மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த சனிக்கிழமை காலை, ஜனாதிபதியின் மருத்துவரான டாக்டர். கெவின் சி. ஓ’கோனோர், ஜனாதிபதி ஜோ பைடெனுக்கு ஃபைசர் வைரஸ்-எதிர்ப்பு மருந்தான பாக்ஸ்லோவிட் (Paxlovid) சிகிச்சையை முடித்ததன் பின்னர், செவ்வாய்க்கிழமை மாலை அவருக்கு எதிர்மறை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு மீண்டும் கோவிட் நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன்-பியருக்கு ஒரு குறிப்பாணை அனுப்பினார்.
அவர், “செவ்வாய் மாலை, புதன் காலை, வியாழன் காலை, மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை ஜனாதிபதிக்கு நோய்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் சனிக்கிழமை காலை அவருக்கு ஆன்டிஜென் பரிசோதனை மூலம் நோய்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது, உண்மையில், ‘மறுதொற்று’ ஏற்பட்டிருப்பதைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “ஜனாதிபதிக்கு எந்த நோயறிகுறிகளும் மீண்டும் தோன்றவில்லை என்பதுடன், அவர் தொடர்ந்து நன்றாக இருப்பதாக உணர்கிறார். இந்த நிலையில், இந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சையை மீண்டும் தொடங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை, ஆனால் நாம் அவரை தொடர்ந்து வெளிப்படையாக நெருக்கமாக அவதானிப்போம். இருப்பினும், ஆன்டிஜென் பரிசோதனை நேர்மறையாக இருப்பதால், அவர் மீண்டும் தன்னை கடுமையாக தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறைகளை தொடங்குவார்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பைடெனுக்கு கோவிட் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, மிச்சிகன் மற்றும் டெலாவேருக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்த பயணம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பைடென் இவ்வாறு ட்வீட் செய்து தனது பணி முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தை குறைத்தார், “மக்களே, இன்று எனக்கு மீண்டும் கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகக் குறைந்த எண்ணிக்கை மக்களுக்குத்தான் நடக்கிறது. எனக்கு நோயறிகுறிகள் எதுவும் இல்லை, இருந்தாலும் என்னைச் சுற்றியுள்ள அனைவரின் பாதுகாப்பிற்காக நான் என்னை தனிமைப்படுத்தப் போகிறேன். நான் இன்னும் வேலையில் ஈடுபடுகிறேன், விரைவில் பயணங்களை மேற்கொள்வேன்.”
வாஷிங்டனில் உள்ள உயர்மட்ட பிரமுகர்களில் பைடென் மட்டும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படவில்லை. பைடெனின் சமீபத்திய சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி சட்டம் உட்பட பெரும்பாலான பிரச்சினைகள் குறித்து செனட்டில் தீர்க்கமான 50 வது வாக்கை அளித்த மேற்கு வேர்ஜீனியா செனட்டர் ஜோ மன்சின், மற்றும் செனட் பெரும்பான்மை விப் ரிச்சார்ட் டர்பின் ஆகியோரும் தொற்றுநோயின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் ஜூலை மாதம் பாதிக்கப்பட்ட மற்றவர்களில், ஜனநாயகக் கட்சியின் செனட்டர்கள் டினா ஸ்மித், ரிச்சார்ட் புளூமென்தால் மற்றும் டாம் கார்பர், குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் லிசா முர்கோவ்ஸ்கி மற்றும் பென் சாஸ்ஸே மற்றும் எட்டு பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் உட்பட, செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷூமர் ஆகியோர் அடங்குவார்கள்.

