முன்னோக்கு

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ராஜினாமா

மூழ்கிக்கொண்டிருக்கும் தொழிற் கட்சி கப்பலில் உள்ள நாற்காலிகளை மாற்றிப்போடுதல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், லண்டனில் உள்ள 10 டவுனிங் தெருவுக்கு வெளியே தனது ராஜினாமாவை அறிவிப்பதற்காக ஊடகங்களிடம் பேசுகிறார். திங்கட்கிழமை, ஜூன் 22, 2026 [AP Photo/Kin Cheung]

கடந்த திங்களன்று, பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் தனது ராஜினாமாவை அறிவித்தார். இது கிரேட்டர் மான்செஸ்டரின் மேயரான ஆண்டி பேர்ன்ஹாம் அவருக்குப் பின் அந்தப் பதவிக்கு வருவதற்கு வழிவகுத்துள்ளது.

ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைவதிலிருந்து காப்பாற்றப்படவும், அதன் வலதுசாரி சிக்கன நடவடிக்கை மற்றும் போர் திட்டங்களைத் தொடரவும், அதைத் தீவிரப்படுத்தவும் பிரிட்டனின் ஆளும் வர்க்கத்தால் ஸ்டார்மரின் ராஜினாமா கோரப்பட்டது.

தோல்வியடைந்த ஸ்டார்மரின் பிரதமர் பதவி, ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள அரசாங்கங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். பிரான்சின் இம்மானுவேல் மக்ரோனோ அல்லது ஜேர்மனியின் பிரடெரிக் மெர்ஸோ பெரிய அளவிலான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கவில்லை, இருப்பினும் அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் இதேபோன்ற நிகழ்ச்சி நிரலைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இருப்பினும், ஸ்டார்மரின் விதியைத் தீர்மானித்தது அவரது மக்கள் செல்வாக்கின்மை அல்ல, மாறாக அவரது அரசாங்கத்தால் தங்களின் மூலோபாய இலக்குகளை இனி நிறைவேற்ற முடியாது என்ற ஆளும் வர்க்கத்தின் கணக்கீடே ஆகும்.

கடந்த பத்தாண்டுகளில் ஸ்டார்மர் பிரிட்டனின் ஆறாவது பிரதமர் ஆவார். 2016-ல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதிலிருந்து அதன் முதலாளித்துவத்தை உலுக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்ற நோக்கத்தில், 2024 தேர்தலில் ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மையினர் ஸ்டார்மருக்கும் தொழிற் கட்சிக்கும் ஆதரவளித்தனர்.

“பிரெக்ஸிட்” பொதுவாக்கெடுப்பைத் தொடர்ந்து டேவிட் கேமரூன் ராஜினாமா செய்த பிறகு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி (Tory) மோசமான சரிவைச் சந்தித்தது. முதலில் தெரசா மே, பின்னர் போரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸ் (பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலம் பிரதமராக இருந்தவர்) மற்றும் இறுதியாக ரிஷி சுனக் எனப் பல பிரதமர்களை அது மாற்றியது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரச் சூழல், மோசமடைந்து வரும் வர்த்தக மற்றும் இராஜதந்திர உறவுகள் ஆகியவற்றுடன் இணைந்து, பெருநிறுவனங்கள் தங்களின் பாரம்பரியப் பிரதிநிதிகள் மீது கொண்டிருந்த அணுகுமுறையை கசப்படையச் செய்தன.

வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு ஸ்திரத்தன்மையை வழங்க முடியாத கன்சர்வேடிவ் கட்சியினர், மக்களின் எதிர்ப்பையும் தூண்டினர் — இது 2022-23 இல் ஒரு பெரிய வேலைநிறுத்த அலையாக வெடித்தது. மக்களின் வாழ்க்கைத்தர சீரழிவு, கோவிட் பெருந்தொற்றின் போது அதன் உச்சகட்டத்தை எட்டிய அப்பட்டமான ஊழல், அந்தப் பெருந்தொற்றின் போது அவர்கள் கடைப்பிடித்த சமூகப் படுகொலைக்கு நிகரான நோய் எதிர்ப்புச் சக்தி கொள்கை மற்றும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அவர்கள் அளித்த ஆதரவு ஆகியவற்றின் காரணமாக இந்த அரசாங்கம் மக்களால் வெறுக்கப்பட்டது.

