ஜே.வி.பி./தே.ம.ச.யின் சிக்கன வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பு! சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நவம்பர் 12 அன்று ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுரகுமார திசாநாயகவால் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் (பாதீடு), உண்மையான ஊதியங்கள் கடுமையாகச் சரிந்துள்ள அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்க மறுக்கிறது.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள அளவுகோல்களுக்குள் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதீடு, பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தி, பெருவணிகம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்கிறது. இது மற்றொரு வர்க்கப் போர் வரவு-செலவுத் திட்டமாகும்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பாதீட்டில் சிக்கன வெட்டுக்களுக்கு எதிராக 18 நவம்பர் 2026 அன்று கொழும்பில் போராட்டம் நடத்திய போது.

இந்த வாரத் தொடக்கத்திலிருந்து, அரசுத் துறை முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்களும் தொழில்துறை போராட்ட நடவடிக்கைகளும் வெடித்துள்ளன. அரச பொறியியலாளர்கள் மற்றும் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள், நீர்ப்பாசனத் தொழில்நுட்ப உதவியாளர்கள், அனர்த்த நிவாரண அதிகாரிகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இதுவரை போராட்டங்களை நடத்தியுள்ளனர். நவம்பர் 23 அன்று, பல்வேறு சேவைத் தரங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உட்பட, மேலும் பல இலட்சம் அரச ஊழியர்கள் போராட்டத்தில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் செய்ததைப் போலவே, மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இணங்குமாறு ஜனாதிபதி திசாநாயகவின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை பரப்புகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்தத் திவாலான வேலைத்திட்டத்தை நிராகரிக்குமாறும், பெருவணிகத்தையும் சர்வதேச நாணய நிதியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திசாநாயக அரசாங்கத்தை வளைத்துவிட முடியும் என நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றும் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டத்துடன் ஒரு சுயாதீன இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சிதறிய, தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, இந்தக் குழுக்கள் அரசாங்க மற்றும் தனியார் துறைத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கும் அதைப் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான பொதுவான அரசியல் போராட்டத்தில் கிராமப்புற மக்களையும் அணிதிரட்டிக்கொள்ள வேண்டும். இந்த முன்முயற்சியைத் தொழிலாளர்கள் எடுப்பது இப்போது அவசரத் தேவையாகும்.

பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராவதற்காகத் தங்கள் நடவடிக்கைக் குழுக்களை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளஉமாறு சோ.ச.க. தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்கிறது.

வாழ்வதற்கேற்ற ஊதியத்திற்கான போராட்டமானது தனியார்மயமாக்கல், தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை, ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள், மின்சார கட்டண உயர்வு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவுகளில் வெட்டுகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் எந்தவொரு பிரிவும் தனியாக வெற்றிபெற முடியாது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலை செய்வோர் உட்பட, சுகாதார ஊழியர்கள், புகையிரத மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கும் அதன் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்துக்கும் எதிராக ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் உண்மையான சுயாதீனமான பொதுப் போராட்டம் வளர்ச்சியடைவதைத் தடுப்பதே தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் திட்டமிட்ட கொள்கையாகும். தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அத்தகைய அணிதிரட்டலுக்கு அவை வெளிப்படையாகவே எதிராக இருப்பதற்கு காரணம், முதலாவதாக, இந்த முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றன. இரண்டாவதாக, எந்தவொரு உண்மையான போராட்டமும் அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தையும் முதலாளித்துவத்தையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அரசியல் போராட்டமாக தவிர்க்க முடியாமல் வளர்ச்சியடையும் என்று அவை பீதிகொண்டுள்ளன.

தற்போதுள்ள வறுமை நிலைமைகளுக்கு மேலதிகமாக, 8 சதவீதத்துக்கு மேல் நீடிக்கும் பணவீக்கத்தையும் தொடர்ச்சியான வருமான வரி சுமையையும் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கி வணிகமயமாக்குவதால், பெருமளவிலான தொழில் இழப்புகள் மற்றும் ஊதிய வெட்டுக்கள் மேற்கொள்ளப்படக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.

