இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
காங்கிரஸின் கட்டுப்பாட்டை யார் கைப்பற்றினாலும், அமெரிக்கக் கொள்கையைத் தீர்மானிக்கப்போகும் புறநிலைக் காரணிகள் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து முற்றாக விலக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் செவ்வாய்க்கிழமை நிறைவடைகின்றன. ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று செயல்முறைகள் வாக்கெடுப்புக்குப் பிறகு நிகழவிருப்பவற்றை வடிவமைக்கும்.
முதலாவது, பொருளாதார நெருக்கடி. அமெரிக்க முதலாளித்துவத்தைத் தாங்கி நிற்கும் ஊகக் குமிழி சரியத் தொடங்கியிருப்பதற்கான இதுவரையிலான மிகத் தீவிரமான அறிகுறிகளை இந்த வாரம் வெளிப்படுத்தியது. AI செலவினங்களால் ஏற்பட்ட சுமார் 9 பில்லியன் டாலர் கட்டற்ற பணப்புழக்கப் பற்றாக்குறையை அறிவித்த பின்னர், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் ஒரே நாளில் வரலாறு காணாத 482 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்தது. வெள்ளிக்கிழமை நாஸ்டாக் 2.86 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இன்டெல் பங்குகள் 28.6 சதவீதம் சரிந்தன; சிப் குறியீடு 7.2 சதவீதம் வீழ்ந்ததால், அக்குறியீட்டின் மாத இழப்பு 15 சதவீதத்தைத் தாண்டியது.
இந்த ஊகக் குமிழி, ஒரு புதிய கட்டத்துக்குள் நுழைந்துவரும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். 10 ஆண்டுக் கருவூலப் பத்திர வருவாய் 4.9 சதவீதத்துக்கு அருகில் உள்ளது; தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது; டாலரின் உலகளாவிய நிலை அதிகரித்துவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது; பெடரல் ரிசர்வ் மேலும் வட்டி விகித உயர்வுகள் குறித்து விவாதித்து வருகிறது.
இந்தச் சீட்டுக்கட்டு மாளிகையின் சரிவு கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தும். தந்திரோபாய வேறுபாடுகள் எவ்வாறிருப்பினும், 2008இல் செய்ததைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் செலவில் நிதியியல் தன்னலக்குழுவுக்கு மிகப்பெரும் பிணையெடுப்பை வழங்குவதன் மூலமே இரு கட்சிகளும் பதிலளிக்கும்.
இரண்டாவது, தீவிரமடைந்துவரும் உலகப் போர். ஈரானுக்கு எதிரான போரை விரிவாக்கும் தனது திட்டங்களை வாக்குகள் எண்ணப்படும் வரை நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது. ஆக்ஸியோஸ் செய்தியின்படி, ஈரானின் தலைமையையும், அணுசக்தி வசதிகளையும், எரிசக்தி நிறுவல்களையும், உள்கட்டமைப்பையும் குறிவைத்து, நவம்பர் 3ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கும் வகையில் ஒரு வார கால குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். ஈரானின் பதிலடிக்குத் தயாராக இருக்குமாறு அப்பிராந்திய அரசாங்கங்களுக்கு வாஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போர் அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான நேரடி மோதலை நோக்கி நகர்ந்து வருகிறது. காலினின்கிராட்டைத் தனிமைப்படுத்த நேட்டோ முற்பட்டால், “அணு ஆயுதங்கள் உள்ளிட்ட தனது முழு ஆயுதக் களஞ்சியத்தையும்” பயன்படுத்தத் தயாராக இருப்பதாகச் செப்டம்பரில் ரஷ்யா எச்சரித்தது. அக்டோபர் 18 அன்று உக்ரேன் 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. ஐரோப்பிய சக்திகள் இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன; ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமைப் பாத்திரம் வகிப்பதை உறுதிசெய்வதே ஜனநாயகக் கட்சியின் பிரதான நோக்கமாகும்.
