கியூபா மீது ட்ரம்ப் போர் தொடுக்கத் தயாராகும் வேளையில், காஸ்ட்ரோயிசத்தின் வரலாற்று மதிப்பீடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டு, அவரது ஆட்சி தூக்கியெறியப்பட்டு ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவுக்கு எதிராக ஒரு இராணுவ நடவடிக்கைக்கு பகிரங்கமாகத் தயாராகி வருகிறது. வெனிசுவேலா மீதான நடவடிக்கையில், கராகஸ் நகரில் அமெரிக்க சிறப்புப் படைகள் 32 கியூபப் பாதுகாப்புப் படையினரையும், ஏராளமான வெனிசுவேலா நாட்டினரையும் படுகொலை செய்தன. இந்த அச்சுறுத்தல்கள், 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் இலத்தீன் அமெரிக்காவை இரத்தத்தில் மூழ்கடித்த அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் பாசிச இராணுவ சர்வாதிகாரங்களின் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதோடு, அந்தத் தீவின் மீது மீண்டும் ஒருமுறை காலனித்துவ மேலாதிக்கத்தை திணிப்பதற்கான உந்துதலையும் பிரதிபலிக்கின்றன.

கியூபா, அமெரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் போர்த் திட்டங்களுக்கும் எதிராக அவசரமாக அணிதிரள வேண்டும். ஆனால், கியூபாவின் தலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்வதற்கு இது நேரமல்ல என்று வக்காலத்து வாங்குபவர்களை எதிர்கொள்ளும்போது —இப்போது காரகாசின் கட்டுப்பாட்டை சி:ஐ:ஏ மற்றும் பென்டகனிடம் ஒப்படைத்து வரும் வெனிசுவேலாவின் சாவோயிஸ்டுக்கள் அரசாங்கத்தைப் பற்றி அவர்கள் கூறியதைப் போலவே—ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு பயனுள்ள எதிர்ப்புக்கும், காஸ்ட்ரோயிசத்தின் வரலாற்று அனுபவத்தை முழுமையாக மதிப்பீடு செய்வது அவசியமாகிறது: அதாவது, கியூபாவில் அதன் தாக்கத்தை மட்டுமல்ல, அமெரிக்க கண்டம் முழுவதும் அது ஆற்றிய பங்கையும் இதில் ஆராய வேண்டும்.

இது ஒரு அருவமான தத்துவார்த்த பயிற்சி அல்ல. இது ஒரு அரசியல் அவசியமாகும். ஏனென்றால் இன்று கியூபாவின் அவலநிலை குறித்து கவலைப்படுகின்ற அதேவேளையில், அதன் பாதுகாப்பிற்கான எந்தவொரு உண்மையான வேலைத்திட்டத்தையும் முன்வைக்காத அனைத்து அரசியல் சக்திகளும் —பிரேசிலின் லுலா, மெக்சிகோவின் ஷெயின்பாம், வெனிசுவேலாவின் சாவோயிஸ்டுக்கள், ஸ்டாலினிசக் கட்சிகள் மற்றும் பப்லோயிசப் போக்குகள்— இந்த பேரழிவை உருவாக்கிய அரசியலின் விளைபொருட்களாகவும் அதன் தொடர்ச்சியாளர்களாகவும் இருக்கின்றன.

சமீபத்திய அச்சுறுத்தல்கள்

கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் தீவிரமான அழுத்தங்கள், வாஷிங்டனின் நோக்கங்கள் குறித்து எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமளிக்காத அளவிற்கு இரக்கமற்ற முறையில் தொடர்கின்றன. ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே, கியூபாவை மீண்டும் “பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள்” பட்டியலில் சேர்த்தார். இது நிதி, வணிகம் மற்றும் உதவித் திட்டங்கள் ஆகியவற்றில் கடுமையான அபராதங்களையும் தடைகளையும் ஏற்படுத்தியது. வெனிசுவேலாவில் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப்: “கியூபா வீழ்வதற்குத் தயாராக உள்ளது” என்று அறிவித்தார். ஜனவரி மாத இறுதியில், அவர் கியூபாவை “ஒரு தேசிய அவசரநிலை” என்று அறிவித்ததோடு, தீவுக்கு எரிபொருள் விநியோகம் செய்தால் எண்ணெய் விநியோகஸ்தர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தினார். மே 1 அன்று, ட்ரம்ப் நிர்வாகம் கியூபாவின் பொருளாதாரத்துடன் வணிகம் செய்யும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக தடைகளை விதித்தது — தற்போதுள்ள எரிபொருள் தடையுடன் இணைந்துள்ள இந்த நடவடிக்கை, அந்தத் தீவை முன்னெப்போதும் இல்லாத ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முற்றுகையின் நடைமுறை முடிவுகள் இனப்படுகொலைக்கு இணையானவை ஆகும். கியூபாவின் மின்சார வாரியத்தின்படி, ஒரே ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பலின் வருகை, மின்தடையால் பாதிக்கப்பட்ட கியூபா பகுதியின் அளவை தற்காலிகமாக 60 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க உதவியது. ஆனால், இந்த நிவாரணம் ஒரு சில வாரங்கள் மட்டுமே நீடித்தது. மே மாதத்தில், அந்தத் தீவு தனது வரலாற்றிலேயே மிக மோசமான மின்தடை அளவைப் பதிவு செய்தது. மே 6 முதல் மே 18 வரை, ஹவானா நகரம் தொடர்ந்து 24 மணி நேர மின்தடையை எதிர்கொண்டது. குளிர்சாதனப் பெட்டிகள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன, உணவுகள் வீணாகின்றன, அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் குழந்தை இறப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது.

மே 21 அன்று, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கி போர்க் கப்பலும் மூன்று பாதுகாப்பு போர்க் கப்பல்களும் கரீபியன் கடலுக்குள் நுழைந்தன. சிஐஏ-வுடன் தொடர்புடைய ஆத்திரமூட்டுபவர்களால் இயக்கப்பட்ட இரண்டு விமானங்கள் 1996 இல் சுட்டு வீழ்த்தப்பட்டதற்காக, இப்போது 94 வயதாகும் முன்னாள் கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ மீது நீதித்துறை மோசடியான கொலைக் குற்றச்சாட்டுகளை அறிவித்த மறுநாளே அவற்றின் வருகை நிகழ்ந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள், மதுரோவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அதே வகையான நடவடிக்கையை மீண்டும் செய்வதற்கான ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலாகும்: அதாவது ஒரு தலைவரின் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்துவது, பின்னர் அதையே கடத்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைக்கான சட்டப்பூர்வ மூடுதிரையாகப் பயன்படுத்துவதாகும்.

கியூபாவின் துணை வெளியுறவு அமைச்சர் கார்லோஸ் பெர்னாண்டஸ் டி கோசியோ, தனது நாடு போருக்குத் தயாராகி வருவதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் “நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் அது ஏமாளித்தனமாக இருக்கும்” என்றும் அவர் கூறினார். கியூபாவின் அதிகாரிகள் “இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பாதுகாப்பதற்கான குடும்ப வழிகாட்டி” என்ற கையேட்டை விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

கியூபா மக்கள் மீது அமெரிக்க ஆளும் வர்க்கம் கொண்டுள்ள பகைமையானது, வெறும் புவிசார் மூலோபாய நோக்கங்களால் மட்டுமே தூண்டப்பட்டதல்ல, மாறாக, 1959ம் புரட்சி மற்றும் அதன் மூலம் கியூபாவின் பொருளாதாரத்தின் மீதிருந்த அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாடு மற்றும் மாஃபியாக்களின் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றின் இழப்பு குறித்த திட்டமிட்ட பழிவாங்கும் உணர்ச்சியாலும் தூண்டப்பட்டதாகும். இந்த வெறுப்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, கோவிட்-19 பெருந்தொற்றின் போது கியூபாவிற்கு ஆக்ஸிஜன் விற்க மறுத்ததை நினைவு கூர்ந்தாலே போதுமானது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு, அமெரிக்கத் தொழிலாளர்களின் உயிர்களைப் பலிகொடுத்து, பெருந்தொற்றைக் “கட்டுப்பாடின்றி பரவவிடும்” கொள்கையைக் கையாண்ட அதே வேளையில், மறுபுறம் “கியூபா மக்களை மூச்சுத்திணறி இறக்கவிடும்” கொள்கைக்கும் உத்தரவிட்டது. கியூபா மக்களை அழிப்பதற்கான இதே இருகட்சிகளின் (குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) அர்ப்பணிப்புதான் இன்று ட்ரம்ப் நிர்வாகத்தையும் உந்தித் தள்ளுகிறது.

கியூபாவின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுத்துள்ள ஆக்கிரமிப்பு, ஆட்சி மாற்றம் மற்றும் மீண்டும் காலனியாக்குதல் ஆகிய அச்சுறுத்தல்களை எதிர்க்குமாறு உலக சோசலிச வலைத் தளம் (WSWS) தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான கியூபாவிற்கான எமது ஆதரவு எவ்வித நிபந்தனையற்றதும், முழுமையானதும் ஆகும். கியூபாவின் தேசியவாதத் தலைமைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் அடிப்படையில் அல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் மற்றும் அவர்களின் நனவுமிக்க அணிதிரட்டலின் அடிப்படையிலேயே நாம் அந்தப் பாதுகாப்பை மேற்கொள்கிறோம்—இதன் காரணமாகவே, காஸ்ட்ரோயிசம் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடு அந்தப் பாதுகாப்புடன் இணங்கிப்போவது மட்டுமின்றி, அதற்கான ஒரு அவசியமான அடித்தளமாகவும் அமைகிறது.

