இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் மத்திய கிழக்குத் தாக்குதல் நாயான இஸ்ரேலும், ஈரான் மீது ஒரு மாத காலமாக நடத்தி வரும் குற்றவியல் போரினால் ஏற்படும் பொருளாதாரப் பின்விளைவுகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.
போரின் பொருளாதாரத் தாக்கம் ஏற்கெனவே கடுமையாக உள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், பிரதமர் நரேந்திர மோடி இதை கோவிட்-19 பெருந்தொற்றுடன் ஒப்பிட்டார். இறுதியில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்ற அந்தப் பெருந்தொற்று, அதன் உச்சக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 24 சதவிகிதமளவான சுருக்கத்தை ஏற்படுத்தியது.
போரின் மிக உடனடியான தாக்கம் இந்தியாவின் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) விநியோகத்தை பாதித்துள்ளது. பியூட்டேன் மற்றும் புரோப்பேன் கொண்ட எல்பிஜி சிலிண்டர்கள், வீடுகளிலும் உணவகங்களிலும் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. விநியோகத் தடைகள் கடுமையான விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளதுடன், தெருவோர வியாபாரிகளையும் உணவகங்களையும் வேலை நேரத்தைக் குறைக்கவும், உணவுப் பட்டியலைக் கட்டுப்படுத்தவும், பல சமயங்களில் முற்றிலுமாக மூடவும் நிர்பந்தித்தன. இதனால் கோடிக்கணக்கான குடும்பங்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், போரின் தாக்கம் எரிவாயுவைத் தாண்டி வெகுதூரம் சென்று, பொருளாதாரம் முழுவதும் பரவி, பணவீக்கத்தை, குறிப்பாக உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அதிகரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
இந்தியா, பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெயை நம்பியுள்ளது. இறக்குமதிகளில் பாதி அல்லது அதற்கும் மேலானவை, அதாவது ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பீப்பாய்கள், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன. கலால் வரிகளை விலக்கிக்கொண்டமை உட்பட அரசாங்கத்தின் தலையீடுகளால், போரின் காரணமாக உலக எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வு, டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளில் இன்றுவரை பிரமாண்ட அதிகரிப்பை எற்படுத்தவில்லை. ஆனால், வரும் வாரங்களிலும் மாதங்களிலும் இந்தப் போர் தொடர்ந்தால்—அது தொடரும் என்றே அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன—பல ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு, விலை உயர்வுகளின் முழுச் சுமையையும், அவற்றின் தாக்கத்தைத் தணிப்பதற்காக அது வாங்கியுள்ள தற்காலிகக் கடன்களையும் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் தோள்களில் சுமத்தும்.
இந்தியா, பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்யும் மிகப்பெரிய நாடாகும். உலகின் யூரியா ஏற்றுமதியில் 45 சதவீதம் அல்லது அதற்கும் மேலாகவும், யூரியா மற்றும் பிற நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களின் முக்கிய அங்கமான அம்மோனியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் 30 சதவீதமும் வளைகுடாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் யூரியா இறக்குமதியில் குறைந்தது 75 சதவீதமும், அம்மோனியா இறக்குமதியில் 80 சதவீதமும் பொதுவாக வளைகுடா நாடுகளிலிருந்தே வருகின்றன.
உரத் தட்டுப்பாடானது விவசாய உள்ளீட்டுச் செலவுகளை அதிகரித்து, பயிர் விளைச்சலைக் குறைப்பதால், விவசாயிகளின் வருமானம் குறைவதுடன் ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையால் அவதிப்படும் ஒரு நாட்டில், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும்.
ஈரான் மீதான குற்றவியல் தாக்குதலில் இந்தியாவின் உடந்தை
ஈரானால் ஆத்திரமூட்டப்படாமேலேயே அதன் மீது நடத்தப்படும் சட்டவிரோத, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலுக்காக இந்தியத் தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் மேலும் மேலும் விலை கொடுத்துக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் இந்து மேலாதிக்க பாஜக அரசும், ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கமும் தாங்கள் வாஷிங்டனுடனும் டெல் அவிவுடனும் நிற்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.