2026 அக்டோபர் 30 அன்று கொழும்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டம்

அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்தைத் திணிக்கத் தொடங்கிய 2023 மார்ச் மாதத்திலிருந்து, இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகத் தொழிலாளர்களின் போராட்டங்கள் மீண்டும் மீண்டும் வெடித்துள்ளன. திசாநாயக்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் ஜே.வி.பி./தே.ம.ச. மக்கள் சார்ந்த அரசாங்கம் எனப் பொய்யாகச் சித்தரித்து அது ஆட்சிக்கு வருவதை ஆதரித்தனர்.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்திலும் இப்போது திசாநாயக்க நிர்வாகத்தின் கீழும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பரப்பிய மாயைகள் அவற்றின் முகத்திலேயே வெடித்துள்ளன.

நவம்பர் 7 அன்று கொழும்பில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் தேசிய தொழிற்சங்க மையத்தின் (NTUC) பேராளர் மாநாட்டில், திசாநாயக்கவும் தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் மற்றும் அமைச்சருமான கே.டி. லால் காந்தவும், அரசாங்கக் கொள்கைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துமாறு தங்கள் தொழிற்சங்கங்களைக் கோரினர். ஏனைய தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, தொழிலாளர்களின் கோபத்தைத் தணித்து அவர்களைக் காட்டிக்கொடுப்பதானது, அத்தகைய போராட்டங்கள் நசுக்கப்படும் என்ற சமிக்ஞையுடன் தங்களுக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்த வேண்டாம் என்ற ஜே.வி.பி.யின் வேண்டுகோளுடன் பொருந்துவதாகும்.

முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) குறிப்பாகக் கேடுகெட்ட பாத்திரத்தை வகிக்கிறது. தொழிலாளர்களின் போராட்டத்தைத் தடம் புரளச் செய்வதை நோக்கமாகக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் அது ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்துள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தபோது, முன்னிலை சோசலிசக் கட்சி அதனை “மக்களின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடு” என்று புகழ்ந்தது. இப்போது அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு வளர்ந்து வரும் நிலையில், அதன் சிக்கன நடவடிக்கைகளைப் பற்றி வெறும் சொல்லளவிலான விமர்சனங்களை முன்வைக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி தொழிலாளர்களின் போராட்டங்களைத் தடம் புரளச் செய்ய முயற்சிக்கின்றது.

தனது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கியுள்ளதாகவும், அதன் வரவு-செலவுத் திட்டம் இப்போது “பொருளாதார மாற்றத்தை” நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி திசாநாயக வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றத்துக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இதற்கு மாறாக, வெளிநாட்டுக் கடன்களை அதிக அளவில் திருப்பிச் செலுத்துவதாக சர்வதேசக் கடன் வழங்குநர்களுக்கு உறுதியளிக்கும் அரசாங்கம்; சுற்றுலா மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் 3 மில்லியன் டொலர் (1,000 மில்லியன் ரூபா) முதலீடு செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 200 சதவீதம் பரந்த மூலதன வரிச் சலுகைகளை வழங்குகிறது; தொழிற்பேட்டைகளை ஊக்குவிப்பது மற்றும் அரச-தனியார் கூட்டாண்மைச் சட்ட மூலத்தை கொண்டுவருவதும் ஏனைய நடவடிக்கைகளில் அடங்கும்.

திசாநாயக்க எட்டியதாகக் கூறும் “பொருளாதார ஸ்திரத்தன்மை” என்பது என்ன? உழைக்கும் மக்களின் அற்ப வருமானங்களுக்கு வரி விதித்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை உயர்த்தி, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அத்தியாவசிய அரசுச் செலவுகளைக் கடுமையாகக் குறைத்து, அஸ்வெசும போன்ற ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைப்பதன் மூலம், திறைசேரிக்கு பாரிய வருவாயைத் திரட்டுவதே அதன் பொருளாகும். 2026 ஜூன் மாதத்திற்குப் பின்னர், சுமார் 425,000 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தியது.

இந்தச் சிக்கன நடவடிக்கைகளின் சமூக விளைவுகள், உலக வங்கியின் 2026 அக்டோபர் மதிப்பீட்டில் பிரதிபலிக்கின்றன. 2025இல் இலங்கையர்களில் பத்தில் ஆறு பேர், உயர்-நடுத்தர வருமான நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்ததாக அந்த மதிப்பீடு கணித்தது.

முதலாளித்துவ அமைப்புக்குள் உழைக்கும் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடையாது.

பணக்காரர்களின் இலாபங்களை அன்றி, உழைக்கும் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை சோ.ச.க. முன்வைக்கிறது:

• சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையை நிராகரி! அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்காதே! மறுசீரமைக்காதே! அனைத்து அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் ஏனைய பெருநிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திடு!

• அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுடன் இணைக்கப்பட்ட கணிசமான ஊதிய உயர்வுகளை வழங்கு!

• நிரந்தர தொழிலும் வேலைப் பாதுகாப்பும் வேண்டும்! ஒப்பந்த, தற்காலிக மற்றும் பாதுகாப்பற்ற தொழிலாளர் முறைக்கு முடிவுகட்டு!

• உலகளாவிய கடன் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்து, அதன் மூலம் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடன் சுமைகளை அகற்று!

• பயங்கரவாதத் தடைச் சட்டம், அத்தியாவசியப் பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் அவசரகால விதிமுறைகள் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்திடு! பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலம் போன்ற புதிய அடக்குமுறைச் சட்டங்களும் வேண்டாம்!

• நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு!

தொழிலாளர்களுக்கும் ஏனைய ஏழைகளுக்கும் இன்றியமையாத இந்தக் கோரிக்கைகளை திசாநாயகவிடமோ, பாராளுமன்றத்திடமோ அல்லது சர்வதேச நாணய நிதியத்திடமோ மன்றாடுவதன் மூலம் வென்றெடுக்க முடியாது. அவற்றை அடைவதற்கு, சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்காக, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிரான அரசியல் போராட்டம் அவசியமாகும். அத்தகைய அரசாங்கம் வங்கிகள், பெருந்தோட்டங்கள் மற்றும் நிறுவனங்களைத் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, தனியார் இலாபத்துக்கு அன்றி உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.

கிராமப்புற மக்களுடன் ஒன்றிணைந்து தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகப் போராடுவதற்காக, தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களிலிருந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் பேராளர் மாநாட்டை கட்டியெழுப்புமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கிறது. இந்த மாநாட்டிற்கான அழைப்பு, வெகுஜன எழுச்சியின் போது, 2022 ஜூலையில் சோசலிச சமத்துவக் கட்சி எடுத்த முக்கியமான மூலோபாய முன்முயற்சியாகும்.

இலங்கைத் தொழிலாளர்களுக்கும் ஏனைய ஏழை மக்களுக்கும் தேசிய ரீதியிலான தீர்வு எதுவும் கிடையாது. பூகோள முதலாளித்துவ நெருக்கடியாலும் ஏகாதிபத்தியப் போர்களாலும் உந்தப்படும் அவர்களின் உரிமைகள் மீதான தாக்குதலையே அவர்கள் எதிர்கொள்கின்றனர். உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி மற்றும் போர்ச் செலவுகளின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்த முயலும் ஆளும் வர்க்கங்கள் திணிக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் இணைந்துள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தெற்காசியா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டத்துடனும் இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள், தங்கள் போராட்டங்களை உலகளவில் ஒருங்கிணைப்பதற்காக, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியைக் கட்டியெழுப்புவதில் இணைய வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுடன் இணைந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமது புரட்சிகர வலிமையை வெளிப்படுத்திய 2022 வெகுஜன எழுச்சியின் கசப்பான அனுபவத்திலிருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் படிப்பினைகளைப் பெற வேண்டும். அந்த எழுச்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டைவிட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்தித்ததுடன், அவரது அரசாங்கத்தையும் வீழ்த்தியது.

இன்றைய மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் அதே தொழிற்சங்கங்கள், 2022 எழுச்சியின் போது, முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் ஜே.வி.பி.யுடன் தங்களை அணிசேர்த்துக்கொண்டு, முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கப் பாராளுமன்றக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தைக் கோரியதன் மூலம் மோசடியான பாத்திரத்தை வகித்தன. முன்னிலை சோசலிசக் கட்சி இந்தப் மோசடியில் உத்வேகத்துடன் பங்குபற்றியது. இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பின்னடைவைச் சந்தித்ததுடன் முதலாளித்துவ ஒழுங்கையும் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான வேலைத்திட்டத்தையும் தற்காலிகமாக ஸ்திரப்படுத்தினர்.

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மையப் பிரச்சினை புரட்சிகரத் தலைமைத்துவம் இல்லாமையே ஆகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் தேவையான படிப்பினைகளைப் பெற வேண்டும்: அவர்கள் ட்ரொட்ஸ்கிசத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய மார்க்சிசத்தின் புரட்சிகரக் கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய வேண்டும்.

Loading