முன்னோக்கு

இரண்டாம் எலிசபெத்திற்கான புகழாரம்: முதலாளித்துவ வர்க்கம் முடியாட்சிக் கோட்பாடுகளை கொண்டாடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மகாராணி இரண்டாம் எலிசபெத் அவரின் 96 ஆம் வயதில் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகின்ற போதிலும், அவரது மரணச் சடங்குகள் ஏதோ ஓர் உலக நிகழ்வாக இன்னமும் ஊடகங்களில் மேலோங்கி உள்ளன.

மாலைச் செய்தி நிகழ்ச்சிகள், அரச மரியாதையோடு வைக்கப்பட்டுள்ள அவர் உடலைக் காட்டுவதிலும், நாடக பாணியில் அரச மரணத்தின் அவசியமற்ற சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டுவதிலும் அவற்றின் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகின்றன. காலை உரையாடல் நிகழ்ச்சிகளோ, அவரைப் பிரிட்டிஷ் அரசின் துடுப்பு மீதிருந்த உறுதியான கரமாகவும், ஓர் இதயமில்லா உலகில் கண்ணியம் மற்றும் நாகரீகத்தின் அடையாளமாகவும், இரண்டாம் எலிசபெத் பெண்களின் இலக்கணம் என்பதைப் போலவும் சித்தரித்து, புகழாரம் பேசுவதற்கும் மற்றும் அவர் வாழ்க்கைச் சரித்திரப் பேச்சுக்களாலும் நிரம்பி உள்ளன.

People watch as the cortege with the hearse carrying Queen Elizabeth's coffin departs from St Giles Cathedral in Edinburgh en route to Edinburgh Airport. September 13, 2022 [AP Photo/Petr Josek]

எதற்காக இந்த புகழ்ச்சி? எலிசபெத்தின் தனித்துவமான பங்களிப்பு இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டிருந்ததற்காகத் தான். அவர் ஓர் உலக வரலாற்றுப் பிரபல்யமானவரல்ல; அவரைப்போல் குறைந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒருவராகக் கற்பனை செய்வது கடினம். பிறப்பு என்ற விபத்தால் கணக்கிட முடியாத செல்வத்தைப் பெற்ற அவர், ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு வாழ்ந்தார். ஆனால் உண்மையில் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த அனைத்திலுமிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தார்.

மகாராணியின் உடலைக் காண தேம்ஸ் நதியின் தென்கரையில் இருந்து ஐந்து மைல் தூரத்திற்கு நீண்டிருந்த வரிசை ஏதோவிதத்தில் சிந்திக்கவேண்டிய ஒன்றாக உள்ளது. ஒரு மில்லியனில் முக்கால்வாசி பேர் அவரின் எஞ்சிய காலத்துடன் நடக்க 22 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. எந்த ஒருவரின் வாழ்விலும் ஒருபோதும் எந்தவொரு பங்களிப்பு செய்திராத இந்தப் பெண்மணியின் மரணம் ஓர் அர்த்தமுள்ள பிரமுகரின் மரணமாகப் பார்க்கப்படுவது, பல தசாப்த காலமாக பொது வாழ்வில் நிலவும் பொதுவான வெறுமை மற்றும் மேம்போக்கான தன்மையைக் காட்டுகிறது. அவரின் சடலத்தைப் பார்க்கக் காத்திருப்பவர்கள், அந்த வரிசை அவர்களை தற்கால வரலாற்றில் பங்குபெறச் செய்யும் என நம்பலாம், ஆனால் இறுதியில் அவர்கள் காண்பது கடந்த காலத்தையே.

பால்மோரலில் இருந்து மெதுவாக ஆரவாரத்துடன் புறப்பட்டதில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டரில் சிறுவர்களின் கூட்டுப்பாடலுடன் ஆசி வழங்கியது வரையிலானவை அவரது வாழ்க்கையைப் போலவே, அவர் மரணத்தைச் சுற்றியுள்ள ஒட்டுமொத்தக் காட்சியும் உண்மையற்றது. யதார்த்தமோ கடினமாக பிரசவ வேதனை நெருக்கடியில் உள்ளது. பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கம் அதிர்ச்சிகரமான விலைவாசி உயர்வை எதிர்கொண்டுள்ளது; எரிபொருள் செலவுகள் ஏறக்குறைய பத்து மடங்கு அதிகரித்துள்ளன. இந்தக் குளிர்காலத்தில் மக்களில் பாதி பேருக்கு மேல் அவர்களின் வீடுகளைப் போதுமானளவுக்கு வெப்பமூட்ட முடியாமல் போகலாம்.

