முன்னோக்கு

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத் தேர்தல் பேரழிவு: 90 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்த நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவம் ஃபேயினை மீண்டும் பதவியில் அமர்த்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்கன் ஆக்சில் நிறுவனத்தில் பணிபுரியும் UAW லோக்கல் 2093 தொழிலாளர்களிடையே ஊதியம், வேலைப் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல்கள் குறித்து அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், UAW தலைவர் ஷான் ஃபேயின் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். 2026 மே 31. [Photo: UAW]

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) 2026-ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளுக்கான தேர்தல், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஒரு பேரழிவில் முடிந்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். தொழிற்சங்கத்தின் மொத்த அதிகாரத்துவ எந்திரமும் தனக்குச் சாதகமாக இருந்த நிலையில், ஷான் ஃபேயின் வெறும் 6 சதவீத உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று “மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்”.

இந்த தேர்தலில் இரண்டு முரண்பட்ட போக்குகள் வெளிப்பட்டன. ஃபேயின், தனக்குப் பின்னால் அணிவகுத்து நின்ற அதிகாரத்துவத்தின் மந்தநிலையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மேக் டிரக்ஸ் தொழிலாளியும். சோசலிஸ்ட்டுமான வில் லெஹ்மன், சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சியின் வளர்ச்சியையும், தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் சோசலிச மற்றும் சர்வதேசவாத நோக்குநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது பிரச்சாரம் உறுப்பினர்களைச் சென்றடைவது திறம்படத் தடுக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலும், அவர் பெற்ற வாக்குகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

