முன்னோக்கு

அமெரிக்கப் புரட்சியும் வரலாற்றில் அதன் இடமும்: முடியாட்சிக்கு எதிரான போரிலிருந்து “மன்னர்கள் வேண்டாம்” போராட்டம் வரை

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்கப் புரட்சி மற்றும் சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட, “அமெரிக்கப் புரட்சியும் வரலாற்றில் அதன் இடமும்: முடியாட்சிக்கு எதிரான போரிலிருந்து ‘மன்னர்கள் இல்லை’ என்பது வரை” என்ற இணையவழி கருத்தரங்கில் WSWS ன் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக உரை இதுவாகும்.

அமெரிக்கப் புரட்சியும் வரலாற்றில் அதன் இடமும்

அமெரிக்கப் புரட்சி மற்றும் சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு நிறைவு விழா, ஜனநாக உரிமைகள் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் அடித்தளங்கள் மீதான தீவிரமடைந்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது. ஜனாதிபதி சர்வாதிகார ஆட்சியைப் பற்றி பகிரங்கமாகப் பேசியுள்ளார். 2020 தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அவர் அதன் முடிவை மாற்றி அமைக்கவும், அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்படுவதைத் தடுக்கவும் முயன்றார். இந்தக் குற்றச் செயலுக்குப் பிறகும், 2024-ல் அவர் மீண்டும் பதவிக்குத் திரும்பியதானது, ஜனநாயக நிறுவனங்களின் முறிவுக்கான அறிகுறி மட்டுமல்ல, ஜனநாயக நனவில் ஏற்பட்டுள்ள ஆழமான அரிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கப் புரட்சி மகத்தான சமகால முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ரொம் பெயின் கூறியது போல், இவை மனிதர்களின் ஆன்மாக்களை சோதிக்கும் காலங்களாகும்.

நாம் ஒரு தேசிய ஆண்டு நிறைவை மட்டும் நினைவு கூரவில்லை. அமெரிக்கப் புரட்சி என்பது, ஒருபோதும் வெறும் அமெரிக்க நிகழ்வாக மட்டும் இருந்ததில்லை. அதன் ஆரம்ப நாட்களிலிருந்தே, அது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் புரிந்துகொள்ளப்பட்டது. “அமெரிக்காவின் இலட்சியம்” என்பது “மனிதகுலம் முழுவதின் இலட்சியம்” என்று பெயின் எழுதியபோது, ​​காலனிகளில் நடந்த போராட்டமானது முடியாட்சியா அல்லது குடியரசுவாதமா, பரம்பரைச் சிறப்புரிமையா அல்லது மக்கள் இறையாண்மையா, காலனித்துவ அடிமைத்தனமா அல்லது தன்னாட்சியா போன்ற உலகளாவிய கேள்விகளை எழுப்பியது என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

முதலாவது புரட்சியின் விளைவாக வெடித்த உள்நாட்டுப் போர், அதேபோல் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது: அது அடிமைமுறையை ஒழித்துக் கட்டியதுடன், 1776-இல் பிரகடனப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளை நிஜமாக்க முடியுமா என்ற கேள்வியையும் மீண்டும் ஒருமுறை எழுப்பியது. வரலாற்றிலேயே மிகவும் முழுமையான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக இது விளங்கியதால், அது முதலாளித்துவத்தின் அதிவேக வளர்ச்சிக்கும், அமெரிக்கா உலகின் மேலாதிக்க சக்தியாக உருவெடுப்பதற்கும் ஆன சூழல்களை உருவாக்கியது. அது ஒரு மாபெரும் தொழிலாளர் வர்க்கம் உருவாவதற்கும், வன்முறை நிறைந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றுக்கும் வழிவகுத்தது; கடந்த நூற்றாண்டின் மாபெரும் சிவில் உரிமைகள் இயக்கத்தின் வளர்ச்சி இவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இன்று ஜனநாயகத்தின் மீதான அரசியல் தாக்குதலானது, புரட்சிகர மற்றும் ஜனநாயகப் பாரம்பரியத்தையே நிராகரிப்பதோடு சேர்ந்தே நிகழ்கிறது. கல்வித்துறையினுள்ளும், தங்களை இடதுகள் என்று கூறிக்கொள்ளும் பெரும்பான்மையினரிடையேயும், அமெரிக்கப் புரட்சியானது ஒரு உலக வரலாற்று முன்னேற்றமாகப் பார்க்கப்படாமல், ஒரு பிற்போக்குத்தனமான நிகழ்வாகவே சித்தரிக்கப்படுகிறது. அந்தப் புரட்சிக்காகத் தயார் செய்யப்பட்ட மற்றும் அதன் விளைவாக உருவான அனைத்து ஆவணங்களும் அரசியல் கட்டமைப்புகளும் நிராகரிக்கப்படுகின்றன.