கியூபா புரட்சியும் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடும்

கியூபாவின் வரலாறு என்பது, அந்தத் தீவுக்கு உண்மையான தேசிய சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதில் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ தேசியவாத தலைமைகளின் தோல்வியுற்ற வரலாறாகும். அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்ததில் இருந்தே, அதன் அருகாமையுடனும் மூலோபாய முக்கியத்துவத்துடனும் கியூபாவின் விதி பிரிக்க முடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுச் அமைச்சர் ஜேம்ஸ் ஜி. பிளெய்ன் 1881 இலேயே இதைப் புரிந்து கொண்டிருந்தார். அவர் பின்வருமாறு கூறினார்:

“மெக்சிகோ வளைகுடாவின் திறவுகோலாக இருக்கும் அந்த வளமான தீவு (கியூபா), ஸ்பெயினின் கைகளில் இருந்தாலும், அது அமெரிக்க வர்த்தக அமைப்பின் ஒரு பகுதியாகும்... கியூபா ஒருவேளை ஸ்பெயினின் வசமிருந்து விடுபடுமாயின், அது வேறு எந்தவொரு ஐரோப்பிய மேலாதிக்கத்தின் கீழும் செல்லாமல், நிச்சயமாக அமெரிக்காவிற்குச் சொந்தமானதாகவே மாற வேண்டும்.”

நூற்றாண்டின் தொடக்கத்தில் பனாமா கால்வாய் கட்டப்பட்டமையானது இந்த மூலோபாயக் கணக்கீட்டை மேலும் அதிகப்படுத்தியது. ஏனெனில், கியூபாவைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் இந்தக் கால்வாயை அமெரிக்க வளைகுடா கடற்கரை மற்றும் கிழக்குக் கரை ஆகிய இரண்டோடும் இணைக்கின்றன. இன்று, இதன் முக்கியத்துவம் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்திய தொழில்துறை பகுப்பாய்வு ஒன்று, “கியூபாவின் நிக்கல் மற்றும் கோபால்ட் கனிம வளங்கள், மேற்கு அரைக்கோளத்தில் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத மிக முக்கியமான கனிமச் சொத்துக்களில் ஒன்றாகும். உலகளாவிய மின்சார வாகன (EV) பேட்டரி விநியோகச் சங்கிலிக்கு, சரியாக கியூபாவிடம் என்ன இருக்கிறதோ அதுதான் தேவைப்படுகிறது” என்று முடிவு செய்யப்படுகின்றது.

கியூபாவின் மக்கள் ஸ்பெயினுக்கு எதிராக மூன்று சுதந்திரப் போர்களை நடத்தினார்கள், இதற்காக அவர்கள் கொடுத்த மனித உயிர்களின் விலை அதிர்ச்சியளிக்கக்கூடியதாகும். இவற்றில் கடைசிப் போரில் (1895-1898), ஸ்பெயின் 2,20,285 படையினர்களைக் களமிறக்கியதுடன், நவீன கால சித்திரவதை முகாம்களை முதன்முதலில் உருவாக்கியது. கியூபாவின் மக்கள் தொகையில் தோராயமாக 20 சதவீதம் பேர் இதில் உயிரிழந்தனர். இருப்பினும், போர் முடிந்தபோது கியூபாவிற்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை, மாறாக அமெரிக்காவின் மேலாதிக்கமே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.

1898-ல் தலையிட்ட அமெரிக்கா, ஸ்பானிய காலனித்துவத்தை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து கியூபாவின் தலைவர்களை விலக்கி வைத்தது. மேலும், கியூபாவின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிடுவதற்கான வரம்பற்ற உரிமையை வாஷிங்டனுக்கு வழங்கும் பிளாட் சட்ட திருத்தத்தை கட்டாயப்படுத்தி திணித்தது. அத்துடன், குவாண்டனாமோ குடாவை நிரந்தர அமெரிக்கத் தளமாகவும் வாஷிங்டன் தன்வசப்படுத்திக் கொண்டது. கியூபாவின் உத்தியோகபூர்வ குடியரசு தினமான மே 20, 1902 என்பது, உண்மையான சுதந்திரத்தை நினைவுகூரவில்லை. மாறாக, அதன் போலித் தோற்றத்தையே நினைவுகூருகிறது: தலைநகர் ஹவானாவின் மோர்ரோ கோட்டையில் அமெரிக்காவின் கொடி இறக்கப்பட்டபோதும், கியூபாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் அடிபணியச் செய்த ஒரு அரைக்-காலனித்துவ நிலையே நீடித்தது.

இந்த வரலாற்றை உந்தித் தள்ளிய வர்க்க சக்திகள், பில் வான் ஓகன் எழுதிய “காஸ்ட்ரோயிசமும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் அரசியலும்” என்ற அடிப்படை விரிவுரையில் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுப்பாய்வு, 1959 புரட்சியின் ஆழமான வேர்களை, கியூபாவின் சுதந்திரப் போராட்டத்தின் கருச்சிதைவுத் தன்மையிலும், அதன் விளைவாக அந்தத் தீவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்க மூலதனமும் அதன் உள்ளூர் ஏஜெண்டுகளும் செலுத்திய மேலாதிக்கத்திலும் தேடிக் கண்டறிந்தது.

புரட்சிக்கு முந்தைய கியூபாவின் சமூக யதார்த்தம் என்பது, ஒருபுறம் தீவிரமான செல்வக் குவிப்பும், மறுபுறம் கிராமப்புறங்களில் பரந்த வறுமையும், நகர்ப்புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டமும் நிறைந்ததாக இருந்தது. அந்தத் தீவின் பொருளாதாரம்—அதன் சர்க்கரைத் தோட்டங்கள், பொதுப் பயன்பாட்டுச் சேவைகள், இரயில் பாதைகள், ஹோட்டல்கள் மற்றும் தொழில்துறைகள்—பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அல்லது அவர்களுடன் பிணைக்கப்பட்டிருந்த உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்திற்கே சொந்தமாக இருந்தது.

கியூபாவின் வணிகப் பாதாள உலகமானது, அமெரிக்க அதிகார மையத்தின் மிக உயர்மட்டத்தோடு ஆழமாகப் பிணைக்கப்பட்டிருந்தது. மாஃபியாக்களுடன் தொடர்புடைய கியூப வங்கியாளரும், முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவருமான சார்லஸ் “பெபே” ரெபோசோ, மேயர் லான்ஸ்கி போன்ற அமெரிக்கவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களால் முழுமையாக நடத்தப்பட்ட சூதாட்டப் பயணங்களுக்காக, நிக்சன் புளோரிடா செனட்டர் ஜோர்ஜ் ஸ்மேதர்ஸருடன் வழக்கமாக ஹவானாவிற்குப் பயணம் செய்தார். ரெபோசோ, எட்கார்டோ புட்டாரி மற்றும் பர்க் ஹெட்ஜஸ் உள்ளிட்ட பாட்டிஸ்டாவின் நெருங்கிய வட்டாரத்துடன் ஆழமான தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்தார். பாட்டிஸ்டாவின் கியூபா, நடைமுறையில், வாஷிங்டன் மற்றும் மியாமியில் மேற்பார்வையாளர்களைக் கொண்ட ஒரு மாஃபியா அரசாகவே இருந்தது.

வான் ஓகன் ஆவணப்படுத்தியுள்ளபடி, இக்காலகட்டத்தில் கியூப தொழிலாள வர்க்கத்திற்கு ஏற்பட்ட அரசியல் முடக்கம் என்பது, திட்டமிட்ட நாசவேலையின் விளைவாக ஏற்பட்டதாகும். அதற்கு முந்தைய புரட்சிகர எழுச்சிகளை பாட்டிஸ்டாவிற்குப் பின்னால் திருப்பிவிட்டதற்கும், அவரது அரசாங்கத்தில் இணைந்தது உள்ளிட்ட செயல்களுக்கும், கியூபாவின் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சி (PSP) நேரடிப் பொறுப்பேற்க வேண்டும். ஜெரார்டோ மச்சாடோ சர்வாதிகாரத்தை வீழ்த்திய 1933-ஆம் ஆண்டின் பொது வேலைநிறுத்தமும் புரட்சியும், தொழிலாளர்கள் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி சோவியத்துகளை அமைத்ததன் மூலம் ஒரு உண்மையான புரட்சிகர சூழலை உருவாக்கியது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள், அந்த நேரத்தில் தன்னை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகக் காட்டிக்கொண்ட பாட்டிஸ்டாவிற்கு இந்த இயக்கத்தைக் கீழ்ப்படியச் செய்தனர். தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கப்பட்டதன் விளைவாக, கியூபாவின் ஜனநாயகக் கடமைகள் நிறைவேற்றப்படவில்லை; மாறாக, ஒரு புதிய முதலாளித்துவ சர்வாதிகாரியின் கீழ் அவை தள்ளிப்போடப்பட்டன.

கியூபாவில் 1959ம் ஆண்டு புரட்சி வெடித்தபோது, பாட்டிஸ்டாவின் வீழ்ச்சிக்கு சியரா மேஸ்ட்ரா பகுதியில் இருந்த கொரில்லா குழுக்கள் முதன்மைக் காரணியாக இருக்கவில்லை. மாறாக, நகரங்களில் வெடித்த மாபெரும் வேலைநிறுத்த இயக்கமே அவரது ஆட்சியை முடக்கி, அதைத் தொடர முடியாதபடி செய்தது. பாட்டிஸ்டாவின் அதிகாரம் சரிந்ததாலும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போட்டியிடக்கூடிய ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமை இல்லாததாலும் ஏற்பட்ட ஓர் அரசியல் வெற்றிடத்திற்குள்ளேயே பிடெல் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம் காலடி எடுத்து வைத்தது.

இது ஒரு மிக முக்கியமான புள்ளியாகும்: காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கத்தின் வெற்றி என்பது, கொரில்லாப் போர்முறைதான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை என்பதை உறுதிப்படுத்தவில்லை. மாறாக, புரட்சிகரத் தலைமை இல்லாத நிலையில், தொடர்ச்சியான முதலாளித்துவச் சுரண்டலைக் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக, முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் அரசைப் பொறுப்பேற்றுக்கொள்வதை மட்டுமே தொழிலாள வர்க்கம் காண நேரிடும் என்பதற்கான ஒரு நிரூபணமாக அது அமைந்தது.