  • சுமார் 11 இலட்சம் (1.1 மில்லியன்) பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 8.9 சதவீத வாக்குப்பதிவுடன் மொத்தம் 98,029 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு 97,043 வாக்குகள் பதிவாகின. 10-ல் 9 பேர் வீதம், 10 இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
  • ஃபேயின் 66,166 வாக்குகளைப் பெற்றார். இது தலைவர் பதவிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 68 சதவீதமாகும். ஆனால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது வெறும் 6 சதவீதம் மட்டுமே ஆகும். அதாவது, ஏறக்குறைய 17 உறுப்பினர்களில் ஒருவர் வாக்களித்துள்ளார். 2023-ல் நடைபெற்ற இறுதிச் சுற்றில் அவர் பெற்ற வாக்குகளை விட இது குறைவானதாகும். இந்த எண்ணிக்கையிலும்கூட, தங்கள் பதவிகளுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தையே சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்கள், நியமன உறுப்பினர்களின் வாக்குகள் அடங்கியுள்ளன.
  • 2022-இல், இந்த சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான முதல் நேரடித் தேர்தலில், மொத்தம் 1,04,776 வாக்குகளே பதிவாகின. இதில், தலைவர் பதவிக்கு கிடைத்த வாக்குகள் 1,03,495 ஆகும். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு தேசிய தொழிற்சங்கத் தேர்தலில் பதிவான மிகக் குறைந்த வாக்குப்பதிவு இதுவேயாகும். ஃபேயினின் முதல் பதவிக் காலத்திற்குப் பிறகு நடைபெறும் இந்த ஆண்டுத் தேர்தலில், ஏறக்குறைய 6,700 உறுப்பினர்கள் குறைவாகவே வாக்களித்தனர்.
  • 2022இல், அப்போதைய தலைவர் ரே கரியைச் (Ray Curry) சுற்றியும், ஃபேயினைச் சுற்றியும் அணிதிரண்டிருந்த தலைமையின் இரு பிரிவுகளும் முதல் சுற்றில் மொத்தமாக 78,530 வாக்குகளைப் பெற்றிருந்தன. இந்த ஆண்டு, ஃபேயினும், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அவரது துணைத் தலைவரான ரிச் போயரும் சேர்ந்து 79,034 வாக்குகளையே பெற்றிருந்தனர். இது ஏறக்குறைய அதே எண்ணிக்கையாகும். சாமானிய உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தபோதிலும், அமைப்பின் அதிகாரக் கட்டமைப்பைச் சார்ந்தவர்களின் வாக்குகள் மாறாமல் இருந்தன.
  • தொழிற்சங்கத்தின் ஒன்பது பிராந்தியங்களில் ஏழில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நியூ யோர்க்கையும் நியூ இங்கிலாந்தையும் உள்ளடக்கிய பிராந்தியம் 9A-இல் அது ஏறக்குறைய பாதியாக, 4,492இலிருந்து 2,346 ஆகக் குறைந்தது. பிராந்தியம் 8இல் 17 சதவீதமும், பிராந்தியம் 4இல் 14 சதவீதமும், பிராந்தியம் 1A-இல் 11 சதவீதமும் குறைந்திருந்தது. மேற்குப் பகுதியிலுள்ள பிராந்தியம் 6இல் மட்டுமே குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது. இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்விசார் தொழிலாளர்கள் ஆவர். இவர்களின் உள்ளூர் கிளையின் வாக்குகள் இரட்டிப்பானாலும், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அது மிகச் சிறிய அளவாகவே இருந்தது.
  • தொழிற்சங்கத்தின் வரலாற்று மையமான டெட்ராய்ட் பெருநகரப் பகுதியையும் உள்ளடக்கிய பிராந்தியங்கள் 1 மற்றும் 1A-வில், 3,00,000-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற உறுப்பினர்களில் 26,380 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இது 9 சதவீதத்திற்கும் குறைவானதாகும். ஃபேயின் அவற்றில் சுமார் 16,800 வாக்குகளைப் பெற்றார். இது, அந்த இரண்டு பிராந்தியங்களின் மொத்த உறுப்பினர்களில் 6 சதவீதத்திற்கும் குறைவானதாகும். டியர்போர்னில் உள்ள போர்டு ரூஜ் (Ford Rouge) வளாகத்தை உள்ளடக்கிய கிளை 600 ல், 24,006 உறுப்பினர்களில் 2,999 வாக்குகள் சுமார் 12 சதவீதம் பதிவாகின. ஃபேயின் 2,280 வாக்குகளைப் பெற்றார். இது அந்தக் கிளையின் உறுப்பினர்களில் 10-ல் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும்.
  • டானா, மேக்னா மற்றும் குறைந்த ஊதியம் பெறும் பிற உதிரிப்பாகத் தொழிலாளர்களை உள்ளடக்கிய, மிச்சிகனின் வாரனில் உள்ள UAW கிளை 155இல், 5,600க்கும் அதிகமான உறுப்பினர்களில் 273 வாக்குகள், அதாவது 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகின. ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை UAW முடக்கிய, மிச்சிகனின் த்ரீ ரிவர்ஸில் உள்ள அமெரிக்கன் ஆக்ஸில் ஆலைக்கான கிளை 2093இல், வெறும் 179 வாக்குகள் மட்டுமே பதிவாகின.
  • வாக்குச்சீட்டுகள் எதையேனும் திருப்பியளித்த 420 உள்ளூர் கிளைகளில், பாதிக் கிளைகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு 63 அல்லது அதற்கும் குறைவான வாக்குகளையும், 190 கிளைகள் 50-க்கும் குறைவான வாக்குகளையும் அளித்தன. பதிவான மொத்த வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை மிகப் பெரிய 50 கிளைகளிலிருந்து வந்தன.
  • கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கல்வித்துறைத் தொழிலாளர்களில், ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் 29 வாக்குகளைப் பதிவு செய்தனர். இது 1 சதவீதத்திற்கும் குறைவானதாகும். போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கையைத் தடுக்க UAW இங்குதான் தலையிட்டது. ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் 4,000க்கும் அதிகமான பட்டதாரித் தொழிலாளர்கள் இந்த வசந்த காலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு நடந்த தொழிற்சங்கத் தேர்தலில், அவர்களின் உள்ளூர் கிளை 53 வாக்குகளைப் பதிவு செய்தது. இது மொத்த உறுப்பினர்களில் சுமார் 1 சதவீதம் ஆகும். இது 2022இல் அளிக்கப்பட்ட 308 வாக்கிலிருந்து குறைவானதாகும்.
  • இந்தப் புள்ளிவிவரங்கள் பங்கேற்பை மிகைப்படுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு உள்ளூர் கிளையின் மொத்த வாக்கு எண்ணிக்கையிலும், தகுதியுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையாக உள்ள ஓய்வுபெற்றவர்களும் அடங்குவர். ஆனால், மேற்கோள் காட்டப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கைகள் பணியில் உள்ள தொழிலாளர்களை மட்டுமே கணக்கிடுகின்றன. தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களிடையே பங்கேற்பு இன்னும் குறைவாக இருந்தது. அதே நேரத்தில், வாக்களிக்கத் தகுதியுள்ள இலட்சக்கணக்கான ஓய்வுபெற்றவர்களிடையே ஆழ்ந்த அதிருப்தி நிலவுகிறது.