ஆனால், சாத்தியமான ஒரே மாற்றாக இருந்த தொழிற்கட்சியானது 2015 முதல் 2020 வரை ஜெரமி கோர்பினின் கைகளில் இருந்தது. அவர் ஏகாதிபத்தியம் மற்றும் சமூக சமத்துவமின்மை குறித்து வெளியிட்ட மென்மையான எதிர்ப்புகள், தொழிலாள வர்க்கத்தினரிடையே அவரால் கட்டுப்படுத்த முடியாத அளவிலான மக்கள் எதிர்பார்ப்புகளைத் தூண்டிவிடக்கூடும் என்ற ஆபத்து இருந்ததால், ஆளும் வர்க்கத்திற்கு அவர் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பிரதமராக இருந்தார்.

கோர்பின் மற்றும் அவரது கூட்டாளிகளின் முழுமையான சரணடைதலுக்குப் பின், “இடதுசாரிகளின்” முழுமையான வீழ்ச்சியை ஸ்டார்மர் வெற்றிகரமாக முடித்து வைத்தார். அதன் பின்னர், தான் எந்த நெருக்கடி நிறைந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு மாற்றாகக் கொண்டுவரப்படவிருந்தாரோ, அந்தத் தொழிற் கட்சியின் கொள்கைத் திட்டங்களை அதே கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு மாற்றியமைப்பதுக்கு, ஸ்டார்மர் ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டார்.

மிக முக்கியமாக, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரில் பிரிட்டனின் பங்கை முன்னோக்கி தள்ளுவதும், டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சீர்குலைந்த அமெரிக்க-பிரிட்டன் உறவுகளை மீட்டெடுப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பணிகளாக இருந்தன. அவர் 2024 தேர்தலில் தொழிற் கட்சியை “நேட்டோவின் கட்சி” என்றும் சியோனிசத்தின் கட்சி என்றும் அறிவித்து, ரஷ்ய எதிர்ப்பு உணர்வைத் தூண்டி, ட்ரம்ப்புடனான உறவைச் சரி செய்வதாக உறுதியளித்து, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரித்து, தனது “இரும்பு அதிபர்” ரேச்சல் ரீவ்ஸால் பாதுகாக்கப்பட்ட நிதிப் பொறுப்புணர்வை உறுதியளித்துத் தேர்தலுக்குச் சென்றார்.

ஸ்டார்மர் தனது ராஜினாமா உரையில் இந்த வரலாற்றுப் பதிவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார், “அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலாகியிருந்த ஒரு தொழிற்கட்சியை, தான் மரபுரிமையாகப் பெற்றேன்” என்றும், அதன் பின்னர் “யூத-எதிர்ப்பு என்ற நஞ்சை வேரோடு பிடுங்கி எறிந்து, பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தேன் என்றும், மேலும், மீண்டும் ஒருமுறை எமது தேசியக் கொடிக்கு எதிராக நிற்காமல், பெருமையுடன் அதனுடன் நிற்கும் ஒரு கட்சியாக இதை மாற்றினேன்” என்றும் பெருமையடித்துக் கொண்டார்.