தற்போதைய தடுப்பூசிகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகளைப் பயன்படுத்தி, கொரோனா வைரஸ் ஒரு சாதாரண நோய் என்பதாக அமெரிக்கர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் ஜனாதிபதியின் நோய்தொற்று விரைவில் குணமடையும் என நம்பிய வெள்ளை மாளிகைக்கு நிகழ்வுகளின் திருப்பம் ஒரு பின்னடைவாகும். பைடெனுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது, ஜூன் மாத இறுதியில் டாக்டர் அந்தோனி ஃபவுசிக்கு இதேபோல் ஏற்பட்ட மறுதொற்றுடன் ஒத்துப்போகிறது, இது சிக்கலின் அரிதான தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
‘மறுதொற்றின்’ பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிர்வாகத்தின் சுகாதார ஆலோசகர்களின் தரப்பு குறைத்து மதிப்பிடுவது தெளிவாக உள்ளது. பெருநிறுவன ஊடகங்களும் இதற்கு ஒத்துழைத்தன, ஜனாதிபதி வயதினருக்கு மிகவும் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் நிலையிலும், ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் நிகழ்ச்சிகளில் 79 வயது ஜனாதிபதிக்கு இரண்டாவது நோய்தொற்று ஏற்பட்டுள்ளது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி பதவிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் 81 வயது நான்சி பெலோசி, இந்த நேரத்தில் தைவானைச் சுற்றியுள்ள போருக்கு சாத்தியமுள்ள பகுதிக்குச் செல்வது ஒரு பொறுப்பற்ற முயற்சி என்று உறுதிபட கூற எவரும் முன்வரவில்லை.
பைடென் தனக்கு தொற்று இல்லை என்பதை கொண்டாட புதன்கிழமை தனிமைப்படுத்தலை கைவிட்டு, ரோஸ் கார்டன் பேரணியில் ஒரு மேடையில் ஊடகங்கள் மற்றும் கேமராக்களுக்கு முன்பாக வெற்றிகரமாக தனது முகக்கவசத்தையும் அகற்றினார். அவர் தனக்கு எப்போதும் இலேசான நோயறிகுறிகள் தான் இருந்ததாக பெருமையுடன் அறிவித்ததுடன், தான் விரைவாக குணமடைந்தது அவரது நிர்வாகம் தொற்றுநோயை முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ள முன்னேற்றத்திற்கு சான்றாகும் என்றார். அவர் விரைவாக குணமடைந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்ததன் பின்னர், “நான் தனிமையில் இருந்த நேரம் முழுவதும், இடையூறு இல்லாமல் என்னால் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள முடிந்தது. இது, கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பது பற்றிய உண்மையான அறிக்கையாகும்” என்று கூறினார்.
கொரோனா வைரஸூக்கு எதிரான தனது தனிப்பட்ட வெற்றியை அறிவித்ததிலிருந்து, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) சந்தேகத்திற்குரிய மற்றும் பொறுப்பற்ற வழிகாட்டுதலுக்கு மாறாக, பைடென் பொறுப்பற்ற முறையில் பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொள்கிறார், இது நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு ஐந்து முழு நாட்களுக்குப் பின்னர் குறைந்தது 24 மணிநேரத்திற்கு எந்த காய்ச்சலும் இல்லாமல் இருந்தால், தனிமைப்படுத்தப்படுவதை நிறுத்தலாம், ஆனால், ‘உங்கள் வீட்டிற்குள் அல்லது பொது இடங்களில் உங்களைச் சுற்றி மற்றவர்கள் இருக்கும் எந்த நேரத்திலும் பத்து முழு நாட்களுக்கு நன்கு பொருந்தும் முகக்கவசத்தை அணிய வேண்டும். உங்களால் முகக்கவசம் அணிய முடியாத இடங்களுக்குச் செல்ல வேண்டாம்’ என்று கூறுகிறது. CDC குறிப்பாக இவ்வாறு குறிப்பிட்டது, ‘பரிசோதனை முடிவில் உங்களுக்கு நோய்தொற்று இல்லை எனத் தெரிந்தால், நீங்கள் தனிமைப்படுத்தப்படுவதை நிறுத்தலாம், ஆனால் பத்து நாட்கள் வரை வீட்டிலும் பொது இடங்களிலும் மற்றவர்கள் மத்தியில் நீங்கள் நன்கு பொருந்தக்கூடிய முகக்கவசத்தைத் தொடர்ந்து அணியுங்கள்.’
