மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பும் (AFT) மற்றும் தேசிய கல்வியாளர்கள் சங்கமும் (NEA) அமெரிக்காவில் நேரடி வகுப்புகளுக்காக பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டுமென ஆக்கிரோஷமாக பிரச்சாரம் செய்து வருகின்றன, இது ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களிடையே பாரியளவில் நோய்தொற்றையும், உடல்நல பாதிப்பையும் மற்றும் இறப்பையும் அதிகரிக்க உத்தரவாதம் அளிக்கும் கொள்கையாகும்.
மிகவும் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸின் பரவல் தான் தினசரி இறப்புக்கள் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது, இப்போது இது 1,000 ஆக உள்ளது. கோவிட்-19 ஆல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்க குழந்தை மருத்துவர்களுக்கான அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கூட்டமைப்பின் சமீபத்திய தகவலின்படி, இதே காலகட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24,000 இல் இருந்து 121,000 ஆக அதிகரித்தது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 313 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், கடந்த வாரம் குறைந்தது 24 குழந்தைகள் உயிரிழந்தன.
இந்த நிலைமைகளின் கீழ் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதை குற்றகரமானதாக மட்டுமே விவரிக்க முடியும். 5 முதல் 11 வயதிற்குட்பட்ட சுமார் 28 மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி இல்லை, 12 முதல் 15 வயதுடையவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
குழந்தை மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகின்றனர். 'டெல்டா வகை வைரஸுடன் குழந்தைகளிடையே கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்து வருவதைப் பார்ப்பது பயமாக இருக்கிறது, மேலும் பல குழந்தைகள் இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்,' என்று Mayo Clinic இன் சமூக குழந்தை மருத்துவரான டாக்டர் நுஷீன் அமீனுதீன் CNBC இக்கு தெரிவித்தார். 'இந்த பெருந்தொற்று முடிந்துவிடவில்லை, துரதிருஷ்டவசமாக, அது நரகத்துக்கு மீண்டும் புதுப்பொலிவூட்டும் தீபமேற்ற ஒரேயொரு தீக்குச்சி போதும்,' என்றார்.
புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள வொல்ஃப்சன் குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் மொபீன் ரத்தோர் CNN இக்கு கூறுகையில், “பள்ளிகள் திறந்து முதல் ஒன்பது நாட்களில், துவால் கவுண்டி அரசுப் பள்ளியில் 503 கொரோனா வைரஸ் நோயாளிகள் உருவாகி இருந்தனர்,” என்றார். கோவிட்-19 ஆல் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் விதமாக, 'நாம் கடுமையாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் விஷயத்தில் மட்டுமல்ல, MIS-C இக்கும் தயாரிப்பின்றி உள்ளோம்,' என்றார், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தகவல்படி, MIS-C ஆல் 4,404 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர், குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
பைத்தியக்காரத்தனமான இந்த மரணக் கொள்கையை எதிர்ப்பதற்கு பதிலாக, கிட்டத்தட்ட 5 மில்லியன் கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக பொய்யாக கூறிக் கொள்ளும் AFT மற்றும் NEA, அதே கொள்கைக்காக ஆக்கிரோஷமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.
AFT தலைவர் ராண்டி வெய்ன்கார்டன் (Randi Weingarten) முழுமையாக நேரடி வகுப்புகளைத் திறக்க செய்வதற்காக 'அனைவருக்கும் மீண்டும் பள்ளியைத் திறக்க' தற்போது பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாணவர்களை வகுப்பறைக்குத் திரும்பச் செய்யும் பிரச்சாரத்திற்காக AFT அதன் உள்ளுர் தொழிற்சங்கங்களுக்கு 5 மில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளது. நியூ யோர்க் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள அதன் உள்ளூர் சங்கங்கள், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானது என்று பீதியுற்றுள்ள மற்றும் கவலையில் உள்ள பெற்றோரை நம்ப வைக்க விளம்பர காணொளிகளைத் தயாரித்து வருகின்றன.
“எங்கள் உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பெற்றோரைச் சந்தித்து, குழந்தைகளைப் பள்ளிக்குத் திரும்ப கொண்டு வருகின்றனர்,” என்று வெய்ன்கார்டன் நியூயோர்க் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.
நாட்டின் மிகப் பெரிய பள்ளி மாவட்டமான நியூ யோர்க்கின் 1.1 மில்லியன் மாணவர்களுக்குத் தொலைதூரக் கல்வி வாய்ப்பின்றி செப்டம்பர் 13 இல் இருந்த அதன் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அந்நகர மேயர் Bill de Blasio இன் திட்டத்தை ஆதரிக்க, கடந்த வாரம், வெய்ன்கார்டன் ஜனாதிபதி பைடெனின் கல்வித்துறை செயலர் மிகுல் கார்டோனாவுடன் பிரொன்க்ஸ் தொடக்கப் பள்ளியில் இருந்தார்.
