முன்னோக்கு

பிரேசிலில் லுலாவின் மறுதேர்வு: பாசிசத்திற்கு எதிரான ஒரு வாக்கு வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கு களத்தை அமைக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரேசிலியாவின் தெருக்களில் வெற்றியைக் கொண்டாடும் லூலாவின் ஆதரவாளர்கள் [Photo: Rafa Neddermeyer/Agência Brasil]

அக்டோபர் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தொழிலாளர் கட்சியைச் (PT) சேர்ந்த லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா பிரேசிலின் ஜனாதிபதியாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நான்காவது முறையாக வெற்றி பெற்றார். லிபரல் கட்சியின் (PL) செனட்டர் பிளாவியோ பொல்சனாரோவின் 48.21 சதவீத வாக்குகளுக்கு எதிராக, 51.79 சதவீத செல்லுபடியாகும் வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் பிளாவியோ 47 சதவீத வாக்குகளையும், போல்சனாரோ 45.2 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில், லூலா அந்த முடிவைத் தலைகீழாக மாற்றினார். முதல் சுற்றில் 1998-க்குப் பிறகு மிக அதிகமாக இருந்த வாக்களிக்காதோர் எண்ணிக்கை, கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. மேலும், செல்லாத மற்றும் மதிப்பிழந்த வாக்குகளின் எண்ணிக்கை வரலாற்றுச் சாதனை அளவுக்குக் குறைந்த அளவை எட்டியது.

லுலாவின் மறுதேர்வுக்கு, போல்சோனாரோ குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பாத பரவலான எதிர்ப்புணர்வே முக்கிய காரணமாக இருந்தது. போல்சோனாரோ குடும்பத்தினரின் பிரச்சாரமானது, பாசிசத்தின் நாற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. தேர்தலின் இரண்டாம் கட்டத்திற்கு முந்தைய வாரங்களில், நாட்டின் முக்கிய நகரங்களில் பிரம்மாண்டமான போராட்டங்கள் வெடித்தன. ஜெய்ர் போல்சோனாரோவின் நேரடிப் பிரதிநிதியான அவரது மகன் தலைமையிலான ஒரு அரசாங்கம் அமைவதை மக்கள் முற்றிலுமாக நிராகரித்தனர். —ஜெய்ர் போல்சோனாரோ, 2022–2023 காலகட்டத்தில் பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டம் தீட்டியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் — மேலும், இத்தகைய அரசாங்கம் வாஷிங்டனின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து செயல்படும் என்ற அச்சமும் இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாக இருந்தது.

தீவிர வலதுசாரிகளுக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவு, லுலாவை ஆதரிக்கும் அரசியல் அமைப்புகளிடமிருந்து, நாடு ஒரு ஆதாள பாதாளத்திலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறும் கருத்துகளுக்கு வழிவகுத்தது. வலதுசாரி பிரேசிலிய சமூக ஜனநாயகக் கட்சியின் (PSDB) சார்பில் சாவோ பாவ்லோ பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தவரான துணை ஜனாதிபதி ஜெரால்டோ ஆல்க்மின், லூலா “இரண்டாவது முறையாகப் பிரேசிலிய ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளார்” என்று அறிவித்து, இதற்கான சூத்திரத்தை வழங்கினார்.

இந்த அரசியல் மனநிறைவை போலி-இடதுகள் ஊட்டி வளர்க்கின்றன. பிரேசிலிலும் உலகிலும் சீர்திருத்தவாதம் மீண்டும் மலர்ந்துவிட்டதன் அறிகுறியாக இந்த வெற்றியை அவை கொண்டாடுகின்றன. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) அதிகாரபூர்வமற்ற இதழான ஜேக்கபின், இதை “இருண்ட உலகில் ஒரு நம்பிக்கைக் கீற்று” என்று வரவேற்றது. மரண வேதனையில் உள்ள உலக முதலாளித்துவ அமைப்புமுறையுடன் நேரடி மோதலில் நிற்கும் பிரேசிலிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் பொறுத்தவரை, இத்தகைய கணிப்புகள் எவ்வளவு யதார்த்தமற்றவையோ அவ்வளவு அரசியல் திசைதவறச் செய்பவையும் ஆகும்.

