ஒரு பிரச்சாரத்தை உண்மையாக மாற்றிவிடலாம் என்பது போல அது இருந்தது.

இது நிதித்துறை தன்னலக் குழுவின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு விற்பனையாளரின் தந்திரமான பேச்சாகும். ஒவ்வொரு தொழிலாளியும் அறிந்த உண்மைகளை மறைப்பதே இதன் நோக்கமாகும்: அடிப்படைத் தேவைகள் எட்டாக்கனியாக உள்ளன, மேலும் பில்லியனர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்துத் தங்களை வளர்த்துக் கொள்ளும்போது, சமுதாயம் சூறையாடப்படுகிறது.

மினியாபோலிஸில் ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் படுகொலைகளைச் செய்த ஏஜெண்டுகளைக் கொண்ட, அந்தக் கொலைகளை நியாயப்படுத்திய நிர்வாகத்தைக் கொண்ட, மேலும் ரெனீ நிக்கோலின் மரணம் “அவராலேயே தேடிக்கொள்ளப்பட்ட ஒரு சோகம்” என்று அறிவித்த ஒரு துணை ஜனாதிபதியைக் கொண்ட இந்த ஜனாதிபதி —நாடாளுமன்றத்தின் முன் நின்று அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, “அமெரிக்க அரசாங்கத்தின் முதல் கடமை அமெரிக்க குடிமக்களைப் பாதுகாப்பதே தவிர, சட்டவிரோதக் குடியேறிகளை அல்ல” என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் கோரியபோது, ஜனநாயகக் கட்சியினர் எழுந்து நிற்க மறுத்ததற்காக அவர்களை ஏளனம் செய்தார்.

அவர் இனவெறிப் பொய்களின் ஒரு பெருவெள்ளத்தையே கட்டவிழ்த்துவிட்டார். மினசோட்டாவிலுள்ள சோமாலிய சமூகத்தை “கடற் கொள்ளையர்கள்” என்று முத்திரை குத்தியும், அவர்கள் அமெரிக்க மக்களிடமிருந்து பல பில்லியன் டாலர்களை “சூறையாடியுள்ளனர்” என்றும் குறிப்பிட்டார். இது யூதப் இனப்படுகொலைக்கு அடித்தளம் அமைத்தபோது, நாஜிக்கள் யூதர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய மொழியாகும். ட்ரம்ப் “ஊழல்” பற்றிப் பேசுகிறார். ஆனால், அது வோல் ஸ்ட்ரீட், பென்டகன் ஒப்பந்ததாரர்கள் மற்றும் சட்டங்களை எழுதும் பில்லியனர்கள் தினசரி செய்யும் சூறையாடல்களைப் பற்றியது அல்ல. மாறாக, அதிரடிச் சோதனைகள், பாரிய கைதுகள் மற்றும் நகரங்களில் மத்திய கூட்டாட்சி படைகளின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதே அவரது நோக்கமாகும். மினியாபோலிஸில் செய்யப்பட்டது மற்ற இடங்களிலும் செய்யப்படும் என்று அவர் அச்சுறுத்தினார்.

“அமெரிக்காவைக் காப்போம் சட்டம்” என்ற பதாகையின் கீழ், “சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் பிறர்” வாக்களிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ட்ரம்ப் கோரினார். மேலும், “ஏமாற்று வேலைகள் தாராளமாக நடக்கின்றன” என்று எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டினார். இது குடியரசுக் கட்சிக்கு வெற்றியைத் தராத எந்தவொரு தேர்தல் முடிவும் செல்லாதது என்பதற்கான ஒரு முன்கூட்டிய அறிவிப்பாகும். இது வாக்காளர் ஒடுக்குமுறை, மிரட்டல் மற்றும் எதிர்க்கட்சியினரை குற்றவாளிகளாக்குவதற்கான ஒரு வரைபடமாகும். நாஜி ஜேர்மனியின் கொடூரமான இரகசிய பொலிஸ் படையான கெஸ்டப்போ முகவர்களைப் போல, குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரிகளின் கண்காணிப்பில், துப்பாக்கி முனையில் வரவிருக்கும் தேர்தல்களை நடத்துவதற்கு ட்ரம்ப் தயாராகி வருகிறார்.