இந்தாண்டு எந்தவிதமான 'சீர்குலைக்கும்' பள்ளி மூடல்களையும் அனுமதிக்க போவதில்லை என்று அந்த ஜனநாயகக் கட்சி மேயர் உறுதியளித்தார். பரிசோதனையில் யாருக்காவது நோய்தொற்று இருப்பது தெரிய வந்தால், தடுப்பூசி போடப்படாத நெருக்கமான தொடர்புகள் மட்டுமே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் படுவார்கள். தடுப்பூசி போடப்படாதவர்களைப் போலவே தடுப்பூசி போட்ட பருவ வயதுடையவர்கள் மூலமாகவும் டெல்டா மாறுபாடு திறம்பட பரவும் என்கின்ற நிலைமைகளின் கீழ் இதெல்லாம் செய்யப்படுகிறது.
வெய்ன்கார்டன் இந்த குற்றகரமான கொள்கையை நியாயப்படுத்த, குறைந்த வருமான குடும்பத்தின் மாணவர்கள் மீது தொலைதூர கற்றலின் உணர்வுரீதியான மற்றும் கல்வி ரீதியான தாக்கத்தைக் குறித்து கவலை வெளியிட்டு பாசாங்கு செய்கிறார். ஓஹியோவின் சின்சினாட்டியில் அப்பெண்மணி கூறுகையில், 'குழந்தைகளுக்கு நேரடி வகுப்புகள் தரும் சமூக சூழல்களும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழல்களும் தேவைப்படுகின்றன,” என்றார்.
மில்லியனர் வெய்ன்கார்டனின் உதட்டிலிருந்து வரும் இத்தகைய கவலைகள், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன ஊடகத்திடமிருந்து வருவதை விட பாசாங்குத்தனத்தில் குறைந்தவை அல்ல.
AFT மற்றும் NEA உம் வரவு-செலவுத் திட்டக் கணக்கு குறைப்பு, பள்ளி மூடல்கள் மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்க மாணவர்களின் பொதுக் கல்வியை அழித்துள்ள சார்ட்டர் பள்ளிகளின் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரேயொரு பிரச்சாரத்தை கூட நடத்தியதில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் அவை நீண்டகாலமாக ஆதரித்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஆரம்ப கிளர்ச்சிகளாக இருந்த 2018-19 ஆசிரியர் வேலைநிறுத்த அலையின் போது, வெய்ன்கார்டனும் அவரது NEA சமபலங்களும் இந்த வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி நசுக்க வேலை செய்தனர்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் உயிர்களைப் பற்றி என்ன கவலை? கோவிட்-19 ஆல் தங்கள் வகுப்புத் தோழர்களும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளும் இறந்ததைப் பார்த்த குழந்தைகள் மீது உணர்வுபூர்வமான பாதிப்பு என்னவாக இருக்கும்? உலகெங்கிலும் 1.5 மில்லியன் குழந்தைகள் இந்த வைரஸுக்குப் பெற்றோர்கள், தாத்தா பாட்டி அல்லது மற்ற பராமரிப்பாளர்களை இழந்துள்ளதாக தி லான்செட் பத்திரிகை செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இதில் கிட்டத்தட்ட 114,000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
ஒரு நாளைக்கு ஒரு கல்வியாளர் மற்றும் வாரத்திற்கு ஒரு குழந்தை என புளோரிடாவில் மட்டும் ஆகஸ்டில் 26 கல்வியாளர்களும் ஐந்து குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இதில் 41 வயதான புளோரிடா ஆசிரியர் கெல்லி பீட்டர்சன் கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார். அவர் லுகேமியாவுக்கு சிகிச்சை பெற்று வந்ததால், அந்த அன்புக்குரிய ஆசிரியர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
உண்மையில், AFT இன் பிரச்சாரம், பெருநிறுவன உயரடுக்குக்கு இலாபங்களை வழங்க பெற்றோர்களை வேலைக்கு அனுப்புவதற்காக பள்ளிகளை மீண்டும் திறக்க செய்வதற்கான ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த மே மாதம் ஒரு பொது உரையில், வெய்ன்கார்டன் அப்பட்டமாக கூறினார், 'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியூட்டுவதற்காக மட்டுமல்லாமல், அவர்கள் வேலை செய்வதற்காகவும் பள்ளிகளைச் சார்ந்துள்ளனர், இந்த பெருந்தொற்றின் போது மூன்று மில்லியன் தாய்மார்கள் உழைப்பு சக்தியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள்.”