அதே இரவில், தேர்தல் முடிவை ஏற்கவில்லை என்றும் அதை ரத்து செய்யக் கோரப்போவதாகவும் பிளாவியோ அறிவித்தார். மறுநாள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த தேர்தல் வாக்கெடுப்பு “மற்றொரு மோசடித் தேர்தலைப் போலத் தோன்றியது” என்று கூறினார். மறுபுறம், நிதிச் சந்தைகள், தொழிலாளர் கட்சியையும் (PT) பாரம்பரிய வலதுசாரி கட்சிகளையும் ஒன்றிணைக்கும் கூட்டணியான பரந்த முன்னணியின் (Frente Ampla) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம், அது செயல்படுத்தத் தயாராகிவரும் நிதியியல் தாக்குதலை விரைவாக அறிமுகப்படுத்துமாறு ஏற்கனவே கோரி வருகின்றன. லூலாவின் மறுதேர்தலானது, தீவிரமடைந்துவரும் வர்க்கப் போராட்டக் காலகட்டத்தைத் திறந்து வைக்கிறது. இக்காலத்தில், அவருக்கு வாக்களித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அபிலாஷைகள் அவரது அரசாங்கத்தின் முதலாளித்துவ வேலைத்திட்டத்துடன் நேரடியாக மோதச் செய்யும்.

தொழிலாளர் கட்சியின் (PT) திருப்பமும் அதன் நெருக்கடியும்

சில வாரங்களுக்கு முன்புவரை, இலத்தீன் அமெரிக்காவில் “நீல அலை” எழுச்சி பெறுவதாக முதலாளித்துவப் பகுப்பாய்வாளர்களும் ட்ரம்பின் ஆதரவாளர்களும் கொண்டாடிக் கொண்டிருந்தனர் — அதாவது வாஷிங்டனின் “அமெரிக்காவின் கேடயம்” அமைப்பில் இணைக்கப்பட்ட பாசிச அரசாங்கங்களின் எழுச்சியில் வெளிப்பட்ட மக்கள் தொகையின் வலதுசாரி சார்பான போக்கை அவர்கள் கொண்டாடினர். இந்த மோசடிக் கருத்தோட்டமானது, இந்த அரசாங்கங்களுக்கும் அவற்றின் முதலாளித்துவ சிக்கன வேலைத்திட்டங்களுக்கும் எதிரான சமூக கிளர்ச்சியின் வெடிப்பால் தகர்க்கப்பட்டு வருகிறது. நடைமுறையில் அவையனைத்தும், வாஷிங்டனில் உள்ள அவற்றின் புரவலரான டொனால்ட் ட்ரம்பைப் போலவே தோராயமாக அதே பரிதாபகரமான ஒப்புதல் மதிப்பீடுகளையே கொண்டுள்ளன. பிளாவியோ போல்சனாரோவின் தோல்வியானது, இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நேரடியாக ஊக்குவிக்கப்பட்ட தீவிர வலதுசாரி வலையமைப்பின் வங்குரோத்துத் தன்மையை வெளிப்படுத்தும் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

ஆனால், CNN தொலைக்காட்சி அடையாளப்பூர்வமாகக் குறிப்பிட்டது போல, லூலாவும், அதன் பரந்த முன்னணியும் பெற்ற வெற்றியானது “இப்பிராந்தியத்தின் வலதுசாரி அலையைத் தடுத்து நிறுத்தியது” என்று இது அர்த்தப்படுத்தவில்லை.

தொழிலாளர் கட்சியின் நெருக்கடியும், ஒட்டுமொத்தமாக இலத்தீன் அமெரிக்காவின் இளஞ்சிவப்பு அலையின் முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களின் நெருக்கடியும் ஒரு மீளமுடியாத வரலாற்றுச் செயல்முறையாகும். முதல் சுற்றில் பிளாவியோவின் முன்னிலை, இரண்டாவது சுற்றில் நான்கு புள்ளிகளுக்கும் குறைவான வித்தியாசம், மற்றும் காங்கிரஸில் மிகப்பெரிய அணியாக உருவெடுத்து, ரியோ டி ஜெனிரோ, ரியோ கிராண்டே டோ சுல் மற்றும் சாண்டா கட்டரினா உள்ளிட்ட ஆளுநர் பதவிகளை வென்ற போல்சனாரோவின் PL-இன் முன்னேற்றம் ஆகியவை, PT-யின் எதிர்காலத்திற்கும் அதை ஆதரிக்கும் போலி இடதுகளுக்கும் ஒரு ஈடுசெய்ய முடியாத தோல்வியைக் குறிக்கின்றன.

