மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
2025-ஆம் ஆண்டில் உலகளாவிய இராணுவச் செலவினம் இதுவரை இல்லாத சாதனையாக 2.887 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது தொடர்ந்து 11-வது ஆண்டாக உயர்ந்து வரும் ஒரு போக்காகும் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று தெரிவித்துள்ளது.
வெனிசுலாவிலிருந்து ஈரான் வரை உலகம் முழுவதிலும் ட்ரம்ப் நிர்வாகம் போர்களை நடத்தி வரும் சூழலிலும், ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் ஜப்பானும் சமூக நலச் செலவினங்கள் மீது முறையான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டு, தங்களின் இராணுவத்தை மிகப்பெரிய அளவில் பலப்படுத்தி வரும் நிலையிலும் இந்த இராணுவச் செலவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா 2025 ஆம் ஆண்டில் 954 பில்லியன் டாலர் இராணுவச் செலவினத்துடன், உலகிலேயே மிகப்பெரிய இராணுவச் செலவு செய்யும் நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது, இது உலகளாவிய இராணுவச் செலவினத்தின் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
“அமெரிக்க காங்கிரஸால் 2026-ஆம் ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட இராணுவச் செலவினம் 1 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது 2025-ஐ விட கணிசமான உயர்வாகும். ஜனாதிபதி ட்ரம்பின் சமீபத்திய வரவு-செலவுத் திட்ட முன்மொழிவு ஏற்கப்பட்டால், இது 2027-இல் 1.5 டிரில்லியன் டாலர்களாக மேலும் உயரக்கூடும்,” என்று SIPRI-இன் இராணுவச் செலவினப் பிரிவின் திட்ட இயக்குநர் நான் தியான் தெரிவித்தார்.
இந்த முன்மொழிவை ஏப்ரல் 2 அன்று சமர்ப்பித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் விரிவான விளக்கத்தைப் பென்டகன் ஏப்ரல் 21 அன்று வெளியிட்டது: 2027 நிதியாண்டிற்கான 1.5 டிரில்லியன் டாலர்கள் பாதுகாப்புக்கான வரவு-செலவுத் திட்டம், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு தனி ஆண்டிற்கான மிகப்பெரிய பாதுகாப்பு நிதிக் கோரிக்கையாகவும், முந்தைய ஆண்டை விட 42 சதவீத அதிகரிப்பாகவும் உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், இந்தக் கோரிக்கையானது “அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தைப் பல தசாப்தங்களுக்கு விரிவுபடுத்தும்” என்றும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைத்த “கனவு இராணுவத்தை” உருவாக்கும் என்றும் கூறினார்.
இந்தத் திட்டம் “கோல்டன் டோம்” (Golden Dome) ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்காக 17.5 பில்லியன் டாலர்களையும், கப்பல் கட்டும் பணிகளுக்காக 65.8 பில்லியன் டாலர்களையும், விண்வெளிப் படைக்காக (Space Force) 71.2 பில்லியன் டாலர்களையும் மற்றும் ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளுக்காக சுமார் 74 பில்லியன் டாலர்களையும் ஒதுக்குகிறது.
கடந்த ஜனவரியில் வெனிசுவேலா மீதான அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு நடவடிக்கையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டத்தை தொடர்ந்தும் இது இடம்பெற்றுள்ளது. ஈரானுக்கு எதிரான போர் —தற்போது ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தின் கீழ் உள்ளது, அதே வேளையில் ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க முற்றுகையின் கீழ் நீடிக்கிறது— மற்றும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கப்படுவதைத் தொடர்ந்து இவை நடைபெறுகின்றன.
கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் 2025 தேசிய பாதுகாப்பு மூலோபாயம், “தாய்வானைச் சுற்றிய மோதலைத் தடுப்பது, முக்கியமாக இராணுவ மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதன் மூலம் ஒரு முன்னுரிமை என்று அறிவிக்கிறது. மேலும் இது, மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை மீட்டெடுப்பது என உறுதியளிப்பதோடு, இப்பிராந்தியத்தில் அரைக்கோளத்திற்கு வெளியேயுள்ள போட்டியாளர்கள், தமது படைகளை நிலைநிறுத்துவதையோ அல்லது பிற அச்சுறுத்தும் திறன்களை உருவாக்குவதையோ அனுமதிக்கமாட்டோம் என்றும் குறிப்பிடுகிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில், ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின் (NDAA) ஒரு விதியில் கையெழுத்திட்டார். இது, அமெரிக்காவில் 18 முதல் 26 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களையும் தேர்வு இராணுவ சேவை அமைப்பில் தானாகவே பதிவு செய்ய வழிவகை செய்கிறது. இது, எதிர்கால கட்டாய இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பிற்கான ஒரு முன்நிபந்தனையாகும். இந்தத் தானியங்கிப் பதிவு முறை 2026 டிசம்பரில் நடைமுறைக்கு வருகிறது.
காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சித் தலைமை, கடந்த தசாப்தத்தில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தையும் ஆதரித்துள்ளதுடன், ட்ரம்ப் நிர்வாகத்தின் 1.5 டிரில்லியன் டாலர்கள் கோரிக்கையைத் தடுக்க மாட்டோம் என்றும் சமிக்கை செய்துள்ளது.
ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் ஒட்டுமொத்த இராணுவச் செலவினம் 14 சதவீதம் உயர்ந்து 864 பில்லியன் டாலராக உள்ளது. இது, ஏறக்குறைய அமெரிக்காவின் செலவிற்கு நிகரானது. பனிப்போர் முடிவுக்கு வந்த பிறகு, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் ஆயுதச் செலவினங்களில் ஏற்பட்ட மிகக் கடுமையான வருடாந்திர உயர்வு இதுவென்று SIPRI குறிப்பிட்டுள்ளது. ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்கள் 8.1 சதவீதம் உயர்ந்து 681 பில்லியன் டாலர்கள் செலவை பதிவு செய்துள்ளன. இது 2009-க்குப் பிறகு அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வருடாந்திர உயர்வாகும்.
“போர்கள், நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகள் நிறைந்த மற்றொரு ஆண்டிற்கு உலக நாடுகள் பெரிய அளவிலான ஆயுதமேந்தும் நடவடிக்கைகள் மூலம் பதிலளித்ததால், 2025-இல் உலகளாவிய இராணுவச் செலவினம் மீண்டும் அதிகரித்தது,” என்று SIPRI-இன் இராணுவச் செலவினம் மற்றும் ஆயுத உற்பத்தித் திட்டத்தின் ஆராய்ச்சியாளர் சியாவோ லியாங் தெரிவித்தார். “தற்போதைய நெருக்கடிகளின் வரம்பு மற்றும் பல நாடுகளின் நீண்டகால இராணுவச் செலவு இலக்குகளைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த வளர்ச்சி அநேகமாக 2026 மற்றும் அதற்கு அப்பாலும் தொடரும்.”
ஐரோப்பாவின் 29 நேட்டோ உறுப்பு நாடுகள் 2025-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 559 பில்லியன் டாலர்களைச் செலவிட்டன. நேட்டோவின் 32 உறுப்பினர்களில் இருபத்தி மூன்று நாடுகள், இந்தக் கூட்டணியின் இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்ற வரம்பை எட்டின அல்லது அதைத் தாண்டின. ஜூன் 2025-இல், இந்தக் கூட்டணியானது அந்த இலக்கை 2035-ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்த ஒப்புக்கொண்டது. பெல்ஜியத்தின் இராணுவச் செலவு ஒரே ஆண்டில் 59 சதவீதமும், ஸ்பெயினின் செலவு 50 சதவீதமும், நோர்வே 49 சதவீதமும், டென்மார்க் 46 சதவீதமும், போலந்து 23 சதவீதமும் மற்றும் கனடாவின் செலவு 23 சதவீதமும் உயர்ந்துள்ளது.
