இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
2025 நவம்பர் 28 அன்று டிட்வா சூறாவளி இலங்கையைத் தாக்கி ஏழு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையிலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் அவல நிலையிலேயே வாழ்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால் பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்ட இழப்பீட்டுத் திட்டம், பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு எதையும் செய்யவில்லை.
டிட்வா சூறாவளி நாட்டின் பெரும்பகுதியை பேரழிவிற்குள்ளாக்கியது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 649 பேர் மரணமடைந்துள்ளதுடன் 173 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இலங்கையின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதமான சுமார் 2.3 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர். உலக வங்கியானது சேதத்தின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம்) எனவும் மொத்தப் பொருளாதார இழப்பு 6 பில்லியன் முதல் 7 பில்லியன் டொலர்கள் வரை இருக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளது.
பேரழிவிற்குப் பின்பு, இழப்பீடுகளை அறிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக. முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு 5 மில்லியன் ரூபாய் வரையிலும், பகுதிச் சேதங்களுக்கு 500,000 ரூபாயும் வழங்குவதாக உறுதியளித்ததுடன், இறப்புகளுக்கான இழப்பீடு மற்றும் வாழ்வாதார மானியங்களையும் வழங்குவதாகக் கூறினார். நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான 500 பில்லியன் ரூபாய் பேரிடர் நிவாரண ஒதுக்கீட்டை அவர் அறிவித்தார்.
இருப்பினும், ஜூலை 3 அன்று டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியான “டிட்வா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றம்” என்ற தலைப்பிலான கட்டுரை, துப்புரவு மற்றும் சேதமடைந்த உபகரணங்களை பழுதுபார்ப்பதற்கான ஆரம்பக் கொடுப்பனவான 25,000 ரூபாய் மற்றும் 50,000 ரூபாயை 97 சதவீதமான மக்கள் பெற்றிருந்த போதிலும், “பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகளைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்” என்று தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் கூற்றுப்படி, பதுளை மற்றும் நுவரெலியா உட்பட பல மாவட்டங்களில் 10,310 தோட்டக் குடும்பங்கள் இந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 431 லயன் அறைகள் முழுமையாகவும், 2,152 அறைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இலங்கையிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் அடிமை உழைப்பு நிலைமைகளை சகித்துக் கொள்ளத் தள்ளப்பட்டுள்ள இந்தத் தொழிலாளர்கள், டிட்வா சூறாவளியின் பின்னர், சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்துள்ளனர். சூறாவளியானது ஒடுக்கமான மற்றும் நெரிசலான வீடுகளை மரணப் பொறிகளாக மாற்றியிருக்கின்ற நிலையில், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் தங்களது லயன் அறைகளுக்குத் திரும்ப முடியவில்லை.
அரசாங்கம் இந்தத் தொழிலாளர்களுக்கு மூன்று மாத வாடகையை (75,000 ரூபாய்) மட்டுமே வழங்கியது. பல தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் முதலில் வேலை செய்த தேயிலைத் தோட்டங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள வாடகை வீடுகளுக்குச் சென்றதால் வேலைகளை இழந்ததோடு புதிய வேலைகளையும் அவர்களால் தேடிக் கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் பாதுகாப்பற்ற, புயலால் சேதமடைந்த லயன் அறைகளுக்கே திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
சூறாவளி ஏற்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி இழப்பீடு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் கலந்துரையாடிக்கொண்டே இருந்தது. வளர்ந்து வரும் வெகுஜனக் கோபத்தைத் தணிக்கும் முயற்சியாக, அமைச்சர் வித்யாரத்ன ஜூன் 9 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில், தோட்ட குடியிருப்பாளர்கள் தங்களுக்குரிய லயன் அறைகளையோ அல்லது அவர்கள் வேலை செய்யும் நிலத்தையோ சொந்தமாகக் கொண்டிருக்காவிட்டாலும், 5 மில்லியன் ரூபாய்க்கும் 10 பேர்ச் காணித் துண்டிற்கும் தகுதியுடையவர்கள் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகக் கூறினார். ஆனால், ஒரு மாதம் கடந்தும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.
உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள், அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில், பிரவுன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான உடப்புசல்லாவ தோட்டக்கம்பனி மூலம் நிர்வகிக்கப்படும் கந்தபொல, பார்க் தோட்டத்தின் எஸ்க்டேல் பிரிவிற்குச் சென்றிருந்தனர்.
மற்றுமொரு சூறாவளி அல்லது காலநிலை பேரழிவு ஏற்பட்டால், எஸ்க்டேல் தோட்டத்தில் உள்ள 280 குடும்பங்களும் மேலும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலேயே உள்ளன. சூறாவளியால் நீர் விநியோகம் மற்றும் வீதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், தோட்டப் பாடசாலையும் மூடப்பட்டுள்ளது. 135 குடும்பங்களின் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன், 20 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. இத்தோட்டத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பார்க் பிரிவில் 62 தொழிலாளர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாக தோட்ட நிர்வாகம் கூறுகிறது, ஆனால் உண்மையில் யாருக்கும் அது கிடைக்கவில்லை.