ஆனால், தொழிற் கட்சியின் ஆட்சித் திறனைத் தக்கவைத்துக் கொள்ளும் அதே வேளையில், முதலாளித்துவ வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்டார்மரால் முடியாது என்பது நிரூபணமானது. கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு முற்றிலும் சரிந்ததன் காரணமாகவே, தொழிற் கட்சி ஒரு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், உண்மையில் பிரிட்டிஷ் வரலாற்றிலேயே எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் பெற்றிராத மிகக் குறைந்த வாக்குச் சதவீதத்தையே தொழிற் கட்சி பெற்றது. ஸ்டார்மர் எவ்வளவு கடுமையாக முயன்றபோதிலும், அவர் தனது முதலாளித்துவ எஜமானர்களைத் தொடர்ந்து ஏமாற்றமடையச் செய்தார். அதே நேரத்தில், வரலாற்றில் இல்லாத அளவிற்கான மக்கள் செல்வாக்குச் சரிவையும் அவர் எதிர்கொண்டார். இது நீண்ட கால நோக்கில் அவரது அரசாங்கத்தின் உயிர் வாழ்விற்கே அச்சுறுத்தலாக மாறியிருக்கும்.

ட்ரம்பைத் திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அரசியல் பேரழிவிற்கு வழிவகுத்தன. குறிப்பாக, பீட்டர் மேண்டல்சனை அமெரிக்க தூதராக அவர் நியமித்ததானது, எப்ஸ்டீன் ஊழலில் அவரது அரசாங்கத்தை நேரடியாக ஈடுபடுத்தியது. மேலும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பதட்டம் அதிகரித்தபோது, ​​ஸ்டார்மர் அமெரிக்காவுடன் ஒரு குறிப்பிடத்தக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறத் தவறியதோடு, கண்டத்தில் உள்ள சாத்தியமான கூட்டாளிகளையும் அந்நியப்படுத்தினார். பிரிட்டனின் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்தபோது, ​​அவர் சமூக நலத்திட்டக் குறைப்புகளுக்கும், 2035-ஆம் ஆண்டுக்கு முன்னர் இராணுவச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக உயர்த்துவதற்கான கோரிக்கைகளுக்கும் மீண்டும் மீண்டும் தயக்கம் காட்டினார்.

ஸ்டார்மரின் வீழ்ச்சியானது இடதுசாரிகளின் எதிர்ப்பை விட, வலதுசாரிகளின் எதிர்ப்பினாலேயே கொண்டுவரப்பட்டது.

எலோன் மஸ்க் போன்ற தன்னலக்குழுக்களால் பெருமளவில் நிதியளிக்கப்பட்டு, ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவைப் பெற்ற ஒரு மிகப்பெரிய பிரச்சாரம், நைஜல் பரேஜின் சீர்தருத்த UK கட்சியை, தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு முக்கிய சவாலாகவும், பரந்த தீவிர வலதுசாரி இயக்கத்தின் மையப் புள்ளியாகவும் உருவெடுப்பதைக் குறித்தது—இவை அனைத்தும் தொழிற் கட்சியின் சொந்த தேசியவாத, குடியேற்ற எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலால் தூண்டப்பட்டவையாகும். இதன் விளைவாக, இந்த மே மாதத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தொழிற் கட்சி பெரும் தோல்விகளைச் சந்தித்தது, முதன்மையாக சீர்தருத்த UK கட்சியிடமே அது தோற்றது.

இதேவேளையில், இராணுவச் செலவினங்களை போதுமான அளவு வேகமாக உயர்த்தத் தவறியதற்காக, ஊடகங்களின் பெரும் பகுதியினரின் ஆதரவுடன் ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரிகள் ஸ்டார்மருக்கு எதிராகத் தொடர்ச்சியான கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் மற்றும் பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜோன் ஹீலி ஆகியோரிடமிருந்து தொடங்கிய உயர்மட்ட அமைச்சரவை இராஜினாமாக்கள், தலைமைத்துவப் போட்டிக்கான களத்தை அமைத்தன. ஆனால் ஆளும் வட்டாரங்களுக்குள் சிலரே ஒட்டுமொத்த தொழிற் கட்சி அரசாங்கமும் வீழ வேண்டும் என்று விரும்பினர்.