மூன்றாவது, சமூகக் கோபத்தின் வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும். ஐரோப்பாவில் அது ஏற்கெனவே வெடித்துவிட்டது. பிரான்சில், பள்ளிகள் மீதான வெட்டுகளையும் விண்ணைத் தொடும் வாழ்க்கைச் செலவையும் எதிர்த்து நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களும் மாணவர்களும் ஆறு வாரங்களாக அணிவகுத்து வருகின்றனர்; இந்த இயக்கம் கண்டம் முழுவதும் பரவியுள்ளது.
இதே நிலைமைகள் அமெரிக்காவிலும் நிலவுகின்றன என்பதை அமெரிக்க ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாக உணர்ந்துள்ளது. பிரான்சில் இந்த இயக்கம் வெடித்தபோது, “அமெரிக்க அரசியலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டால், இது அமெரிக்காவில் நடக்க முடியாது என்று நினைக்க வேண்டாம்” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தனது வாசகர்களை எச்சரித்தது. “எகிறிவரும் பணவீக்கம், விண்ணை முட்டும் தேசியக் கடன், சிதிலமடைந்துவரும் பள்ளிகள் ஆகியவற்றை முன்னிட்டுப் பிரான்ஸ் கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா அதன் உறங்கும் இரட்டையர் “ என்ற தலைப்பை ஃபார்ச்சூன் சஞ்சிகை வெளியிட்டது.
அமெரிக்கக் கொள்கையை வடிவமைக்கப்போகும் உண்மையான எதார்த்தம் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுவதுதான் இந்த ஒட்டுமொத்த நாடகத்துக்கும் அதன் சீரழிந்த தன்மையை அளிக்கிறது. அமெரிக்காவை ஆளும் முதலாளித்துவத் தன்னலக்குழுவின் நலன்களையே இரு கட்சிகளும் பாதுகாப்பதால், மக்களிடம் உண்மையைச் சொல்ல அவற்றால் முடியாது.
அந்தத் தன்னலக்குழுவின் மிகவும் இரக்கமற்ற பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரம்ப், தமது இரண்டாவது பதவிக்காலத்தின் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளை ஒரு சர்வாதிகார ஆட்சியின் கட்டமைப்பை எழுப்புவதிலேயே செலவிட்டுள்ளார். அவர் தேசியக் காவல்படையை அமெரிக்க நகரங்களுக்குள் அனுப்பியுள்ளார்; குடியேறிகளுக்கான சிறை முகாம்களின் வலைப்பின்னலை உருவாக்கியுள்ளார்; பெருமளவிலான அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளார்; அரசியல் எதிர்ப்பைக் குற்றமாக்குவதற்குத் திட்டமிட்டுப் பணியாற்றியுள்ளார்.
இடைக்காலத் தேர்தல்களில் பெரும் இழப்புகளை எதிர்நோக்கியுள்ள ட்ரம்ப், தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக்க முயன்று வருகிறார். குடியரசுக் கட்சியின் தற்போதைய செனட்டரான டேன் சலிவன் தோல்வியடைந்தால், அலாஸ்காவில் நடைபெறும் செனட் தேர்தலின் முடிவுகளைச் சான்றளிப்பதைத் தடுக்க நீதித்துறை வழக்குத் தொடுத்துள்ளது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மேரி பெல்டோலாவுடன் சார்புடைய செயல்பாட்டாளர்கள், டேன் சலிவன் என்ற அதே பெயருடைய இரண்டாவது வேட்பாளரைக் களமிறக்கினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், வியாழக்கிழமை நீதித்துறை சுமார் 40 அழைப்பாணைகளுடனும் ஆவணப் பாதுகாப்புக் கோரிக்கைகளுடனும் சேர்த்துத் திருத்தப்பட்ட புகாரைத் தாக்கல் செய்தது.
