முன்னோக்கு

ட்ரம்ப்பைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரி: இதில் உள்ள அரசியல் பிரச்சினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் இரவு விருந்தில், விருந்தினர் மண்டபத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை மேடையிலிருந்து அழைத்துச் செல்வதுக்கு அமெரிக்க இரகசிய சேவை முகவர்கள் அவரை சூழ்ந்து கொள்கின்றனர். வாஷிங்டன், சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2026 [AP Photo/Alex Brandon]

கடந்த சனிக்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சங்க நிகழ்வில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த விவரங்கள் இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தோமஸ் ஆலன் என்பவர், ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அரசியல் ரீதியான எதிர்ப்பின் காரணமாகவே இச்செயலில் ஈடுபட்டார் என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக 31 வயதான ஆலன் விநியோகித்த அறிக்கையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தானும் உடந்தையாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், அதன் காரணமாகவே மூத்த அதிகாரிகளை இலக்கு வைக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவரது இந்த முயற்சி அதிகாரிகளுக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தவில்லை. திங்களன்று ஆலன் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஜனாதிபதியைக் படுகொலை செய்ய முயற்சித்தல் என்பதும் ஒன்றாகும். இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மார்க்சிஸ்டுகள் இத்தகைய தாக்குதல்களைக் கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கின்றனர். தனிநபர் வன்முறைச் செயல்கள் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லாது. மாறாக, அவை உழைக்கும் மக்களின் நனவான அரசியல் அணிதிரட்டலுக்குப் பதிலாக, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தனிநபரின் செயல்களை முன்னிறுத்துகின்றன. இலக்கு வைக்கப்பட்ட நபர் செய்த குற்றங்கள் எதுவாக இருந்தாலும் — ட்ரம்பின் குற்றங்கள் பிரம்மாண்டமானவை என்றாலும் — இத்தகைய வன்முறைகளால் ஏற்படும் அரசியல் விளைவுகளே மிக முக்கியமான பிரச்சனையாகும். தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அதன் விளைவு அரசாங்கத்தின் அடக்குமுறையை விரிவுபடுத்துவதற்கும், எதிர்ப்பாளர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கும் ஒரு சாக்குப்போக்கை வழங்குவதாகவே அமையும்.

இருப்பினும், ஊடகங்கள் மற்றும் அரசியல் அதிகார மையங்களின் பிரதிபலிப்புக்களில் வெளிப்படும் மலைக்க வைக்கும் நயவஞ்சகத்தையும் கோழைத்தனத்தையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும். அதன் இயல்பான முட்டாள்தனத்துடன், அமெரிக்க வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள பரவலான மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கும், இந்தச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவே ஊடகங்கள் இதைக் கையாளுகின்றன. இந்த வன்முறை, இரத்த வெறி பிடித்த சொல்லாடல்களில் திளைக்கும் மற்றும் ஒரு குண்டர் தலைவனைப் போல தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஒரு ஜனாதிபதியின் தலைமையிலான அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள அரசியல் பிரமுகர்களின் பிரதிபலிப்புக்களும் இதே பாணியையே பின்பற்றுகின்றன. “அரசியலில் வன்முறைக்கு இடமில்லை” என்ற போலித்தனமான பல்லவிக்குள் தங்களை மறைத்துக்கொண்டு, ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையை ஒரு கொள்கையாகக் கொண்டு செயல்படும் அரசாங்கங்களை ஆதரிக்கும் அல்லது வழிநடத்தும் அதிகாரிகள், ஒழுக்கநெறி வெற்றுப் பேச்சுக்களை அள்ளி வீசுகிறார்கள்.