1966-ல் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் காஸ்ட்ரோ உரையாற்றுகையில், அவர் ட்ரொட்ஸ்கிசத்தைக் கண்டனம் செய்தார்.

ஐசன்ஹோவர் நிர்வாகமும், அதைத் தொடர்ந்து கென்னடி நிர்வாகமும், ஹவானாவில் தங்களது பொம்மை ஆட்சியை அகற்றியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்துவிட்டன. மேலும், மக்களால் கோரப்பட்ட மிகக்குறைந்த அளவிலான விவசாய சீர்திருத்தங்களையும் பிற நடவடிக்கைகளையும் கூட ஏற்றுக்கொள்ள மறுத்தன. அதற்குப் பதிலாக, அவர்கள் கியூபாவின் சர்க்கரை இறக்குமதியை நிறுத்தி, கிட்டத்தட்ட முழுமையான அமெரிக்க வர்த்தகத் தடையை விதித்தனர். இந்தச் செயல்முறையிலிருந்து உருவான காஸ்ட்ரோ அரசாங்கம், பொருளாதாரத் தேவையின் காரணமாக, அமெரிக்காவிற்குச் சொந்தமான தோட்டங்கள், பொதுப் பயன்பாடுகள், இரயில் பாதைகள், ஹோட்டல்கள் மற்றும் தொழில்துறைகளை முழுமையாகத் தேசியமயமாக்குவதன் மூலம் இதற்குப் பதிலடி கொடுத்தது.

உதவிக்காகச் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவத்தை நோக்கித் திரும்பிய காஸ்ட்ரோ, எழுத்தறிவு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் உண்மையான சமூக நன்மைகளைப் பெற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். இந்தச் சாதனைகள் உண்மையானவைதான், ஆனால் அவை, வர்க்கத் தன்மையில் அடிப்படையில் முதலாளித்துவமாகவே இருந்த ஒரு அரசு எந்திரத்திற்குள்ளும், மாஸ்கோவின் எதிர்-புரட்சிகர வெளியுறவுக் கொள்கைக்கு கியூபா முழுமையாக அரசியல் ரீதியாக அடிபணிந்திருந்த சூழ்நிலைகளின் கீழும் அடையப்பட்டன.

கியூபாவின் பொருளாதாரம், கட்டமைப்பு ரீதியாக வெளிநாட்டு ஆதரவைச் சார்ந்து இருந்தமையானது, காஸ்ட்ரோவின் அரசாங்கத்தை நம்பியிருப்பதன் மூலம் தொழிலாளர்களால் இந்த காலகட்டத்தின் எஞ்சிய சமூக நன்மைகளைப் பாதுகாக்க முடியாது என்பதையும், எப்போதும் பாதுகாக்க இயலாது என்பதையும் உறுதிப்படுத்தியது. கியூபாவின் முதலாளித்துவ தேசியவாதத் தலைமை, தனது பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள எப்போதும் ஒரு ஆதரவாளரையே நாடியிருந்தது. பனிப்போரின் போது, அந்த ஆதரவாளராகச் சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, அது வெனிசுவேலாவாகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட மற்றும் குறுகிய கால அளவில் மெக்சிகோவாகவும் இருந்தது.

கியூபாவின் இராணுவம் மற்றும் கட்சித் தலைமையின் ஒட்டுமொத்த உயர் அடுக்கினரும், சுற்றுலா வருவாய்க்கான சலுகை பெற்ற அணுகல் மற்றும் ஐரோப்பிய, கனேடிய மூலதனத்துடனான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் தங்களை வளம் கொழிக்கச் செய்து கொண்டனர். கடந்த தசாப்தத்தில், சுற்றுலா மற்றும் ஹோட்டல்களுக்கான செலவினங்கள் மற்ற அனைத்து முதலீட்டு முன்னுரிமைகளையும் விட அதிகமாக இருந்தன. 2024 ஆம் ஆண்டில், கியூப அரசு தனது மொத்த முதலீடுகளில் 37.4 சதவீதத்தை சொகுசு விடுதிகளை கட்டுவதில் குவித்தது. இந்தத் தொகை கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த செலவை விட பதினொரு மடங்கு அதிகமாகும்.

இது ஒரு அரசின் தர்க்கரீதியான பொருளாதார வெளிப்பாடாகும். கியூபாவின் ஆளும் தட்டு, அனைத்து தேசியவாத வாய்வீச்சுக்களுக்கும் மத்தியிலும், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி உலகளாவிய முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்குப் பதிலாக, அதனுடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மூலதன முதலீட்டை ஈர்ப்பதற்கு மலிவான உழைப்பு மற்றும் இயற்கை வளங்களின் வடிவத்தில் போட்டித்தன்மை வாய்ந்த செலவினங்கள் தேவையாக இருக்கின்றன.

தற்போதைய பேரழிவு இந்த யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி டயஸ்-கனெல், சமீபத்தில் பிரேக் த்ரூ நியூஸ் ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய நேர்காணலில், கியூபாவின் சுதந்திரப் போர்கள் மற்றும் 1933 புரட்சியிலிருந்து கிடைத்த படிப்பினைகளைப் பற்றிப் பேசுகையில், முந்தைய இயக்கங்கள் சுதந்திரத்தைப் பெறத் தவறியதற்கான அடிப்படைக் காரணம் “தேசிய ஒற்றுமையின்மை” —— அதாவது கியூபர்களிடையே ஒற்றுமை இல்லாததே காரணம் என்று அவர் முடிவு செய்கிறார். 1959 புரட்சி வெற்றி பெற்றது, ஏனெனில் அது “புரட்சிகர கியூபக் கட்சி பற்றிய அதே மார்ட்டிசக் கருத்தாக்கத்துடன் [கியூபாவில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்த தேசியவாதத் தலைவர் ஜோஸ் மார்ட்டியிடமிருந்து உருவானது] முக்கிய அரசியல் சக்திகளை ஒரே கட்சியில் ஒன்றிணைத்தது”, அதன் மூலம் “இக்கட்டான சூழ்நிலைகளைத் தாங்கி, பொருளாதாரத் தடையை முறியடித்து, அனைத்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளையும் வெல்ல முடிந்தது” என்று அவர் வாதிடுகிறார்.

உண்மைநிலை இதற்கு நேர்மாறானதாகும். கியூபாவின் சுதந்திரப் போர்கள் மற்றும் புரட்சிகர எழுச்சிகளின் தோல்வியானது, கியூபர்களிடையே கியூபர்களாக இருந்த ஒற்றுமையின்மையின் விளைவாக ஏற்படவில்லை. மாறாக அது, ஏகாதிபத்திய யுகத்தில், கியூப தேசத்தின் ஜனநாயகக் கடமைகளுக்கும் ——தேசிய சுயநிர்ணயம், நிலச் சீர்திருத்தம், அதன் வளங்கள் மீதான இறையாண்மை—— ஒவ்வொரு தேசியவாத இயக்கத்தையும் வழிநடத்திய முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ வர்க்க நலன்களுக்கும் இடையே இருந்த அடிப்படை முரண்பாட்டைத் தீர்க்க அனைத்து தேசியவாத வேலைத் திட்டங்களாலும் இயலாமல் போனதன் விளைவே ஆகும்.

ஒரு தேசியவாதப் பதாகையின் கீழ் ஒற்றுமையை அடைவதன் மூலம் அந்த முரண்பாட்டைக் கடந்துவிட முடியாது. சர்வதேச சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரசை அழித்து, தன் சொந்தப் பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே இதனைத் தீர்க்க முடியும் —சரியாக இதைத்தான், 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சியின் வெற்றிகரமான வியூகத்திற்கு வழிகாட்டிய ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு துல்லியமாக நிறுவுகிறது.

1905 மற்றும் 1917 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ரஷ்யப் புரட்சிகள், முதலாம் உலகப் போர் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பரந்த உலகளாவிய முன்னேற்றங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு, ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட மூன்று ஆய்வறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. முதலாவதாக, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், முதலாளித்துவ வர்க்கமானது மிகவும் பலவீனமானதாகவும், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்துடன் மிகவும் பிணைக்கப்பட்டதாகவும், ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியைக் கண்டு மிகவும் அஞ்சுவதாகவும் இருக்கிறது. இதனால் அவர்களால் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பாரம்பரியக் கடமைகளை நிறைவு செய்ய முடியாது. தனக்குப் பின்னால் விவசாயிகளையும் கிராமப்புற ஏழைகளையும் வழிநடத்தும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இக்கடமைகளை நிறைவேற்ற முடியும்.

இரண்டாவதாக, ஜனநாயகப் புரட்சியானது முதலாளித்துவ “கட்டத்தோடு” நின்றுவிட முடியாது—அது தடையின்றி சோசலிச நடவடிக்கைகளை நோக்கி, அதாவது மூலதனத்தைப் பறிமுதல் செய்வதை நோக்கிச் செல்ல வேண்டும். மூன்றாவதாக, மிக முக்கியமாக, சோசலிசப் புரட்சியை ஒரு நாட்டில் மட்டும் முழுமையடையச் செய்ய முடியாது. அது சர்வதேச அளவில் விரிவடைய வேண்டும், இல்லையெனில் அது கழுத்து நெரிக்கப்படும்—ஸ்டாலினிச தேசியவாத அதிகாரத்துவத்தின் ஆதிக்கம் மற்றும் சீரழிவின் கீழ் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட கதியால் இது இறுதியில் நிரூபிக்கப்பட்டது.