சீர்தருத்த UK கட்சி அரசியல் ரீதியாக நம்பப்படுவதில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் தீவிரமான பிரெக்ஸிட் ஆதரவு நிகழ்ச்சி நிரலை அது கன்சர்வேடிவ் கட்சியுடன் பகிர்ந்து கொள்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு, பிரிட்டனின் பொருளாதாரம் அவ்வாறு வெளியேறாமல் இருந்ததை விட 6-8 சதவீதம் சிறியதாக மாறியுள்ளது என்று தெரிய வந்துள்ளது; மேலும், அமெரிக்காவுடனான அதன் முக்கிய உறவைச் சீர்குலைத்து, ஐரோப்பிய சந்தைகள் மற்றும் இராணுவக் கூட்டணிகளை பிரிட்டன் அதிகம் சார்ந்திருக்கும்படி செய்த வர்த்தக மற்றும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில்தான் இது நடந்துள்ளது.

ஸ்டார்மரை அவமதிப்பதற்கான இறுதி முயற்சியாக, ட்ரம்ப் ஜூன் 21 அன்று இவ்வாறு பதிவிட்டார்: “கீர் ஸ்டார்மர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார். குடியேற்றம் மற்றும் எரிசக்தி (வட கடல் எண்ணெயைத் திறங்கள்!) ஆகிய இரண்டு மிக முக்கியமான விஷயங்களில் அவர் மோசமாகத் தோல்வியடைந்தார். அவர் நலம் பெற வாழ்த்துகிறேன்!”

இந்தத் தருணத்தில் ஆளும் வர்க்கம் அவசியமாகக் கருதுவது ஒரு புதிய அரசாங்கத்தை அல்ல, மாறாக ஒரு புதிய பிரதமரையே ஆகும். தேசிய சுகாதார சேவை (NHS) மீதான அவரது தாக்குதல்கள் மற்றும் மேண்டல்சனுடனான நெருங்கிய தொடர்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்ட்ரீட்டிங் என்பவரால் ஸ்டார்மருக்கு மாற்றாக வர முடியும் என்று கட்சியின் மிகவும் வெட்கமற்ற பிளேயரிச வலதுசாரிகளைத் தவிர வேறு யாரும் நம்பவில்லை. எனவே, கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பேர்ன்ஹாமை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு பிரச்சாரம் தொடங்கியது: அவர் ஒரு குறைபாடற்ற பிளேயரிச வரலாற்றைக் கொண்டவர்—2015 தொழிற்கட்சித் தலைமைப் போட்டியில் கோர்பினுக்கு அடுத்தபடியாக தூரத்திலிருந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தவர்—ஆனால் 2017 முதல் வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்து விலகி இருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மேக்கர்ஃபீல்ட் (Makerfield) இடைத்தேர்தலில் பேர்ன்ஹாம் அமோக வெற்றியைப் பெற்றபோது, ஸ்டார்மரின் காலம் முடிவுக்கு வந்தது. சூழ்நிலையைப் புரிந்துகொண்ட ஸ்ட்ரீட்டிங், தான் பேர்ன்ஹாமுக்கு சவால் விடுக்கப் போவதில்லை என்றும், அவரது தலைமையின் கீழ் தனது கருத்துகளுக்கு “இடம் இருக்கிறது என்பதில் உறுதியாக உள்ளேன்” என்றும் அறிவித்தார். இது ஒரு தலைமைத்துவப் போட்டியைத் தவிர்த்து, ஜூலை மாத தொடக்கத்திலேயே பேர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்பதற்கான வழியை வகுக்கிறது. தொழிற் கட்சியின் இடதுசாரிகளாகக் கருதப்படுபவர்கள், தாங்கள் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தப் போவதில்லை என்பதை முன்னரே தெளிவுபடுத்தி, இந்த மகுடாபிஷேகத்திற்குத் தங்களின் ஒப்புதலை அளித்துள்ளனர்.