ட்ரம்ப்பின் உரை ஏகாதிபத்திய குண்டர் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது விருப்பப்படி ஆக்கிரமிக்கவும், குண்டுவீசவும், படுகொலை செய்யவும் மற்றும் ஆட்களை கடத்தவும் உள்ளதாகக் கூறப்படும் “உரிமையின்” கொண்டாட்டமாகவும் இருந்தது. வெனிசுவேலா மீதான இராணுவப் ஆக்கிரமிப்பை —பொதுமக்களை கொன்றுதள்ளி தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் ஜனாதிபதியைக் கடத்தியது— அவர் கைதட்டிப் பாராட்டப்பட வேண்டிய ஒரு வெற்றியாகக் குறிப்பிட்டார். அந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு ஹெலிகாப்டர் விமானிக்கு, அவர் உயரிய வீர விருது வழங்கினார், மேலும் ஒரு வேட்டைக்கு போவதைப்பற்றி விவரிக்கும் ஒரு மனிதனின் உற்சாகத்தோடு அந்த இராணுவ நடவடிக்கையை அவர் விவரித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனியின் நூரம்பேர்க்கில் இடம்பெற்ற விசாரணைகளில் நிறுவப்பட்ட தரநிலைகளின்படி, இது ஒரு சட்டவிரோத “அமைதிக்கு எதிரான குற்றம்” ஆகும். இது நாஜி குற்றவாளிகளைத் தூக்கு மேடைக்கு அனுப்பிய செயல்களுக்கு நிகரானதாகும். ஆனால் ட்ரம்ப் ஆட்சியின் பார்வையில், சர்வதேச சட்டம், நாடுகளின் இறையாண்மை மற்றும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கான தடை ஆகியவை, வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டது போல, இவை ஒதுக்கித் தள்ளப்பட வேண்டிய “வெறும் கற்பனைகளே” ஆகும். கரீபியன் மற்றும் பசிபிக் பகுதிகளில் மீனவர்கள் கொல்லப்பட்டதை மிகவும் குரூரமாகவும் ஏளனமாகவும் குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்கா “அவர்களின் மீன்பிடித் தொழிலையும் மிகக் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. யாரும் மீன்பிடிக்கச் செல்ல விரும்புவதில்லை” என்று பெருமையாகக் கூறினார்.

காஸா உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்பட்டுவிட்டது. “பாலஸ்தீனியர்” என்ற வார்த்தை அந்த உரையில் எங்குமே இடம்பெறவில்லை. அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் அரசியல், தளவாட ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்; மருத்துவமனைகள் அழிக்கப்பட்டன; பல்கலைக்கழகங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; ஒரு சிவிலியன் சமூகம் பட்டினிக்கும் குண்டுவீச்சுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் தரகர் வேலை பார்த்து முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறும் போர்நிறுத்தத்தை மீறி, இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்தம் என்று சொல்லப்பட்டதற்குப் பிறகு நூற்றுக்கணக்கானோர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இனப்படுகொலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அதைச் சாத்தியமாக்கி துணை நின்ற ஜனாதிபதியோ அது தீர்க்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஏன் அல்லது எப்போது ஒரு போரைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த நாட்டு மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போல, ஈரானைப் பற்றி குறிப்பிடுவதற்கு முன்பு, ட்ரம்ப் 90 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார். இறுதியாக அவர் ஈரானைப் பற்றி குறிப்பிட்டபோது, அவரது கருத்துக்கள் எதையும் விளக்காத சில வாக்கியங்களோடு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தன. அதே நேரத்தில், 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான அமெரிக்க இராணுவக் குவிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