குறிப்பாக வெள்ளை மாளிகை வளாகத்தில் வியாழன் கூட்டத்தில் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் பைடென் பேசுகையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) வழிகாட்டுதல்களை அவர் ஏன் மீறினார் என்று கேட்டபோது, ஜீன்-பியரே, “அவர்கள் சமூக இடைவெளியுடன் இருந்தனர். அவர்கள் போதுமான அளவு மிகுந்த இடைவெளியுடன் இருந்தனர். எனவே, அவர்கள் ஒன்றாக இருப்பதையும், அந்த மேடையில் இருப்பதையும் நாங்கள் பாதுகாப்பாகச் செய்தோம்” என்று கூறி இந்த விவகாரத்திற்கு பிடி கொடுக்காமல் பேசினார். இதிலிருந்து கோவிட் என்பது காற்றில் பரவும் நோய்க்கிருமி என்ற குறிப்பை அவர் பெறவில்லை என்பது தெளிவாகிறது.
இருப்பினும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் விரிவான தொடர்புத் தடமறிதல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர், இது முக்கியமாக அனைத்து பொது சுகாதார அதிகாரிகளாலும் கைவிடப்பட்டுவிட்டது, மேலும் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் கோவிட் நோய்தொற்று ஏற்படும் மற்றும் தொற்றுநோய் மனிதகுலத்துடன் எப்போதும் இருக்கும் என்று வெள்ளை மாளிகை முன்வைக்கும் கற்பனைக்கு இது நேரடியாக முரண்படுகிறது. வெளிப்படையாகக் கூறினால், கோவிட்டை வகுப்பறைக்குள் கொண்டு வரும் குழந்தைகளிடமிருந்து பள்ளி ஆசிரியர்கள் விலகி இருப்பதை விட, அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அதிக பாதுகாப்புக்கு நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட ஜனாதிபதியிடமிருந்து விலகியிருக்க தகுதியுள்ளவர்களாவர்.
தொற்றுநோய் காலம் முழுவதும் தன்னால் வேலை செய்ய முடிந்தது என்பதான பைடெனின் அற்பத்தனமான அறிவிப்பு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் மற்றும் பிற பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு உதாரணத்தை அமைப்பதை தெளிவாக நோக்கம் கொண்டது. அதாவது, நீங்கள் எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அல்லது எத்தனை பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டிருந்தாலும் நீங்கள் தொடர்ந்து பணி செய்யுங்கள்! என்பதாகும்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அதன் தனிமைப்படுத்தல் வழிகாட்டுதலை எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லாமல் டிசம்பர் 2021 இல் பாதியாக குறைத்தது, ஆனால் டெல்டா ஏர்லைன்ஸ் தலைமை நிறைவேற்று அதிகாரி எட் பாஸ்டியன், அவர்களின் கீழ்நிலை டாலரை கருத்தில் வைத்து விடுத்த உத்தரவின் பேரில் ‘தற்போதைய தனிமைப்படுத்தல் கொள்கையின் சாத்தியமான தாக்கத்தை நிவர்த்தி செய்ய’ தனிமைப்படுத்தல் காலம் ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. அப்போது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் ரோசெல் வாலென்ஸ்கி, ‘சமூகத்தின் முக்கியமான செயல்பாடுகளைத் திறந்து செயல்படுத்துவதற்கு’ வழிகாட்டுதல்களை மாற்றுவதற்கான தனது முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவர் மேலும், ‘நாம் வெறுமனே விஞ்ஞானத்தை அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு செயல்பாட்டு சமூகத்தில் அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற சூழலில் விஞ்ஞானத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார்.
மார்ச் 2022 இல் பிரசுரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஹார்வர்ட் மற்றும் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை, தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல், கடுமையான நோயறிகுறிகள் எதுவுமின்றி டெல்டா அல்லது ஓமிக்ரோன் மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையே வைரஸ் இயக்கவியலில் [ஒரு நபர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் காலத்தில்] எந்த வித்தியாசத்தையும் கண்டறியவில்லை. ‘ஐந்தாவது நாளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான தனி நபர்கள் பிரதி-திறமையான, வளரக்கூடிய வைரஸைக் கொண்டிருந்தனர், மேலும் 25 சதவிகிதத்தினர் எட்டாவது நாளில் வளரக்கூடிய வைரஸைக் கொண்டிருந்தனர்’ என்று ஆசிரியர்கள் எழுதினர்.
பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான டாக்டர். ஏமி பார்சாக், ‘மக்கள் எவ்வளவு காலம் தொற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மைகள் உண்மையில் மாறவில்லை. ஐந்து நாட்கள் அல்லது பத்து நாட்களுக்கு குறைவான தனிமைப்படுத்தலை ஆதரிக்க தரவு எதுவுமில்லை’ என்று மே மாதம் Nature விஞ்ஞான இதழுக்கு தெரிவித்தார். இங்கிலாந்தின் சமீபத்திய ஆய்வு, ஹார்வர்ட் ஆய்வின் குறைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நேரங்கள் குறித்த கவலைகளை உறுதிப்படுத்துவதாகத் தோன்றுகிறது, அதாவது தற்போதைய பொது சுகாதார வழிகாட்டுதல் கொரோனா வைரஸை என்றென்றும் வைத்திருக்க உதவுகிறது.
மற்றவர்கள், அதாவது பொது சுகாதாரத்திற்கான ஹார்வர்டின் டி.எச். சான் பள்ளியின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர். யோனாடன் கிராட் போன்றவர்கள், பத்து நாள் சாளரத்திற்கு அப்பால் சிலர் தொடர்ந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எச்சரித்தார். பாக்ஸ்லோவிட் என்ற வியாபாரக் குறியீட்டின் கீழ் அறியப்படும், நிர்மத்ரெல்விர் மற்றும் ரிடோனாவிர் ஆகிய இரண்டு மருந்து கலவையை உட்கொள்பவர்களுடன் இந்த நிகழ்வு இணைக்கப்படலாம் என்று அவர் Nature இதழிடம் கூறினார்.
மேலும் அவர், ‘மறுதொற்று நிகழ்வு உள்ளது, அப்போது மக்கள் தங்கள் நோயறிகுறிகள் தீர்க்கப்படுவதைக் காண்பார்கள், மேலும் விரைவு பரிசோதனையில் அவர்களுக்கு நோய்தொற்று இல்லை என்ற முடிவு கூட வரும், ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் நோயறிகுறிகளும் வைரஸும் மீண்டும் வரும்’ என்றும் கூறினார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அத்தகைய நபர்களுக்கு தொடர்ந்து நோய்தொற்று ஏற்படலாம் மற்றும் அதைப் பற்றி அவர்கள் அறியாமல் இருக்கலாம்.
மே 24, 2022 அன்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வெளியிட்ட ஒரு சுகாதார ஆலோசனை, ‘கோவிட்-19 இன் மீளுருவாக்கம் ஆரம்ப மீட்புக்குப் பின்னர் இரண்டு முதல் எட்டு நாட்களுக்குள் நிகழும் எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் கோவிட்-19 நோயறிகுறிகள் மீண்டும் நிகழும் அல்லது நோய்தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு புதிய நேர்மறை வைரஸ் பரிசோதனை மூலம் நோய்தொற்று இருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது’ என்று கூறுகிறது. அவர்களுக்கு கூடுதல் பாக்ஸ்லோவிட் சிகிச்சை தேவையில்லை, ஆனால் அத்தகைய நபர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை, நியூ யோர்க் டைம்ஸ், ஜனாதிபதிக்கு ஏற்பட்ட மறுதொற்று பற்றி எழுதுகையில், ஜூன் மாதம் பிரசுரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, 13,644 பேரின் மின்னணு சுகாதார பதிவுகளை மதிப்பாய்வு செய்து, 30 நாட்களுக்குள் மறுதொற்றால் ஐந்து முதல் ஆறு சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்ததை குறிப்பிட்டது. இருப்பினும், இந்த தரவுத் தொகுப்பு மிகுந்த தொற்றும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு தவிர்க்கும் திறன் கொண்ட BA.5 துணைமாறுபாட்டிற்கு முன்பு தயாரிக்கப்பட்டது, இது சமீபத்தில் ஆதிக்க வகையாக மாறியிருப்பதுடன், 90 நாட்களுக்குள் அதன் மறுதொற்று விகிதம் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. டாக்டர். எரிக் டோபோல் இந்த ஆய்வை ‘குறியீட்டிற்கு அப்பாற்பட்டது’ என்று விமர்சித்ததுடன், பங்கேற்பாளர்கள் அடிக்கடி பரிசோதிக்கப்படும் இடங்களில் ஒரு சரியான ஆய்வு பரிசோதனைக்கு வருங்கால அணுகுமுறை தேவை என வாதிட்டார்.
