மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐரோப்பிய நாடாளுமன்றமும், ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு நாடுகளும் ஒரு புதிய திருப்பி அனுப்பும் ஒழுங்குமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது, மே 2024 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடச் சீர்திருத்தத்துடன் இணைந்து, ஜூன் 12 அன்று நடைமுறைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஒழுங்குமுறை, இரண்டு அம்சங்களில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் பாரிய நாடுகடத்தல்களுக்கும் வழிவகை செய்கிறது.
முதலாவதாக: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத இனப் படுகொலை மற்றும் மில்லியன் கணக்கான அகதிகளின் வருகைக்குப் பதிலளிக்கும் விதமாக உருவான புகலிடம் கோரும் உரிமைக்கு இது மேலும் ஒரு அடியாகும். அடிப்படை ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் இப்போது ஒழிக்கப்படுகின்றன. தப்பியோடி வருபவர்கள் —அவர்களது குழந்தைகள் உட்பட— இனி மாற்ற முடியாத உரிமைகளைக் கொண்ட மனிதர்களாகக் கருதப்படப் போவதில்லை. மாறாக, இவர்கள் சிறையில் அடைக்கப்படவும், நாடு கடத்தப்படவும், மூன்றாம் நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவும் கூடிய சட்டவிரோதிகளாக கருதப்படுவர்.
இரண்டாவதாக: இந்தப் புதிய திருப்பி அனுப்பும் ஒழுங்குமுறை மூலம், பாசிஸ்டுகள் மற்றும் அதிதீவிர வலதுசாரி குழுக்களுடன் கூட்டு சேருவதற்கு எதிராக இருந்த “தடுப்புச்சுவர்” இறுதியாக தகர்க்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மையை வழங்குவதற்காக, பழமைவாத EPP குழுவும் மூன்று அதிதீவிர வலதுசாரி குழுக்களும் நெருக்கமாக ஒருங்கிணைந்து இந்த ஒழுங்குமுறையை வரைவு செய்துள்ளன.
பவேரியன் கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) கட்சியைச் சேர்ந்த EPP குழுத் தலைவர் மான்ஃப்ரெட் வெபர் மற்றும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் ஆகியோர் இதன் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளனர். Dpa செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த உடன்பாடுகள் இணையவழி அரட்டைக் குழுக்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட சந்திப்புகளிலும் உருவாக்கப்பட்டன. இதில் அதிதீவிர வலதுசாரியான ஜேர்மனிக்கான மாற்றுக் (AfD) கட்சியும் ஈடுபட்டிருந்தது.
இந்த புதிய ஒழுங்குமுறை, புகலிடம் கோருவோரை நாடு கடத்தும் செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புகலிட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முடிவுகள், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்டு, எந்தவொரு உறுப்பு நாட்டினாலும் செயல்படுத்தப்படலாம். உதாரணமாக, கடுமையான புகலிடக் கட்டுப்பாடுகளுக்கு இழிபுகழ் பெற்ற போலந்து அல்லது ஹங்கேரியின் அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்று புகலிடக் கோரிக்கையாளரை நிராகரிக்க முடிவு செய்தால், ஜேர்மனியின் பொலிஸ் அவர்களுக்கு முறையிடுவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ வழியும் விடாமல், அவர்களை ஜேர்மனியிலிருந்து நாடு கடத்த முடியும்.
நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் தங்களது நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஐரோப்பா முழுவதும் ஒரே சீராக வெட்டிக் குறைக்கப்படும். ஒரு அதிகாரி, புலம்பெயர்தோர் தப்பிச் செல்லக்கூடும் எனச் சந்தேகித்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் 24 மாதங்கள் வரையிலும், விதிவிலக்கான சூழ்நிலைகளில் 30 மாதங்கள் வரையிலும் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம்.
நாடு கடத்தப்படுபவர்களை மூன்றாம் நாடுகளில் தடுத்து வைக்கும் தடுப்பு மையங்களை உருவாக்குவதே, இந்த ஒழுங்குமுறையின் மையக் கருவாகும். நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள், தங்களின் சொந்த நாடு அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாலோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் தூதரக உறவுகளைப் பேணாததாலோ அங்கு திருப்பி அனுப்பப்பட முடியாத பட்சத்தில், அவர்கள் இந்த “திருப்பி அனுப்பும் மையங்களுக்கு” நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் நிரந்தரமாகவோ அல்லது தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பும் வரையோ இந்த தடுப்பு முகாம்களில் தங்கியிருக்க வேண்டும். இது குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கும் பொருந்தும்.