ஒவ்வொரு நாட்டிலும் நடப்பது போலவே, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் உத்தியோகபூர்வ “இடதுசாரிகளால்” ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகளை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கப்படுகிறது. இங்கிலாந்தில், டோரி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த மாபெரும் வேலைநிறுத்தங்களை ஒடுக்கி, காட்டிக்கொடுத்த கோர்பின் ஆதரவாளர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவமும், ஸ்டார்மரின் தொழிற் கட்சிக்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்க, சோசலிச எதிர்ப்பு உருவாகுவதைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

பெரும்பாலான கோர்பினைட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிற் கட்சிக்கு விசுவாசமாக இருந்தனர். அதே நேரத்தில் கோர்பின், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு புதிய இடதுசாரி கட்சியை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் நிராகரித்தார். ஒரு மாற்றுக்கான கோரிக்கைகளை இனிமேலும் புறக்கணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன், கோர்பின் உங்களது கட்சியை (Your Party) வழிநடத்த ஒப்புக்கொண்டார் மற்றும் போலி இடதுகளின் ஆதரவைப் பெற்றார். ஆனால், அவர் அந்த அமைப்பின் தொடக்க கால 800,000 ஆதரவாளர்களை முறையாகச் செயலிழக்கச் செய்து, அமைப்பு இப்போது பெயரளவிற்கு மட்டுமே இருக்கும் ஒரு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்.

மேக்கர்ஃபீல்ட் தொகுதிக்கான பேர்ன்ஹாமின் பிரச்சாரத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்தனர். இது சீர்திருத்தக் கட்சிக்கு வாக்களிப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்த போலி-இடதுகளின் நடைமுறை ஆதரவையும், உண்மையான பிரச்சாரம் எதையும் மேற்கொள்ளாமல் தங்களது வாக்காளர்களை தொழிற் கட்சிக்கு வழங்கிய சாக் போலன்ஸ்கியின் பசுமைக் கட்சியின் உதவியையும் அது பெற்றிருந்தது.

இந்த சக்திகள் பேர்ன்ஹாம் மீது என்னென்ன விமர்சனங்களை முன்வைத்தாலும், மக்கள் அழுத்தத்தின் கீழ் தொழிற் கட்சி இடது நோக்கிய பாதையில் எடுத்து வைத்த ஒரு நடவடிக்கையாக அவரைச் சித்தரிக்கும் விலைமதிப்பற்ற சேவையை அவை செய்தன. கோர்பினின் முக்கிய கூட்டாளியான ஜோன் மெக்டோனல், கோர்பினை மீண்டும் தொழிற் கட்சிக்குள் அனுமதிக்க பேர்ன்ஹாமை உடனடியாக வலியுறுத்தியதன் மூலம் இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

பேர்ன்ஹாம் மீதான எந்தவொரு மாயையும் விரைவாக அம்பலப்படுத்தப்படும். பதவியேற்பதற்கு முன்பே, தான் ஸ்டார்மரின் தொடர்ச்சியான வேட்பாளர் மட்டுமல்ல, வலதுசாரிகளிடமிருந்து ஸ்டார்மர் மீது வைக்கப்படும் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பவர் என்பதையும் பேர்ன்ஹாம் தெளிவுபடுத்தினார்.

40 ஆண்டுகால நவ தாராளவாதக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதான அவரது பிரச்சார வாக்குறுதிகள் குப்பையில் வீசப்பட்டன. ஏனெனில், நலன்புரி உதவிகளை வெட்டுவது குறித்து தனக்கு “எந்தக் கூச்சமும் இல்லை” என்று அறிவித்த அவர், பாதுகாப்பிற்காக அதிகமாகச் செலவிடத் தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். மேலும் பிபிசி-யிடம் குடியேற்றம் குறித்து கூறுகையில், “பராட்ஜ் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன், நாம் செய்ய வேண்டியதெல்லாம் மீண்டும் ஒரு முறையான ஒழுங்குக்குத் திரும்புவதுதான்” என்று கூறினார்.