கலிபோர்னியாவில், 20,000 வாக்குச்சீட்டுகளைச் செல்லாததாக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கையைக் கூட்டாட்சி நீதிமன்றங்கள் நிராகரித்த பின்னர், நீதித்துறை உள்ளூர்த் தேர்தல் அதிகாரிகளுக்குப் பெரு நடுவர் குழு அழைப்பாணைகளைப் பிறப்பித்துள்ளது. வாக்குச்சாவடிகளுக்குத் தேசியக் காவல்படையை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துணைச் செயலர் எல்பிரிட்ஜ் கோல்பி செப்டம்பரில் செனட்டர்களிடம் தெரிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன; கிளர்ச்சிச் சட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.
வாக்குகளைக் கவிழ்க்கும் இந்த முயற்சி, அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத பாசிச மற்றும் இனவெறிப் பிரச்சாரத்துடன் பிணைந்துள்ளது. மிச்சிகனின் ஜனநாயகக் கட்சி செனட் வேட்பாளர் அப்துல் எல்-சையத்தை “ஜிஹாதி முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்” என்று ட்ரம்ப் கண்டித்தார்; மேலும், 9/11 அன்று யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 93இல் இருந்த பயணிகளை நினைவூட்டும் வகையில், “ஒரு ஜிஹாதி கேபிடலுக்குள் நுழைவதைத் தடுக்க டோட் செய்ததைப் போலவே” மிச்சிகன் “எழுந்து நின்று போராட வேண்டும்” என்று ஒரு பேரணியில் கூறினார். ஃபெடரல் முகவர்கள் பிரதிநிதி இல்ஹான் ஓமரின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்; அவரது குடியுரிமையைப் பறித்து அவரை நாடுகடத்த வெள்ளை மாளிகை முயன்று வருகிறது.
ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியினரின் எதிர்ப்பு ரஷ்யாவுக்கு எதிரான போரை மையமாகக் கொண்டுள்ளது. அக்டோபர் 9 அன்று ரஷ்ய டீசல் இறக்குமதிக்கு ட்ரம்ப் அனுமதி வழங்கியபோது, செனட் சிறுபான்மைக் கட்சித் தலைவர் சக் ஷூமரும், செனட்டர்கள் ஜீன் ஷாஹீனும், எலிசபெத் வாரனும் அந்த முடிவை “உக்ரேனுக்குச் செய்யப்பட்ட முழுமையான துரோகம்” என்று கண்டித்து, “புட்டின் பலத்துக்கு மட்டுமே பதிலளிப்பார்” என்று அறிவித்தனர்.
முந்தைய நான்கு தேர்தல்களில் எதிலும் இல்லாத அளவுக்கு, இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளிலிருந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர்களான 67 “CIA ஜனநாயகக் கட்சியினரை” ஜனநாயகக் கட்சி நிறுத்தியுள்ளது. வாக்கெடுப்புக்கு முந்தைய வாரங்களில், அக்கட்சியின் சமூக அடித்தளமாக விளங்கும் வசதி படைத்த மேல்நடுத்தர வர்க்க அடுக்குகளுக்கு, ரஷ்ய “நாசவேலை”, “நிழல் போர்” குறித்த செய்திகளை நியூயோர்க் டைம்ஸ் தொடர்ந்து ஊட்டி வந்துள்ளது.
ஜனநாயகக் கட்சியினர் எதிர்பார்க்கப்படும் தமது தேர்தல் வெற்றிகளைப் போருக்கான ஆணையாக முன்வைப்பதற்காகவே இந்த ரஷ்ய-எதிர்ப்பு வெறி கிளப்பப்படுகிறது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் உட்பட ட்ரம்பின் நிகழ்ச்சிநிரலில் எஞ்சியவை தொடர்பாக, வெள்ளை மாளிகையுடனும் குடியரசுக் கட்சியினருடனும் அவர்கள் இணக்கத்தை நாடுவார்கள்.