இதுவரை, இவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பும் மூன்றாம் நாடுகளுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் எதுவும் எட்டப்படவில்லை. ஆனால், ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் டோப்ரிண்ட், ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் கிரேக்கம் உள்ளிட்ட பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்தகைய ஒப்பந்தங்களை முடிக்க முயற்சிப்பதாக அறிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் நிலவும் அல்லது சர்வாதிகார ஆட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் ருவாண்டா, லிபியா, மௌரித்தேனியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகள் இதற்கான கலந்துரையாடலில் இருக்கின்றன.
புலம்பெயர்ந்தோர்களை திருப்பி அனுப்பும் புதிய ஒழுங்குமுறை மற்றும் அதை சட்டமாக்குவதில் பாசிஸ்டுகளின் பங்கு ஆகியவற்றின் முக்கியத்துவம், அகதிகளையும் தாண்டி இன்னும் வெகுதூரம் செல்கிறது. இவை அனைத்து ஜனநாயக உரிமைகள் மீதான பொதுவான தாக்குதலுக்கான வழிகளைத் திறந்து விடுகின்றன. இவ்வுரிமைகள் ஒரு சமூகக் குழுவிற்கு மட்டுமே இனி பொருந்தாது என்றால், அடுத்ததாக மற்றவர்கள் இலக்காகலாம்: கட்டாய இராணுவ சேவை மற்றும் இராணுவவாதத்தை நிராகரிக்கும் இளைஞர்கள்; பணிநீக்கம் மற்றும் ஊதியக் குறைப்புகளுக்கு எதிராக தங்களைப் பாதுகாக்கும் தொழிலாளர்கள்; கட்டுப்படியாகாத வீட்டு வாடகைக்கு எதிராகப் போராடும் குடியிருப்பாளர்கள் ஆகியோர் அடுத்த இலக்குகளாக இருப்பார்கள்
போர் மற்றும் மீள் ஆயுதமயமாக்கலுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் திருப்பி விடப்படுவது, கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம் மற்றும் சமூக நலன்கள் மீதான நேரடித் தாக்குதல், ஒவ்வொரு மாதமும் 10,000-க்கும் மேற்பட்ட வேலைகள் பறிபோகும் வாகன மற்றும் உலோகத் தொழில்துறைகளின் வீழ்ச்சி, அத்துடன் அதிகரித்து வரும் விலைகள் மற்றும் வாடகைகள் ஆகியவை கடுமையான வர்க்கப் போராட்டங்களை நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வருகின்றன. இதனால்தான் ஆளும் வர்க்கம் பாசிஸ்டுகளுடன் கைகோர்க்கிறது—வளர்ந்து வரும் எதிர்ப்பை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் அவர்களுக்கு பாசிஸ்டுகள் தேவைப்படுகிறார்கள்.
பல ஐரோப்பிய நாடுகளில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் முன்னேறி வருகின்றன: பிரான்சில் தேசிய முன்னணி (RN), பிரிட்டனில் சீர்திருத்த யூகே (Reform UK), ஜேர்மனியில் AfD. இத்தாலியில், பாசிச ஜியோர்ஜியா மெலோனி மூன்றரை ஆண்டுகளாக அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கி வருகிறார், இதற்கு அவரது தேர்தலை ஆதரித்த EPP தலைவர் மான்ஃப்ரெட் வெபரின் தீவிர உதவி முக்கியக் காரணமாக இருந்தது. மெலோனி, இத்தாலியின் மக்கள் தொகையில் முழுமையான வறுமையில் வாழ்பவர்களின் சதவீதத்தை 9.8 சதவீதம் என்ற சாதனை அளவுக்கு உயர்த்தியுள்ளார் மற்றும் நாட்டை பெரும் பணக்காரர்களுக்கான வரி சொர்க்கமாகவும் மாற்றியுள்ளார். அவர், அரசின் அடக்குமுறை எந்திரங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களில் பாசிச ஆதரவாளர்களைத் திட்டமிட்டு நியமித்து வருகிறார்.