இந்த உண்மைக்கு மாறான காட்சிக்கும், நாடி தளர்ந்த கூன் விழுந்த வயதான பெண்மணி ஒருவரின் மரணத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதெல்லாம் அவர் உருவடிவமாக இருந்த முடியாட்சி கொள்கையுடனும் அவரைச் சூழ்ந்திருந்த அரச அமைப்புடனும் சம்பந்தப்பட்டவை.

முதலாளித்துவ வர்க்கம் வெகு காலத்திற்கு முன்னரே குடியரசுக்காக இருந்த அதன் முன்னோர்களின் ஆவிகளைப் புதைத்து விட்டது. முன்னோடியில்லாத சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ள அவர்கள், அவர்களின் தனிச்சலுகைகளைப் பாதுகாப்பதற்கான அரண்களாக எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்பி, அவர்களின் வர்க்க அபிலாஷைகளின் அமைப்புரீதியான வடிவமாக முடியாட்சியை அங்கீகரிக்கிறார்கள்.

முடியாட்சியானது, மாபெரும் முட்டாள்தனத்தின், கடந்த கால நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனத்தின் எச்சசொச்ச அமைப்பாகும்; அது நிலைத்திருப்பதே மனிதகுலத்திற்கு ஓர் அவமானம். பரம்பரை வாரிசுரிமையில் நிறுவப்பட்டு, இனவிருத்தி, கலப்புத் திருமணம் மற்றும் தெய்வீக உரிமைக்கான உரிமைகோரல்களைத் தவிர்த்து விட்டு, முடியாட்சிக் கோட்பாடு சமத்துவமின்மையை மனிதகுலத்தின் அடிப்படையானதும் மற்றும் மாற்ற முடியாத நற்பேறாக பொதிந்து வைத்துள்ளது. அது எதேச்சதிகார அதிகார பலத்தைக் கொண்டு இந்த நற்பேறைப் பேணிக் காக்கிறது.

இந்தக் கொள்கையால் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்ட அரசர்களும் மகாராணிகளும் வெறும் இரத்தச்சோகையும் மற்றும் ஹப்ஸ்பேர்கினரின் தாடை கொண்டவர்கள் என்பதை விட வளர்ச்சி குன்றி இருக்கவில்லை. அவர்களின் சமூக செயல்பாடு, அவர்களின் பரம்பரையில் மிகவும் செறிவூட்டப்பட்ட வடிகட்டிய பிற்போக்குத்தனமானவை. இரண்டாம் எலிசபெத் ஜாரிச ரோமானோவ்ஸின் உறவினர்; நாஜி மீது அனுதாபம் கொண்ட அவரது சிறிய தகப்பனான அரசர் எட்வார்ட் VIII, 1936 இல் பதவி துறந்து, அடால்ஃப் ஹிட்லருக்கு வீரவணக்கம் செலுத்த நாஜி அனுதாபியான அவர் மனைவியுடன் ஜேர்மனிக்குச் சென்றார்.

உழைத்து சம்பாதிக்காத பெரும் பணம் மற்றும் பிரயோசனமற்று நேரத்தை செலவிடுபவர்களிடையே உருவாகும் ஊழல் வகைகளால் அந்த அரச குடும்பம் குறிக்கப்படுகிறது. அவரது மகன், இளவரசர் ஆண்ட்ரூ, எதேச்சதிகார ஆட்சிகளுக்கு ஆயுதங்களை விற்று, ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் சிறு பெண் குழந்தைகளைப் பாலியலுக்காக கடத்துவதில் அவர் வகித்த பாத்திரத்தை மூடிமறைக்க 12 மில்லியன் பவுண்டு செலுத்தினார். அவரின் பேரன், இளவரசர் ஹாரி, முழு நாஜி அலங்காரத்தில் உடை அணிவதைப் பழக்கமாக கொண்டிருந்தார்.