பிரேசிலின் PT எதிர்கொண்டுள்ள முட்டுக்கட்டை, பாசிச மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள முழு பிரேசிலிய முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியின் வெளிப்பாடாகும். லூலாவின் மூன்று பதவிக் காலங்களிலும் (2003–2010 மற்றும் 2023–2026) மற்றும் தில்மா ரூசெப்பின் ஒன்றரை பதவிக் காலத்திலும் (2011–2016), PT முதலாளித்துவத்தின் நலன்களை உறுதியாக நிர்வகித்தது. ஆதலால், நான்காவது பதவிக்காலம் இந்தச் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தாது, மாறாக அதை ஆழப்படுத்தும். நெருக்கடியில் உள்ள முதலாளித்துவ ஒழுங்கின் காப்பாளராக தனது பங்கைத் தொடர்வதன் மூலம் —மூலதனத்தின் தாக்குதல் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மற்றும் தீவிர வலதுசாரிகளுடன் சமரசத்தைத் தேடுவது— பரந்த கூட்டணி அரசாங்கம் தனது சொந்த நெருக்கடிக்குத் தீனிபோட்டு, பாசிச அச்சுறுத்தலை வளர்க்கும்.

ஆட்சிக் கவிழ்ப்பு அச்சுறுத்தலும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்

போல்சோனாரோ குடும்பத்தினர், வாஷிங்டனுடன் கூட்டு சேர்ந்து, ஆட்சிக்கவிழ்ப்புச் சதித்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு, பிளாவியோ கூறுகையில், “நடந்த நிகழ்வுகளின் சூழலில், தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்ததோடு, தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரப்போவதாகவும் அறிவித்தார்.

பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் (STF) நீதிபதி கிறிஸ்டியானோ சானின் முடிவைக் காரணம் காட்டி அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார். அதாவது, வாக்காளர்கள் வாக்குச் சவடிக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் பல நகரங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற புகார்களைத் தொடர்ந்து, வாக்களிக்கும் நேரம் இரவு 7:00 மணி வரை நீட்டிக்கப்பட்டதை அவர் காரணம் காட்டுகிறார். இந்த வாதம் முற்றிலும் அபத்தமானது. பொல்சனாரோவின் சொந்தக் பிரச்சாரக் குழுவினராலேயே கோரப்பட்ட இந்த நேர நீட்டிப்பு, 4.4 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்திற்கான காரணமாய் இருக்கவே முடியாது. அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டுத் தேர்தல் “திருடப்பட்டது” என்று ட்ரம்ப் கூறும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் போலவே, இந்தக் கூற்றுகளும் எந்த மோசடியையும் நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டவை அல்ல. மாறாக, ஆட்சிக் கவிழ்ப்புக்கான அரசியல் சாக்குப்போக்கை வழங்குவதையே அவை நோக்கமாகக் கொண்டவை.

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ மௌனம் கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் ட்ரம்பால் தகர்க்கப்பட்டது, அவர் போல்சோனார்களின் ஆட்சிக் கவிழ்ப்புக் கோட்பாட்டை வெளிப்படையாக ஆதரித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ‘நான் எந்தப் பக்கமும் சாரவில்லை, ஆனால் இது மற்றொரு முறைகேடான தேர்தல் போல் தோன்றியது. தேர்தல்கள் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமளிக்காததாக இருக்க வேண்டும், இது எனக்கு மிகவும் மோசமானதாகத் தோன்றியது’ என்றார்