இந்த உண்மைகளிலிருந்து பெறப்படும் முடிவு தவிர்க்க முடியாதது. தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் தொழிலாளர்களிடையே எந்தவேரும் இல்லாத ஓர் அதிகாரத்துவத்தின் தனிமைப்படுத்தலை இவை ஆவணப்படுத்துகின்றன. சாமானிய தொழிலாளர்கள் அதை அலட்சியத்துடனும் பகையுடனுமே பார்க்கிறார்கள்.

ஃபேயினின் ஆதரவாளர்கள் இதற்கு தொழிலாளர்களின் ஆர்வம் இன்மையை காரணமாக்குவார்கள். இது ஒரு பொய்யாகும். உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் ஆலைகளில் கோடைகாலத்தில் எழுந்த கிளர்ச்சிக்குப் பிறகே இத்தேர்தல் நடைபெற்றது. மிச்சிகனின் சாகினாவ் நகரிலுள்ள நெக்ஸ்டீர் (Nexteer) ஆலையில், தொழிலாளர்கள் மூன்று தற்காலிக ஒப்பந்தங்களை நிராகரித்து, 86 சதவீத வாக்குகளுடன் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் UAW அமைப்பு அந்த வேலைநிறுத்த வாக்கெடுப்பை முடக்கி, நிறுவனத்தின் சொந்த இடத்திற்குள் அமைந்த ஆலைக்குள் நடத்திய நான்காவது வாக்கெடுப்பின் மூலம் ஓர் ஒப்பந்தத்தைத் திணித்தது. டானா (Dana) மற்றும் பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater) ஆகிய ஆலைகளின் தொழிலாளர்களும் UAW ஆதரவளித்த ஒப்பந்தங்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்தனர்.

ஒப்பந்தங்கள் மீது வாக்களிக்குமாறு தொழிலாளர்கள் கேட்கப்பட்டபோது, அவற்றை நிராகரிக்க அவர்கள் திரண்டு வந்தனர். அந்த ஒப்பந்தங்களைத் திணித்த தொழிற்சங்கத்தின் தலைமைக்கு வாக்களிக்குமாறு கேட்கப்பட்டபோது, அவர்கள் வாக்களிக்க வரவில்லை.

மற்றொரு காரணி என்னவென்றால், பல தொழிலாளர்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது என்பதே தெரியவில்லை அல்லது அவர்களுக்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்கவில்லை. 2022-ல், பெருந்திரளான தொழிலாளர்களுக்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்காமலும், தேர்தல் நடைபெறுகிறது என்பது தெரியாமலும் இருந்ததற்கான ஆதாரங்களை வில் லெஹ்மன் ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்திற்கும், தி மானிட்டர் பத்திரிக்கைக்கும், தொழிலாளர் துறைக்கும் வழங்கினார். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மேலும் இந்த ஆண்டும் தொழிலாளர்கள் வாக்குச்சீட்டுகள் பெறுவதிலான சிக்கல்களைப் புகாரளித்தனர். லெஹ்மனே ஒரு வாக்குச்சீட்டுக்காக மீண்டும் மீண்டும் கோர வேண்டியிருந்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் அதன் உள் பிளவுகளைத் தீர்த்துக்கொள்ளப் பயன்பட்டது. வளர்ந்து வரும் கிளர்ச்சியை எதிர்கொண்ட அது, ஃபேயினைச் சுற்றி அணிவகுத்து நின்றது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பினர்களைக் காட்டிக் கொடுத்ததற்காகவும், உறுப்பினர்களால் நடத்தப்படும் நேரடித் தேர்தல்களை எதிர்த்ததற்காகவும் அவர் கண்டனம் தெரிவித்த அதே அணியான, பழைய நிர்வாகக் குழுவின் முக்கிய நபர்களைத் தனது ஐக்கிய UAW வேட்பாளர் பட்டியலில் அவர் கொண்டு வந்தார். அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) உட்பட, ஜனநாயகக் கட்சியின் போலி இடதுப் பிரிவுகளும் ஃபேயினுக்குப் பின்னால் ஒன்றுபட்டன. இந்த சக்திகள் உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவதை ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றன. ஏனெனில், இவற்றின் அடித்தளம் அதிகாரத்துவமே ஆகும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கே சவால் விடுத்த ஒரே பிரச்சாரம் லெஹ்மனுடையதாகும். அவர் அதிகாரத்துவத்தை ஒழித்துக்கட்டவும், அதிகாரத்தை பணியிடங்களில் உள்ள சாமானிய தொழிலாளர் குழுக்களிடம் ஒப்படைக்கவும் அழைப்பு விடுத்தார்.