இவர்களின் குறிப்பிட்ட சில எதிர்வினைகள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: “அரசியல் தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ வன்முறைக்கு இடமில்லை” என்று அறிவித்தார். காஸாவில் இனப்படுகொலை யுத்தத்தை நடத்தி வரும் ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து வரும் இந்த அறிக்கை ஒரு அபத்தமான கூற்றாகும். மிதமான மதிப்பீடுகளின்படி, இந்த இனப்படுகொலையில் 75,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் டசின் கணக்கான ஹிஸ்புல்லா “அரசியல் தலைவர்கள்” இஸ்ரேலிய குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் நாசவேலைச் சாதனங்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானில் இன்னும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், “ஆயுதமேந்திய தாக்குதல்... ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அறிவித்தார், மேலும் “டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன்” என்று சேர்த்துக் கொண்டார். இராஜதந்திர மரபுப்படி, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நிம்மதியை வெளிப்படுத்தியிருப்பதே போதுமானது. ஆனால், “முழு ஆதரவு” என்பது முற்றிலும் வேறானது. இது ஈரானில் ஆக்கிரமிப்புப் போர் மற்றும் உள்நாட்டில் போலீஸ்-அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு நிர்வாகத்திற்கு வழங்கப்படும் அரசியல் அங்கீகாரமாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதேபோல், “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்” என்று அறிவித்தார். அதே நேரத்தில், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் அதே கருத்தை எதிரொலித்தார்: “எமது ஜனநாயகங்களில் எந்த அரசியல் வெறுப்பிற்கும் இடம் கிடைக்காது.” மிகவும் பிற்போக்குத்தனமான, வன்முறை மற்றும் பாசிச அரசியல் மரபுகளைச் சேர்ந்த நபர்களால் இந்த அறவுரைகள் வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில், பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் கூறுகையில், “அமெரிக்காவில் வன்முறையும் குழப்பமும் முடிவுக்கு வர வேண்டும்” என்றார். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனியை ட்ரம்ப் படுகொலை செய்ததற்குப் பதிலளித்த ஜெஃப்ரிஸ், கொமேனி ஒரு “மோசமான நபர்” என்றும், அவரது கொலைக்காக தான் “கண்ணீர் சிந்தப்போவதில்லை” என்றும் அறிவித்தார். அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னெடுக்கும்போது வன்முறையும் கொலையும் முற்றிலும் சட்டபூர்வமானவை என்பதே இதன் பொருளாகும்.

இதர ஜனநாயகக் கட்சியினரும் இதே பாணியைப் பின்பற்றியுள்ளனர். இதில் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானது, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பின் உறுப்பினரும் நியூ யோர்க் மாநகர மேயருமான ஜோஹ்ரான் மம்தானியின் கூற்றாகும். அவர் “அரசியல் வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், “ஜனாதிபதியும் வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தில் கலந்துகொண்ட விருந்தினர்களும் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் தெரிவித்தார். பெர்னி சாண்டர்ஸ் கூறுகையில், “மக்கள் தங்களின் அரசியல் கருத்துக்களைத் தாக்குதல் அல்லது படுகொலை அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே ஒரு செயல்படும் ஜனநாயகம் தங்கியுள்ளது” என்று குறிப்பிட்டதோடு, “அரசியல் வன்முறை என்பது அரசியல் கோழைத்தனம்” என்றும் கூறினார்.

இந்த நபர்களில் எவருமே, ட்ரம்ப் நிர்வாகமும் அதில் உள்ள அதிகாரிகளும் மலைக்க வைக்கும் அளவிற்கான திட்டமிட்ட வன்முறைகளுக்கும், அரசியல் வன்முறை அச்சுறுத்தல்களை விடுப்பதுக்கும் காரணமானவர்கள் என்ற அடிப்படையான உண்மையைச் சுட்டிக்காட்டவில்லை.

ட்ரம்பின் அறிக்கைகளிலிருந்து மட்டும் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட சில உதாரணங்களைக் கவனியுங்கள்:

  • ஈரான் குறித்து, ஏப்ரல் 2026: “இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியும், அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது. அது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் அநேகமாக அது நடக்கும்.” மேலும் மார்ச் மாதத்தில்: “ஹோர்முஸ் நீரிணை உடனடியாக ‘வணிகத்திற்குத் திறக்கப்படாவிட்டால்’, அவர்களின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய்க் கிணறுகள் மற்றும் கார்க் தீவு (மற்றும் அநேகமாக அனைத்து கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும்!) ஆகியவற்றை தகர்த்து முற்றிலுமாக அழிப்பதன் மூலம் ஈரானில் எங்களது ‘தங்கலை’ இனிமையாக முடித்துக்கொள்வோம்.”
  • ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அரசியல் எதிர்ப்பு குறித்து, ஏப்ரல் 2026: “இப்போது ஈரானின் அழிவுடன், அமெரிக்காவிற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி தீவிர இடதுசாரி, மிகவும் திறமையற்ற, ஜனநாயகக் கட்சிதான்!”
  • போதைப்பொருள் வியாபாரிகள் குறித்து, நவம்பர் 2022: “போதைப்பொருள் விற்கும் அனைவரும், அவ்வாறு விற்கும்போது பிடிபட்டால், அவர்களின் கொடூரமான செயல்களுக்காக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாம் கேட்கப் போகிறோம்.” கடைகளில் திருடுபவர்கள் குறித்து செப்டம்பர் 2023 இல்: “மிக எளிமையாக, நீங்கள் ஒரு கடையைக் கொள்ளையடித்தால், அந்தக் கடையை விட்டு வெளியேறும்போது நீங்கள் சுடப்படுவதை முழுமையாக எதிர்பார்க்கலாம். சுடப்படுவீர்கள்!”
  • பொலிஸ் வன்முறைக்கு எதிராகப் போராடுபவர்கள் குறித்து, மே 2020: “கொள்ளையடித்தல் தொடங்கும்போது, துப்பாக்கிச் சூடும் தொடங்குகிறது.” ஜூலை 2017 இல் பொலிஸ் நடத்தை குறித்து: “தயவுசெய்து மிகவும் மென்மையாக நடந்து கொள்ளாதீர்கள்.”

இதேபோன்ற எண்ணற்ற அறிக்கைகளைச் சேகரிக்க முடியும். இதனுடன், மினியாபோலிஸில் ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி ஆகியோரின் படுகொலையை பகிரங்கமாக ஆதரித்ததையும் நியாயப்படுத்தியதையும், மற்றும் ஸ்டீவன் மில்லர் போன்ற பாசிஸ்டுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடும் கொடூரத்தையும் வன்முறையையும் பெருமைப்படுத்துவதையும் ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வழக்கம் போலவே, இந்த சம்பவத்தில் ஜனநாயகக் கட்சியினரின் கோழைத்தனமான மற்றும் உடந்தையான எதிர்வினையானது —மக்கள் எதிர்ப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் உண்மையைச் சொல்லத் தயங்குவது— ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் தீவிரமாகத் தாக்குதலைத் தொடரவே ஊக்குவிக்கிறது. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தூண்டுதலையும் அடக்குமுறையையும் தீவிரப்படுத்தியுள்ள குடியரசுக் கட்சித் தலைவர்கள், “தீவிரமயமான இடதுசாரிகளை” கண்டித்ததோடு, ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் “தவிர்க்க முடியாத விளைவு” என இந்நிகழ்வைச் சித்தரித்து, பொலீஸ்துறைக்கு அதிக அதிகாரங்களையும் அடக்குமுறை எந்திரத்திற்கான கூடுதல் நிதி ஒதுக்கீட்டை விரிவாக்கவும் கோரினர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க (WHCA) விருந்துக்கு முன்னதாக நகைச்சுவை செய்ததற்காக, இரவு நேரத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மலை ABC நிறுவனம் “உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி கூட்டாளிகள் கோரினர். கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்தச் சம்பவத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.

வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் கரோலின் லெவிட் இந்த பிரச்சாரத்திற்கு மிகவும் வெளிப்படையான விளக்கத்தை அளித்தார். “இந்த அரசியல் வன்முறையானது ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் திட்டமிட்டு அரக்கர்களாகச் சித்தரிப்பதிலிருந்து உருவானது” என்று திங்களன்று அறிவித்த அவர், இதற்கு “ஜனநாயகக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களில் உள்ள சிலரே காரணம்” என்று குற்றம் சாட்டினார்.

லெவிட் இன்னும் மேலே சென்று, ஜனாதிபதியை “தொடர்ச்சியாக, பொய்யாக ஒரு பாசிஸ்ட் என்று முத்திரை குத்துபவர்கள் ... மற்றும் அவரை ஹிட்லருடன் ஒப்பிடுபவர்கள் ... இத்தகைய வன்முறையைத் தூண்டுகிறார்கள்” என்று வலியுறுத்தியதோடு, இதை “இடதுசாரி வெறுப்பு வழிபாட்டு முறை” என்றும் கண்டித்தார். அரசியல் ரீதியான விமர்சனத்தை “வன்முறையின்” ஒரு வடிவம் என்று அறிவிப்பதும், அதன் மூலம் ஒரு வன்முறை அடக்குமுறையை நியாயப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.