மே 14-ஆம் தேதியிட்ட, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த ஒரு முன்னோக்குக் கட்டுரையில், சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பின்வருமாறு விளக்கியது: ஸ்டார்மர் அரசாங்கம் “ஈரானில் நடக்கும் போரின் அதிர்வலைகளாலும், அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான சிறப்பு உறவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிதைத்ததாலும் கவிழ்ந்துள்ளது” எனவும், இது ஒரு மாபெரும் மீள் ஆயுதமயமாக்கலுக்கான கோரிக்கைகளுக்கும், “தொழிலாள வர்க்கக் குடும்பங்களை நசுக்கித் தொழில்துறையைத் தாக்கும்... ஒரு கொடூரமான விலைவாசி அதிர்ச்சிக்கும்” இடையே “இறுக்கப்படும் ஒரு பிடியில் சிக்கியுள்ளது” என்றும் சுட்டிக்காட்டியது.

“மீண்டும் ஒருமுறை, ஸ்டார்மர் அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு ஆழமடைந்து வருவதற்கும் அதன் விரைவான தேர்தல் வீழ்ச்சிக்கும் மத்தியில், தொழிற்கட்சி ‘இடதுசாரிகள்’ இந்த நெருக்கடியை குழப்பமடைந்துள்ள வலதுசாரி பிளேயரிஸ்டுகளின் கும்பலுக்குள்ளேயே முழுமையாகத் தீர்த்துக் கொள்வதற்கான களத்தை ஏற்படுத்துவதில் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கின்றனர்” என்று நாம் எச்சரித்தோம்.

அவர்களுக்கும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்: “பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் சந்திக்கும் ஒவ்வொரு ஆட்சி நெருக்கடியிலும், அதன் உலகளாவிய நிலை பலவீனமடைந்து வருவதால், சர்வதேச நிதியத்தின் கட்டளைகளும், இராணுவவாதத்தின் தேவைகளும் முன்னெப்போதையும் விட மிகவும் நேரடியாகவும் அப்பட்டமாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.”

நாங்கள் வலியுறுத்தினோம்:

தொழிற் கட்சி இந்த சக்திகளால் வெறுமனே அழுத்தத்திற்கு மட்டும் உள்ளாகவில்லை. தனது முன்னாள் தொழிலாள வர்க்க ஆதரவுத் தளத்துடனான எஞ்சியிருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்ட பின்னர், அது பெருநிறுவன மற்றும் நிதித்துறை தன்னலக்குழுவின் ஒரு அரசியல் கருவியாக — உடலும் உயிருமாக மாறிவிட்டது…

இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஸ்டார்மர் தலைமையிலான தொழிற் கட்சி அரசாங்கம், அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் சோசலிச சமத்துவக் கட்சி வழங்கிய மதிப்பீட்டை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளது: அதாவது, “பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்துடன் மோதல் போக்கில் இருக்கும் ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தின் தலைவராக ஒரு புதிய பிற்போக்குத்தனமான அரக்கன் நிறுவப்பட்டுள்ளார்” என்ற மதிப்பீட்டை அது உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்டார்மருக்குப் பதிலாக பேர்ன்ஹாம் பதவியேற்கின்ற போதிலும், இந்த மோதல் வரவிருக்கிறது. தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், ஒட்டுமொத்த தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் “இடது” மற்றும் வலது ஆகிய இரு பிரிவினருக்கும் எதிரான ஒரு புதிய, சோசலிச அரசியல் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டமாகும். இதனால் மட்டுமே போரை நோக்கிய வீழ்ச்சிக்கும், வாழ்வாதாரங்களின் அழிவுக்கும் மற்றும் தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சி ஆகியவற்றிற்கும் பதிலளிக்க முடியும்.

Loading