மருத்துவம் மற்றும் சுகாதார விஞ்ஞானங்களுக்கான ஜியோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகப் பள்ளியின் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பேராசிரியரான டாக்டர். ஜொனாதன் ரெய்னர், வெள்ளை மாளிகையின் வெளிப்பாடு குறித்து சனிக்கிழமை இவ்வாறு ட்வீட் செய்தார், “இது முன்கணிக்கக்கூடியது என்று நான் நினைக்கிறேன். குறைந்த ஒற்றை இலக்கங்களில் உள்ள ‘மறுதொற்று’ பாக்ஸ்லோவிட் நேர்மறையை பரிந்துரைக்கும் முந்தைய தரவு காலாவதியானது மற்றும் BA.5 துணைமாறுபாட்டால் ஏற்படும் மறுதொற்று 20 முதல் 40 சதவிகிதம் வரை அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.”

அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் (HHS) தரவு, அமெரிக்கா முழுவதும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பாக்ஸ்லோவிட் சிகிச்சைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு நாளைக்கு 40,000 மருந்துச்சீட்டுக்கள் என்ற விகிதத்தில் அண்ணளவாக 5.7 மில்லியன் மக்களுக்கு அச்சிகிச்சை வழங்கப்படவுள்ளது. இந்த எண்ணிக்கையை அளவுகோலாக வைத்து, அடிலாண்டிக் சமீபத்தில் இதை தினசரி ஆக்ஸிகோடோன் பயன்பாட்டு விகிதத்துடன் ஒப்பீடு செய்தது.
ஊடகங்களில் குறிப்பிடப்படாதது, வளர்ந்து வரும் தடுப்பூசி வளர்ச்சித் துறையில் தங்கள் போட்டியாளர்களை முன்னிலைப்படுத்த முடிந்த மருந்து நிறுவனங்களுக்கு தொற்றுநோய் நிதிச் செல்வமாக உள்ளது என்பதாகும். ஃபைசர் நிறுவனம் சமீபத்தில் அதன் வரலாற்றில் அதன் ஒரே மிகப்பெரிய அளவிலான காலாண்டு விற்பனையை அறிவித்தது, அதாவது 27.7 பில்லியன் டாலர் வருவாயை அது ஈட்டியுள்ளது, இதில் 8.8 பில்லியன் டாலர் அவர்களின் கோவிட் தடுப்பூசி விற்பனையில் இருந்தும், 8.1 பில்லியன் டாலர் பாக்ஸ்லோவிட் சிகிச்சை மூலமாகவும் அதற்கு கிடைத்துள்ளது, இது வோல் ஸ்ட்ரீட்டின் மதிப்பீடுகளை முறியடித்தது. இதற்கிடையில், இந்த ஆண்டு இலையுதிர் காலத்திற்குள் அமெரிக்க சந்தைகளில் அதன் BA.4/BA.5 க்கான குறிப்பிட்ட தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதிசெய்ய மொடேர்னாவுடன் போட்டியிடுகிறது.
புதிய தலைமுறை தடுப்பூசிகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் என்பது, மக்களை தடையின்றி அணுகவிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பிறழ்வடைய ஏராளமான வாய்ப்புகளை அனுமதித்த கொள்கைகளின் நேரடி விளைவாகும். தடுப்பூசி உற்பத்தியாளர்களால் இதுவரை சாதிக்க முடியாமல் போனது வைரஸ் குறிப்பிடத்தக்க பிறழ்வுகளை உருவாக்குவதை விட வேகமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதுதான். வறிய நாடுகளில் உள்ள பாதிக்கப்படக்கூடிய தடுப்பூசி போடப்படாத மக்களை வைரஸ் விகாரங்கள் சென்றடைவதற்கு முன்பு உலக மக்களுக்கு மிக விரைவாக எந்தவித தடுப்பூசியையும் விநியோகிப்பதற்கான உலக முதலாளித்துவத்தின் திறனின்மையைப் பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை.