போருக்கு முந்தைய நாள், ஒரு அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் உடனடியானது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தபோது, மோடி தீவிர வலதுசாரி நெதன்யாகு ஆட்சியுடனும், காசா பாலஸ்தீனியர்கள் மீதான அதன் இனப்படுகொலைத் தாக்குதலுடனும் தன்னை இணைத்துக்கொள்வதற்காகவும், மேலும் மேம்படுத்தப்பட்ட இந்திய-இஸ்ரேலிய 'அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான மூலோபாயக் கூட்டாண்மையை' அறிவிப்பதற்காகவும் இஸ்ரேலுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.
1946 ஆம் ஆண்டு நியூரம்பெர்க் தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புப் போரை 'உச்சகட்ட சர்வதேசப் போர்க்குற்றமாகக்' கருதி நாஜித் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். அத்தகைய ஆக்கிரமிப்புப் போரைத் தூண்டுதலின்றியே தொடங்கியதில் இருந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்த அனைத்துப் போர்க்குற்றங்கள் குறித்தும் புது தில்லி வெளிப்படையாக மௌனம் காத்து வருகிறது.
தெஹ்ரான் வெளிப்படையாக இந்தியாவின் நட்பு நாடாக இருந்தாலும், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் போரைத் தொடங்கிவைத்த, தலை துண்டிப்புத் தாக்குதல்களை, மோடியும் பாஜக அரசும் கண்டிக்கத் தவறிவிட்டன. இந்தத் தாக்குதல்களில், ஈரானின் தேசத் தலைவராக இருந்ததுடன், இலட்சக்கணக்கான ஷியா முஸ்லிம்களால் போற்றப்பட்ட ஒரு மதத் தலைவராகவும் இருந்த அயதுல்லா கமேனி உட்பட சிரேஷ்ட ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், இந்தியா நடத்திய கடற்படைப் பயிற்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த, ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி 150க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகளைக் கொன்றதற்கு எதிராக இந்தியா ஒரு வார்த்தை கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஈரானின் கடற்கரையிலிருந்து 1,000 மைல்களுக்கும் அதிகமான தொலைவில், இலங்கைக் கடற்கரைக்கு அருகே, பாதுகாப்பற்ற அந்தக் கப்பல் அமெரிக்க அணுசக்தித் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டது.
இருப்பினும், தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரான் எடுத்துள்ள நடவடிக்கைகளை புது தில்லி மீண்டும் மீண்டும் கண்டித்துள்ளது. பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை மூடியதற்காகவும், ஈரானை அச்சுறுத்தவும் தாக்கவுமாகப் பயன்படுத்தப்படும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தியதற்காகவும், தெஹ்ரானைக் கண்டிப்பதில் பாஜக அரசு ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்துள்ளது.
மார்ச் 23, திங்கட்கிழமை அன்று, ஈரான் போர் மற்றும் அது இந்தியாவிற்கு ஏற்படுத்தவிருக்கும் பொருளாதாரப் பேரழிவு குறித்து மோடி நாடாளுமன்றத்தில் முதன்முறையாகப் பேசினார். மேற்கு ஆசியாவின் நிலைமை 'மிகுந்த கவலைக்குரியது' என்று அவர் குறிப்பிட்டதுடன் 'இந்தப் பிரச்சினையில் ஒருமித்த மற்றும் ஏகமனதான குரலாக' பேசுவதற்காக, 'நாட்டும்' நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மோடி அரசுக்குப் பின்னால் அணிதிரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது உரையில், இந்தியாவின் இந்து மேலாதிக்கப் பிரதமர், ஆக்கிரமிப்புக்கு உள்ளானதும், இந்தியாவைப் போலவே வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுமான ஈரானை மீண்டும் தாக்கினார். தெஹ்ரானை வெளிப்படையாகக் குறிவைத்த வார்த்தைகளில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டதை அவர் கண்டித்தார். அதே சமயம், பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில் தொடங்கப்பட்ட, ஈரானால் தூண்டப்படாமலேயே அதன் மீது முன்னெடுக்கப்படும் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் பற்றியும் தொடரும் குற்றவியல் குண்டுவீச்சு பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 'பொதுபயன்பாட்டு, எரிசக்தி மற்றும் போக்குவரத்துடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா எதிர்த்துள்ளது. வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹோர்முஸ் நீரிணை போன்ற சர்வதேச கடற் போக்குவரத்தில் ஏற்படும் தடைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை' என்றும் அவர் பிரகடனம் செய்தார்.