பொருளாதாரத் தடையையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் கியூபா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது என்ற டயஸ்-கானெலின் கூற்றை தற்போதைய சமூகப் பேரழிவு பொய்யாக்குகிறது. மின்வெட்டுகள், சுகாதார அமைப்பின் வீழ்ச்சி மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கியூபர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பது ஆகியவை இந்த பேரழிவுத் தோல்விக்கு சாட்சியமளிக்கின்றன. சோவியத் மானியங்கள் நிறுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட முழுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, கியூபர்கள் மூன்றில் ஒரு பங்கு குறைவான கலோரிகளுடன் உயிர்வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட 1990-களின் சிறப்பு காலகட்டத்துடன் தற்போதைய நெருக்கடியைச் சாதகமாக ஒப்பிட்டு, இந்நெருக்கடியைக் குறைத்துக் காட்ட டயஸ்-கானெல் முயல்கிறார். ஆனால், கியூபாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இன்று கியூபர்கள் வெளியேறி வருகிறார்கள் என்ற உண்மை அவரது இந்தக் கூற்றைப் பொய்யாக்குகிறது.

கியூபா புரட்சியானது, நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை எதிர்மறையான வழியில் மூலோபாய ரீதியாக உறுதிப்படுத்துகிறது. வெகுஜன அணிதிரட்டல் நிபந்தனைகளின் கீழ், ஒரு குட்டி-முதலாளித்துவ தேசியவாத அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிக தீவிரமான தேசியமயமாக்கல்கள் கூட, ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபடுவதற்கான ஜனநாயகக் கடமையைத் தீர்க்கக்கூட இலாயக்கற்று இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தலே தங்களது தோல்விக்குக் காரணம் என்று காஸ்ட்ரோயிசத்தின் ஆதரவாளர்கள் வாதிடலாம், ஆனால் அந்த வாதம் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாக தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம் அவசியம் என்ற கருத்தையே மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்று, கியூபாவின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை ஹவானாவில் உள்ள சி.ஐ.ஏ இயக்குநருடன் காஸ்ட்ரோ குடும்பத்தின் உள்வட்டம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், புலம்பெயர்ந்த முதலாளித்துவ முதலீட்டாளர்களை மீண்டும் தீவிற்கு அழைப்பதன் மூலமும், அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலமும், “இரு நாடுகளின் பாதுகாப்பை” மேம்படுத்த அமெரிக்க உளவு அமைப்புகளுடன் ஒத்துழைக்க ஆர்வம் காட்டுவதன் மூலமும், அந்த தேசியவாத மூலோபாயத்தின் திவால்நிலை முற்றிலும் முழுமையடைந்துள்ளது.

கியூபத் தலைமையின் முதலாளித்துவ வர்க்கத் தன்மையே, அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஆளும் வர்க்கத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக, அவர்களை கிளர்ந்தெழுமாறு உண்மையான அழைப்பை விடுப்பதில் இருந்து அதைத் தடுக்கிறது. அமெரிக்காவில் கீழிருந்து எழும் இத்தகையதொரு இயக்கம், கியூபாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் முதலாளித்துவ மற்றும் இராணுவ மேல்தட்டு வர்க்கத்தினரின் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, அங்கிருக்கும் தொழிலாளர்களின் இயக்கத்தை நிச்சயமாகத் தூண்டும். காஸ்ட்ரோவின் தலைமை வாஷிங்கடனைக் கண்டு அஞ்சுவதை விட தனது சொந்த தொழிலாள வர்க்கத்தைக் கண்டு அதிகம் அஞ்சுகிறது. இதனால்தான், சர்வதேச வர்க்க ஒற்றுமையின் பெயரால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதற்குப் பதிலாக, கியூபாவிற்கு எதிரான சி.ஐ.ஏ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் மற்றும் பயங்கரவாதச் சதிகளுடன் நீண்டகாலமாகத் தொடர்புடைய, மியாமிக்கு நாடுகடத்தப்பட்ட “குசானோ” முதலாளித்துவ வர்க்கத்தினரை அது சாத்தியமான முதலீட்டாளர்களாக ஈர்க்க முயல்கிறது.

ஜோசப் ஹேன்சனின் “கடுமையான சோதனை”, பப்லோவாதிகள் மற்றும் காட்டிக்கொடுக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி

கியூபாவிற்குள் காஸ்ட்ரோயிசத்தின் விதியை, அது சர்வதேச ரீதியாக ஆற்றிய பேரழிவுப் பாத்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. அமெரிக்கக் கண்டம் முழுவதும் அது ஊக்குவிக்கப்பட்டதற்கும், அதன் வர்க்கத் தன்மையைப் பொய்யாக்குவதற்கும் மையமாக இருந்தது பாப்லோவாதமாகும். இது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) பாதுகாக்கப்பட்டுவரும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்துக்கு எதிராக, நான்காம் அகிலத்திற்குள்ளிருந்தே உருவான ஒரு திருத்தல்வாதப் போக்காகும்.

இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய சூத்திரதாரியாக அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவராக ஜோசப் ஹேன்சன் இருந்தார். 1959 கியூபா புரட்சியின் போது, SWP ஆனது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னணிப் பிரிவாக இருந்தது. ஆரம்பத்தில் அது காஸ்ட்ரோவின் மீது ஒரு விமர்சனப் போக்கைக் கடைப்பிடித்தது. எவ்வாறிருப்பினும், நீண்டகால போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சி, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடி மற்றும் அமெரிக்க தீவிரவாத நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் செல்வாக்கு ஆகியவற்றால் 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் SWP மீது உருவான வர்க்க அழுத்தங்களிலிருந்து பிரிக்க முடியாத ஒரு செயல்முறையின் மூலம், SWPயின் தலைமை காஸ்ட்ரோயிசத்திற்கும் பப்லோவாதத்துக்கும் சரணடைந்தது.

ஜோசப் ஹேன்சன்

ஜனவரி 1, 1959 அன்று கியூபாவில் பாட்டிஸ்டா தூக்கியெறியப்பட்டதைத் தொடர்ந்து வந்த அடுத்தடுத்த மாதங்களில், SWP கட்சியால் வெளியிடப்பட்ட ‘மிலிட்டண்ட்’ செய்தித்தாள், காஸ்ட்ரோவை ஒரு முதலாளித்துவ தேசியவாதி என்று வரையறை செய்திருந்தது. அதே நேரத்தில், அதன் தேசியச் செயலாளர் பாரல் டொப்ஸ், “தொழிலாளர்களின் முழுமையான அதிகாரத்திற்கும், தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்தை முழுமையாக நிலைநாட்டுவதற்கும் வரலாற்று ரீதியாக அவசியமான ஒரு வழிமுறை” இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எவ்வளவு துல்லியமாக இருந்தபோதிலும் இந்த மதிப்பீடு, SWP-யின் நடுத்தர வர்க்க தீவிரவாத அடுக்குகளை நோக்கிய ஆழமடைந்து வந்த அரசியல் நோக்குநிலையுடனும், கியூபாவில் நடந்த நிகழ்வுகள் மீதான அவர்களின் விமர்சனமற்ற உற்சாகத்துடனும் பெருகிய மோதலைக் கொண்டிருந்தது.

இந்தத் தருணத்தை SWP இன் தலைவராக இருந்த ஜோசப் ஹான்சன் பயன்படுத்திக் கொண்டார். “பாதுகாப்பும் நான்காம் அகிலமும்” என்ற தலைப்பில் ICFI பின்னர் நடத்திய விசாரணையில் நிரூபிக்கப்பட்டபடி, 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் GPU இன் முகவராகச் செயல்பட்டிருந்த ஹேன்சன், அதன்பின்னர் FBI க்கு தகவல் வழங்கும் “சொத்தாகவும்” மாறியிருந்தார்.

டிசம்பர் 1960 இல், ஹேன்சன் தனது “கியூபா புரட்சி பற்றிய வரைவு ஆய்வறிக்கைகளை” தயாரித்தார். அதில், காஸ்ட்ரோ கியூபாவில் ஒரு தொழிலாளர் அரசை நிறுவியுள்ளார் என்றும், சொத்துக்களை தேசியமயமாக்குவதை ஒரு தொழிலாளர் அரசின் இருப்புக்குச் சமமாக இருப்பதாகவும் அவர் பிரகடனப்படுத்தினார். ஜனவரி 14, 1961 அன்று, இந்த ஆய்வறிக்கைகளுக்கு ஆதரவாக SWP அரசியல் குழுவிடம் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையும், கட்சியின் முன்னணி அமைப்புகளுக்குள் அது உருவாக்கிய விவாதமும் SWP இன் தத்துவார்த்த மட்டம் எவ்வளவு தூரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை முழுமையாக அம்பலப்படுத்தியது.

டேவிட் நோர்த் தனது நாம் பாதுகாக்கும் மரபுரிமை என்ற நூலில் ஆவணப்படுத்தியுள்ளபடி, ஹேன்சன் இந்தக் கேள்வியை ஆரம்பத்தில் கட்டமைத்த விதமே ஒரு பெரும் வெளிப்பாடாக இருந்தது: அவர், தொழிலாள வர்க்கத்திற்கான உலகளாவிய புரட்சிகர முன்னோக்கை உருவாக்குவதன் அடிப்படையில் அல்லாமல், நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் கருத்து அழுத்தத்திற்கு ஒரு விடையிறுப்பாகவே கியூபாவின் வர்க்கத் தன்மை குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஜோன்-பால் சார்த்தர், சி. ரைட் மில்ஸ் மற்றும் ஹூபர்மேன் மற்றும் ஸ்வீசி ஆகியோரை மிக முக்கியமான ஆளுமைகள் என்று விவரித்த அவர், கியூபா குறித்து அவர்களின் அறிக்கைகளுடன் SWP உடன்படுகிறதா இல்லையா என்று அரசியல் குழுவிடம் கேள்வி எழுப்பினார்.