அமெரிக்க மற்றும் சர்வதேச ஆளும் வர்க்கத்தின் முகவரிக் கையேடாகவே விளங்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள் பற்றி, அவரது உரையில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. தண்டனை பெற்ற ஒரு சிறுவர் பாலியல் கடத்தல்காரனின் சுற்றுவட்டத்தில் வலம் வந்த பில்லியனர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள், தொழில்நுட்ப நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரச குடும்பத்தினர் என அமெரிக்க மற்றும் சர்வதேச முதலாளித்துவ தன்னலக்குழுவின் சீரழிந்த சமூக உலகத்தை வெளிப்படுத்தும் 3 மில்லியனுக்கும் (30 இலட்சத்திற்கும்) அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்ட போதிலும், ஜனாதிபதி எதையும் பேசவில்லை. எப்ஸ்டீனுடனான அவரது நெருக்கமான, பல தசாப்த காலத் தொடர்பு புகைப்படங்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும் ட்ரம்ப் மௌனம் காத்தார். ட்ரம்ப்பின் உரை நிகழ்த்தப்பட்ட அன்றே, என்.பி.ஆர் (NPR) நடத்திய புலனாய்வு ஒன்றில், ட்ரம்ப் தொடர்பான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடும் எப்ஸ்டீன் சார்ந்த ஆவணங்களை நீதித்துறை நீக்கியுள்ளதாகவோ அல்லது மறைத்து வைத்துள்ளதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு இயந்திரத்தால் தொடர்ந்து நடத்தப்படும் மூடிமறைப்பு நடவடிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எப்ஸ்டீன் ஆவணங்கள், சீரழிந்த நபர்களைக் கொண்ட ஒரு ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்துகின்றன. எந்தக் கட்சியும் இதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. ஏனெனில் கிளிண்டன், ட்ரம்ப், சம்மர்ஸ், பானன், தாராளவாத அறிஞர்கள் மற்றும் பாசிச ஏஜெண்டுகள் என இரு தரப்பினருமே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இப்போது நாம் ஜனநாயகக் கட்சியினரைப் பற்றிப் பார்ப்போம். ஜனநாயகக் கட்சி என்பது ஒரு எதிர்க்கட்சியே அல்ல. அதுவும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு கட்சிதான். சமூக எதிர்ப்புகளை உள்வாங்கி அதை நீர்த்துப்போகச் செய்வதும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்தைத் தடுப்பதும், முதலாளித்துவத்திற்கு எதிராகக் கீழிருந்து எழும் எந்தவொரு சவாலும் எழுந்துவிடாமல் உறுதி செய்வதும் தான் அதன் பணியாகும்.

இந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வப் பதிலுரை, ஒரு செனட்டராலோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராலோ வழங்கப்படவில்லை. மாறாக, வேர்ஜீனியா ஆளுநர் அபிகாயில் ஸ்பான்பெர்க்கால் வழங்கப்பட்டது. எப்போதும் தங்களுக்குச் சாதகமான வாய்ப்புகளைத் திறந்து வைத்திருக்கும் பெர்னி சாண்டர்ஸ்ஸோ அல்லது அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸோ, ட்ரம்ப்பிற்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.

எதிர்பார்த்தபடியே, ஜனநாயகக் கட்சியினர் ஒரு முன்னாள் சி.ஐ.ஏ ஏஜெண்டை முன்னிறுத்தினர். அவர் தனது உளவுத்துறை அனுபவங்களைக் குறிப்பிட்டு, ட்ரம்ப் “சீனாவிடம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வலிமையை விட்டுக்கொடுக்கிறார்” என்றும் “ரஷ்ய சர்வாதிகாரிக்கு அடிபணிகிறார்” என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்தச் செய்தி உழைக்கும் மக்களுக்கானது அல்ல, மாறாக ஆளும் வர்க்கத்திற்கானதாகும்: நாங்கள் நம்பிக்கையானவர்கள், நாங்கள் தீவிரமானவர்கள், எங்களால் இந்த சாம்ராஜ்யத்தை அதிகத் திறமையுடனும், குறைவான பொது அவமானங்களுடனும் நடத்த முடியும் என்பதே அந்தச் செய்தியாகும்.

ஆளுநர் ஸ்பான்பெர்கர் எதைப் பற்றிப் பேசவில்லையோ, அதுவே அவர் மீதான குற்றச்சாட்டாகும். அவர் ICE அமைப்பை கலைக்க வேண்டும் என்று கோரவில்லை. ரெனீ குட் அல்லது அலெக்ஸ் பிரெட்டியின் பெயர்களை அவர் உச்சரிக்கவில்லை. வெனிசுவேலா மீதான படையெடுப்பையோ அல்லது காஸாவில் நடக்கும் இனப்படுகொலையையோ அவர் கண்டிக்கவில்லை. ஒரு டிரில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவுத் திட்டத்திற்கோ அல்லது சமூக நலத்திட்டங்கள் மீதான தாக்குதலுக்கோ அவர் சவால் விடுக்கவில்லை.

ஜனநாயகக் கட்சியினர் ஒடுக்குமுறை மற்றும் போர் இயந்திரத்தை எதிர்க்கவில்லை. ட்ரம்ப் அதனை எவ்வளவு முரட்டுத்தனமாகக் கையாளுகிறார் என்பதை மட்டுமே அவர்கள் எதிர்க்கிறார்கள்.

தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்ட, ட்ரம்ப் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளை உடல்ரீதியாகத் தகர்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிடத்தக்க வகையில், அல் கிரீன் என்ற ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், ட்ரம்ப்பின் இனவெறியைக் கண்டிக்கும் பதாகையை ஏந்தியபோது, அவரது சொந்தக் கட்சி சகாக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராத நிலையில், பாதுகாப்புப் படையினரால் அவர் சபையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டார்.

நாடாளுமன்ற மரபு என்ற காலாவதியான நடைமுறைகளைச் சிதைக்கும் வகையில் தாங்கள் எதைச் செய்தாலும், அது தங்களால் கட்டுப்படுத்த முடியாத மக்கள் எதிர்ப்பையும், தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டத்தையும் தூண்டிவிடும் என்று ஜனநாயகக் கட்சியினர் அஞ்சுகின்றனர். அத்தகைய போராட்டம் முதலாளித்துவ அமைப்பு முறைக்கே அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள்.

தொழிலாள வர்க்கம் தனக்காகப் பேச வேண்டும்

ஆளுநர் ஸ்பான்பெர்கர் தனது உரையைத் தொடங்கும்போது, மக்கள் “தங்கள் அரசாங்கத்திடம் மேலான ஒன்றை கோருவதற்காக ஒன்றிணைவதே” அமெரிக்காவின் அடிப்படைத் தத்துவம் என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூற்று பொய்யானது. தோமஸ் ஜெபர்சன் போன்ற ஒரு வீரம் மிக்க மனிதர் உண்மையில் எழுதியது என்னவென்றால், ஒரு ஒடுக்குமுறை அரசாங்கத்தை எதிர்கொள்ளும் போது, “அதை மாற்றுவதற்கோ அல்லது ஒழிப்பதற்கோ மற்றும் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கோ மக்களுக்கு உரிமை உண்டு” என்பதுதான். அமெரிக்காவைத் தோற்றுவித்தவர்கள் மூன்றாம் ஜோர்ஜ் மன்னரிடம் “மேலான ஒன்றைக்” கோரவில்லை. அவர்கள் சுதந்திரத்தை அறிவித்து, எட்டு ஆண்டுகள் புரட்சிகரப் போரை நடத்தினார்கள். அந்தப் பாரம்பரியமே இன்று தொழிலாள வர்க்கத்திற்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கை ட்ரம்ப் அல்லது ஜனநாயகக் கட்சியினர் “சிறப்பாகச் செயல்பட வேண்டும்” என்பதாக இருக்கக் கூடாது. சுய-ஏமாற்று அரசியலை முறித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

25ம் திகதி நடந்த அந்த நாடகத்தின் முக்கியப் பாடம் என்னவென்றால், அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல் அமைப்பு முறையில் தொழிலாள வர்க்கத்திற்கு என்று ஒரு குரல் கிடையாது என்பதாகும். எந்தவொரு கட்சியும் உங்கள் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. உங்கள் உரிமைகளை எந்தக் கட்சியும் பாதுகாக்காது. அதிகாரப்பூர்வ அரசியலின் ஒட்டுமொத்த கட்டமைப்பும், தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு வர்க்கமாக அடையாளம் காண்பதைத் தடுப்பதற்கும், அது சுயாதீனமாகத் தன்னைத் அணிதிரட்டிக்கொள்வதைத் தடுப்பதற்கும், மேலும் தன்னைச் சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராகத் தன் சொந்த நலன்களுக்காகப் போராடுவதைத் தடுப்பதற்குமே இயங்கி வருகிறது.

இது மாற வேண்டும். தொழிலாள வர்க்கம் தனக்காகப் பேச வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வருவனவற்றிற்கு அழைப்பு விடுக்கிறது:

குடியேறியவர்கள் மீதான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் ICE மற்றும் ஒட்டுமொத்த இயந்திரத்தையும் ஒழித்துக்கட்டுதல். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் எதிரிகள் அல்ல. அவர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினர் ஆவர். புலம்பெயர்ந்தோரைப் பலிகடா ஆக்குவது என்பது ஆளும் வர்க்கத்தின் ஆயுதக் கிடங்கில் உள்ள மிகப் பழமையான ஆயுதமாகும் — சுரண்டப்படுபவர்கள், சுரண்டுபவர்களுக்கு எதிராக ஒன்றிணைவதைத் தடுக்க இன மற்றும் தேசியப் பிரிவினைகளைத் திட்டமிட்டு வளர்ப்பதே இதன் நோக்கமாகும். அனைத்துப் புலம்பெயர்ந்தோருக்கும் முழு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டியின் கொலைகள் தொழிலாள வர்க்கத்தின் குழுக்களால் சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய ஏஜெண்டுகள் முதல் உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் வரை இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.