“ஐரோப்பிய நேட்டோ உறுப்பு நாடுகளின் இராணுவச் செலவினம் 1953-ஆம் ஆண்டிற்குப் பிறகு எப்போதும் இல்லாத வேகத்தில் 2025-இல் அதிகரித்துள்ளது,” என்று SIPRI ஆராய்ச்சி உதவியாளர் ஜேட் கிபர்டோ ரிகார்ட் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் இராணுவத்திற்காக அதிக நிதி செலவிடும் நாடாக ஜேர்மனி உருவெடுத்துள்ளது. அதன் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் 24 சதவீதம் உயர்ந்து 114 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரட்டை இலக்க உயர்வை பதிவு செய்ததோடு, தற்போது உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவ வரவுசெலவுத் திட்டமாகவும் உள்ளது. ஜேர்மனியின் இராணுவச் செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த நாடு 2 சதவீத வரம்பைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும். 2029-ஆம் ஆண்டிற்குள் இதை 3.5 சதவீதமாக உயர்த்தப் போவதாக பேர்லின் உறுதியளித்துள்ளது. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கு மேல் செய்யப்படும் அனைத்து இராணுவச் செலவினங்களுக்கும் அதன் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள கடன் வரம்பு விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 அன்று, ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் தலைமை ஆய்வாளர் கார்ஸ்டன் ப்ரூயர் ஆகியோர், 2ம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் வரலாற்றிலேயே முதன்முறையான ஒரு விரிவான இராணுவ மூலோபாயத்தை முன்வைத்தனர். இந்த ஆவணம், “ஐரோப்பாவின் வலிமையான மரபுவழி இராணுவத்தை” உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக இராணுவத்தினர்களின் எண்ணிக்கையை 4,60,000 ஆக உயர்த்துவது, லிதுவேனியாவில் நிரந்தரப் போர் படைப்பிரிவை நிறுவுவது, “ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக அரசு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தை” மறுசீரமைப்பது மற்றும் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்வது ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த திங்களன்று ஹனோவர் வர்த்தகக் கண்காட்சியில் தொழிலதிபர்களிடையே பேசிய பிஸ்டோரியஸ், “ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஒரு வலுவான தொழில்துறை இன்றியமையாத முன்நிபந்தனையாகும்” என்று கூறினார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனி மேற்கொண்டுள்ள மிகப்பெரிய மறு ஆயுதமயமாக்கல் திட்டமாகும்.
2025-ஆம் ஆண்டில் உக்ரேன் தனது இராணுவத்திற்காக 84.1 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது — இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம் மற்றும் ஒட்டுமொத்த அரசு செலவினங்களில் 63 சதவீதமாகும். தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகிலேயே மிக உயர்ந்த விகிதத்தில் இராணுவத்திற்காகச் செலவிடும் நாடாக உக்ரேன் உள்ளது. ரஷ்யா 190 பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காக செலவிட்டுள்ளது, இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.5 சதவீதத்திற்குச் சமமாகும்.
“2025ஆம் ஆண்டில் ரஷ்யாவிலும் உக்ரேனிலும், அரசாங்கச் செலவினங்களில் இராணுவச் செலவினம் இதுவரை பதிவான மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது”, என்று SIPRI ஆராய்ச்சியாளர் லோரென்சோ ஸ்கராசாடோ தெரிவித்தார். “போர் தொடர்ந்தால், 2026 இலும் இந்த செலவினம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் கூறினார்.
சீனா தோராயமாக 336 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. ஜப்பானின் செலவு 9.7 சதவீதம் உயர்ந்து 62.2 பில்லியன் டாலராக உள்ளது. இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 சதவீதமாகும் — 1958-க்குப் பிறகு இதுவே மிக உயர்ந்த அளவாகும். தாய்வானின் இராணுவச் செலவு 14 சதவீதம் உயர்ந்து 18.2 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது, 1988-க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வருடாந்திர உயர்வாகும். தாய்வான் தனது இராணுவச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ட்ரம்ப் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
“ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசியா மற்றும் ஓசியானியாவிலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் தங்களின் இராணுவத்திற்காக அதிகளவில் செலவிடுகின்றன. இது நீண்டகால பிராந்திய பதட்டங்களால் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் ஆதரவு குறித்த வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையாலும் ஏற்பட்டுள்ளது,” என்று மூத்த SIPRI ஆராய்ச்சியாளர் டியாகோ லோப்ஸ் டா சில்வா தெரிவித்தார்.