உண்மையில், அமெரிக்காவில் நடந்த பெரும்பாலான திட்டமிடப்பட்ட அரசியல் வன்முறைச் செயல்கள், ஆயுதம் ஏந்திய ஆயதக்குழுக்களின் வலையமைப்புகள் மற்றும் அதிதீவிர வலதுசாரிகளிடமிருந்தே வந்துள்ளன. கடந்த தசாப்தத்தில் வலதுசாரி வன்முறைகள் மீண்டும் மீண்டும் தீவிரமடைந்துள்ளதைக் காண முடிகிறது: ஜனவரி 6, 2021 அன்று பாசிச சக்திகளின் அணிதிரட்டல்; அரசு அதிகாரிகளுக்கு எதிரான கொலைச் சதித் திட்டங்கள்; மற்றும் கைல் ரிட்டன்ஹவுஸ் (Kyle Rittenhouse) போன்ற தீவிர வலதுசாரி நபர்களால் நடத்தப்பட்ட தனிநபர் வன்முறைச் செயல்கள் இதற்கு உதாரணங்களாகும். பல ஆண்டுகளாக, மத்திய அரசின் மதிப்பீடுகள் மற்றும் முக்கிய ஆராய்ச்சி மையங்கள், தீவிர வலதுசாரி தீவிரவாதத்தையே நாட்டின் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் உள்நாட்டு பயங்கரவாதம் மற்றும் அரசியல் வன்முறைக்கு முதன்மையான ஆதாரமாக இருந்து வருகின்றன என்று அடையாளம் கண்டுள்ளன.

அதே நேரத்தில், கோல் தோமஸ் ஆலன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போன்ற செயல்களுக்கு ஏதேனும் தூண்டுதலாக இருக்கிறது என்றால், அது எல்லாவற்றிற்கும் மேலாக அரசாங்கத்தின் குற்றச்செயல்களே ஆகும். அதனுடன், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மாபெரும் எதிர்ப்பு வெளிப்படுவதற்கான எந்தவொரு உண்மையான வழியையும் தடுக்கும் ஒரு அரசியல் கட்டமைப்பும் இணைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்க அமைப்பும் மக்களின் கோபத்தை வேண்டுமென்றே அடக்கித் திசைதிருப்புவது, விரக்தி மற்றும் இயலாமை உணர்வை மேலும் ஆழப்படுத்தி, அவநம்பிக்கையான, தவறான மற்றும் அழிவுகரமான தனிநபர் நடவடிக்கைகள் தோன்றுவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.

முன்னோக்கிச் செல்லும் பதை தனிநபர் வன்முறையில் இல்லை, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில்தான் உள்ளது. இது மிகவும் நனவான, கூட்டு மற்றும் நம்பிக்கையான பாதையைத் திறக்கிறது: போர், சர்வாதிகாரம் மற்றும் அவற்றை உருவாக்கும் முதலாளித்துவ ஒழுங்குக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலே அந்தப் பாதையாகும்.

ட்ரம்ப்புடனான கணக்கைத் தீர்ப்பது என்பது தனிநபர் செயல்கள் அல்லது ஒரு மனிதனை அகற்றுவது தொடர்பான விஷயம் அல்ல. இது முதலாளித்துவ அரசுக்கும் அது சேவை செய்யும் ஆளும் வர்க்க நலன்களுக்கும் —வெளிநாட்டில் போர், உள்நாட்டில் அடக்குமுறை—- எதிரான போராட்டமாகும். காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய இந்த வீழ்ச்சியைத் தடுக்கக்கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். அது நனவாகவும் சுயாதீனமாகவும் செயல்பட்டு, இராணுவவாதம், சர்வாதிகாரம் மற்றும் தன்னலக்குழு ஆட்சி ஆகியவற்றின் ஒட்டுமொத்த இயந்திரத்திற்கும் எதிராகத் தனது சமூக சக்தியை அணிதிரட்ட வேண்டும்.

Loading