மூன்று பிள்ளைகளின் தந்தையான வி. பிரகலாதன் (53) தனது வீடு அழிந்தபோது தனது குடும்பம் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்ததார்.
'எங்கள் இரண்டு பிள்ளைகள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தோம், ஆனால் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், எங்களுக்கு வீடோ நிலமோ கிடைக்கவில்லை. தோட்ட நிர்வாகமும் எங்களது நிலையை அலட்சியப்படுத்தியதால், எனது சகோதரனின் மாட்டுப் பட்டியில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,' என அவர் தெரிவித்தார்.
பிரகலாதன் ஒரு தனியார் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரிந்த போதிலும், சூறாவளி இழப்பீட்டிற்குத் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்வதற்காக பிரதேச செயலகத்திற்கு செல்ல நீண்ட விடுமுறை எடுத்ததால் அவர் வேலையை இழந்தார்.
'பிரதேச செயலக அதிகாரிகள் வீட்டின் வாடகைக்காக மாதம் 15,000 ரூபாய் தருவதாக உறுதியளித்தனர். நாங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம், ஆனால் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பணம் கிடைத்தது. வாடகை கொடுக்க முடியாததால், மீண்டும் தோட்டத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. நாம் இப்போது வாழும் இடமும் பாதுகாப்பற்றது,' என்று அவர் கூறினார்.
அவரது மனைவி எஸ். பரிமளாதேவி, தான் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் பத்து வருடங்கள் வேலை செய்ததாகவும், அங்கு அவரது கணவரும் குறுகிய காலம் செய்ததாகவும் கூறினார். குறைந்த ஊதியம் காரணமாக குடும்பத்தைக் காப்பாற்றவோ, பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கவோ அல்லது முறையான வீடமைக்கவோ அவர்களால் முடியவில்லை.
'நான் சவூதி அரேபியாவில் 15 ஆண்டுகள் வேலை செய்தேன், சமையலறையுடன் கூடிய நான்கு அறைகள் கொண்ட வீட்டைக் கட்டுவதற்கும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கும் போதுமான பணத்தைச் சேமித்தேன். வெள்ளத்தில் அனைத்தும் அழிந்துவிட்டன. நாங்கள் கிட்டத்தட்ட 4 மில்லியன் ரூபாயை இழந்தோம், ஆனால் எங்களுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை. தோட்ட நிர்வாகம் எங்களுக்கு ஒரு லயன் அறையைக் கூட வழங்க மறுத்துவிட்டது,' என்று அவர் கூறினார்.
மற்றொரு தொழிலாளி கூறுகையில் “சூறாவளியின் போது வீதிகள் முற்றிலும் சேதமடைந்ததால் மக்கள் தோட்டத்திற்குள் நுழைய முடியவில்லை. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தோட்ட நிர்வாகம் சேதத்தின் உண்மையான அளவை அரசாங்க அதிகாரிகளிடமிருந்து மறைத்தது. 'நிர்வாகத்தின் அறிக்கையில் 15 வீடுகள் மட்டுமே சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டது, ஆனால் 62 வீடுகள் சேதமடைந்திருந்தன. தொழிலாளர்களின் போராட்டங்களுக்குப் பிறகே அது திருத்தப்பட்டது.'
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா), தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை, மாறாக நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக அந்தத் தொழிலாளி கூறினார்.
'தேர்தல் காலங்களில் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். இ.தொ.கா. தலைவர்களில் ஒருவரான யோகராஜா எங்கள் தோட்டத்தைச் சேர்ந்தவர். அவர் நுவரெலியா பிரதேச சபை தலைவராக இருப்பதுடன், இந்தத் தோட்டத்தில் ஒரு பெரிய காய்கறித் தோட்டத்தையும் வைத்துள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜி.எஸ்.கே. பத்மசிறியும் எங்கள் தோட்டத்தைச் சேர்ந்தவர், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அவர்கள் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தனர், ஆனால் எதுவும் மாறவில்லை—தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.'
போலி இடது கட்சியான முன்னிலை சோசலிச கட்சி, அரசாங்கத்தை விமர்சிக்கும் அதே வேளை, அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதன் மூலம் நிவாரணங்களையும் சலுகைகளையும் பெற முடியும் என்ற மாயையை தொழிலாளர்கள் மத்தியில் விதைக்கிறது.
ஓய்வுபெற்ற தொழிலாளி திருச்செல்வம் கூறியதாவது: 'தோட்டப் பாடசாலையில் 72 மாணவர்கள் இருந்தால் மட்டுமே அது மீண்டும் திறக்கப்படும் என்கிறார்கள். சூறாவளிக்கு முன்பு 68 மாணவர்கள் இருந்தனர். இங்கு பாடசாலை இல்லாததால், பெற்றோர்கள் சிறு பிள்ளைகளை 6 முதல் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபளை மற்றும் ராகலையில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கமோ, தோட்ட நிர்வாகமோ, தொழிற்சங்கங்களோ இந்த பிரச்சினையில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.'