'ஆட்சி மாற்றம் மற்றும் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் ஈரான் மீது தொடரும் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து' மோடி 'ஒரு வார்த்தை கூட பேசவில்லை' என்பதை, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவரான பெருநிறுவன காங்கிரஸ் கட்சி கூட சுட்டிக்காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இந்தியாவின் பிற்போக்கு, சீன-விரோத 'பூகோள மூலோபாயக் கூட்டாண்மையை' உருவாக்கி, அதை உறுதியாக ஆதரிக்கிறது. இருப்பினும், போரும் அதன் பொருளாதார விளைவுகளும் இப்பிராந்தியத்தை மேலும் ஆட்டங்காணச் செய்து, குறிப்பாக, அடிநிலையில் பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகொண்டுள்ள இந்தியத் தொழிலாள வர்க்கத்தினர் மத்தியில் வெகுஜன எதிர்ப்பைத் தூண்டும் என்று அது அஞ்சுகிறது.
மோடியின் கருத்துக்கள், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா எடுத்த அமெரிக்க ஆதரவுப் போர் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் இணக்கமாக இருந்தன. அங்கு, ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு முயற்சித்தமைக்காக அதை ஆக்கிரமிப்பாளர் என சித்தரித்த அதேவேளை, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சட்டவிரோதத் தாக்குதல் பற்றி மேலோட்டமாக குறிப்பிடுவதைக் கூடத் தடுத்த, ஒரு பாதுகாப்புச் சபைத் தீர்மானத்திற்கு இந்தியா இணை அனுசரணை அளித்தது.
இந்திய நாடாளுமன்றத்தில் போர் குறித்து அவர் உரையாற்றிய மறுநாள், போர்க் குற்றவாளியும் வருங்கால சர்வாதிகாரியுமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மோடி தொலைபேசியில் பேசினார். X தளத்தில் மோடி இட்ட ஒரு பதிவின்படி, 'ஹோர்முஸ் நீரிணை திறந்ததாகவும், பாதுகாப்பாக நுழையக்கூடியதாகவும் இருக்க வேண்டும்' என்பதே 'முழு' உலகினதும் தேவையாகும் என்று அவர்கள் கலந்துரயாடினர். இந்த கலந்துரையாடலுக்கு முன்னும் பின்னும், பாரசீக வளைகுடாப் பகுதிக்கு மிகப்பெரிய புதிய அமெரிக்க இராணுவப் படைகளை அனுப்புவதாகவும், வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான மற்றும் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டு, தரைவழிப் படையெடுப்பு மற்றும் ஈரானியப் பகுதிகளைக் கைப்பற்றுதல் உட்பட நடவடிக்கைகள் மூலம் நீரிணையை 'மீண்டும் திறப்பதற்காக' போரை உக்கிரமாக தீவிரப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
ட்ரம்ப்-மோடி கலந்துரயாடல் பற்றி கேட்கப்பட்டபோது, வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், 'ஜனாதிபதி ட்ரம்பிற்கு பிரதமர் மோடியுடன் ஒரு சிறந்த உறவு உள்ளதுடன் இது ஒரு பயனுள்ள உரையாடலாக இருந்தது' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
கடந்த வாரத்தின் பிற்பகுதியில், நீரிணையின் 'பாதுகாப்பை' உறுதி செய்வதற்காக ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுடனும் ஜப்பானுடனும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது பற்றி புது தில்லி கலந்துரையாடி வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமிக்ஞை செய்தார். பிரான்ஸ் நடத்திய ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டபோது, ஜெய்சங்கர் தனது பிரெஞ்சு சகா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிரிட்டனும் பிரான்சும் ஏற்கனவே அப்பகுதியில் விரிவான படைபலத்தை நிலைநிறுத்தியுள்ளதுடன் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போருக்குத் துணைபுரியும் நாடுகள் மீதான ஈரானியத் தாக்குதல்களை முறியடிக்கும் 'தற்காப்பு நடவடிக்கைகளிலும்' இணைந்துள்ளன.
