முன்னோக்கு

பாசிச உக்ரேனிய நீதிமன்றம், போரை எதிர்க்கும் சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

போக்டன் சிரோட்டியூக்

ஆகஸ்ட் 10 அன்று, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை எதிர்க்கும் 27 வயதான உக்ரேனிய சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிக்கோலாயேவ் பிராந்தியத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, அவரது சொத்துக்கள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்யவும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சோசலிசப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வேலைத்திட்ட ஆவணங்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) இந்தத் தீர்ப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, போக்டனை உடனடியாக விடுதலை செய்யக் கோருமாறு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றன.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்படும். உக்ரேனிய சட்டத்தின்படி, 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறும், இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோருமாறும் ஜனநாயக உரிமைகளின் ஆதரவாளர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் (YGBL) முன்னணி உறுப்பினரான போக்டன், “இராணுவச் சட்டத்தின் கீழ்... கடுமையான தேசத் துரோகம்” புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த வழக்கின் பதிவுகளில் தேசத் துரோகச் செயல் எதுவும் அவருக்கு இல்லை. எந்த உளவு வேலையோ, நாசவேலையோ, எந்தவொரு இராணுவப் படையுடனும் கூட்டுச் செயல்பாடோ அவருக்கு இருக்கவில்லை. அவருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரே ஆதாரம், உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான அவரது கட்டுரைகளும், அவற்றை வெளியிட்ட ஆசிரியர்களுடன் அவர் மேற்கொண்ட தொடர்புகளும் மட்டுமே ஆகும்.

அரசின் நிபுணர்கள் போக்டன் எழுதிய 14 கட்டுரைகளை ஆய்வு செய்து, அவற்றில் ஏழு கட்டுரைகளை குற்றப் பத்திரிகையில் சேர்த்தனர். ஆனால் நீதிமன்றம், அந்த ஏழு கட்டுரைகளில் ஒன்றை —இராணுவப் பணிக்கு ஆள்சேர்ப்பவர்கள், போருக்குச் செல்லாமல் தப்பிச் செல்பவர்களை வன்முறையாகப் பிடித்துச் செல்வது பற்றிய கட்டுரை— கைவிட வேண்டியதாயிற்று. ஏனெனில், அதன் சொந்த தடயவியல் ஆணையமே, அதில் குற்றவியல் சார்ந்த எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தது. ஆறு கட்டுரைகளுக்காக போக்டனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரைகளில், அரசுக்கு எதிராக இடம்பெற்றிருந்த உள்ளடக்கங்கள் என்ன? நீதிமன்றத்தின் கூற்றுப்படி, அந்தக் கட்டுரைகளில் “உக்ரேனின் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை மற்றும் ஜனநாயக செயல்முறைகளை அங்கீகரிக்காமை,” “பாசிஸ்டுகள் மற்றும் நாஜிக்களுடனான ஒப்பீடுகள்,” “உக்ரேனின் ஆயுதப் படைகள் பற்றிய எதிர்மறையான மதிப்பீடுகள்” மற்றும் “தேசிய நாயகர்கள் மற்றும் வரலாற்றுப் புள்ளிவிவரங்களை மறுவியாக்கியானம் செய்தல்” ஆகியவை அடங்கியிருந்தன.

உண்மையில், போக்டனால் எழுதப்பட்ட ஒவ்வொன்றும் அரசியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் துல்லியமானவை. “சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை” என்று குறிப்பிடப்படுபவர், மே 2024-ல் பதவிக்காலம் முடிவடைந்த ஒரு ஜனாதிபதியாக உள்ளார்.

ஜெலென்ஸ்கி, தனது சட்டப்பூர்வமான பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் நீடிக்கிறார். அவர், நிரந்தர இராணுவச் சட்டத்தின் கீழ் கட்டளை பிறப்பித்து ஆட்சி செய்கிறார். தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு அடிப்படை ஜனநாயக உரிமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், எந்தவொரு ஜனநாயக நடைமுறைகளே இல்லாத ஒரு நாட்டில், “ஜனநாயக நடைமுறைகளை” அங்கீகரிக்கத் தவறியதற்காக போக்டன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆகவே இந்தத் தீர்ப்பு, சட்டவிரோத ஆட்சியால் போக்டனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாகும்.