ஹேன்சனின் உண்மையான “தத்துவார்த்த” வாதமானது, ICFI மிகச் சரியாக வகைப்படுத்தியதைப் போல, வெட்கமற்ற அனுபவவாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர் பின்வருமாறு அறிவித்தார்:

எங்களுடைய வகைப்படுத்தல்கள் வெறுமனே உண்மைகளையே பிரதிபலிக்கின்றன. கியூபாவில் முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது உண்மை. அங்கு ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதாரம் தொடங்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அங்கே தரத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசு நிலவுகிறது என்பது உண்மை. இந்த விஷயங்களை நீங்கள் எப்படி அழைத்தாலும் சரி, இவைதான் அனைவரும் தங்களின் ஆய்வைத் தொடங்க வேண்டிய உண்மைகளாகும்.

டேவிட் நோர்த் நிலைநிறுத்துவதைப் போல, இந்த “உண்மைகள்” முற்றிலும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு அற்றவையாக இருந்தன. முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறுவது, அந்த சொத்து பறிமுதல்களின் வர்க்கத் தன்மையைப் பற்றி எதையும் விளக்கிடவில்லை. “திட்டமிட்ட பொருளாதாரம்” என்ற குறிப்பானது, முறையான தொழில்மயமாக்கல் இல்லாமை மற்றும் கரும்பு விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒற்றைப் பயிர் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான ஆதிக்கம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விலக்கிப் பார்க்கப்பட்டது — வரலாறு பிற்காலத்தில் நிரூபித்தபடி, இத்தகைய நிலைமைகளின் கீழ் அறிவியல் பூர்வமான திட்டமிடல் என்பது சாத்தியமற்றதாக இருந்தது. மேலும், கியூபா “தரநிலையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசைக்” கொண்டிருந்தது என்ற கூற்று, அது எதிலிருந்து மாறுபட்டது என்ற கேள்வியை எழுப்பியது. ஹேன்சன் அதைக் கூறுவதுக்கு கவலைப்படவில்லை.

மேலும், டேவிட் நோர்த் அவதானித்தபடி, SWPயின் அரசியல் குழு உறுப்பினர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய கொரில்லாக்களின் சித்திரக் காட்சி அநேகமாக அவர்களின் மனக்கண்ணில் தோன்றியிருக்கலாம். ஆனால், ஆயுதம் ஏந்திய கொரில்லாக்களும் மக்கள் ஆயுதக் குழுக்களும் மட்டுமே அரசு அதிகாரத்தின் வர்க்கத் தன்மையை தீர்மானித்துவிடுவதில்லை. போல்ஷிவிக் புரட்சியிலிருந்து உருவான அரசை “தர ரீதியாக முற்றிலும் மாறுபட்டதாக” மாற்றியது ஆயுதம் ஏந்திய ஆயுதக் குழுக்கள் அல்ல — மாறாக, பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டிய சோவியத் வடிவமே ஆகும்.

SWP இன் 1961 வரைவுத் தீர்மானம் திருத்தல்வாத முடிவை அதன் மிகக் கூர்மையான வடிவத்தில் முன்வைத்தது: “ஒரு முதலாளித்துவ-ஜனநாயக வேலைத் திட்டத்துடன் தொடங்கிய ஒரு குட்டி-முதலாளித்துவத் தலைமை, தங்களுடைய சொந்தத் வேலைத் திட்டத்தின் முறையான தர்க்கத்திற்குப் பதிலாக, புரட்சியின் இயக்கவியல் தர்க்கத்தைப் பின்பற்றியது. அதன் விளைவாக, அமெரிக்க கண்டத்தில் முதலாவது தொழிலாளர் அரசை நிறுவி, அதை ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவிற்கும் ஒரு முன்மாதிரியாகப் பிரகடனப்படுத்தியது.”

இந்தக் கூற்றின் அரசியல் தாக்கங்கள் அதிர்ச்சியூட்டுபவையாக இருந்தன. ICFI இன் பிரிட்டிஷ் பிரிவான சோசலிச தொழிலாளர் கழகம் (SLL), 1961 ஜனவரியில் SWP தலைமைக்கு எழுதிய கடிதத்தில் இருந்து தொடங்கி, மார்க்சிசத்தின் இந்த பிரம்மாண்டமான திரித்தலுக்கு எதிரான போராட்டத்திற்குத் தலைமை தாங்கியது.

தொழிலாளர் வர்க்கத்துடன் எந்தவொரு குறிப்பிடத்தக்க நிறுவன ரீதியான அல்லது அரசியல் ரீதியான தொடர்புகளையும் கொண்டிராமல், முக்கியமாக விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு, மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க ஆட்சிக்கான எந்தவொரு அடையாளப் பூர்வமான அமைப்புகளும் நிலவாத நிலைமைகளின் கீழ், வெறும் குட்டி-முதலாளித்துவ கொரில்லா தலைவர்களின் நடவடிக்கைகளின் மூலமாகவே தொழிலாளர் அரசுகளை நிறுவிவிட முடியும் என்றால், சோசலிசத்தை நோக்கிய வரலாற்றுப் பாதை குறித்த ஒட்டுமொத்த மார்க்சிச கருத்தாக்கமும் காலாவதியானதாக ஆக்கப்பட்டுவிடும்.

பாரிஸ் கம்யூன் பற்றிய லெனினின் எழுத்துக்களின் பொருத்தம், பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தைச் செலுத்தும் வடிவமாக சோவியத் அதிகாரம் விளங்குவது பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மற்றும் தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய புரட்சிகரக் கட்சிகளைக் கட்டுவதற்காகப் பல தலைமுறைகளாக நடத்தப்பட்ட போராட்டங்கள் — இவை அனைத்தும், ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சொத்து பறிமுதல்களை மேற்கொள்ளும் எந்தவொரு தேசியவாத அல்லது கொரில்லா இயக்கத்திற்கும் தங்களை தகவமைத்துக் கொள்வது என்ற பெயரில் கடலில் தூக்கி எறியப்பட்டன.

ஜூலை 1962 இல் வெளியிடப்பட்ட “காட்டிக்கொடுக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிசம்” என்ற அறிக்கையில் SLL பின்வருமாறு பிரகடனப்படுத்தியது:

பாட்டிஸ்டாவின் ஆட்சியை விட தர ரீதியாக புதிய மற்றும் வேறுபட்ட ஒரு அரசு அமைப்பை காஸ்ட்ரோ ஆட்சி உருவாக்கவில்லை. காஸ்ட்ரோ மேற்கொண்ட தேசியமயமாக்கல் நடவடிக்கைகள், அந்த அரசின் முதலாளித்துவத் தன்மையை மாற்றுவதற்கு எதையும் செய்யவில்லை.

அது பின்வருமாறு முடிவு செய்தது:

கியூபா, உண்மையில், நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டிற்கு ஒரு எதிர்மறையான உறுதிப்படுத்தலாகவே அமைகிறது. எந்தவொரு இடத்தில் தொழிலாள வர்க்கத்தால் விவசாய வெகுஜன மக்களை வழிநடத்தவும், முதலாளித்துவ அரசு அதிகாரத்தை உடைத்தெறியவும் முடியாமல் போகிறதோ, அங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் உள்ளே நுழைந்து, “ஜனநாயகப் புரட்சியின்” பிரச்சினைகளைத் தன் சொந்த பாணியிலும், தன் சொந்த திருப்திக்காகவும் தீர்த்துக்கொள்கிறது.

ஹேன்சனின் ஜனவரி 1961 அறிக்கையைத் தொடர்ந்து நடந்த அரசியல் குழு கலந்துரையாடலில், சோசலிச தொழிலாளர் கட்சி சரணடைந்ததன் பின்னணியில் இருந்த மனத்தளர்ச்சி வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் பப்லோவிற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், தொழிலாள வர்க்கத் தலைமையின் நெருக்கடியை “புறநிலைக் காரணிகளின்” வளர்ச்சியால் தீர்த்துவிட முடியும் என்ற கருத்தைக் கடுமையாக எதிர்த்தவருமான மோரிஸ் ஸ்டெய்ன், தான் ஒரு காலத்தில் பாதுகாத்த ஒவ்வொரு கொள்கையையும் இப்போது கைவிட்டார். அவர் அரசியல் குழுவிடம் பின்வருமாறு தெரிவித்தார்:

புரட்சியாளர்களைப் போலப் பேசிவிட்டு, சீர்திருத்தவாதிகளைப் போலச் செயல்பட்டவர்களுக்கு எதிராக வாதாடுவதிலேயே நாம் எமது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்துவிட்டோம். எமது முழு வாழ்க்கையையும் இதிலேயே செலவிட்டிருக்கிறோம். இப்போது இந்த மாற்றத்தை நாம் வரவேற்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

டேவிட் நோர்த் குறிப்பிடுவது போல, இதுதான் ஸ்டெய்னின் அரசியல் ரீதியான மரண கீதமாக அமைந்தது — அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மீது நம்பிக்கையை இழந்து, SWP-க்கு எந்தவொரு புரட்சிகரமான எதிர்காலமும் இல்லை என்று கருதிய ஒரு தலைமுறையின் சோர்வின் வெளிப்பாடு இது. காஸ்ட்ரோயிசத்தின் மீதான புகழ்ச்சி, அந்தக் கைவிடுதலின் அரசியல் வெளிப்பாடாக இருந்தது.

SWP-யின் நிலைப்பாடு வலுப்படுத்தப்பட்டு, அதன் தலைமை மனச்சோர்வடைந்து, அதன் நோக்கு நடுத்தர வர்க்க தீவிரவாதக் கருத்தை நோக்கி நிலைநிறுத்தப்பட்ட சூழலில்தான் ஹேன்சன் தனது நவம்பர் 1962 ஆவணமான “கியூபா: ஒரு கடுமையான சோதனை” என்பதை வெளியிட்டார். அதன் முக்கியத்துவம், அது கோட்பாட்டு ரீதியாகச் சேர்த்தவற்றில் முதன்மையாக இருக்கவில்லை. மாறாக, பாப்லோவின் ஆதரவாளர்களுடன் மீண்டும் இணைவதற்கு ICFI காட்டிய எதிர்ப்பை அழிக்க முயன்ற அனைவரின் கைகளிலும் அது வழங்கிய அரசியல் ஆயுதத்தில்தான் இருந்தது. அந்த ஆவணம், குட்டி முதலாளித்துவ தேசியவாத சக்திகளுக்கு அடிபணியும்படி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மிரட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட, ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலும் அவதூறும் ஆகும்.