தொழிற்சங்கம் முழுவதிலும் லெஹ்மன் 1,936 வாக்குகளைப் பெற்றார். இது தலைவர் பதவிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 2 சதவீதமாகும். இது 2022-ல் அவர் பெற்ற 4,777 வாக்குகளைவிடக் குறைவு. அவர் தொழிற்சங்கத்தின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள 293 உள்ளூர் கிளைகளில் வாக்குகளைப் பெற்றார். ஆனால், அவரது வாக்கு எண்ணிக்கையைப் பற்றிய மிக முக்கியமான உண்மை என்னவென்றால், அவரது மொத்த வாக்குகளுக்கும், தொழிலாளர்களுக்கு அவரையும் அவரது வேலைத்திட்டத்தையும் நன்றாகத் தெரிந்த இடங்களில் அவர் பெற்ற வாக்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளியாகும்.

லெஹ்மன் பென்சில்வேனியாவின் மக்கன்ஜியில் உள்ள மேக் டிரக்ஸ் ஆலையில் பணிபுரிகிறார். அந்த ஆலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் UAW கிளை 677இல், 301 வாக்குகளில் 67 வாக்குகளை, அதாவது 22 சதவீதத்தைப் பெற்று, ஃபேயினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2022இல் 18.6 சதவீதமாக இருந்த அவரது பங்கு உயர்ந்துள்ளது. அதே வேளையில் ஃபேயினின் பங்கு 37 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாகக் குறைந்துள்ளது.

லெஹ்மனின் வாக்குகள் குறைந்திருப்பது, வாக்குப் பதிவு குறைந்ததை எதிரொலிக்கிறது. இது அதிகாரத்துவத்திற்கு சாதகமாக அமைந்ததுடன், அவரது பிரச்சாரம் நடத்தப்பட்ட சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது. 2022 மாநாட்டில் பல விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டு முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஒரு முதலாளியாகக் கருதப்பட வேண்டும் என்ற போலித்தனமான காரணத்தைக் கூறி, லெஹ்மனுக்கு அது அளித்த ஆதரவு ஒரு தடைசெய்யப்பட்ட பங்களிப்பாக அறிவிக்கப்பட்டது. WSWS லெஹ்மனுக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து தடுக்கப்பட்டது. 2022 பிரச்சாரத்தின் போது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பின்தொடர்ந்ததும், அவர்களைச் சென்றடைவதற்கான மிக முக்கியமான சாதனமாக இருந்ததுமான அதன் வாகனத் தொழிலாளர் செய்திமடல், இந்தமுறை பிரச்சாரத்தில் விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்பட முடியாமல் போனது.

அதேவேளையில், அதிகாரத்துவம் தன் வசமிருந்த மிகப்பெரிய வளங்களையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நிலையில், உறுப்பினர்கள் அல்லாதவர்கள் வேட்பாளருக்கு “மதிப்புமிக்க எதையும்” பங்களிப்பாக வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் நேரடியாக லெஹ்மனின் பிரச்சாரத்தை இலக்கு வைத்தே விதிக்கப்பட்டன. கண்காணிப்பாளர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகச் செலவுமிக்க மின்னஞ்சல்களைப் பயன்படுத்துவதையும், தேர்தல் நடைபெறுகிறது என்பதை தொழிலாளர்களுக்குத் தெரிவிப்பதையும்கூட இக்கட்டுப்பாடுகள் கடுமையாக முடக்கின.