போக்டன் “தவறாக சித்தரித்தார்” என்று குற்றம் சாட்டப்படும் “தேசிய வீரர்கள்” யார் என்றால், அவர்கள் ஸ்டீபன் பண்டேரா மற்றும் உக்ரேனிய தேசியவாதிகளின் OUN அமைப்பு மற்றும் நாஜிக்களின் வாபென்-எஸ்.எஸ் கலீசியா படைப் பிரிவின் (Waffen-SS Galicia Division) தலைவர்கள் ஆவர். 1941-இல், சோவியத் யூனியன் மீதான ஹிட்லரின் படையெடுப்பை ஆதரித்த நாஜிக்களின் கூட்டாளிகளான இவர்கள், யூதர்கள் மற்றும் போலந்து மக்கள் மீதான பாரிய படுகொலையில் தொடர்புடையவர்கள் ஆவர். “பாசிஸ்டுகள் மற்றும் நாஜிக்களுடனான ஒப்பீடுகள்” குறித்த நீதிமன்றத்தின் புகார் என்பது, இந்தச் சக்திகளுக்கு உக்ரேனிய அரசு வழங்கிவரும் உத்தியோகபூர்வ புனரமைப்பு மற்றும் கொண்டாட்டங்களை போக்டன் அம்பலப்படுத்தியதையே குறிக்கிறது.

நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்ட தேசத் துரோகத்திற்கான “ஆதாரங்களாக”, “உக்ரேனிய மக்களுக்கு எதிரான பண்டேரவாதிகளின் குற்றங்கள்: ஒரு உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதியின் குறிப்புகள்” என்ற போக்டனின் கட்டுரையும், மற்றும் அவரது 2023 மே தின உரையான “ரஷ்யா மற்றும் உக்ரேனின் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காக!” என்பதும் அடங்கும். ஜனநாயக உரிமைகள் சிறிதளவேனும் மதிக்கப்படும் எந்தவொரு நாட்டிலும், இதுபோன்ற எழுத்துக்கள் பாதுகாக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வரும். ஆனால், ஜெலன்ஸ்கி தலைமையிலான உக்ரேனில், இவற்றுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

ஏப்ரல் 25, 2024 அன்று உக்ரேனின் பாதுகாப்புச் சேவையால் (SBU) போக்டன் கைது செய்யப்பட்டபோது, அவர் ரஷ்ய அரசாங்கத்தின் முகவராகச் செயல்படுவதாக அரசு குற்றம் சாட்டியது. ஆனால், அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும், அந்த அவதூறான குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக எதுவும் முன்வைக்கப்படவில்லை. உண்மையில், தண்டனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கட்டுரைகளே, ரஷ்ய படையெடுப்புக்கும் புட்டின் ஆட்சிக்கும் போக்டன் தெரிவித்த தீவிர எதிர்ப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன.

போக்டனின் கருத்துக்களால் ஏற்படும் “சமூக ரீதியான ஆபத்தான விளைவுகள்” பற்றி இந்தத் தீர்ப்பு பலமுறை குறிப்பிடுகிறது. இது, போக்டன் மீதான இந்த வழக்கு விசாரணையானது, ரஷ்யாவிற்கான ஆதரவு என்ற ஜோடிக்கப்பட்ட சாக்குப்போக்கைப் பற்றியது அல்ல என்பதை அம்பலப்படுத்துகிறது. மாறாக, உக்ரேனிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே போருக்கும், ஜெலன்ஸ்கியின் ஆட்சிக்கும் எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதையே இது இலக்காகக் கொண்டுள்ளது.

போக்டனின் தற்காப்பிற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களுக்கு நீதிமன்றம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. உக்ரேனின் முன்னணி குற்றவியல் வல்லுநர்களில் ஒருவரான யூரி இர்கின் தயாரித்த 65 பக்க அறிக்கையில், போக்டனின் எழுத்துக்களில் “ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தின் அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு கூற்றுகளோ, சொற்றொடர்களோ, வாக்கியங்களோ அல்லது வார்த்தை சேர்க்கைகளோ இல்லை” என்று கண்டறியப்பட்டது. அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, அரசு சார்ந்த தடயவியல் நிறுவனத்திடமிருந்து நீதிமன்றம் ஒரு புதிய ஆய்வுக்கு உத்தரவிட்டது—ஆயினும், அந்த நிறுவனம் கூட அந்த கட்டுரைகளில் அரசை வீழ்த்துவதற்கோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ, நாசகார வேலைகளுக்கோ அல்லது உக்ரேனின் எல்லைகளை மாற்றுவதற்கோ எந்தவொரு அழைப்பும் இல்லை என்றே கண்டறிந்தது.

