இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
போருக்கும் மறுஆயுதமயமாக்கத்திற்கும் பணம் செலவழிப்பதற்காக, அனைத்து சமூக சேவைகளுக்கான செலவினங்களையும் வெட்டிக் குறைத்து, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை ஆழப்படுத்த வேண்டும் என்று உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்களுக்கு நிதிச் சந்தைகள் உத்தரவிட்டுவரும் நிலையில், அரசாங்கக் கடன் பத்திரங்களின் வருவாய்கள், 2008 நிதி நெருக்கடிக்கு முந்தைய காலத்திலிருந்து காணப்படாத மிக உயர்ந்த மட்டங்களை எட்டியுள்ளன.
நேற்று உலகளாவிய கடன் பத்திரச் சந்தைகள் ஒரு விற்பனை அலையால் தாக்கப்பட்டன. பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வருவாய்கள் 1990களுக்குப் பிறகு காணப்படாத மட்டங்களுக்கு உயர்ந்தன. பிரிட்டனின் கடன் வாங்கும் செலவுகள் 2008க்குப் பிறகு இல்லாத அளவுக்கு உயர்ந்தன. சமீப காலம் வரை மிகக் குறைந்த மட்டத்தில் இருந்த ஜப்பானிய 10-ஆண்டு பத்திரத்தின் வருவாய், 1996க்குப் பிறகு இல்லாத அளவான 3 சதவீதத்திற்குத் திடீரென உயர்ந்தது.
பிரிட்டனில், 10-ஆண்டு பத்திரத்தின் வருவாய் 0.11 சதவீதப் புள்ளிகள் அளவுக்கு உயர்ந்து 5.26 சதவீதம் வரை எட்டியது. “சாதாரண” ஏற்ற இறக்கங்கள் ஒரு சதவீதப் புள்ளியின் மிகச் சிறு பகுதியளவே இருக்கும் இந்தச் சூழலில், இது ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாகும். 30-ஆண்டு பத்திரத்தின் வருவாய்கள் 0.12 சதவீதப் புள்ளிகள் வரை தாவி, 5.9 சதவீதத்தை எட்டின; இது 1990களின் பிற்பகுதிக்குப் பிறகு காணப்படாத மிக உயர்ந்த மட்டமாகும்.
அமெரிக்கக் கடன் பத்திர வருவாய்களின் உயர்வு குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது; ஏனெனில், நீண்டகாலப் பத்திரங்கள் பிரிவில் அவற்றை அடக்குவதற்கு கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் மேற்கொண்ட முயற்சிகளையும் மீறி அந்த உயர்வு நிகழ்ந்தது. இந்த உயர்வைத் தணிக்கும் நோக்கில், ஒவ்வொரு நடவடிக்கையிலும் கருவூல மீள்கொள்முதல் 2 பில்லியன் டாலரிலிருந்து 4 பில்லியன் டாலராகவும், ஒருவேளை அதற்கும் அதிகமாகவும் உயரும் என்று அவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே தோல்வியடைந்தது. 10-ஆண்டு கருவூலப் பத்திரத்தின் வருவாய் 4.8 சதவீதத்திற்கு உயர்ந்தது; இது 2025இல் ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு காணப்படாத மிக உயர்ந்த மட்டமாகும். மேலும் அது இன்னும் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. 30-ஆண்டு பத்திரத்தின் வருவாய் 5.27 சதவீதத்திற்கு உயர்ந்து, பெசன்ட் தனது அறிவிப்பை வெளியிடுவதற்கு முந்தைய மட்டத்திற்கே திரும்பியது.
ப்ளூம்பெர்க் குறிப்பிட்டதைப் போல, இந்தச் சமிக்ஞை உலகின் மிகப்பெரிய கடன் பத்திரச் சந்தையிலிருந்து வெளிப்பட்ட ஒரு தெளிவான செய்தியாக இருந்தது: “அதிகரித்துவரும் தேசியக் கடன் மற்றும் தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருக்கும் பணவீக்கம் குறித்து கவலைகொண்டுள்ள முதலீட்டாளர்களை அமைதிப்படுத்த, கருவூல மீள்கொள்முதலில் அட்டவணைக்கு அப்பாற்பட்ட ஒரு சிறு மாற்றத்தை விட அதிகமானது தேவைப்படும்.”
இந்தத் தோல்வி உடனடி நிலைமையின் அறிகுறி மட்டுமல்ல; மாறாக, ஆழமான ஒரு வரலாற்று நிகழ்வின் அறிகுறியாகும். கடந்த மூன்று தசாப்தங்களாக அதிகரித்துவரும் மூர்க்கத்துடன் வெடித்துவரும் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் மற்றும் அதன் நிதி அமைப்பின் ஆழமடைந்துவரும் நெருக்கடியைத் தடுத்து நிறுத்த அமெரிக்காவும் பிற அரசாங்கங்களும் பயன்படுத்திய அனைத்து முறைகளும் சிதைந்துபோவதே அந்த வரலாற்று நிகழ்வாகும்.