ஹேன்சன் ஒட்டுமொத்தச் சூழ்நிலையையும் கொள்கை ரீதியான அரசியல் கலந்துரையாடல்களுக்கு இடமில்லாத வகையிலேயே கட்டமைத்தார். காலனித்துவப் புரட்சி மற்றும் ஸ்டாலினிச எதிர்ப்புச் செயல்முறை போன்ற “புறநிலைக் காரணிகள்” “சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்ற ஒரு தாக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் மீது ஏற்படுத்தி வருகின்றன” என்று அவர் அறிவித்தார். இது அனைத்து அமைப்புகளையும் ஊடறுத்துச் சென்று, “அவற்றை உலுக்கி, மறுசீரமைத்து, வலது மற்றும் இடது எனப் பிரித்து வருகிறது” என்றும் அவர் அறிவித்தார்.

இந்த புறநிலைவாத மற்றும் காட்சிவாத முன்னோக்கின்படி, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை ICFI பாதுகாத்தது என்பது, மார்க்சிசம் மற்றும் அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தின் மீதான கொள்கை ரீதியான பாதுகாப்பாகக் காட்டப்படாமல், மாறாக அது அகற்றி எறியப்பட வேண்டிய ஒரு தடையாகவே சித்தரிக்கப்பட்டது. பப்லோவாதிகளுடனான மறு ஐக்கியத்துக்கு SLL காட்டிய எதிர்ப்பு “தீவிர-இடது குறுங்குழுவாதம்” என்றும், தொழிலாளர் வர்க்கத் தலைமைக்கே முதன்மை என்ற அதன் வலியுறுத்தல், “கண்கூடாகத் தெரியும் நிகழ்வுகளை” ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு பிடிவாதமான நிலைப்பாடு என்றும், காஸ்ட்ரோவுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்வதற்கு அது காட்டிய எதிர்ப்பு, “இந்தத் தலைவர்கள் செய்யும் எல்லாவற்றின் மீதும் ‘துரோகம்’ என்ற முத்திரையைப் பதிப்பதன் மூலம், தங்களுக்கு வரவிருக்கும் எந்தப் பொறுப்பிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளும்” ஒரு மாயையான முயற்சி என்றும் சித்தரிக்கப்பட்டது.

நடைமுறை மார்க்சிசம் மற்றும் யதார்த்தத்தின் மீதான கவனம் என முன்வைக்கப்பட்ட ஹேன்சனின் மாற்று வழி, ஒட்டுமொத்தமாக புரட்சிகரக் கட்சியை கலைத்துவிடுவதற்கே சமமாக இருந்தது. அவர் பின்வருமாறு எழுதினார்:

புரட்சிக்கான கட்சி முதலில் கட்டப்படும் வரை விஷயங்களைத் தள்ளிப்போட்டிருப்பதுதான் நல்லது என்று புரட்சியோடு வாதாடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவர்கள் அந்தப் புரட்சிகர நடவடிக்கையிலேயே தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அதன் மூலமாக, புரட்சி நடக்கும் அதே செயல்முறையினூடேயே ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியை கட்டியெழுப்ப அவர்கள் முயல்கிறார்கள்.

இந்தக் கருத்தாக்கம் —இது ஸ்டாலினிசத்திற்கு அடிபணிவதை நியாயப்படுத்துவதற்காக பப்லோ பயன்படுத்திய வாதங்களை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மீண்டும் பிரதிபலிக்கிறது— நடைமுறையில், ஒரு புரட்சிக்கு முன்பாகக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியமில்லை, புரட்சியின் போது மட்டுமே அதைச் செய்ய வேண்டும், மேலும் அதற்குத் தலைமை தாங்கும் எந்தவொரு மார்க்சியமற்ற சக்திக்கும் ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதாகும். இதன் தர்க்கரீதியான முடிவு, SLL அங்கீகரித்தபடி, அமெரிக்கா உட்பட எங்குமே ட்ரொட்ஸ்கியக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தைக் கைவிடுவதாகும்.

கியூபா புரட்சியைப் பாதுகாக்க SLL மறுத்துவிட்டது என்ற பொய்யைக் கொண்டு, SLL-ஐ ஒரு தீவிர-இடதுசாரி குறுங்குழுவாதிகள் என்று ஹேன்சன் அவதூறு செய்தது, அதற்குப் பின் நடந்த ஒவ்வொரு பப்லோவாத ஒருங்கிணைப்பு சூழ்ச்சிக்கும் அரசியல் அடித்தளமாக அமைந்தது. இது பரந்த குட்டி-முதலாளித்துவ இடதுகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) கொள்கை ரீதியான நிலப்பாடுகளுடன் எந்தவொரு தொடர்பும் கொள்ளாதவாறு பாதுகாப்பளித்தது. மேலும், காலனித்துவப் புரட்சியின் வலிமைமிக்க சக்திகளுக்கு முன்னால், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரப் பாத்திரம் மீதான ட்ரொட்ஸ்கிசத்தின் வலியுறுத்தலை ஒரு குழுவாத முக்கியத்துவமற்ற விஷயமாக அது சித்தரித்தது.

கிளிஃவ் சுலோட்டர்

இதனால்தான், கிளிஃவ் சுலோட்டரின் பதில் —மார்ச் 1963-ல் வெளியான சந்தர்ப்பவாதமும் அனுபவவாதமும் என்ற நூலில், அதன் முக்கியத்துவத்தை டேவிட் நோர்த், 1939-40-ல் மாக்ஸ் ஷாக்ட்மேனுக்கும் SWP-யில் இருந்த குட்டி முதலாளித்துவ எதிர்ப்பிற்கும் எதிராக ட்ரொட்ஸ்கி எழுதிய மார்க்சியத்தைப் பாதுகாத்தல் என்ற நூலுடன் ஒப்பிட்டார்— ஹேன்சனுக்கு அளிக்கப்பட்ட மறுப்பு மட்டுமல்ல, மாறாக ஹேன்சன் ஒரு தத்துவமாக ஊக்குவித்து வந்த அனுபவவாத கலைப்புக்கு எதிராக மார்க்சிய முறையியலின் ஒரு அடிப்படைப் பாதுகாப்பாகவும் இருந்தது:

இந்த திருத்தல்வாதக் கருத்துக்களுக்கு இட்டுச் செல்வது “உண்மைகள்” பற்றிய தவறான மற்றும் மார்க்சிசமற்ற பார்வையாகும். எங்களது “புறநிலைவாதிகள்” தங்களது “வரலாறு எங்களது பக்கமே உள்ளது” என்ற செய்தியின் மூலம் கூறுவது இதுதான்: நடைபெற்றுக்கொண்டிருக்கும் பெரிய போராட்டங்களைப் பாருங்கள், அவற்றை பகுப்பாய்வு செய்யாமல் ஒன்றிணைத்துக் கொள்ளுங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிய உங்களது உள்ளுணர்வுகளின் அடிப்படையில் செயல்படுங்கள், இவை அனைத்தையும் ஒன்றாகச் சேருங்கள் — அப்போது உங்களுக்கு “உண்மைகள்” கிடைத்துவிடும்... ஒரு உண்மையான புறநிலை பகுப்பாய்வு என்பது உலக அளவிலும், நாடுகளுக்குள்ளும் வர்க்கங்களுக்கு இடையிலான பொருளாதார உறவுகளிலிருந்தும் தொடங்குகிறது. இது; இந்த வர்க்கங்களின் தேவைகளுக்கும் அவர்களின் வர்க்க நனவு மற்றும் அமைப்பிற்கும் இடையிலான உறவுகளின் பகுப்பாய்வின் மூலம் தொடர்கிறது. இவற்றின் அடிப்படையிலேயே சர்வதேச அளவிலும், ஒவ்வொரு தேசியப் பிரிவிலும் தொழிலாள வர்க்கத்திற்கான தனது வேலைத்திட்டத்தை அது அமைக்கிறது.

1962 ஆம் ஆண்டளவில், ஹேன்சன் கியூபாவை நான்காம் அகிலத்தின் “கடுமையான சோதனையாக” மாற்றியிருந்தார்: அவரது கூற்றுப்படி, காஸ்ட்ரோவை ஒரு புரட்சிகர மார்க்சியவாதியாகக் கொண்டாடத் தவறியவர்கள், நிஜ உலக யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்ட, குறுங்குழுவாத தீவிர இடதுசாரிகள் ஆவர். இவ்வாறாக, கியூபா பற்றிய இப்பிரச்சினை, 1963 இல் நடந்த ஓடுகாலிகளின் மாநாட்டில் ஐக்கிய செயலகத்தை நிறுவிய பப்லோவாத சர்வதேச செயலகத்துடன், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மீண்டும் இணைவதற்கான ஓர் அரசியல் நெம்புகோலாக மாறியது. இந்த இணைப்பு என்பது கொள்கைரீதியான ஓர் அரசியல் உடன்பாடு அல்ல. மாறாக அது, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தை வீழ்த்துவதற்காகவும், அதிகாரப்பூர்வ மறுஇணைப்புத் தீர்மானத்தின் வார்த்தைகளின்படி, “காஸ்ட்ரோவாதத்தின் சர்வதேச அலையை வலுப்படுத்தவும் செழுமைப்படுத்தவும்” உதவக்கூடிய ஒரு அடிவருடிப் பாத்திரத்தை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வழங்குவதற்காகவும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வதேச கூட்டணியாகும்.