பிளாவியோவின் சகோதரரான எட்வார்டோ போல்சனாரோ, ஆங்கிலத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில், தேர்தலை “தெளிவாக மோசடியானது” என்று குறிப்பிட்டதோடு, “இந்தத் தேர்தல்களை அங்கீகரிக்காதீர்கள்” என வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவில் வசித்துவரும் எட்வார்டோ, அங்கிருந்து ட்ரம்ப் நிர்வாகத்துடன் நேரடி ஒத்துழைப்பில் பிரேசிலிய பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறார். தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளே அவர் தேர்தல் மோசடி குறித்த கதையாடலைப் பரப்பத் தொடங்கிவிட்டார். மேலும், ஜனவரி 8, 2023 தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் ஜைர் போல்சோனாரோ நாட்டை விட்டு வெளியேறியது போல, தான் தோற்கடிக்கப்பட்டால் தனது சகோதரரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த தேர்தலுக்கான தீர்வுக்கு, “கடற்படை அதிரடிப்படையினரை அனுப்புவது” - அதாவது, ஒரு அமெரிக்க இராணுவத் தலையீடு - என்று அதே பொட்காஸ்ட் நேர்காணலில் எட்வார்டோ கூறினார். இந்த சூத்திரம், ஜனவரியில் கராகஸில் வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவைக் கடத்திய அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நேரடியாக நினைவூட்டுகிறது.

மூலதனத்தின் தீர்ப்பு

பாசிசத்தை ஒழிப்பதற்காக லூலாவுக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், அவரது நான்காவது பதவிக்காலத்தின் கொள்கைகளைத் தீர்மானிக்கப் போகும் உண்மையான நலன்களுக்கு முற்றிலும் முரணான ஒரு சமூக மற்றும் அரசியல் செயல்திட்டத்தை புதிய அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். திங்கட்கிழமை சந்தைகள் திறந்தவுடன் நிதி மூலதனம் தனது கோரிக்கைகளை முன்வைத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிரதிபலிப்பாக, டாலரின் மதிப்பு 8.65 சதவீதம் உயர்ந்து 5.42 ரியால் ஆனது. மேலும் சாவோ பாலோ பங்குச் சந்தையின் எதிர்காலக் குறியீடு 15 சதவீதம் சரிந்து, தானாகவே வர்த்தகத்தை நிறுத்தும் அவசரகால சர்க்யூட் பிரேக்கரை’த் தூண்டியது. எதிர்கால வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்ந்ததால், இந்த வாரத்திற்காக திட்டமிடப்பட்டிருந்த நிலையான வட்டி விகிதம் மற்றும் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட பத்திரங்களின் ஏலங்களை தேசிய கருவூலம் ரத்து செய்தது.

ஆர்ஜென்டினா ஜனாதிபதி மிலேயின் “செயின்சா” கொள்கையால் உத்வேகம் பெற்ற பிளாவியோ மற்றும் அவரது பரந்த செலவினக் வெட்டுக்கள் (tesouraço) மீது சந்தைகள் வெளிப்படையாகப் பந்தயம் கட்டியிருந்தன. முதல் சுற்றுக்குப் பிறகு, இபோவெஸ்பா (பங்குச் சந்தைக் குறியீடு) ஒரே அமர்வில் 7.7 சதவீதம் உயர்ந்தது. திங்கட்கிழமையின் எதிர்வினை லூலா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு அரசியல் எச்சரிக்கையாகும். அதாவது, பிளாவியோவிடமிருந்து முதலாளி வர்க்கம் எதிர்பார்த்த அதே வெட்டு நடவடிக்கைகளின் திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் மீதும் திணிக்கும் திறன் தங்களுக்கு உண்டு என்பதை லூலா அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.