ஜேர்மனியில் AfD கட்சி அதே இலக்கைத் தான் பின்பற்றுகிறது. அது, டொனால்ட் ட்ரம்பை வியந்து நோக்குகிறது. அந்த பாசிச ரியல் எஸ்டேட் மோசடி மன்னர், தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் பணக்காரர்களுக்குச் சேவை செய்வதற்காகவும், ஜனாதிபதியாக ஒரு சர்வாதிகார போலீஸ் அரசை உருவாக்குவதற்காகவும் தன்னை இந்த அமைப்பின் எதிர்ப்பாளராகக் காட்டிக் கொண்டார். புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ட்ரம்பின் பயங்கரவாதம், புதிய ஐரோப்பிய விதிமுறைகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
“தடுப்புச்சுவரை“ முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழைப்பு
ஜேர்மனியில் நிலவும் நெருக்கடியுடன் சேர்ந்து, AfD கட்சியுடனான அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்கு எதிரான “தடுப்புச் சுவரை” முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஹிட்லரின் வீழ்ச்சிக்கு எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பாசிசம் மீண்டும் இயல்பாக்கப்பட்டு வருகிறது.
முன்னணி அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் இந்தக் கோரிக்கைகளை ஆதரித்து வருகின்றனர். தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) புதிய தலைவரான வொல்ப்காங் குபிக்கி, தனது தேர்தலுக்கு முன்பு, “எனக்கு அப்படி ஒரு தடுப்புச்சுவர் இருப்பதாகத் தெரியவில்லை” என்று அறிவித்தார். அவரது பொதுச் செயலாளர் மார்ட்டின் ஹேகன் “AfD-யின் நாடாளுமன்றப் புறக்கணிப்புக்கு” ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று கோரினார்.
கடந்த மே மாதத்தில், ஷ்லெஸ்விக்-ஹோல்ஸ்டைன் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தோர்ஸ்டன் ஆல்பிக், தனது கட்சிக்கும் AfD-க்கும் இடையிலான தடுப்புச்சுவரைத் தகர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்த முதல் முக்கிய சமூக ஜனநாயகவாதி ஆனார். AfD ஒன்றும் “நரகத்தின் பிறவி” என்பது போல நாம் நடிக்க முடியாது என்று கூறிய அவர், AfD-யின் ஆதரவுடன் இயங்கும் சிறுபான்மை அரசாங்கங்களை ஏற்குமாறு SPD கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
சமூக ஜனநாயகவாதிகள், வலதுசாரி தீவிரவாதிகளுடன் இணைந்து அகதிகள் எதிர்ப்பு வலதுசாரி வேலைத்திட்டத்தை செயல்படுத்திய டென்மார்க்கை ஒரு முன்மாதிரியாகக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆல்பிக் குறிப்பிட்டார். ஒரு வணிக நாளிதழான Handelsblatt, ஆல்விக்கின் கருத்துக்களைக் கேட்டு ஆத்திரமடைவதற்குப் பதிலாக, “AfD-க்கு எதிரான தடுப்புச்சுவர் அரசியல் ரீதியாகத் தோற்றுவிட்டது” என்பதை ஜேர்மனியர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று வாதிட்டது.
மிகவும் பிரபலமான ஜேர்மன் வணிகத் தலைவர்களில் ஒருவரான, சீமென்ஸின் முன்னாள் தலைவர் ஜோ கேசர், தடுப்பு அரண் என்ற சொல்லு “சொல்லியல் ரீதியாகத் தவறானது”, “மிகவும் கேள்விக்குரியது” மற்றும் “ஒரு ஆபத்தான தவறு” என்று விவரித்தார்.
புரோக்ஹாஸ் குழுமத்தின் தலைவரான காஸ்பர் புரோக்ஹாஸ், பில்ட் அம் சோன்டாக் இதழுக்கு அளித்த பேட்டியில் “இந்தத் தடுப்புச் சுவர் அரசியலையும், பொருளாதாரத்தையும், அதன் மூலம் நமது நாட்டையும் முடக்குகிறது” என்று கூறினார். AfD கட்சியுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறு மட்டுமே “சீர்திருத்தத்திற்கான அழுத்தத்தை கணிசமாக அதிகரிக்கும்” என்று அவர் கூறினார். இதன் மூலம் அவர் சிக்கன நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதைக் குறிப்பிட்டார்.