ஜெய்சங்கரின் பயணத்தின் போது, பிரெஞ்சு கடற்படையின் தலைமைத் தளபதியான அட்மிரல் நிக்கோலஸ் வௌஜோர், மேற்கு ஆசியாவில் நிலவும் 'சூழ்நிலைக்கு பதிலளிக்கும் விதமாக எங்கள் பகுப்பாய்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும், எங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும்' பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் உட்பட பல்வேறு கடற்படை அதிகாரிகளுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
ஏகாதிபத்தியப் போரும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவது தீவிரப்படுத்தப்படுவதும்
தனது கொள்ளையடிக்கும் வல்லரசு லட்சியங்களை முன்னெடுக்கும் விதமாக, இந்திய முதலாளித்துவ வர்க்கம் கடந்த கால் நூற்றாண்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தன்னை மேலும் நெருக்கமாக இணைத்துக் கொண்டதுடன், இராணுவச் செலவினங்களையும் பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு உறவுகளின் ஒரு பரந்த வலையமைப்பை உருவாக்கியதன் மூலம், மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில், சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் இந்தியா ஒரு உண்மையான முன்னணி நாடாக உருமாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, புது தில்லி இஸ்ரேலுடனும் விரிவான இராணுவ-பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வளர்த்துள்ளது.
ஈரான் மீதான போரின் மூலம், இந்திய-அமெரிக்கக் கூட்டணியின் முற்றிலும் பிற்போக்கான பண்பும், அது இந்திய மக்கள், பிராந்தியம் மற்றும் உலகின் மீதும் சுமத்தப்போகும் இழப்புகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன.
எல்பிஜி பற்றாக்குறை கோடிக்கணக்கான நகர்ப்புறக் குடும்பங்களையும், குறிப்பாகச் சில வகை சமைத்த உணவுகளை மட்டும் விற்கும் சிறிய நடைபாதை உணவுக் கடைகளையும் நடமாடும் உணவகங்களையும் பாதிக்கிறது. இந்த “வணிக நிறுவனங்களுக்கான” ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை, முன்பு 1,600-1700 ($17-18) ரூபாவாக இருந்த நிலையில் இருந்து, தற்போது ஒரு சிலிண்டருக்கு சுமார் 2,000-3,000 ($21 முதல் $31) ரூபாவாகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் அதிர்ச்சியின் காரணமாக, இந்தச் சிறிய நிறுவனங்கள் விநியோகப் பற்றாக்குறையால் தங்கள் செயல்பாடுகளைக் குறைக்கவும், ஏற்கனவே குறைவாக உள்ள தங்கள் உணவுப் பட்டியலைச் சுருக்கவும் அல்லது முற்றிலுமாக மூடவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், உணவகங்கள் தங்கள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டியிருந்ததால், ஏற்கனவே வறுமையில் வாடும் உணவு விநியோகப் பணியாளர்களின் வருமானம் மூன்றில் இரண்டு பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஓரளவு வசதி படைத்த மத்தியதர வர்க்க மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாள வர்க்கக் குடும்பங்களை உள்ளடக்கிய பெரும்பாலான நகர்ப்புறக் குடும்பங்கள், அன்றாட சமையலுக்கு எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்துகின்றன. அதேசமயம், கிராமப்புறங்களில் வாழும் ஏறத்தாழ ஒரு பில்லியன் மக்களில் மிகப் பெரும்பான்மையானோர், பெண்களும் குழந்தைகளும் சிரமப்பட்டுச் சேகரிக்கும் வரட்டிகளையும் விறகுகளையும் இன்னும் சார்ந்திருக்கின்றனர்.
இந்தியா முழுவதும், எல்பிஜி எரிவாயு விநியோக நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. முன்பு சில நாட்களிலேயே கிடைத்துவந்த விநியோகம், தற்போது பல பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தாமதமாகிறது. பீதியுடன் எரிவாயுவை வாங்கும் போக்கு பரவியுள்ள அதேநேரம், கள்ளச் சந்தை வலையமைப்புகள் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு விற்கின்றன.
மாற்று விநியோகங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் தீவிரமாக முயன்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வளைகுடா வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை ஈடுசெய்ய, அர்ஜென்டினா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா வழங்கிய தற்காலிகத் தடை விலக்குகளின் கீழ், ஈரானிய விநியோகங்களை மீண்டும் வாங்குவது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, விநியோகம் போதுமானதாக இருப்பதாகவும், பொருளாதாரம் நிலையாக இருப்பதாகவும் வலியுறுத்தி, நிலைமையைக் குறைத்து காட்ட முயன்றுள்ளார். இருப்பினும், இந்த உறுதிமொழிகள், ஏற்கனவே பற்றாக்குறைகள், தாமதங்கள் மற்றும் விலையேற்றங்கள் பரவலாகக் காணப்படுகின்ற களத்தில் நிலவும் நிலைமைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. மேலும், அரசாங்கத்தின் சொந்த நடவடிக்கைகளாலேயே அவை பொய்யாக்கப்படுகின்றன.