இந்த சுதந்திரப் பிரகடனமானது, அதை எழுதியவர்களின் நோக்கங்களையும் தாண்டிய தாக்கங்களைக் கொண்ட உலகளாவிய கொள்கைகளின் அறிக்கையாகக் கருதப்படாமல், பாசாங்கு மற்றும் வஞ்சகமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், புரட்சிக்கு அறிவுசார்-தத்துவார்த்த உத்வேகத்தை வழங்கிய ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் மாபெரும் படைப்பு மற்றும் சுதந்திரப் பிரகடனம் உட்பட, புரட்சியை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட அனைத்து அற்புதமான அரசியல் படைப்புகளும், அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் எதிர்-புரட்சிகர நோக்கங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சி மட்டுமே என்று கூறுவது, வத்திக்கானின் கூரையில் இருந்த ஒரு விரிசலை மறைப்பதற்காக மைக்கல் ஏஞ்சலோ சிஸ்டைன் தேவாலயத்தை வரைந்தார் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

வரலாற்று நிகழ்வுகளின் பொருள் குறித்த மோதல்கள் நியாயமானதும் தவிர்க்க முடியாததும் ஆகும். தேசபக்தி சார்ந்த கட்டுக் கதைகளை உருவாக்குவதன் மூலம் எந்தவொரு தீவிரமான வரலாறும் முன்னேற முடியாது. அமெரிக்கப் புரட்சி இந்த முரண்பாடுகளில்தான் பிறந்தது: அதன் வாக்குறுதிகள் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள், பழங்குடி மக்கள், சொத்து இல்லாத தொழிலாளர்கள் மற்றும் பலருக்கும் மறுக்கப்பட்டன. இந்த நிகழ்வை, பொருத்தமான வரலாற்று மற்றும் சமூக-பொருளாதாரச் சொற்களில் வரையறுத்தால், அது ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சியானது, தான் வாக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றிவிடவில்லை. மகிழ்ச்சியைப் பற்றி பேசுவது தள்ளி இருக்கட்டும், அமெரிக்காவில் இன்று வாழ்வும் சுதந்திரமுமே கூட பெரும் கேள்விக்குறியாகி வருகின்றன. மேலும், சமகால சமூகத்தின் சிறப்பம்சமாக விளங்கும் பிரம்மாண்டமான செல்வக் குவிப்பைக் கருத்தில் கொண்டால், இன்று வாஷிங்டனில் நடக்கும் ஆட்சியானது, மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசாங்கம் என்று ஆப்ரகாம் லிங்கன் குறிப்பிட்டதிலிருந்து முற்றிலும் வெகுதொலைவில் உள்ளது.

ஆனால், வரலாற்றை ஒழுக்கநெறி சார்ந்த கண்டனங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியாது. கடந்த காலத்தைப் பற்றிய இத்தகைய ஒழுக்கநெறிப் போக்கு எந்தவொரு விளக்கமளிக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கவில்லை. அதிலும், குறிப்பாகப் புரட்சிகளைப் பற்றிய ஆய்வில் அது முற்றிலும் உதவாததாக இருந்தது. புரட்சியைத் தோற்றுவித்தவர்கள் பாசாங்குக்காரர்கள் என்று கூறுவது, ஏன் ஒரு புரட்சி வெடித்தது என்பதையோ, சுதந்திரப் பிரகடனம் அதன் நிறுவனர்களின் நோக்கங்களையும் தாண்டி ஏன் இவ்வளவு பெரிய சக்தியைப் பெற்றது என்பதையோ விளக்காது. அல்லது அதன் மொழியை அடிமைமுறை ஒழிப்புவாதிகள், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், சோசலிஸ்டுகள் மற்றும் சிவில் உரிமைப் போராட்டக்காரர்கள் ஏன் கையில் எடுத்தார்கள் என்பதையும் அது விளக்காது. மேலும், நாம் வாழும் இந்த உலகம் எப்படி உருவானது என்பதையும் அது விளக்கத் தவறுகிறது.