அனைத்து ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருதல். மத்திய கிழக்கிலிருந்து ஒவ்வொரு சிப்பாயையும் திரும்பப் பெற வேண்டும். கியூபா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். வெனிசுவேலா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். ஈரானுக்கு எதிரான போர் தயாரிப்புகளைக் கைவிட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களுக்காக ஒரு டாலர் கூட செலவிடக்கூடாது, ஒரு உயிர் கூட போகக்கூடாது. டிரில்லியன் டாலர் இராணுவ வரவு-செலவுத் திட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளான—மருத்துவம், வீட்டுவசதி, கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்வதுக்கு திருப்பி விடப்பட வேண்டும்.

தன்னலக் குழுவின் சொத்துக்களை பறிமுதல் செய்தல். மில்லியன் கணக்கான மக்கள் மருத்துவம், வீட்டுவசதி மற்றும் உணவு இன்றித் தவிக்கும் நிலையில், 905 பில்லியனர்களின் கைகளில் 7.8 டிரில்லியன் டாலர்கள் குவிந்திருப்பது முதலாளித்துவ அமைப்பு முறையின் தர்க்கத்தை வெளிப்படுத்துகிறது. வங்கிகள், மாபெரும் நிறுவனங்கள், முதலீட்டு நிதிகள் மற்றும் தொழில்நுட்ப ஏகபோக நிறுவனங்கள் அனைத்தும் பொது உடைமையாக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். சுரண்டல், ஊக வணிகம், மோசடி மற்றும் பெரும்பான்மை மக்களை ஏழ்மையாக்குவதன் மூலம் திரட்டப்பட்ட அந்த தன்னலக்குழுவின் அருவருப்பான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சமூகத் திட்டங்களின் மிகப்பெரிய விரிவாக்கத்திற்கு நிதி வழங்கப் பயன்படுத்தப்பட வேண்டும்.

சமூக நலத் திட்டங்களுக்கான வெட்டுக்களைத் திரும்பப் பெறுதல் மற்றும் சமூக உரிமைகளை நிறுவுதல். மருத்துவ உதவியிலிருந்து திருடப்பட்ட ஒவ்வொரு டாலரும் திரும்பப் பெறப்பட வேண்டும். உணவு முத்திரைக்கான தகுதியை மீட்டெடுத்தல். அனைவருக்கும் பொதுவான மருத்துவம், பல்கலைக்கழக நிலை வரையிலான இலவசப் பொதுக் கல்வி, மலிவு விலை வீட்டுவசதி மற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் பாதுகாப்பான ஓய்வூதியம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். இவை கற்பனையான கோரிக்கைகள் அல்ல. தொழிலாள வர்க்கத்தின் உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்தச் செல்வம் தற்போது ஆளும் வர்க்கத்தால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதைத் திரும்பப் பெறுவதே இப்போதைய பணியாகும்.

ஒவ்வொரு தொழிற்சாலை, பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குதல். நீண்ட காலத்திற்கு முன்பே பெரு நிறவன நிர்வாகத்தின் துணை அமைப்புகளாக மாறிவிட்ட தொழிற்சங்கங்கள், இதற்கான போராட்டத்தை வழிநடத்தாது. தொழிலாள வர்க்கத்தை அழித்துக்கொண்டிருக்கும் அதே முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதில்தான் இந்தச் சங்கங்களின் நிறுவன நலன்கள் பிணைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் தங்களுக்குத் தாங்களே பொறுப்புக்கூறக் கூடிய, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, சாமானிய தொழிலாளர் குழுக்களின் மூலம் தங்களைச் சுயாதீனமாகத் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குழுக்கள் தொழில்துறை ரீதியாகவும், மாநில எல்லைகளைக் கடந்தும், சர்வதேச எல்லைகளைக் கடந்தும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் இணைக்கப்பட வேண்டும். —இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கான அமைப்புரீதியான கட்டமைப்பாகும்.

ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான நிலைமைகளைத் தயார் செய்தல். அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியை, இரண்டு முதலாளித்துவக் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மோசடியான அரசியல் அமைப்பின் வாக்குப் பெட்டி மூலம் தீர்க்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரே தன்னலக்குழுக்களால் நிதியளிக்கப்படுகின்றன தொழிலாள வர்க்கத்தின் அதிகாரம் அதன் உழைப்பில் உள்ளது. உற்பத்தியை நிறுத்துவதற்கும், இலாபத்தின் ஓட்டத்தைத் தடுப்பதற்கும், சுரண்டல் இயந்திரத்தை முடக்குவதற்குமான அதன் கூட்டுத் திறனில் உள்ளது. அரசியல் ரீதியான பொது வேலைநிறுத்தம் என்பது தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த ஆயுதமாகும். அதனைப் பயன்படுத்துவதற்கான சூழல் மிக வேகமாக முதிர்ச்சியடைந்து வருகிறது. அதற்கான அமைப்புரீதியான மற்றும் அரசியல் அடித்தளங்களை இப்போதே உருவாக்குவது தற்போதைய பணியாகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம். தொழிலாள வர்க்கமானது ஒரு சர்வதேச வர்க்கமாகும். மூலதனம் உலக அளவில் இயங்குகிறது; எனவே, தொழிலாள வர்க்கமும் உலக அளவில் தங்களை அணிதிரட்டிக்கொள்ள வேண்டும். டெட்ராய்டில் தொழிலாளர்களைச் சுரண்டும் அதே நிறுவனங்கள்தான் மெக்சிகோவின் மொன்டேரி, சீனாவின் ஷென்சென், வங்காளதேசத்தின் டாக்கா (Dhaka) மற்றும் பேர்லினிலும் தொழிலாளர்களைச் சுரண்டுகின்றன. மத்திய கிழக்கில் போரை நடத்தும் அதே ஏகாதிபத்திய அமைப்புதான் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களை வறுமையில் தள்ளுகிறது. ட்ரம்ப் மற்றும் அமெரிக்க தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது, உலக முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாதது. தேசியப் பிரிவினைகள், இனப் பிரிவினைகள், மதப் பிரிவினைகள் என அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் ஆயுதங்களாகும். இவை அனைத்திற்கும் மேலாக, ஆளும் வர்க்கம் எதற்கு அஞ்சுகிறதோ, அந்த ஒன்றைத் தடுப்பதற்காகவே —அதாவது சுரண்டப்படுபவர்களின் ஐக்கியத்தை தடுப்பதற்காகவே— இவை பயன்படுத்தப்படுகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் நெருக்கடி என்பது, இறுதி ஆய்வில், ஒரு புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகும். தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்திற்கான புறநிலைச் சூழல்கள் ஏற்கனவே கனிந்து வருவது மட்டுமல்லாமல், அவற்றை நீண்டகாலமாக எதிர்பார்த்தவர்களையே வியப்பில் ஆழ்த்தும் வேகத்தில் அவை தீவிரமடைந்து வருகின்றன. பெருகி வரும் கோபம், பரவி வரும் எதிர்ப்பு, மற்றும் இந்த அமைப்பு முறையே உடைந்துவிட்டது என்ற வளர்ந்து வரும் அங்கீகாரம் ஆகியவற்றை, சமுதாயத்தின் சோசலிச மாற்றத்திற்கான ஒரு ஒருங்கிணைந்த இயக்கமாக மாற்றுவதற்குத் தேவையான ஒரு நனவான அரசியல் தலைமை மட்டுமே இப்போது குறைபாடாக உள்ளது.

1775-ல், அமெரிக்கப் புரட்சிக்கு உத்வேகம் அளித்த பொது அறிவு என்ற அழியாத நூலில் ரொம் பெயின், “உலகை மீண்டும் புதிதாக உருவாக்கும் ஆற்றல் எமது கையில் உள்ளது” என்று பிரகடனப்படுத்தினார்.

அந்தப் புதிய உலகம் சோசலிச உலகமாக இருக்கும். அதை உருவாக்கும் ஆற்றல் தொழிலாள வர்க்கத்திடமே உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுங்கள்.

உங்கள் பணியிடத்திலும் உங்கள் சுற்றுப்புறத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை உருவாக்குங்கள்.

உலக சோசலிச வலைத் தளத்தை (wsws.org) தினமும் வாசியுங்கள்.

எதிர்காலம் தன்னலக் குழுக்களுக்கோ அல்லது அவர்களின் அரசியல் சேவகர்களுக்கோ சொந்தமானது அல்ல. அது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கே சொந்தமானது.

Loading