மன்னராட்சிக் கொள்கையை எதிர்த்து அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் பின்வருமாறு குறிப்பிட்டது, “இந்த உண்மைகளை நாங்கள் சுயமாக வெளிப்படுத்துகிறோம், எல்லா மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் படைக்கப்பட்டவர்களால் சில மறுக்க முடியாத உரிமைகளைப் பெறுகிறார்கள். வாழ்க்கை, விடுதலை மற்றும் மகிழ்ச்சிக்கான நாட்டம் அவற்றில் உள்ளடங்கும் என்ற உண்மைகளை நாங்கள் இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறோம்.'

இந்த கருத்தாக்கம் தான் அமெரிக்க புரட்சியைத் தூண்டியது. 'இந்த ஒட்டுமொத்த புரட்சிகர சகாப்தத்தின் மிகவும் சுவாலையான மற்றும் பிரபலமான துண்டுப்பிரசுரம்' என்று வரலாற்றாசிரியர் கோர்டன் வூட் குறிப்பிட்ட தோமஸ் பெயினின் பொது அறிவு (Common Sense) என்ற துண்டுப்பிரசுரம், வெறுமனே இரண்டாம் ஜோர்ஜை நோக்கி மட்டுமல்ல, முடியாட்சி இருப்பதையே நேரடியாக தாக்கி, பின்வருமாறு குறிப்பிட்டது:

இங்கிலாந்தில் ஓர் அரசர் போர் செய்து பதவிகளைக் கொடுப்பதை விட பெரிதாக வேறெதையும் செய்ய மாட்டார்; வெளிப்படையான அர்த்தத்தில், இது தேசத்தை ஏழ்மைப்படுத்துவது மற்றும் அவற்றை மோதலுக்குட்படுத்துவதுமாகும். ஒரு மனிதனுக்கு உண்மையில் ஆண்டுக்கு எட்டு இலட்சம் ஸ்டேர்லிங் வழங்கப்பட்டு! இதுவரை வாழ்ந்த எல்லா முடிசூடா கொள்ளைக்காரன்களை விட, சமூகத்திற்கும் மற்றும் கடவுளின் பார்வைக்கும் நேர்மையாக இருக்கும் ஒருவராக அவருக்கு துதிபாடப்படுவது நல்லவொரு வியாபாரம்தான்.

அமெரிக்க அரசியலமைப்பின் சாசனம் I, பிரிவு 9, ஷரத்து 8 புதிய தேசத்திற்கான இந்தக் கொள்கையை சட்ட அமைப்பில் இணைத்துக்கொண்டது: 'பிரபுத்துவ பட்டம் எதுவும் அமெரிக்கா வழங்காது.'

சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையின் மீது நிறுவப்பட்ட அபரிமிதமான திரண்ட தனியார் செல்வ வளமும், மற்றும் பேரரசின் முடிவில்லாத விரிவாக்கமும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் இத்தகைய ஜனநாயக உணர்வுகளின் எந்தத் தடயத்தையும் தூக்கி எறிந்தது. மில்டனின் வார்த்தைகளில் கூறினால், அவர்கள் இனி, மில்டனின் சொற்றொடரில், 'அடிப்படை ஆடம்பரத்தின் எளிதான நுகத்திற்கு முன் கடினமான சுதந்திரத்தை' விரும்புவதில்லை.' அவர்கள் எதேச்சதிகார ஆட்சியின் மூலம் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க முயல்கிறார்கள் மற்றும் முடியாட்சிக் கொள்கையை வரவேற்கிறார்கள்.

ஜனாதிபதி பைடெனின் உத்தரவின் பேரில், இறந்த மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க கொடிகள் 12 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. இரண்டாம் எலிசபெத் மூன்றாம் ஜோர்ஜிடம் இருந்து பல தலைமுறைகள் பிரிந்து நிற்கிறார்; ஜெபர்சனிடம் இருந்து பைடென் இணைக்கவியலா வரலாற்று பிளவால் பிரிக்கப்பட்டுள்ளார்.