2008இல் லேமன் பிரதர்ஸின் வீழ்ச்சி 1930களுக்குப் பிறகு காணாத மிக ஆழமான நிதி நெருக்கடியைத் தூண்டியதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கம் பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை மீட்பு நிதியாக (bailout) ஏற்பாடு செய்தது. அதே வேளையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைப் பூஜ்ஜியத்திற்குக் குறைத்தது; மேலும், கருவூலப் பத்திரங்கள் மற்றும் அடமான-ஆதரவு பத்திரங்களை (mortgage-backed securities) வாங்குவதன் மூலம் அளவுத் தளர்த்தல் (quantitative easing) வழியாக டிரில்லியன் கணக்கான டாலர்களை நிதி அமைப்பினுள் செலுத்தியது.
ஆனால் அந்த நெருக்கடி ஒருபோதும் தீர்க்கப்படவில்லை. பெருந்தொற்றின் தொடக்கத்தில், அதன் பொருளாதார மற்றும் நிதி விளைவுகள் குறித்த அச்சங்கள் அமெரிக்கக் கருவூலச் சந்தையில் முடக்கத்தை ஏற்படுத்தியபோது, 2020 மார்ச்சில் அது புதிய வடிவில் மீண்டும் வெடித்தது. உலகின் மிகவும் பாதுகாப்பான நிதிச் சொத்து எனக் கருதப்படும் அமெரிக்க அரசாங்கக் கடனுக்கு, பல நாட்களாக எந்த வாங்குபவரும் கிடைக்கவில்லை. ஃபெடரல் ரிசர்வ் 4 டிரில்லியன் டாலர் அளவுக்குத் தலையிட்டது; ஒரு கட்டத்தில் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களைச் செலவிட்டது.
2008இல், அமெரிக்க கூட்டாட்சிக் கடன் 10 டிரில்லியன் டாலராக இருந்தது. கடந்த மாதம் அது 40 டிரில்லியன் டாலரைத் தாண்டியது; வட்டிச் செலவு ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், அது அமெரிக்க அரசாங்க வரவு-செலவுத் திட்டத்தின் மிகப்பெரிய அம்சமாக வேகமாக மாறிவருகிறது. தனது கடந்தகாலக் கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்காகவே அரசாங்கம் மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும் ஒரு அழிவுச் சுழல் (doom loop) வேகமாக உருவாகிவருகிறது. இது திவால்நிலையையும் சீரழிவையும் நோக்கிச் சறுக்கிக்கொண்டிருக்கும் ஒரு அரசின் அறிகுறியாகும்.
நிதி அமைப்பை காப்பாற்றுவதற்காகக் கடந்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட முறைகள் சரிந்து வருகின்றன என்பதையே இது பொருள்படுத்துகிறது. உலக நாணயமாக டாலர் வகித்த பங்கினாலும், அமெரிக்க நிதி அமைப்பின் வலிமை மீதான நம்பிக்கையினாலும் அமெரிக்காவால் தன்னைத்தானே பிணையெடுத்துக்கொள்ள முடிந்தது; அதாவது, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து நிதி வளங்களை அதனால் திரட்டிக்கொள்ள முடிந்தது. அந்த நம்பிக்கை இப்போது சிதைந்துவருகிறது.
இந்தச் சிதைவு, தங்கத்தின் அடிப்படையில் அளக்கப்படும் டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மகத்தான வீழ்ச்சியிலும் குறிப்பாகப் பிரதிபலிக்கிறது. பெருநிறுவன மற்றும் அரசாங்கக் கடனின் வளர்ச்சியிலும் பங்குச் சந்தையின் தீவிர ஏற்றத்திலும் காணப்படும் புனை மூலதனக் குவியலுக்கு மாறாக, உண்மையான மதிப்பின் இறுதிக் களஞ்சியமாகத் தங்கம் திகழ்கிறது.
2020 மார்ச்சில், தங்கத்தின் விலை அவுன்சுக்கு சுமார் 1,500 டாலராக இருந்தது. இன்று அது 4,500 டாலராக உள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், வெறும் ஆறு ஆண்டுகளுக்குள், உண்மையான மதிப்பின் உருவகமான தங்கத்திற்கு எதிராக டாலரின் மதிப்பு, முன்பு இருந்ததில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.
அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் தங்க ஆதரவை அகற்றுவதற்கு முன்பு, தங்கம் அவுன்சுக்கு 35 டாலராக இருந்த 1971 ஆம் ஆண்டு மட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்த வீழ்ச்சி இன்னும் கூர்மையானதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில் ஒரு டாலர், ஒரு அவுன்ஸ் தங்கத்தில் முப்பத்தைந்தில் ஒரு பங்கு மதிப்புடையதாக இருந்தது. இன்று அது ஒரு அவுன்ஸில் நான்காயிரத்து ஐந்நூறில் ஒரு பங்கு மதிப்புடையதாக உள்ளது.
உலக முதலாளித்துவ அமைப்பு ஒரு வரலாற்று முறிவினுள் நுழைந்துவிட்டது; இதற்கான காரணம், அது ஒரு மூன்றாம் உலகப் போருக்குள் நுழைந்திருப்பதே ஆகும். இந்தப் போரில், அமெரிக்கா முன்னணியில் நிற்க, ஆளும் வர்க்கங்கள் தாங்கள் தலைமை வகிக்கும் அமைப்பின் தீர்க்க முடியாத முரண்பாடுகளை இராணுவ வழிமுறைகளால் தீர்க்க முயல்கின்றன.