ஒரு வரலாற்றுக் கோட்பாடு என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் விளக்குவதாக இருக்கக் கூடாது. அது பரந்த வரலாற்றுச் செயல்முறைகளை விளக்க வேண்டும்: அமெரிக்கப் புரட்சி, உள்நாட்டுப் போர், பிரெஞ்சுப் புரட்சி, 1848 புரட்சிகள், சோசலிசத்தின் எழுச்சி, தொழில்துறை தொழிற்சங்கங்கள், ரஷ்யப் புரட்சி, காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் சமூக இயக்கங்கள் என அனைத்தையும் அது உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இதனால்தான், வர்க்கப் போராட்டத்திற்குப் பதிலாக இனக் கோட்பாட்டை முன்னிறுத்துவது இத்தகைய தொலைநோக்கு விளைவுகளைக் கொண்டுள்ளது. இன மோதல்களை வரலாற்றின் மைய அச்சாக ஆக்கினால், உலக வரலாற்று சக்தியாக இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. அது முன்னெடுத்துச் செல்ல முயன்ற, நிறைவேறாத வாக்குறுதிகளைக் கொண்ட ஜனநாயகப் புரட்சிகளிலிருந்து சோசலிசம் துண்டிக்கப்படுகிறது. அக்டோபர் புரட்சியானது —போர், வர்க்க மோதல், அரசின் வீழ்ச்சி, சோசலிச நனவு மற்றும் தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம் ஆகியவற்றின் விளைவாக உருவானது என்ற அதன் சொந்த வரையறைகளின் அடிப்படையில் விளக்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது.

அமெரிக்க வரலாற்றில் அடிமைமுறை, காலனித்துவம் மற்றும் இன ஒடுக்குமுறை ஆகியவை முக்கியப் பங்காற்றியுள்ளன. ஆனால், சொத்துரிமை, உழைப்பு, வர்க்க அதிகாரம், ஏகாதிபத்தியம் மற்றும் அரசு ஆகியவற்றிலிருந்து பிரித்து இவற்றைத் தனியாகப் புரிந்து கொள்ள முடியாது.

சுதந்திரப் பிரகடனம் புரட்சிகரமானதாக இருந்ததற்கு அதன் ஆசிரியர்கள் ஒழுக்கநெறி ரீதியாகத் தூய்மையானவர்களாக இருந்தார்கள் என்பது காரணமல்ல; மாறாக, அது அன்றைய சமூக மற்றும் அரசியல் ஒழுங்கைக் குற்றம் சாட்டியதுடன், அதை தூக்கியெறிவதுக்கு மிக விரிவான மற்றும் உலகளாவிய வழிகளில் அழைப்பு விடுத்ததுதான் அதற்குக் காரணமாகும். ஒரு காலனித்துவ புறக்காவல் நிலையமாக இருந்த ஒரு பகுதி, ஒரு சுதந்திரமான மற்றும் பெருகிய முறையில் சக்திவாய்ந்த முதலாளித்துவ தேசிய அரசாக மாறுவதற்குத் தேவையான அசாதாரணமான பொருளாதார வளர்ச்சி, பிராந்திய விரிவாக்கம் மற்றும் சமூக மாற்றத்திற்கான அரசியல் மற்றும் கருத்தியல் உத்வேகத்தை அது வழங்கியது.

அதே நேரத்தில், அது எழுப்பிய ஜனநாயகக் கோட்பாடுகள், அதன் சொந்தக் காலகட்டத்தால் அதன் மீது விதிக்கப்பட்ட புறநிலை வரம்புகளைத் தாண்டி நின்றன. சுதந்திரப் பிரகடனத்தின் மகத்தான மற்றும் நிலையான ஆற்றல் இதில்தான் அடங்கியிருந்தது. அது அதன் சொந்தக் காலத்திற்குரியதாகவும் இருந்தது, அதே வேளையில் எதிர்காலத்திற்குரியதாகவும் விளங்கியது.