பிரிட்டிஷ் வங்கியான Barclaysன் ஆய்வாளர்கள், தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமிக்ஞைகளைப் பட்டியலிட்டனர். அவற்றில் நிதி அமைச்சரின் தேர்வு, 2027-ஆம் ஆண்டுக்கான நிதி இலக்கு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளின் செலவு, குறிப்பாக ஏழை குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காகச் செயல்படுத்தப்படும் சமூக நலத் திட்டத்தின் அதிகரிப்பு, குறுந்தொழில் முனைவோருக்கான 5,000 ரியால் பிக்ஸ் கொடுப்பனவு, வார இறுதி நாட்களில் இலவசப் பேருந்துக் கட்டணம் மற்றும் பெட்ரோல் மீதான கூட்டாட்சி வரியிலிருந்து விலக்கு ஆகியவை அடங்கும். எஸ்டாடாவோவின் கூற்றுப்படி, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 2027-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 39.8 பில்லியன் ரியால் அளவுக்கு நிதி வெட்டு தேவைப்படும்.

லூலாவின் பிரச்சாரம், நிதிச் சீரமைப்பைப் புரிந்துகொண்டவராக ஆல்க்மினை முன்னிறுத்தியதன் மூலமும், 2022இல் இல்லாத ஒரு வெளிப்பாடான “நிதிப் பொறுப்புணர்வு” என்பதைத் தனது அரசாங்கத் திட்டத்தில் சேர்த்ததன் மூலமும் தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தது. புதிய அமைச்சரவையை அமைப்பதற்கான முதல் நகர்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. கொர்ரெயோ பிரேசிலியன்ஸின் கூற்றுப்படி, “பிளாவியோ போல்சனாரோவின் பிரச்சாரத்தில் முழுமூச்சாக இறங்கிய” பரியா லிமாவின் (சாவோ போலோவின் வோல் ஸ்ட்ரீட்) அனுதாபத்தை மீண்டும் பெறுவதற்காக”, அல்க்மின் நிதி அமைச்சர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக உள்ளார்.

PT கட்சியின் கடந்தகால சாதனைப் பதிவுகள், அந்தக் கட்சி தயாரிக்கவிருக்கும் பதில் நடவடிக்கை குறித்து எந்தக் சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை. 2014 அக்டோபரில், தில்மா ரூசெப் 51.64 சதவீத வாக்குகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் நிதியமைச்சகத்தை பிராடெஸ்கோ வங்கியின் நிர்வாகியான ஜோவாகிம் லெவியிடம் ஒப்படைத்தார்.

அப்போது உலக சோசலிச வலைத் தளம் எழுதியதைப் போல, “ரூசெப் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சி (PT) ஆகியவை, தங்கள் எதிராளியான ஏசியோ நெவெஸ் (சமூக ஜனநாயகக் கட்சி - PSDB) வெற்றி பெற்றால், நாட்டின் பொருளாதாரம் வங்கியாளர்களின் கைகளுக்குச் சென்றுவிடும் என்றும், தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய கொள்கைகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் எச்சரித்துத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டன. இதில் இருந்த முரண்பாட்டை எவரும் கவனிக்கத் தவறவில்லை.” இந்தச் சிக்கன நடவடிக்கைகள் பொருளாதார மந்தநிலையை ஆழப்படுத்தி, தொழிலாளர் கட்சியின் சமூக அடித்தளத்தைச் சோர்வடையச் செய்தன. மேலும், 2016-ல் ரூசெஃப் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கும், பிற்காலத்தில் போல்சோனாரோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் வழிவகுத்தன. இன்று லூலா எதிர்கொள்ளும் நிலைமையை ஒத்ததாக இருந்தாலும், அது மிகவும் கடுமையானது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றிய தனது வெற்றி உரையில், “மேலும் பழமைவாத” நாடாளுமன்றத்துடன் ஆட்சி செய்வது தனக்குக் கடினமாக இருக்கும் என்ற கருத்தை லூலா நிராகரித்தார். “நான் நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்கவில்லை, மக்களே அதைத் தேர்ந்தெடுத்தனர், அந்த நாடாளுமன்றத்துடன்தான் நான் பணியாற்றி, காரியங்களை நிறைவேற்றுவேன்” என்று அவர் கூறினார். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் முறையான சட்டபூர்வத்தன்மையை அங்கீகரிப்பதற்கும் மேலாக, இந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் பிற்போக்குத் தன்மையை மக்களின் உண்மையான விருப்பங்களின் வெளிப்பாடாகத் தவறாகச் சித்தரிக்கிறது. மேலும், தனது அரசாங்கம் அந்த வலதுசாரி நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து செயல்படும் என்பதையும் இது உணர்த்துகிறது.