கடந்த மாதம் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸ், இந்தச் செயல்முறையைத் தெளிவாக அடையாளம் கண்டது.
தனது தொடக்க அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவர் டேவிட் நோர்த், “அத்தகைய போர் வெடிக்குமா என்பது இனி ஒரு கேள்வியே அல்ல” எனத் தெரிவித்தார். அது ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
உலகப் போர் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது; அது புற்றுநோய் பரவலைப் போல வளர்ந்துவருகிறது: ஒரு நாள்பட்ட, விரிவடையும் நிலையாக அது உலகெங்கும் பரவி, புதிய பிராந்தியங்களில் ஊடுருவி, முன்னர் தனித்தனியாக இருந்த மோதல்களை ஒன்றிணைத்து, தான் நோக்கிச் செல்லும் பொதுவான பேரழிவுத் தீக்குத் தயாராகும் வகையில், உலகப் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தேசிய அரசையும் படிப்படியாக மாற்றிக்கொண்டும் இருக்கிறது.
இந்த உருமாற்றத்தின் ஒரு மையக் கூறு, போருக்கும் இராணுவச் செலவினத்திற்கும் நிதியளிப்பதற்காகத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தங்கள் தாக்குதலை முன்னெப்போதும் இல்லாத மட்டங்களுக்கு முடுக்கிவிட வேண்டும் என்று, இப்போது கடன் பத்திரச் சந்தைகள் வழியாக ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டுவரும் கோரிக்கையே ஆகும்.
நிதிச் சந்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களை வார்த்தைகளாக மாற்றி, கடன் பத்திரச் சந்தைகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை அரசாங்கங்கள் புறக்கணிக்கவோ, அவற்றை அடக்க முயலவோ முடியாது என்று பைனான்சியல் டைம்ஸ் ஒரு தலையங்கத்தில் அறிவித்தது.
“அதன் பொருள், உயர்ந்துவரும் நலன்புரி மற்றும் ஓய்வூதியச் செலவுகளை நேரடியாக எதிர்கொள்வதும், நம்பகமான நிதியளிப்புத் திட்டங்கள் இல்லாத சலுகைகளையோ வரிக் குறைப்புகளையோ எதிர்ப்பதும் ஆகும்.” இன்று வேதனையைத் தவிர்ப்பது நாளை இன்னும் பெரிய வேதனையையே கொண்டுவரும்.
அமெரிக்காவில், நிதியியல் தன்னலக்குழுவின் சார்பாகப் பேசும் வாஷிங்டன் போஸ்ட் , கடன் நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட வேண்டும் எனக் கோரி ஒரு பிரச்சாரத்தை நடத்திவருகிறது.
ஆகஸ்ட் 10 அன்று, “அமெரிக்காவின் வரவு-செலவுத் திட்டம் எப்போது, பேரழிவுகரமாக முறிந்துவிடும்” என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தில், “நீடித்த ஒரு போருக்காக அமெரிக்கா பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிக்க வேண்டியிருந்தால், அதை மேலும் அதிகரிக்க அதற்கு அதிக இடவசதி இல்லை” என்று அது எச்சரித்தது.
ஆகஸ்ட் 24 அன்று, “தேசியக் கடனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஓய்வூதிய அரசிலிருந்து தொடங்குங்கள்” என்ற தலைப்பின் கீழ், அது இன்னும் திட்டவட்டமாக இருந்தது; “ஓய்வூதிய அரசில் மாற்றங்கள் செய்யாமல் அமெரிக்க அரசாங்கம் கடன் தீர்க்கும் திறனை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான எந்தப் பாதையும் இல்லை” என்று தெரிவித்தது.
கடன் பத்திர விற்பனை அலையானது, போர், கடன் நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமடைந்துவரும் தாக்குதல் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த பகுதிகளாக இருக்கும், முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும்.
நிதி அமைப்பை முட்டுக்கொடுத்து நிலைநிறுத்தவும், அதில் ஆதிக்கம் செலுத்தும் தன்னலக்குழுக்களைச் செல்வந்தர்களாக்கவும் கடன் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இப்போது அவர்கள், தாங்களும் முதலாளித்துவ அரசின் நிறுவனங்களும் உருவாக்கிய நெருக்கடிக்கு, தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
தொழிலாளர்கள் இந்தக் கடனை உருவாக்கவில்லை. அதற்காக விலை கொடுக்க அவர்கள் மறுக்க வேண்டும். அந்த மறுப்பு, ஒரு சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்திற்கான அரசியல் போராட்டத்தின் மூலம் செயல்வடிவம் பெற வேண்டும்: அதாவது, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல், நிதியியல் தன்னலக்குழுவைப் பறிமுதல் செய்தல், மற்றும் வங்கிகளையும் பெரும் பெருநிறுவனங்களையும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொது உடைமைக்கு மாற்றுதல் ஆகியவையே ஆகும்.