பேரரசின் சாராம்சம் எதேச்சதிகாரம் ஆகும்; அது ஜனநாயக ஆட்சிக்கு உட்பட்டது அல்ல. வாஷிங்டன் போர்களை நடத்துகிறது, ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்துகிறது, மனித உயிர்களையோ அல்லது அமெரிக்க மக்களின் கருத்தையோ பொருட்படுத்தாமல் கற்காலத்தில் கொண்டு செல்லும் அளவுக்குச் சிறிய நாடுகள் மீது குண்டு வீசுகிறது. முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவில் சமத்துவமின்மை மற்றும் சமூக அவலத்தை உலகம் முழுவதும் உருவாக்கியுள்ளது, அமெரிக்காவிலும் அதன் மையப்பகுதி உள்ளடங்கும். ஏகாதிபத்தியம் என்பது, லெனினின் வார்த்தைகளில், 'எந்த நிலைப்பாட்டில் இருந்தும் பிற்போக்குத்தனமாகும்.' ஜனநாயகத்தின் பாசாங்குகளைக் கூட இனி தக்க வைத்திருக்க முடியாது.

கடந்த ஆறு ஆண்டுகளில், சமூக மற்றும் அரசியல் நெருக்கடி கூர்மையாகி, உயிராபத்தானதாக திரும்பி உள்ள நிலையில், உலகெங்கிலும் ஆளும் உயரடுக்கினர் பகிரங்கமாக எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதை நாம் பார்க்கிறோம். இறந்த மகாராணியும் அவர் அணிந்திருந்த கிரீடமும் அமெரிக்க ஊடகங்களில் கட்டுப்பாடின்றி புகழாரங்களைக் கொண்டு வந்திருப்பதற்கு இது தான் காரணம். முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கடி அமெரிக்காவை வாட்டி வதைக்கிறது. மோதலுக்கு மேலாக நிற்கும் ஓர் எதேச்சதிகார அரச தலைவரின் முடியாட்சி அமைப்பு முறை பற்றிய கருத்துரு சிக்கலில் சிக்கி உள்ள இந்த முதலாளித்துவ வர்க்கத்தினை பலமான ஈர்ப்பதாக இருக்கின்றது.

ஊடகங்கள் இந்த ஏக்கங்களுக்கு குரல் கொடுக்கின்றன மற்றும் மக்கள் நுகர்வுக்கு அவற்றைத் தொகுத்தளிக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏகாதிபத்தியத்தை பற்றி ஜே.ஏ. ஹாப்சன் எழுதியது பொருத்தமாக உள்ளது: 'இழிவான கீழ்ப்படிதல், செல்வம் மற்றும் பதவியை போற்றுதல், நிலப்பிரபுத்துவத்தின் சமத்துவமின்மையில் ஊழல் நிறைந்த பிழைப்பு.' தொலைக்காட்சி செய்திகளின் பணிவோடு கீழ்படிந்து பேசும் தலைவர்கள் இந்த பண்புகளையே வளர்க்கிறார்கள். அடையாள அரசியலால் பெரும்பாலும் முற்போக்காக பூசிமெழுகப்படும், முடியாட்சிக் கொள்கை வகாண்டாவில் இருந்து பியோன்ஸ் வரை டவுன்டன் அபே வரை எல்லா இடங்களிலும் மகிமைப்படுத்தப்படுகிறது.

இறந்த மகாராணிக்கான ஓயாத புகழ்ச்சி தாங்கமுடியாததாக இருக்கின்றது. முட்டாள்தனப் புயலை பதுங்கியிருந்து தணிக்க முயல்வது இலகுவானதாக இருக்கின்றது. ஆனால் இது ஓர் எச்சரிக்கையாக இருப்பதால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனிதகுல வளர்ச்சியில் முதலாளித்துவம் எந்த முற்போக்கான பாத்திரமும் வகிக்க முடியாது, மாறாக எச்சசொச்ச அசிங்கங்கள் எல்லா விதமான பிற்போக்குத்தனத்தை மட்டுமே இனவிருத்தி செய்ய தகுதி உடையது. அவர்களின் சமூக நிலைமையைப் பாதுகாப்பதற்காக, முதலாளித்துவ வர்க்கம் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, அவர்கள் வரலாற்றில் மிகவும் பிற்போக்குத்தனமான கருத்தாக்கங்களில் ஒன்றான முடியாட்சிக் கொள்கைக்குப் புத்துயிரூட்டுகிறார்கள்.