38 வயதான தற்காலிகத் தோட்டத் தொழிலாளியான ஜி. சுவேந்திரா, தனது தினசரி வருமானம் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை என்றார். 'ஒரு கிலோ தேயிலை பறிப்பதற்கு எனக்கு 60 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது, அதனால் எனது நாளாந்த சம்பளம் 1,000 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது. இது போதுமானதல்ல. குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதிலும், உயிர் வாழ்வதிலும் பல சிரமங்களை எதிர்கொள்கிறோம்,' என்று அவர் மேலும் கூறினார்.
நவம்பர் 27 அன்று தாங்கள் இடம்பெயர்ந்த பின்னர், அவரது குடும்பத்தினர் கந்தபொல சித்தி விநாயகர் ஆலயத்தில் சுமார் 800 பேருடன் நான்கு மாதங்கள் தங்கியிருந்ததாக குளோரியா கூறினார். கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் கந்தபளையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அரசாங்கம் உறுதியளித்த வாடகைப் பணம், ஜனாதிபதி நுவரெலியாவிற்கு விஜயம் செய்த அன்றுதான் அவர்களின் கணக்கில் வைப்பிலிடப்பட்டது. 'அரசாங்கம் எங்களுக்கு உறுதியளித்த சலுகைகளை வழங்கவில்லை, எங்களுக்கு அரசாங்கத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை,' என்று அவர் கூறினார்.
மற்றொரு பெண் தொழிலாளி ஆவேசத்துடன் பின்வருமாறு விளக்கினார்: 'எங்கள் வீடுகள் சேதமடைந்துள்ளன. குடிநீர் விநியோகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. சேதமடைந்த வீதிகளில் தேயிலைச் சுமைகளைச் சுமந்து கொண்டு நடப்பது மிகவும் கடினமாக உள்ளது. முழு நாட் கூலியான 1,750 ரூபாயைப் பெறுவதற்கு நாளொன்றுக்கு 22 கிலோ தேயிலை பறிக்க வேண்டும் என்று நிர்வாகம் எங்களை வற்புறுத்துகிறது. இல்லையெனில், கூலி குறைக்கப்படும் அல்லது அரை நாள் சம்பளமாக மட்டுமே கணக்கிடப்படும். எல்லா தொழிற்சங்கங்களும் பிரயோசனம் இல்லாதவை. அவை தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில்லை.'
மத்திய, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் சூறாவளியின் தாக்கம் குறித்து ஜூன் 9 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு வெளிப்பட்டது. வேறு பாடசாலைகளுக்கு அணுப்பப்பட்ட சில மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரிய, இந்த குழந்தைகளை கண்டறிய அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். சூறாவளி ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகும், நம்பகமான தரவுகள் அவசியம் எனவும், தற்காலிகப் பாடசாலைகள் தேவை எனவும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து ஜனாதிபதி திசாநாயகவினால் அறிவிக்கப்பட்ட “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்காக” அரசாங்கம் 10 பில்லியன் ரூபாயைச் சேகரித்துள்ள போதிலும் . நிதித்துறை பிரதி அமைச்சரும் தொழிலில் அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ ஜூன் 6 அன்று அறிவிக்கையில், 'டிட்வா சூறாவளியின் பேரழிவு தாக்கங்களிலிருந்து நாடு மீள்வதற்கு உதவுவதற்காகவே இந்த நிதியம் நிறுவப்பட்டது' அது 500 பில்லியன் ரூபாய் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார். ஆனால் மக்கள் ஏன் இன்னும் தற்காலிக முகாம்களில் தவித்து வருகிறார்கள் என்பதை அவர் விளக்கவில்லை.
ஹெய்லிஸ் குழுமத்தின் தலைவர் மோகன் பண்டிதகே; ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிரிஷான் பாலேந்திரா; எய்கன் ஸ்பென்ஸ் பிரதித் தலைவர் கலாநிதி பரக்கிரம திஸாநாயக்க; பிராண்டிக்ஸ் நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் உமர்; எல்ஓஎல்சி ஹோல்டிங்ஸின் நிறைவேற்றுத் தலைவர் இஷார நாணயக்கார மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் உட்பட நாட்டின் முன்னணி கூட்டுத்தாபன முதலாளிகளை இந்த நிதியத்தை நிர்வகிப்பதற்கென ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்த நிதியத்தின் தலைவராக அமைச்சர் பெர்னாண்டோ உள்ளார்.
இந்தக் குழுவின் கட்டமைப்பானது பெருவணிகங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. அநேகமாக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுமான சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இது கவனம் செலுத்தவில்லை. மாறாக சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வணிக ஆதரவு மறுசீரமைப்புகளை தீவிரமாக செயல்படுத்துவதிலேயே அது கவனம் செலுத்துகிறது.