சுதந்திரப் பிரகடனம் வரலாற்றின் இயக்கவியலை மிக ஆழமான அர்த்தத்தில் வெளிப்படுத்திக் காட்டியது. மார்க்ஸ் விளக்கியது போல்: “மனிதகுலம் தனக்கு முன்னால் எப்போதுமே தீர்க்கக்கூடிய பணிகளை மட்டுமே தவிர்க்க முடியாமல் முன்வைத்துக் கொள்கிறது; ஏனெனில் இன்னும் கூர்ந்து கவனித்தால், அதற்கான தீர்வு காண்பதற்கான பொருள்சார் சூழல்கள் ஏற்கனவே இருக்கும்போது அல்லது குறைந்தபட்சம் அவை உருவாகிக் கொண்டிருக்கும்போது மட்டும்தான் அந்தப் பிரச்சனையே எழுகிறது என்பதை எப்போதும் காண முடியும்.” 1776-இல், அடிமைமுறையை ஒழிப்பதற்கான சூழல்கள் உருவாகத் தொடங்கியே இருந்தன. ஆனால் 1861-க்குள், அந்தப் பணியை முடிப்பதற்கான சூழல்கள் கைகூடி வந்திருந்தன

மேலும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கான மாற்றம் மிகவும் விரைவாக நிகழ்ந்தது. அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர்களுக்கு, முதல் புரட்சிகரக் காலம் அவ்வளவு தொலைவில் இருக்கவில்லை. தீவிர குடியரசுக் கட்சியினரில் மிகச் சிறந்தவராக இருந்த தடியஸ் ஸ்டீவன்ஸ், ஜோர்ஜ் வாஷிங்டனின் ஜனாதிபதி பதவிக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பிறந்தார். ஆபிரகாம் லிங்கன் பிறந்தபோது, ​​தோமஸ் ஜெபர்சன் புதிதாகக் கட்டப்பட்ட வெள்ளை மாளிகையில் இன்னும் பதவியில் இருந்தார்.

அமெரிக்கப் புரட்சியானது அடிமைமுறைக்கு எதிரான இயக்கத்தை வேகப்படுத்தியது. எமது சொந்தக் காலகட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எண்பத்தேழு ஆண்டுகள் என்பது —அதாவது 1776 சுதந்திரப் பிரகடனத்திற்கும் 1863 கெட்டிஸ்பேர்க் உரைக்கும் இடைப்பட்ட காலம்— எம்மை இரண்டாம் உலகப் போர் தொடங்கிய 1939-ஆம் ஆண்டிற்குப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அந்த நிகழ்வு எமக்கு அவ்வளவு தொலைதூரமான ஒன்றாகவா தோன்றுகிறது?

இந்த புரட்சியைப் பற்றிய கலந்துரையாடலில், கடந்த காலத்தைப் பற்றிய விளக்கம் மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்குத் தேவையான அரசியல் நனவும், முன்னோக்குமே இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இடதுகள் புரட்சிகர-ஜனநாயக மரபைக் கைவிட்டால், சமத்துவம், உரிமைகள், மக்கள் இறையாண்மை மற்றும் உலகளாவிய விடுதலை ஆகியவற்றை வெறும் ஏமாற்று வேலை என்று கருதினால், அந்த மரபைப் பிற்போக்குத்தனத்திடம் ஒப்படைக்கும் அபாயத்தை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது..

ஒரு தீவிரமான கலந்துரையாடலுக்கான முன்நிபந்தனை என்பது உண்மைகள் மீதான நேர்மையான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்கள் பேரழிவு விளைவுகளைக் காட்டியுள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்யப் புரட்சியை பொய்மைப்படுத்திக் காட்டியதில், இது தெளிவாகத் தெரிந்தது. அங்கு, பொய்கள் துரோகம், அடக்குமுறை மற்றும் பாரிய படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. பொட்டோமாக் நதியின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகக் கற்பனை செய்துகொள்ளும் அந்தப் பருத்த ஆரஞ்சு நிற இராட்சதனுக்குக் களிமண் பாதங்களே உள்ளன. சமூக எதிர்ப்பு சீராக வளர்ந்து வருகிறது. ஆனால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பு வரலாற்று அறிவாலும் அதன் படிப்பினைகளாலும் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

இந்த முக்கியமான ஆண்டு நிறைவு என்பது, புரட்சியில் எது புரட்சிகரமானதாக இருந்தது, எது வரம்புகளுக்கு உட்பட்டதாக இருந்தது, எது காட்டிக்கொடுக்கப்பட்டது, எது முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டது மற்றும் எது இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்று கேள்வி கேட்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும்.

Loading