பல்வேறு தொழில்துறைகளில் உள்ள சுமார் 6,500 குடும்பங்களுக்குச் சொந்தமான வணிகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜேர்மனியின் முக்கிய வணிக சங்கமும், பரப்புரை அமைப்புமான குடும்ப தொழில்முனைவோர் சங்கம், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்திலுள்ள AfD உறுப்பினர்களுடனான தனது முந்தைய “தொடர்புத் தடையை” ஏற்கனவே நீக்கியிருந்தது. AfD-யைப் பற்றி “நல்லது அல்லது கெட்டது” என்ற பிரிவுகளில் மட்டுமே பேசுவதை அது எதிர்த்தது.
வலதுசாரி நோக்கிய மாற்றத்தில் எப்போதும் முன்னணியில் இருக்கும் பழமைவாத ஸ்பிரிங்கர் பத்திரிகை குழுமம் (இது முர்டோக்கின் ஊடகத்திற்கு இணையான ஜேர்மனியின் ஊடகமாகும், இதன் வெளியீடுகளில் பில்ட் மற்றும் டை வெல்ட் போன்ற தேசிய செய்தித்தாள்கள் அடங்கும்) AfD-யுடனான அரசியல் ஒத்துழைப்பை இயல்பானதாக்குவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS) பல ஆண்டுகளாக நிரூபித்து வருவதைப் போல, இந்த “தடுப்புச்சுவர்” AfD-யின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்தால் இந்த அதிதீவிர வலதுசாரிக் கட்சி திட்டமிட்டு கட்டமைக்கப்படுவதை மட்டுமே அது மறைத்துள்ளது. உதாரணமாக, “AfD-க்கான ஆதரவும் அதன் ஒருங்கிணைப்பும் மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் இணங்கவே உள்ளது. ஆளும் வர்க்கம், அகதிகளையும் புலம்பெயர்ந்தோரையும் பலியாடுகளாக்குகிறது, மக்களை பெருமளவில் நாடு கடத்துகிறது, மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி மட்டங்களில் சமூகச் செலவினங்களைக் வெட்டிக் குறைக்கிறது மற்றும் ஹிட்லருக்குப் பிறகு காணப்படாத அளவிற்கு மீண்டும் ஆயுதங்களை குவித்து வருகிறது” என்று நாங்கள் கடந்த ஆண்டு எழுதியிருந்தோம்.
AfD-யின் கொள்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதால், இந்தக் கட்சி ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. மக்களிடமிருந்து வளர்ந்து வரும் எதிர்ப்புகளுக்கு எதிராக இந்தக் கொள்கைகளை அமல்படுத்த, இப்போது அது ஒரு ஆளும் கட்சியாகத் தேவைப்படுகிறது. பாதுகாப்பு அரணைத் தகர்க்க வேண்டும் என்ற அழைப்புக்கு இதுவே காரணமாகும்.
அரசாங்கம் இன்னும் தயங்குகிறது என்றால், அதற்கு ஒரே காரணம் வெடிக்கக்கூடிய மக்கள் எதிர்ப்பிற்கு அஞ்சி நடுங்குவதால்தான் ஆகும். 2025 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் AfD-யின் ஆதரவுடன் சான்சிலர் மெர்ஸ் குடியேற்றக் கொள்கை மீதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியபோது, அதற்கு எதிராக இலட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர்.
இந்த எதிர்ப்பு வளர்க்கப்பட வேண்டும். AfD க்கு எதிரான போராட்டம் என்பது நாடாளுமன்றக் கணக்கீடு சார்ந்த விஷயம் அல்ல, அது தொழிலாள வர்க்கம் தனது சமூக, ஜனநாயக மற்றும் பௌதீகத் தேவைகளுக்காக நடத்தும் போராட்டமாகும். முதலாளித்துவ ஸ்தாபகத்தின் எந்தவொரு கட்சியும் இந்தப் போராட்டத்தை வழிநடத்துவதுக்கு இலாயக்கற்று உள்ளன. ஆகவே, இந்தப் போராட்டத்துக்கு, போர் மற்றும் பாசிசத்திற்கு காரணங்களாக இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை இலக்கு வைக்கக்கூடிய ஒரு சுயாதீனமான, சோசலிச இயக்கம் தேவைப்படுகிறது.