இந்த மறுநோக்குநிலை, ஹேன்சன் SWP கட்சியின் இளைஞர் அணி, பத்திரிகை மற்றும் உள்விவகாரக் கட்டமைப்பை காஸ்ட்ரோயிசத்தின் மீதான கண்மூடித்தனமான (விமர்சனமற்ற) ஆதரவை நோக்கி இழுப்பதற்கும், அரசாங்க ஒற்றர்களால் நிறைந்திருந்த, கியூபாவிற்கான நியாயமான செயல்பாட்டுக் குழுவின் பின்னணியில் கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் மீண்டும் மையப்படுத்துவதற்கும் அனுமதித்தது.

SWP-யின் கலைப்புவாத, இத்தகைய கட்சி உறுப்பினர்களை ஒழிக்கும் செயல், இலத்தீன் அமெரிக்காவில் உடனடி மற்றும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. காஸ்ட்ரோ அரசாங்கம் கியூபாவிலிருந்த ட்ரொட்ஸ்கிசவாதிகளின் அச்சகத்தைக் கைப்பற்றியும், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி நூலின் கியூபா பதிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த அச்சுக் கோர்வையை நொறுக்கியும், அவர்களின் முக்கியத் தலைவர்களைச் சிறையில் அடைத்தும் பதிலடி கொடுத்த பிறகும், கியூபாவில் உள்ள ட்ரொட்ஸ்கிசவாதிகள் காஸ்ட்ரோயிச ஆட்சிக்கு தங்களை முழுமையாகக் கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று SWP கோரியது.

SWP யானது, இந்த குற்றவியல் போக்கை அமெரிக்கக் கண்டம் முழுவதும் விரிவுபடுத்தி, “இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தங்களின் குறிப்பிட்ட பின்னணிகளைப் பொருட்படுத்தாமல், கியூபாவின் அனுபவத்தைத் தங்கள் சொந்த நாடுகளில் புரட்சிகரப் போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளியாகக் கொள்ளத் தயாராக இருக்கும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும்” என்று அறிவித்தது.

ஆர்ஜென்டினாவின் திருத்தல்வாதியான நஹுவேல் மொரோனோவின் அரசியல் பயணம், இதன் விளைவுகளைத் துல்லியமாக விளக்குகிறது. பப்லோவாத செயலகத்துடன் ஹேன்சனின் மறுஇணைப்பைத் தொடர்ந்து, மொரோனோ கியூபா புரட்சியைப் பயன்படுத்தி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) முறித்துக் கொண்டார். மேலும், தனது இயக்கத்தைச் குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்தின் சதுப்பு நிலத்திற்குள் ஒருங்கிணைத்தார். அவர் 1965-ல் ஆர்ஜென்டினாவில் புரட்சிகர தொழிலாளர் கட்சியை (PRT) நிறுவுவதற்காக, குவேரவாத மரியோ ரொபர்ட்டோ சாந்துச்சோவுடன் இணைந்தார். ஆகஸ்ட் 1967-ல் கியூபா கம்யூனிஸ்ட் கட்சி இலத்தீன் அமெரிக்க ஒற்றுமை அமைப்பை (OLAS) தொடங்கியபோது, மொரோனோ தனது கட்சியின் “முதன்மையான தீவிரப் பணி” என்பது, “OLAS-ன் கீழ் கடுமையாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பக் கட்டமைப்பின்” ஒரு பகுதியாக கொரில்லா படைகளை உருவாக்குவதே என்று முன்மொழிந்தார்.

சிலியில், மொரோனோவின் கலைப்புவாதப் போக்கு, தொழிலாளர் புரட்சிகரக் கட்சியை (POR) புரட்சிகர இடதுசாரி இயக்கத்திற்குள் (MIR) — நடுத்தர வர்க்கப் போக்குகளின் ஒரு கலவைக்குள் — கரைப்பதற்கு வழிவகுத்தது. இது 1970-களின் தொடக்கத்திலிருந்த முக்கியமான புரட்சிகரச் சூழ்நிலையில், சிலியின் தொழிலாள வர்க்கத்தை ஒரு மார்க்சியத் தலைமையின்றி தவிக்கவிட்டது.

காஸ்ட்ரோயிசத்தின் சர்வதேச அளவிலான அரசியல் மதிப்பீடு

சோசலிசத்திற்கான ஒரு புதிய பாதையாக குட்டி-முதலாளித்துவ கெரில்லா வாதத்தை மகிழ்விப்பது, ஆர்ஜென்டினாவின் ஜுவான் பெரோன் முதல் சிலியின் சால்வடோர் அலெண்டே, பொலிவியாவின் ஜுவான் ஜோஸ் டோரஸ் மற்றும் பெருவின் ஜுவான் பிரான்சிஸ்கோ வெலாஸ்கோ அல்வராடோ வரையிலான பல்வேறு முதலாளித்துவ தேசியவாதத் தலைவர்களுக்கு தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துவதற்கான பாதையை அமைப்பதில் மிகவும் ஆபத்தான பாத்திரத்தை காஸ்ட்ரோயிசம் ஆற்றியது.

1971 இல், காஸ்ட்ரோ சிலிக்கு விஜயம் மேற்கொண்ட போது, அலெண்டே தலைமையிலான சோசலிசத்திற்கான “சிலியின் [நாடாளுமன்ற] பாதைக்கு” தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். அவர் தனது பல முக்கிய உரைகளின் போது தொழிலாளர்களை மக்கள் முன்னணி அரசாங்கத்தின் கீழ் “புரட்சிகர செயல்முறை” என்று அழைத்ததன் பின்னால் “ஒன்றுபடுமாறு” அழைப்பு விடுத்தார். தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான புரட்சிகரப் பாதையை எடுப்பதைத் தடுப்பதற்கான இந்த முயற்சிகளின் விளைவு என்னவென்றால், அலண்டேயின் இராணுவத் தளபதி அகஸ்டோ பினோச்ஷே தலைமையிலான அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பாகும். இது காஸ்ட்ரோவின் ஆதரவாளர்கள் பலர் உட்பட சிலி தொழிலாளர் இயக்கத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.

அமெரிக்க கண்டம் முழுவதிலும் தனது எதிர்ப் புரட்சிகர உந்துதலை நியாயப்படுத்துவதற்காக வாஷிங்டன் “மற்றொரு கியூபா” என்ற பூதக்கண்ணாடியை திட்டமிட்டுப் பயன்படுத்தியது: 1965 இல் டொமினிகன் குடியரசு மீதான படையெடுப்பு, 1983 இல் கிரெனடா மீதான படையெடுப்பு, தென் அமெரிக்காவில் அடக்குமுறை சர்வாதிகாரங்களுக்கான ஆதரவு, மற்றும் எல் சால்வடோரில் FMLN மற்றும் நிகரகுவாவில் சாண்டினிஸ்டாக்களுக்கு எதிரான அதன் பினாமிப் போர்கள் ஆகியவை இதில் அடங்கும். ஒவ்வொரு நிகழ்விலும், இந்த முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களும், இயக்கங்களும் தொழிலாளர்களை அரசியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிராயுதபாணியாக்கி, ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியும் ஆட்சிகளை நிறுவுவதற்கும் வழிவகுத்தன.

தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கு மாற்றாகக் கொரில்லா போரை ஊக்குவித்ததானது, தீவிரமடைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களை வெகுஜன இயக்கத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட தற்கொலைக்கு நிகரான சாகசங்களை நோக்கி இட்டுச் சென்றது. இந்த முன்னோக்கானது, புரட்சிகரக் கூறுகளை தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிரிப்பதற்கும், அரசுடன் சமமற்ற ஆயுதமேந்திய மோதல்களுக்குள் அவர்களைத் தள்ளுவதற்கும், மற்றும் புரட்சிகர தொழிலாள வர்க்கக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதைத் தடுப்பதற்கும் மட்டுமே உதவியது. இத்தகைய ஆட்சிகளுக்கோ அல்லது வழிமுறைகளுக்கோ அளிக்கப்பட்ட ஆதரவு எங்கும் சோசலிசத்திற்கு இட்டுச் செல்லவில்லை.

2000-களில், வெனிசுவேலாவின் ஹியூகோ சாவேஸ் முதற்கொண்டு, “இளஞ்சிவப்பு அலை” அரசாங்கங்களுக்கு காஸ்ட்ரோயிசம் அரசியல் ஆதரவை வழங்கியது. இந்த அரசாங்கங்கள் வரம்பிற்குட்பட்ட சமூக உதவித் திட்டங்களைச் செயல்படுத்திய போதிலும், முதலாளித்துவ அரசை அப்படியே விட்டுவிட்டன — மேலும் இவர்களின் தலைமைகள், இன்று கியூபாவிற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள தீவிரத் தாக்குதலுக்கு முற்றிலும் உடந்தையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

இலத்தீன் அமெரிக்க வரலாற்றின் கடினமான பாடம் இதுதான்: முதலாளித்துவ அல்லது குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்திற்கு தொழிலாள வர்க்கத்தைக் கீழ்ப்படுத்துவது தோல்விகளுக்கான சூழ்நிலைகளை மட்டுமே உருவாக்குகிறது. சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனமும், ஒரு புரட்சிகர மார்க்சிச தலைமையைக் கட்டுவதும் அவசியமாகும்.