ஏப்ரல் 21 அன்று, ஜப்பானியப் பிரதமர் சனாயே தகா இச்சியின் தீவிர வலதுசாரி அரசாங்கம், கொடிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஜப்பானின் தடையை நீக்கியது. இது, அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட 2ம் உலகப் போருக்குப் பிந்தைய அரசியலமைப்பு கட்டமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான விலகலாகும். ஜப்பானிய இராணுவவாதம் மீண்டும் எழுவதைத் தடுப்பதாகக் கருதப்பட்ட அந்த விதிகளுக்கு இது முரணானது. மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ், கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ், மற்றும் பிற ஜப்பானிய ஆயுத நிறுவனங்கள் இனி 17 நாடுகளுக்கு ஆயுதங்களை விற்க அனுமதிக்கப்படும்.
இராணுவச் செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்தும் ஜப்பானின் உறுதிமொழியை தகா இச்சி விரைவுபடுத்தியுள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு மூலோபாயங்களில் முழுமையான மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டுள்ள அவர், அமைதிவாத விதி என்று அழைக்கப்படும் 9-வது பிரிவை செயலிழக்கச் செய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். ஜப்பானிய இராணுவம் ரிக்யூ தீவு தொடர் முழுவதும் சீனாவின் நிலப்பகுதியைத் தாக்கும் தூரத்தில் நீண்ட தூர ஏவுகணைகளை நிறுத்தத் தொடங்கியுள்ளது. மேலும், தாய்வானிலிருந்து வெறும் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யோனகுனியில் தரையிலிருந்து வான்நோக்கிப் பாயும் ஏவுகணைப் பிரிவுகளையும் நிலைநிறுத்தி வருகிறது.
நவம்பர் 2025-இல் ஜப்பானிய நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையில், தாய்வான் மீதான சீனாவின் கடற்படை முற்றுகை “சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு நாட்டின் உயிர்வாழ்விற்கே அச்சுறுத்தலான சூழ்நிலையை உருவாக்கக்கூடும்” என்று தகா இச்சி கூறினார் — இது ஜப்பானிய தற்காப்புப் படைகளை நிலைநிறுத்த அனுமதிக்கும் ஒரு சட்டப்பூர்வத் தூண்டுதலாகும். பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சகம் இம்மாதம் வெளியிட்ட அறிக்கையில், டோக்கியோ “புதிய இராணுவவாதத்தை” நோக்கி நகர்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் ஆயுதப் பெருக்கத்திற்கு நிதி வழங்குவதற்காகச் சமூக நலச் செலவினங்களைக் வெட்டிக் குறைத்து வருகின்றன. தேசிய வளங்கள் இவ்வாறு திசைதிருப்பப்படுவது சமூக சேவைகள், சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு உதவிகளில் வெட்டுக்களை ஏற்படுத்தும் என்று SIPRI ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ட்ரம்பின் 1.5 டிரில்லியன் டாலர் பென்டகன் கோரிக்கையானது, சுகாதாரம், அறிவியல் ஆராய்ச்சி, வீட்டுவசதி மற்றும் கல்வி போன்ற பாதுகாப்பு சாராத செலவினங்களில் 10 சதவீத வெட்டுக்கள் மூலம் ஈடுகட்டப்படும்.
ஏப்ரல் 1 அன்று, வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு தனிப்பட்ட ஈஸ்டர் மதிய விருந்தில், ட்ரம்ப் இந்தப் பரிமாற்றத்தை எளிமையான வார்த்தைகளில் முன்வைத்தார். அவர், மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் இயக்குநர் ரஸ்ஸல் வோட்டிடம், “குழந்தைகள் பராமரிப்புக்காக எந்தப் பணத்தையும் அனுப்பாதீர்கள், ஏனென்றால் அமெரிக்காவால் குழந்தைகள் பராமரிப்பைக் கவனித்துக் கொள்ள முடியாது” என்று கூறினார். மேலும் அவர், “நாம் போர்களில் ஈடுபட்டிருக்கிறோம்” என்றும் விளக்கினார்.