புதன்கிழமை வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய விரிவுரையில், உலக சோசலிச வலைத் தளத்தின் (wsws) சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் இரு கட்சிகளின் தன்மையையும் சுருங்கக் கூறினார். ட்ரம்ப் “அமெரிக்க முதலாளித்துவத் தன்னலக்குழுவின் பிரதிநிதி. அதன் இரக்கமின்மை, குண்டர்தனம், முட்டாள்தனம் ஆகியவற்றின் உருவகமாக அவர் விளங்குகிறார்” என்றார். ஜனநாயகக் கட்சி “முதலாளித்துவ இருகட்சி முறையின் இன்றியமையாத இரண்டாம் பாதியாகும். அமெரிக்க அரசியலில் அதற்கெனத் தனித்துவமான பாத்திரம் ஏதேனும் இருக்குமானால், அது வெகுஜனச் சமூக அதிருப்தியைத் திசைதிருப்புவதும் வேறு வழியில் செலுத்துவதுமே” என்றும் அவர் கூறினார்.
இந்தப் பாத்திரத்தை நிறைவேற்றுவதில், இளைஞர்களிடையே வளர்ந்துவரும் முதலாளித்துவ-எதிர்ப்பு உணர்வை மீண்டும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் கட்சிக்குள் திருப்பிவிட, தனது மக்கள் தொடர்புப் பிரிவான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளை (DSA) ஜனநாயகக் கட்சி சார்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை, அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், இராணுவ அதிகாரியாகவும் தேசியப் பாதுகாப்புச் சபை அதிகாரியாகவும் முன்பு பணியாற்றியவரும் ரஷ்ய-எதிர்ப்புப் போர்வெறியருமான பிரதிநிதி யூஜீன் வின்ட்மனுடன் இணைந்து, வர்ஜீனியாவில் உள்ள குவாண்டிகோ மரைன் படைத் தளத்தின் எல்லையை ஒட்டிய பகுதியில் ஒரு பிரச்சாரப் பேரணியை நடத்தினார்.
சர்வாதிகாரத்துக்கும் போருக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் பாசிசத்துக்கும் தீர்வு வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியில் அடங்கியுள்ளது. போரையும் சர்வாதிகாரத்தையும் ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவோ முதலாளித்துவத் தேர்தல்கள் மூலமாகவோ தடுத்து நிறுத்த முடியாது; மாறாக, ஜனநாயகக் கட்சியுடன் முழுமையாக முறித்துக்கொள்வதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, புரட்சிகரமான அணிதிரட்டல் மூலமும் மட்டுமே அவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். ஜனநாயகக் கட்சி, அதன் கரமாகச் செயல்படும் தொழிற்சங்க எந்திரம், போலி-இடது அமைப்புகள் ஆகிய இவை அனைத்துமே சர்வாதிகாரத்தின் ஆபத்தைக் குறைத்துக் காட்டி, அலட்சிய மனப்பான்மையை விதைக்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP) இந்த ஒட்டுமொத்த அழுகிய ஸ்தாபனத்துக்கும் எதிரான அரசியல் மாற்றைக் கட்டியெழுப்பி வருகிறது. தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பணியிடத்திலும் அமைப்பதன் மூலமும், தொழில்துறைகளையும் தேசிய எல்லைகளையும் கடந்து அவற்றைச் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) வாயிலாக இணைப்பதன் மூலமும், போருக்கும் சர்வாதிகாரத்துக்கும் எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் வலிமையை அணிதிரட்ட அது போராடுகிறது.
ஐரோப்பாவின் தெருக்களில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் அதே தாக்குதல்களையே அமெரிக்கத் தொழிலாளர்களும் எதிர்கொள்கின்றனர். அவர்களின் போராட்டங்கள் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும்: தன்னலக்குழுவின் செல்வத்தைப் பறிமுதல் செய்தல், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைத்தல், மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு முடிவுகட்டுதல்.