‘நித்திய கோவிட்’ கொள்கையால் அனுமதிக்கப்பட்ட ஏராளமான பிறழ்வுகளின் காரணமாக, இயற்கை தேர்வானது கொரோனா வைரஸின் தடுப்பூசி-தவிர்க்கும் வகைகளை மட்டுமல்லாது, பாக்ஸ்லோவிட் போன்ற வைரஸ் எதிர்ப்புகளை எதிர்க்கும் வகைகளையும் உருவாக்கும். Duke பல்கலைக்கழகத்தின் கரிம வேதியியல் மருந்து கண்டுபிடிப்புத் திட்டங்களில் மருந்து உற்பத்தி துறையில் அனுபவமுள்ள முனைவர் பட்டம் பெற்ற டாக்டர். டெரெக் லோவ், Science இதழில், “ஃபைசரின் கொரோனா வைரஸ் புரதச்சத்து தடுப்பானாக பாக்ஸ்லோவிட் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வைரஸின் எதிர்ப்பு விகாரங்கள் அதற்கு எதிராக தோன்றக்கூடும் என்பது ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக உள்ளது. மொத்தத்தில் எப்படியானாலும், வைரஸ்களும் அதைத்தான் செய்கின்றன. அவற்றின் மிகப்பரந்த எண்ணிக்கை, வேகமான தலைமுறை நேரம், மற்றும் பிறழ்வுகளின் எண்ணிக்கை ஆகியவற்றுடன், குறிப்பிடப்பட்ட சிறிய மூலக்கூறுக்கான எதிர்ப்பு பொதுவாக ‘எப்போது’ என்பதுதான், ‘இருந்தால்’ என்பதல்ல” என்று குறிப்பிட்டார்.
உலகெங்கிலும் தினமும் மில்லியன் கணக்கான மக்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதால், வைரஸ் வெடித்துப் பரவுவதற்கு சாதகமான சூழல் உருவாக்கப்படுகிறது. ஜூன் 29, 2022 அன்று, Science இதழில் வெளியான ஒரு அறிக்கை, மரபணு வரிசைமுறையை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், பாதிக்கப்பட்ட மக்களில் பரவும் மாறுபாடுகளில் பாக்ஸ்லோவிட்டை எதிர்க்கக்கூடிய பிறழ்வுகளைக் கண்டறிந்துள்ளதைச் சுட்டிக்காட்டியது.
கோவிட் உடன் என்றென்றும் வாழ வேண்டும் என்ற யோசனை, வைரஸைத் தடுக்கும் தடுப்பூசிகளும் சிகிச்சை முறைகளும் விரைவில் அவற்றின் போக்கில் இயங்கி, தமக்குத் தாமே இல்லாமல் போய்விடும் என்பதும் கற்பனைக்குரியது. ஆல்ஃபா, பீட்டா மற்றும் காமா மாறுபாடுகளினால் ஏற்பட்ட தொற்றுநோய்களின் தொடக்கத்தில் காணப்பட்டதைப் போல, ஒன்றுக்கொன்று போட்டியின்றி ஒரே நேரத்தில் இணைந்து வாழவும் பரவவும் முடியக்கூடிய ஓமிக்ரோன் துணைமாறுபாடுகளின் பல வீரியம் மிக்க வடிவங்களின் வளர்ச்சியால் இத்தகைய சூழ்நிலை கூட்டாக உருவாகலாம். இதன் பொருள் மக்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைமாறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
‘நித்திய கோவிட்’ மற்றும் வெள்ளை மாளிகையில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் முகப்பின் இன்றியமையாத பாடம், தொற்றுநோயால் ஏற்படும் பெரும் ஆபத்துக்கள் குறித்தும், வேலைக்குத் திரும்புவதும் நோய்க்கு ஆளாவதும் பாதுகாப்பானது என்று வோல் ஸ்ட்ரீட் தொழிலாள வர்க்கத்தின் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்தும் அவர்களை எச்சரிக்க வேண்டும். இன்னும் எதிர்பாராத வழிகளில், என்றென்றும் கோவிட் கொள்கை என்பது, கடந்த இரண்டு வருடங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் குழந்தைகளின் விளையாட்டாகத் தோன்றும்.