இந்த வழக்கின் பதிவுகளில் உள்ள எதுவும் தேசத் துரோகத்திற்கான கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், போக்டனின் எழுத்துக்கள் ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்தின் பிரிவு 10-ன் கீழ், பாதுகாக்கப்பட்ட அரசியல் பேச்சு என்பதையும், தற்காப்புத் தரப்பு உறுதிப்படுத்தியது. நீதிமன்றம் இவை அனைத்தையும் தூக்கி எறிந்துள்ளது.

இந்தத் தீர்ப்பு ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கையின் விளைவாக அல்லாமல், ஜெலன்ஸ்கியின் சர்வாதிகார ஆட்சியிடமிருந்து வந்த அரசியல் உத்தரவைச் செயல்படுத்தும் நடவடிக்கையாகவே அமைந்தது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் எனத் தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ள “டேவிட் என்ற புனைப்பெயரைக் கொண்ட உலக சோசலிச வலைத் தளத்தின் பிரதிநிதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே போக்டன் செயல்பட்டார்” என்று அது கூறுகிறது. சர்வதேச சோசலிச மற்றும் போரெதிர்ப்புப் பிரசுரங்களை குற்றவியல் நிறுவனங்களாகவும், அவற்றுடன் இணைந்து செயல்படுவதைத் தேசத்துரோகமாகவும் அறிவிக்கும் அதிகாரத்தை உக்ரேனிய அரசு கையில் எடுத்துக்கொள்கிறது.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் வேலைத்திட்டம், அதன் கையேடுகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் அச்சிடப்பட்ட கட்டுரைகளின் கோப்புகளை அழிக்க எடுக்கப்பட்ட முடிவு, இந்தத் தீர்ப்பின் உண்மையான உள்ளடக்கத்தை அம்பலப்படுத்துகிறது. எதிர்ப்பாளர்களைச் சிறையிலடைப்பது, அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வது, அவர்களின் எழுத்துக்களைக் கொளுத்துவது ஆகிய அனைத்துமே பாசிச ஆட்சிகளின் வழிமுறைகளாகும். போக்டனைத் தண்டிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தடயவியல் “ஆய்வுகளுக்கான” செலவுகளுக்காக 1,78,000 ஹிரைவ்னியாவுக்கும் (Hryvnia) அதிகமான தொகையைச் செலுத்துமாறும் நீதிமன்றம் போக்டனுக்கு உத்தரவிட்டுள்ளது.

இடதுசாரி அரசியல் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் போக்டனுக்கான தண்டனை வழங்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டின் “கம்யூனிச எதிர்ப்பு” சட்டங்களில் இருந்து உக்ரேனில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் சின்னங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 2022 இல், ஜெலென்ஸ்கி அரசாங்கம் பாராளுமன்றத்தில் இருந்த மிகப்பெரிய எதிர்க்கட்சி உட்பட 11 எதிர்க்கட்சிகளை இடைநிறுத்தியது. பின்னர் அவை முற்றிலும் தடை செய்யப்பட்டன.

உக்ரேனிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகள் “சித்திரவதை மற்றும் மோசமான நடத்தைகளுக்கு ஆளாக்கப்படுவதை தொடர்ந்து ஆவணப்படுத்தி வருவதாக” செப்டம்பர் 2025-ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்திருந்தது. அதன் அறிக்கைப்படி, உக்ரேனுக்கு துரோகம் செய்தல் மற்றும் ஆக்கிரமிப்பாளருடன் ஒத்துழைத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ், சுமார் 20,000ம் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இந்த ஒத்துழைப்புச் சட்டங்கள் “மிகவும் பரந்தளவில் தெளிவற்றவையாக” உள்ளன என்று விவரிக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் “அவசர சேவைகள், கட்டுமானம், மனிதாபிமான நிவாரண உதவிகள் மற்றும் குப்பைகளை அகற்றுதல்” ஆகிய பணிகளைச் செய்தவர்கள் கூட இச்சட்டங்களின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

போக்டன் கைது செய்யப்பட்டு ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஜூன் 6, 2024 முதல் உலக சோசலிச வலைத் தளம் உக்ரேனில் தடை செய்யப்பட்டது.