அதே உரையில், லூலா, பொதுப் பாதுகாப்புக் விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகத் தலையிடும் என்று அறிவித்தார். இரண்டாம் கட்டத் தேர்தலில் அவர் வலதுபக்கத் திருப்பத்தை நோக்கி நகர்ந்ததைக் குறிக்கும் வகையில், “உழைக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம்; குற்றவாளிகளுக்குச் சிறைத் தண்டனை வழங்குவோம்” என்ற முழக்கத்தை அவர் முன்வைத்தார்.

இந்த நிகழ்ச்சிநிரல், ஒரு ஒடுக்குமுறை இயந்திரம் வலுப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. அது தவிர்க்க முடியாமல் தொழிலாளர் வர்க்கத்திற்கும் மற்றும் அனைத்து சமூக எதிர்ப்புகளுக்கும் எதிராகத் திருப்பப்படும். குற்றத் தடுப்பு முழக்கத்தை தன் சொந்த முழக்கமாக ஏந்தி, அதைத் தீவிர வலதுசாரிகளின் கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முயலும் PT-யின் பாசாங்குத்தனம், அதைச் செவ்வனே நியாயப்படுத்த மட்டுமே உதவுகிறது. இது, இந்த சக்திகளுக்கும் இலத்தீன் அமெரிக்காவில் தனது தலையீட்டை நியாயப்படுத்த “போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்” என்ற மோசடியான கதையாடலைப் பயன்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் வழிவகுக்கிறது.

போலி-இடதும் வரவிருக்கும் வர்க்கப் போராட்டமும்

இந்த சூழ்நிலையில் உள்ள பெரும் ஆபத்து என்னவென்றால், பாசிசம், ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பு, ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கான ஆதரவாகத் திசை திருப்பப்படும் என்பதாகும். இந்த அரசாங்கம், மூலதனத்தின் சிக்கனக் கட்டளைகளையும், இராணுவத்தை ஊக்குவிப்பதையும், ஏகாதிபத்திய ஒழுங்கிற்கு இணங்கிப் போவதையும் நடைமுறைப்படுத்துகிறது, மேலும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும். இதுவே போலி இடதுகளின் பங்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களைப் புரட்சிகரமாகக் காட்டிக்கொள்ளும் அரசியல் சக்திகளான மோரேனோயிட்டுகளின் பங்கும் ஆகும். இவர்கள், இரண்டாம் கட்டத் தேர்தலில் லூலாவின் பரந்த முன்னணிக்கு “விமர்சனபூர்வ ஆதரவை”ய வழங்குமாறு வாதிட்டனர். இதே சக்திகள்தான் இப்போது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் கொள்கையின் மூலம், நிகழ்ச்சி நிரலில் உள்ள வர்க்கப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.

இந்தக் கொள்கையை ஆர்ஜென்டினாவின் சோசலிச தொழிலாளர் கட்சியின் (PTS) முக்கிய தலைவர்கள் வெளிப்படையாக வகுத்தனர். இந்தக் கட்சிதான் நிரந்தரப் புரட்சி கட்சியை (CRP) வழிநடத்துகிறது—இது பிரேசிலில் உள்ள புரட்சிகர தொழிலாளர் இயக்கம் (MRT) சார்ந்திருக்கும் மொரொனிஸ்ட் போக்காகும். பிரதிநிதிகள் சபை உறுப்பினரான நிக்கோலஸ் டெல் கானோ, “பிரேசில் மக்களின் பெரும்பகுதியினரின் மகிழ்ச்சியானது, ஏகாதிபத்தியம், பெரிய வணிகங்கள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் திட்டங்களை பிரேசிலிலிருந்தும் முழுக் கண்டத்திலிருந்தும் துடைத்தெறிவதற்காக ஒரு சுதந்திரமான எழுச்சியாக மாற்றப்பட வேண்டும்” என்று முழங்கினார். “தெமர் மற்றும் மூத்த போல்சொனாரோவின் பிற்போக்குத்தனமான சீர்திருத்தங்களை வீதிகளில் நடக்கும் ஒரு மாபெரும் போராட்டத்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும்” என்று அவரது சக பிரதிநிதியான மிரியம் பிரெக்மேன் இந்த எழுச்சியின் உள்ளடக்கத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மொரேனோவாதிகள் முன்வைப்பது, பரந்த முன்னணி அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் வேலைத்திட்டமாகும். 2016 இல் தொழிலாளர் கட்சி வீழ்ச்சியடைவதற்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பதைத் தாண்டி அவர்களது பார்வை நீளவில்லை - அதாவது, தற்போதைய நெருக்கடியை உருவாக்கிய அதே நிலைமைகளைத்தான் அது குறிக்கிறது. இந்த முன்னோக்கு முழுக் கண்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டால், ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற தீவிர வலதுசாரி அரசாங்களுக்கு எதிரான பதிலடியாக இளஞ்சிவப்பு அலையின் மறுவளர்ச்சியைச் இது சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் மோசடியாக “சுயாதீனமான எழுச்சி” என்று அழைப்பது, இந்த முதலாளித்துவ தேசியவாத அரசாங்களை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரு அணிதிரட்டலாகும். மேலும், அவற்றை “இடது பக்கம்” திருப்புவதற்காக அழுத்தம் கொடுக்கும் முன்னோக்கை கொண்டுள்ளது.