முகக்கவசங்கள் கட்டாயம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் பிற 'தணிப்பு' நடைமுறைகள் சரியாக இருந்தால் பள்ளிகளை மீண்டும் திறந்து விடலாம் என்று வெய்ன்கார்டனும் NEA சங்கத் தலைவர் பெக்கி பிரிங்கிளும் மோசடியாக கூறி உள்ளனர்.
பெரும்பாலான பொதுப் பள்ளிகளில் நீண்ட கூட்ட நெரிசல், குறைவான நிதி ஒதுக்கீடு மற்றும் மோசமான காற்றோட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இத்தகைய நடவடிக்கைகள் சந்தேகமே என்கின்ற நிலையில்—இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட, அவை நோய்தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள் மீது சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும். ஒருங்கிணைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளி மாவட்டம், கட்டாய முகக்கவச நடைமுறையுடன், ஆகஸ்ட் 16 இல் அரை மில்லியன் மாணவர்களுக்குத் திறக்கப்பட்டு ஒரு வாரத்தில், 6,500 மாணவர்களுக்கும் 1,000 பணியாளர்களுக்கும் பரிசோதனையில் நோய்தொற்று இருப்பது தெரிய வந்து, தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
பைடென் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களால் ஊக்குவிக்கப்பட்ட 'தணிப்பு மூலோபாயம்', ட்ரம்ப், புளோரிடா ஆளுநர் ரான் டெசாண்டிஸ் மற்றும் மற்ற பாசிச குடியரசுக் கட்சியினரின் கொலைபாதக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையில் சேர்க்கப்பட்ட ஒரு சில நோய்த்தணிப்புகளை விட சற்று அதிகமாகும்.
தொழிலாள வர்க்கம் இந்த வைரஸை அகற்றி முழுமையாக ஒழிக்கும் கொள்கைக்காக போராட வேண்டும். இதற்கு அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்த வேண்டும் மற்றும் பள்ளிகளை மூட வேண்டும், அத்துடன் அனைவருக்கும் பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. சமூக அடைப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு முழு வருமானம் வழங்குவதும் இத்துடன் இருக்க வேண்டும், எல்லா குழந்தைகளுக்கும் உயர்தரமான தொலைதூரக் கல்வியை வழங்க பாரியளவில் ஆதார வளங்கள் பாய்ச்சப்பட வேண்டும்.
சக்தி வாய்ந்த தடுப்பூசிகளுடன் சேர்ந்து, இந்தக் கொள்கை சாத்தியமானதே, இந்த பெருந்தொற்றை ஒரு சில மாதங்களில் தடுத்து விட முடியும் என்பதை முன்னணி விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
'இந்த பெருந்தொற்றை நிறுத்த உயிர்களைக் காப்பாற்ற ஓர் உலகளாவிய மூலோபாயத்திற்காக!” என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் கடந்த வார இணையவழி நிகழ்வில் கால்கரி பல்கலைக்கழகத்தின் டாக்டர் Malgorzata Gasperowicz தெரிவிக்கையில், 'சமூகத்தில் பரவல் இருந்தால், பள்ளிகளை மீண்டும் திறப்பது பாதுகாப்பானது அல்ல, அவ்வளவு தான்,' என்றார். “தடுப்பூசிகள் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் இரண்டையும் சேர்த்து … நம்மால் அதை அழித்து விட முடியும்,” என்றார்.
இந்த பெருந்தொற்றின் தொடக்கத்தில் அத்தகைய கொள்கை செயல்படுத்தப்பட்டிருந்தால், மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இந்த வைரஸ் மீண்டும் கட்டுப்பாட்டை மீறிச் சென்று வரும் நிலையில், இது இப்போதும் எல்லாவற்றையும் மிகவும் அவசியமாக உள்ளது.
இந்தக் கொள்கைக்காக போராட, தொழிலாள வர்க்கம், முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் அவற்றை ஆதரிக்கும் AFT மற்றும் NEA போன்ற தொழிற்சங்கங்களில் இருந்தும் சுயாதீனமாக, ஏனைய தொழில்துறைகளில் உள்ள அவர்களின் சமபலங்களுடன் சேர்ந்து தலையீடு செய்ய வேண்டும். வெய்ன்கார்டன் போன்ற உயர்-நடுத்தர வர்க்க அதிகாரத்துவவாதிகள் கல்வியாளர்கள் மற்றும் மற்ற தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானவர்கள்.
நேரடி வகுப்புகளை உடனடியாக நிறுத்தக் கோர ஒவ்வொரு வேலையிடத்திலும் அண்டைப் பகுதியிலும் சாமானிய பாதுகாப்புக் குழுக்களைக் கட்டமைக்குமாறு உலக சோசலிச வலைத்தளம் கல்வியாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது. இது சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியைக் கட்டியெழுப்புவதன் மூலமாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த இயக்கத்தின் பாகமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.