உக்ரேனிய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்தப் போர் நடத்தப்படுவதாகக் கூறும் அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் இவை அனைத்தும் மறைக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வையிலிருந்து மூடி மறைக்கப்பட்டுள்ளன.

போக்டன் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கானது ஒரு விரக்தியடைந்த ஆட்சியின் செயலாகும். உக்ரேனுக்குள்ளேயே போருக்கு எதிரான எதிர்ப்பு வலுத்து வருகிறது. 2022 முதல் இராணுவத்திலிருந்து தப்பியோடியதற்காக அல்லது அனுமதியின்றி தலைமறைவானதற்காக படையினர்களுக்கு எதிராக 300,000 க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கடந்த ஆண்டில் பதிவானவை ஆகும். 2025-ஆம் ஆண்டில், 69 சதவீத உக்ரேனியர்கள் கேலப் (Gallup) நிறுவனத்திடம், பேச்சுவார்த்தை மூலம் போருக்கு முடிவு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது 2022-க்குப் பிறகான கருத்துக்களின் முழுமையான தலைகீழ் மாற்றமாகும். தொழிலாளர்கள் மற்றும் இராணுவத்தினரிடையே போர் எதிர்ப்பு மனநிலை வளர்வதைக் கண்டு அஞ்சி நடுங்குகின்ற ஜெலன்ஸ்கி அரசாங்கம், உள்நாட்டில் ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவதோடு, நேட்டோ சக்திகள் நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

உக்ரேனிய சிறையில் 15 ஆண்டுகள் தண்டனை என்பது மரண தண்டனைக்கு சமமானதாகும். உக்ரேனின் சிறைச்சாலை கட்டமைப்பின் மோசமான நிலைமைகள் குறித்த தகவல்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2025-இல், உக்ரேன் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் மதிப்பாய்வில், நெரிசல் மிகுந்த சிறைகள், உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை, சுயாதீன மருத்துவ பரிசோதனைகள் இல்லாமை மற்றும் காவலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைச் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். ஐரோப்பிய கவுன்சிலின் சித்திரவதைக்கு எதிரான குழு, அக்டோபர் 2023-இல் உக்ரேனுக்கான தனது வருகை குறித்து வெளியிட்ட அறிக்கையில், விசாரணைக் கைதிகள் நாளில் 23 மணி நேரம் வரை தங்கள் அறைகளிலேயே அடைத்து வைக்கப்படும் சிதைந்துபோன சிறைக்கூடங்களை விவரித்ததுடன், ஒரு விசாரணை சிறையின் நிலைமை மிகவும் சீரழிந்து காணப்பட்டதால், அதை “மனிதத்தன்மையற்ற மற்றும் அவமானகரமானது” என மதிப்பிட்டது.

கைது செய்யப்பட்ட போதே உடல்நலம் குன்றியிருந்த போக்டனுக்கு, சிறை நிர்வாகத்தின் தொடர்ச்சியான வாக்குறுதிகள் இருந்தபோதிலும், அவசரமாகத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சை ஓராண்டுக்கும் மேலாக அவருக்கு மறுக்கப்பட்டு வருகிறது. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொரு நாளும் அவரது உயிருக்கு ஆபத்தாக கழிகிறது.

ஜனநாயக உரிமைகள் மீது தனது பாசிச அவமதிப்பை இப்போது நிரூபித்துள்ள ஒரு அரசின் நீதிமன்றங்களிடம், போக்டனின் விதியை விட்டுவிட முடியாது. சர்வதேச தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பால் மட்டுமே போக்டனின் விடுதலை வெல்லப்படும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகள், சிவில் உரிமைக் குழுக்கள் மற்றும் போரெதிர்ப்பு சோசலிச இயக்கங்களுக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்: போக்டனின் வழக்கை கையில் எடுங்கள். உங்கள் பணிவிடங்கள், தொழிற்சங்கங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அவரை விடுதலை செய்யக் கோரி தீர்மானங்களை நிறைவேற்றுங்கள். பகிரங்கப் போராட்ட அறிக்கைகளை வெளியிடுங்கள். அவரது விடுதலைக்கான மனுவில் கையெழுத்திட்டு அதை பரப்புங்கள்.

போக்டன் சிரோட்டியூக்கை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது ஏகாதிபத்தியப் போர், சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டமாகும். இதில் பங்கேற்க கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

Loading