மொரேனோவாதிகள் பிரான்சையும் ஐரோப்பாவையும் உலுக்கிக் கொண்டிருக்கும் கிளர்ச்சியையும் துணைக்கு அழைக்கின்றனர். பிரெக்மனைப் பொறுத்தவரை, பிரேசிலிய இளைஞர்கள் “அனைத்துச் சிக்கனக் கொள்கைகளையும் ஒடுக்குமுறையையும் தோற்கடிப்பதற்கு, ஐரோப்பாவை உலுக்கும் கிளர்ச்சி காட்டிய பாதையைப் பின்பற்ற முடியும்” என்பதாகும். பரந்த முன்னணியின் மீள் தேர்தலை பிரான்சின் அதே பாதையில் ஒரு படியாக நடத்துவதன் மூலம், அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை போலியாகத் திரித்துக் கூறுகிறார்கள்: அது, லூலாவின் வெற்றியின் முக்கியத்துவத்துவமும், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் சர்வதேசக் கிளர்ச்சியின் முன்னோக்கும் ஆகும். பிரான்சிலேயே, இந்தக் கிளர்ச்சியை ஒரு தேசிய மற்றும் சீர்திருத்த இயக்கத்திற்குள், தொழிற்சங்கங்கள் மீதான அழுத்தமாகச் சுருக்க அவர்கள் ஏற்கனவே முயன்று வருகின்றனர்.

இந்த மாயைகளுக்கு எதிராக, வரவிருப்பது என்ன என்பதை தெளிவாகக் கூற வேண்டும்: அது வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பு. பிரேசிலில், தங்கள் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ளும் நம்பிக்கையில் லூலாவிற்கு வாக்களித்த தொழிலாளர்களும் இளைஞர்களும், சந்தைகளால் கோரப்பட்டு, பரந்த முன்னணியால் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுடன் மோதுவார்கள். பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி தொடங்கி சிலி, மெக்சிகோ வரை பரவியுள்ள போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான உலகளாவிய கிளர்ச்சியின் ஒரு பகுதியாக, இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் இந்தப் போராட்டங்கள், ஆர்ஜென்டீனாவின் மிலெய் வகையறாக்களின் பாசிசத்தன்மை கொண்ட தீவிர வலதுசாரி ஆட்சிகளையும், லூலாவின் அரசாங்கம் போன்ற “இளஞ்சிவப்பு” முதலாளித்துவ அரசாங்கங்களையும் ஒருசேர எதிர்கொள்ளும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைக் கட்டியெழுப்பி, அதன் போராட்டங்களைச் சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்தி, சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு அவற்றை ஆயுதபாணியாக்குவது என்பது தீர்மானகரமான பணியாகும். இந்த முன்னோக்கிற்காகவே, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) இணைந்து பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழு போராடி வருகிறது.

Loading