கலைப்புவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிஸ்டுக்களின் எதிர்ப்பு

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஒழுங்கமைக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கம், கியூபாவையும் அதன் மக்களையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக தளராத உறுதியுடன் பாதுகாத்து வந்துள்ளது. இந்தப் பாதுகாப்பை, தொழிலாள வர்க்கத்தைக் காஸ்ட்ரோயிசம் மற்றும் பிற முதலாளித்துவ, குட்டி-முதலாளித்துவ தேசியவாதத் தலைமைகளுக்கு அடிபணியச் செய்த ஸ்டாலினிச மற்றும் பப்லோவாத சக்திகளுக்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்துடன் அது இணைத்துள்ளது. இந்த வழியில் மட்டுமே கியூபா தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்கா கண்டம் முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று ரீதியான வர்க்க நலன்களைப் பாதுகாக்க முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்தப் புள்ளியை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சி.ஐ.ஏ-இன் இயக்குநரின் சமீபத்திய ஹவானா விஜயம், சி.ஐ.ஏ-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு தோல்வியடைந்த பன்றி விரிகுடா (Bay of Pigs) படையெடுப்பின் 65-வது ஆண்டு நிறைவுக்குச் சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகே நடந்துள்ளது. இந்த நிகழ்வுகள் ஒரு ஒட்டுமொத்த வரலாற்று காலகட்டத்தின் தொடக்கமாகவும் முடிவாகவும் அமைகின்றன. கியூபா மக்களின் வீரம் ஒருபுறமிருந்தபோதிலும், வாஷிங்டனுக்கு முன்னால் தற்போதைய கியூபாவின் தலைமையின் இந்த சரணாகதி, காஸ்ட்ரோயிசத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் அல்ல. மாறாக, அது அதன் தர்க்கரீதியான முடிவே ஆகும்.

1917 இல், அக்டோபர் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் லெனின், நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட முன்னோக்கை ஏற்றுக்கொண்டார் — அதாவது, தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில், வரலாற்று ரீதியாக முதலாளித்துவப் புரட்சியுடன் தொடர்புடைய ஜனநாயக மற்றும் தேசியப் பணிகளை தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். அந்தத் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றவும், சோசலிச நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் புரட்சியை சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் தள்ளப்படும் என்பதாகும்.

மெக்சிகோவில் நாடுகடத்தப்பட்டிருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, 1938 இல் லாசரோ கார்டெனாஸ் அரசாங்கம் மெக்சிகோ எண்ணெயை தேசியமயமாக்கியதற்குப் பதிலளிக்கும் போது, இது ஒரு உண்மையான வெற்றியைக் குறிக்கிறது என்று குறிப்பிட்ட அதேவேளையில், பின்வருமாறு எச்சரித்தார்:

தொழில்துறையில் பின்தங்கிய நாடுகளில், வெளிநாட்டு மூலதனம் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கிறது. இதன் காரணமாகவே, தேசிய பாட்டாளி வர்க்கத்துடன் ஒப்பிடும்போது, தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒப்புநோக்கில் பலவீனமாக உள்ளது. இது, அரசு அதிகாரத்திற்கு ஒரு சிறப்பான சூழ்நிலையை உருவாக்குகிறது. அரசாங்கமானது, வெளிநாட்டு மூலதனத்திற்கும் தேசிய மூலதனத்திற்கும் இடையிலும், ஒப்புநோக்கில் பலவீனமான தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும், சக்திவாய்ந்த பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலும் ஊசலாடுகிறது. இது அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட வகையான போனபார்ட்டிச தன்மையைக் கொடுக்கிறது — அதாவது, இது ஒருவகையில் வர்க்கங்களுக்கு மேலே தன்னை உயர்த்திக் கொள்கிறது. உண்மையில், இது ஒன்று வெளிநாட்டு மூலதனத்தின் கருவியாக மாறி, பாட்டாளி வர்க்கத்தை ஒரு பொலிஸ் சர்வாதிகாரத்தின் சங்கிலிகளால் பிணைப்பதன் மூலமாகவோ, அல்லது பாட்டாளி வர்க்கத்துடன் சூழ்ச்சியுடன் நகர்ந்து, அவர்களுக்குச் சலுகைகளை வழங்குவதன் மூலமாகவோ ஆட்சி செய்ய முடியும். இதன் மூலம் வெளிநாட்டு மூலதனத்துடனான தனது நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிட்ட சுதந்திரத்தை இது பெறுகிறது. மெக்ஸிகோ அரசாங்கத்தின் தற்போதைய கொள்கை இரண்டாவது திசையில் அமைந்துள்ளது — அதன் மிகப்பெரிய வெற்றிகள் இரயில்வே மற்றும் எண்ணெய் நிறுவனங்களை அரசுடமையாக்கியதே ஆகும். ஆனால், சோசலிசத்திற்கான பாதை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வழியாக அல்லாமல், முதலாளித்துவ அரசால் மேற்கொள்ளப்படும் தேசியமயமாக்கல்கள் மற்றும் அவற்றை தொழிலாளர் அமைப்புகளுக்கு மாற்றுவதன் வழியாகவே செல்கிறது என்று கூறுவது ஒரு பேரழிவு தரும் தவறாகவும், ஒரு முழுமையான ஏமாற்றாகவும் இருக்கும்.

எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்தப் பகுப்பாய்வு, காஸ்ட்ரோயிசத்தின் வரலாற்றுப் பாதை, அது இன்று வந்து சேர்ந்துள்ள முட்டுச்சந்து மற்றும் அதற்கான மாற்று வழி ஆகிய இரண்டையுமே வியத்தகு துல்லியத்துடன் விவரிக்கிறது.

முடிவுரை: முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே பாதை

கியூபாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு, நவகாலனித்துவ ஒடுக்குமுறையின் நீண்ட வரலாறு மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான போரின் தற்போதைய அச்சுறுத்தல் ஆகியவை, கியூபா மக்களை நிபந்தனையற்ற முறையில் பாதுகாப்பதற்காக அமெரிக்கா, கியூபா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதைக் கோருகின்றன. இந்த அணிதிரட்டலை காஸ்ட்ரோயிசம், ஸ்டாலினிசம் அல்லது குட்டி-முதலாளித்துவ தேசியவாதத்தின் எந்தவொரு வடிவத்தின் அரசியலின் மீதும் கட்டமைக்க முடியாது. இந்த அனைத்துப் போக்குகளும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்பிற்கு அரசியல் தடைகளாகவும், ஏகாதிபத்தியத்தின் கருவிகளாகவும் தங்களை நிரூபித்துள்ளன.

வாஷிங்டனின் கியூபா கொள்கைக்கு இலத்தீன் அமெரிக்காவின் “இடது” தேசியவாத அரசாங்கங்கள் சரணடைந்திருப்பது இந்தப் பாடத்தை கொடூரமான தெளிவுடன் உணர்த்துகிறது. ட்ரம்ப்புடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தான் கியூபாவைத் தாக்கத் திட்டமிடவில்லை என்ற ட்ரம்ப்பின் கூற்றுகளுக்கு நம்பகத்தன்மையை வழங்கியதோடு, கரீபியன் கடலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கிப் போர்க் கப்பலுடன் இணைந்து இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுமாறு பிரேசில் கடற்படைக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாஸ்கோ வெற்று வாக்குறுதிகளை அளித்துள்ளதுடன், அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்களை வேறு திசைக்கு திருப்பிவிட்டுள்ளது. சீனாவின் ஷி ஜின்பிங், ட்ரம்ப் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் கியூபாவை ஒரு பிரச்சினையாக மாற்ற மறுத்துவிட்டார். இந்த அரசாங்கங்கள் ஒன்றும் செயலற்ற பார்வையாளர்கள் அல்ல. கியூபாவை மூச்சுத்திணறடிப்பதற்கு அவர்கள் இணங்கிப்போவது, அவர்களின் வர்க்கத் தன்மையின் நேரடி வெளிப்பாடாகும்: அதாவது, ஒரு உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தேவைப்படும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலை, எல்லாவற்றிற்கும் மேலாக அஞ்சிநடுங்கும் முதலாளித்துவ அரசாங்கங்கள் இவையாகும்.

இதே வர்க்கத் தன்மைதான் அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் பலவீனமான எதிர்ப்பையும் வகைப்படுத்துகிறது. மக்கள் பிரதிநிதிகளான ஜொனாதன் ஜாக்சன் மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகியோர், ஏப்ரல் மாதம் ஹவானாவுக்குச் சென்று கியூபா ஜனாதிபதி டயஸ்-கனலைச் சந்தித்ததுடன், ட்ரம்ப்பின் கியூபாக் கொள்கை பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர்.

ஜாக்சன் USA Today இதழிடம் வெளிப்படையாகக் கூறினார்: “அமெரிக்கா கியூபாவில் இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்... அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறும்போது, அவர்கள் படையெடுப்பிற்குத் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.” ஆனால் இதை ஒப்புக்கொண்ட போதிலும், ஜாக்சன், ஜெயபால் மற்றும் அவர்களின் ஜனநாயகக் கட்சி சகாக்கள் தங்களின் “எதிர்ப்பை” அதிகாரப்பூர்வ கடிதங்கள் மற்றும் ட்ரம்பின் பாசிச குடியரசுக் கட்சியிடம் முறையிடுவதன் அடிப்படையிலான, தோல்வியடைந்த நாடாளுமன்றத் தீர்மானங்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக் கொண்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடக்கத்திலிருந்தே எதை நிலைநிறுத்தி வந்ததோ அதை அறுபத்தாறு ஆண்டுகால காஸ்ட்ரோயிசம் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, தேசியவாதத்தின் எந்தவொரு வடிவமும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஜனநாயகப் பணிகளைத் தீர்க்கவோ, ஏகாதிபத்தியத் தாக்குதல்களுக்கு எதிராக அவற்றின் சமூக ஆதாயங்களைப் பாதுகாக்கவோ, அல்லது தொழிலாள வர்க்கத்தைச் சோசலிசத்தை நோக்கி வழிநடத்தவோ முடியாது என்பதாகும். ஒரே பாதை அக்டோபர் புரட்சியால் திறக்கப்பட்டு, ஸ்டாலினிசம் மற்றும் பப்லோவாதம் ஆகிய இரண்டிற்கும் எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்ட பாதையாகும்: அதாவது, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட, ஒரு சர்வதேசவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் நனவான, சுயாதீனமான அரசியல் அமைப்பாகத் திரள்வது மட்டுமே அந்தப் பாதையாகும்.

Loading