இருப்பினும், லெஹ்மனின் பிரச்சாரம் தொழிலாளர்களை நேரடியாகச் சென்றடைந்த இடங்களில் அவருக்குக் கணிசமான ஆதரவு கிடைத்தது. மிச்சிகன், ஓஹியோ, இந்தியானா, கென்டக்கி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள டெட்ராய்ட் த்ரீ (Detroit Three), டீரே (Deere), கேட்டர்பில்லர் (Caterpillar) மற்றும் நெக்ஸ்டீர் (Nexteer) தொழிலாளர்களும் இதில் அடங்குவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வித்துறை தொழிலாளர்களிடையே லெஹ்மன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை தொழிலாளர்களிடமிருந்து 285 வாக்குகளைப் பெற்றார். மேலும் கிளை 1115-ல் கலிபோர்னியா மாநில விஞ்ஞானிகளிடையே இரண்டாவது இடத்தில் அவர் சமநிலை பெற்றார். மிச்சிகன் மாநில ஊழியர்களை உள்ளடக்கிய கிளை 6000-ன் ஒரு பிரிவில், அவர் 7 சதவீத வாக்குகளைப் பெற்றார். மேரிலாந்தின் ஹேகர்ஸ் டவுனில் உள்ள மேக் டிரக்ஸ் இயந்திரங்கள் தயாரிப்பு ஆலையில் அவர் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை வென்றார்.

லெஹ்மனுக்கு வாக்களித்தவர்கள், அவரை அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிசவாதியாகக் கருதி, வர்க்க நனவுடன் வாக்களித்தனர். சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தையும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தையும், சோசலிசத்தையும் மக்களிடையே பரப்புவதற்கு லெஹ்மன் இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தது, ஒரு மாற்றத்துக்கான சாத்தியமான ஆதரவை வெளிப்படுத்தும் மிகத் தெளிவான அறிகுறியாகும். வாக்களிக்காத இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராடுவதற்கான ஒரு வழியை விரும்புகிறார்கள். UAW என்பது பெயரளவில் மட்டுமே ஒரு தொழிற்சங்கம் என்ற முடிவுக்கு அவர்கள் தங்கள் சொந்தப் புரிதலின் அடிப்படையில் வந்துள்ளனர்.

பல தசாப்தங்களாக UAW தொழிற்சங்கமானது, நிர்வாகத்தின் ஒரு கருவியாகவும், அரசின் பெருநிறுவன ஆதரவுக் கரமாகவும் மாற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதும், பெரு நிறுவனங்கள் கோரும் ஒப்பந்தங்களைத் திணிப்பதும், எதிர்ப்புகளை அடக்குவதுமே இதன் செயல்பாடாக உள்ளது.

இந்தத் தேர்தல் லெஹ்மனும் WSWS-ம் முன்வைத்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். தொழிலாளர்களின் எதிர்ப்பு இந்த அதிகாரத்துவத்தைச் சீர்திருத்துவதன் மூலம் வளராது, மாறாக அதை ஒழித்துக்கட்டுவதன் மூலமே வளரும். அதற்கு தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் புதிய அமைப்புகள் தேவை: அனைத்து ஆலைகள் மற்றும் பணிபுரியும் இடங்களிலும் சாமானிய தொழிலாளர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) மூலம் ஆலைகள், தொழில்துறைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

UAW தேர்தல் முடிவிலிருந்து தவிர்க்க முடியாமல் எழும் ஒரு முக்கிய முடிவு என்னவென்றால், அத்தகைய குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியமாகும். அதாவது, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், தொழிற்சங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மற்றும் வகிக்காதவர்கள் என அனைத்துத் துறைகளைச் சேர்ந்த வாகனத் தொழிலாளர்கள், பிற UAW உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகும்.

Loading