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பத்து நாட்களுக்குப் பிறகு, மோடி அரசாங்கம் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (ESMA) அமுல்படுத்தியது. 'அத்தியாவசிய சேவைகள்' என்று அழைக்கப்படும் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை அடக்குவதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுவாக ESMA சட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. சுகாதாரம், சுகாதாரம், நீர் விநியோகம், பாதுகாப்பு, தகவல் தொடர்பு, போக்குவரத்து மற்றும் அரசாங்க உணவு விநியோகம் ஆகியவை இதில் அடங்கும்.
ESMA சட்டத்தின் கீழ், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது, விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மேலும் வணிகப் பயனாளர்களை விட உள்நாட்டு நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்துள்ளது. சில பகுதிகளில், சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே நீண்ட இடைவெளிகள் போன்ற கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது விநியோக பங்கீட்டை பாதிக்கின்றது.
அதேநேரத்தில், கள்ளச் சந்தைகள் செழித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோத மறுநிரப்புதல் நடவடிக்கைகள் மற்றும் பற்றாக்குறையைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ விலையை விட மிக அதிக விலையில் சிலிண்டர்களை விற்கும் இலாப நோக்குடைய வலையமைப்புகளைப் பற்றி விசாரணைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடியின் சுமை, பெருமளவில் ஏழை உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் மீதே விழுகிறது. ஏற்கனவே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் தவிக்கும் இந்தக் குடும்பங்கள், நுகர்வைக் குறைக்கவோ அல்லது தரம் குறைந்த எரிபொருட்களுக்கு மாறவோ நிர்பந்திக்கப்படுகின்றன.
இது ஒரு விதிவிலக்கு அல்ல, மாறாக, சமூகத் தேவையை விட இலாபத்தின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் ஒரு அமைப்பின் தவிர்க்க முடியாத விளைவாகும்.
ஸ்டாலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகியவை ஈரான் மீதான ஏகாதிபத்தியப் போரைக் கண்டித்துள்ளன. ஆனால், அவர்களின் எதிர்ப்பானது இந்தியாவின் 'தேசிய நலனுக்கு' தீங்கு விளைவிக்கும் என்ற கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றது. இது, தீவிர வலதுசாரி மோடி அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை, பாஜகவைப் போலவே 'முதலீட்டாளர் சார்புக் கொள்கைகள்' மற்றும் இந்திய-அமெரிக்கக் கூட்டணிக்காக உறுதிப்பாட்டுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணிக்குப் பின்னால் திசைதிருப்பி அடிபணியச் செய்வதற்கான அவர்களின் முயற்சிகளுடன் தொடர்புடையதாகும்.
ஈரான் போரையும், வளர்ந்து வரும் உலகப் போர் அபாயத்தையும், பிற்போக்கு இந்திய-அமெரிக்க மூலோபாயக் கூட்டணியையும் எதிர்ப்பதற்கு, இந்தியாவின் தொழிலாளர்களும் உழைப்பாளர்களும் ஒரு உண்மையான சோசலிச சர்வதேசவாதக் முன்நோக்குடன் ஆயுதபாணியாக வேண்டும். போருக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்டிருப்பதோடு, போரின் மூலக் காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரமான எதிர்ப்பில், ஒடுக்கப்பட்ட அனைவரையும் தொழிலாள வர்க்கத்தின் பின்னால் அணிதிரட்டி, இந்தியாவிலும் உலக அளவிலும் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அதனை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- இந்தியா-பாகிஸ்தான் போரை எதிர்த்ததற்காக இந்தியாவின் SRM பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் லோரா சந்தகுமார் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்திடுவோம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக சீனா, ரஷ்யா மற்றும் இந்தியத் தலைவர்கள் ஒன்றுகூடினர்
- தெற்காசியாவில் நெருக்கடியும் சோசலிசத்திற்கான போராட்டமும்
