மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு மிகவும் உன்னிப்பாக கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. வேறு எதற்கும் அங்கே வாய்ப்பு இல்லாத விதத்தில், உலகில் இது போன்று நடந்திராத அளவுக்கு ஆடம்பரம் மற்றும் பகட்டாரவாரக் காட்சிகளுடன், பிரிட்டன் அதன் எஞ்சிய தனிச்சிறப்பைச் காட்டியது.
வெஸ்ட்மின்ஸ்டர் கட்டிடத்தின் நடுங்க வைக்கும் பிரமாண்டத்திற்கு மத்தியில், அரச தரத்திலான அலங்காரத் துணி போர்த்தப்பட்டு, ஏகாதிபத்திய கிரீடமும் சிலுவையுடன் கூடிய இறையாண்மையின் செங்கோலும் வைக்கப்பட்டிருந்த இராணியின் சவப்பெட்டிக்கு முன், காலை 11.00 மணியளவில், உலகெங்கிலுமான அரசு தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தனர், 142 கப்பற்படை அதிகாரிகளால் கப்பற்படையின் அரசு வண்டியில் அது கொண்டு வரப்பட்டிருந்தது. மகாராணியின் அந்தரங்க பாதுகாவலர் படையின் அதிகாரிகள், முதல் பட்டாலியன் கையெறிகுண்டு வீசும் காவலர்களுடன், இறுதிச்சடங்குக்கு உரிய மரியாதையோடு அணிவகுத்து அவரது உடலை உள்ளே கொண்டு வந்தார்கள். ஒரு மணி நேர வாசிப்புகள், பிரார்த்தனைகள், கீர்த்தனைகள், புகழாஞ்சலிகள் தொடர்ந்தன.
பின்னர் இராணியின் சவப்பெட்டி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இருந்து இலண்டனின் ஹைட் பார்க் திருப்பத்தில் உள்ள வெலிங்டன் வளைவு வரை, கடற்படை, கடல் ரோந்துப்படை மற்றும் பொலிஸ் வரிசையாக அமைத்திருந்த ஒரு பாதையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. கடல் ரோந்துப்படையின் இசை வாத்தியக் குழுவுடன் சேர்ந்து, முப்படைகளின் சார்பில் உயர் மரியாதை வழங்கக் காவலர் ஒருவர் நாடாளுமன்றச் சதுக்கத்தில் நின்றிருந்தார். பின்னர் சவப்பெட்டி வின்ட்சர் கோட்டைக்குச் செல்லும் அதன் இறுதிப் பயணத்திற்காக அரசு இறுதி ஊர்வல வண்டிக்கு மாற்றப்பட்டது.
மொத்தம், அந்த இறுதிச் சடங்கு மற்றும் அணிவகுப்பில் 4,000 இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
முக்கியஸ்தர்களின் கூட்டம் ஓர் ஓரத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், மன்னர் ஆறாம் ஜோர்ஜ் நினைவு மண்டபத்தில், மகாராணியின் மறைந்த கணவர் எடின்பர்க் பிரபு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே எலிசபெத் வின்ட்சர் அடக்கம் செய்யப்பட்ட விதத்தை விட, இந்தளவுக்கு ஸ்திரத்தன்மை, ஒழுங்கு மற்றும் நிலைப்புத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் வேறு எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்காது.
இது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடென், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர், இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லா, கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் ஆகியோர் உட்பட வெஸ்ட்மின்ஸ்டர் கட்டிடத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 100 ஜனாதிபதிகளும் அரசு தலைவர்களின் பகிர்ந்து கொள்ளப்பட்ட குறைந்தபட்ச நம்பிக்கையாக இருந்தது.
பைடென் இறுதிச் சடங்கிற்கு முன்னர் கூறிய கருத்துக்களில் அத்தகைய நோக்கங்களை நேரடியாகப் பேசினார், “மாட்சிமை பொருந்திய இராணி இரண்டாம் எலிசபெத் ஒரு முடியாட்சியை விட மேலானவர். ஒரு சகாப்தத்தை அவர் வரையறுத்தார். தொடர்ந்து மாறி வரும் இந்த உலகில், ஒரே சீரான பிரசன்னத்தைக் கொண்டிருந்த அவர், பிரித்தானியர்களின் தலைமுறைகளுக்கு ஆறுதல் மற்றும் பெருமையின் அடையாளமாகத் திகழ்ந்தார்… வரலாற்றுப் பெருமை மிக்க அவரின் ஏழு தசாப்த கால ஆட்சி முன்னோடி இல்லாத மனிதகுல முன்னேற்றக் காலக்கட்டத்திற்கும், மனிதகுல கண்ணியத்தின் முன்னோக்கிய அணிவகுப்புக்கும் சாட்சியாக விளங்கியது,” என்றார்.
இந்த அறிக்கை அபத்தமானது, மேலும் இந்த அபத்தம் ஒரு நூற்றாண்டுக்கு சற்று அதிக காலத்திற்கு முன்னர், ஏழாம் எட்வார்டின் முந்தைய பிரிட்டிஷ் அரச இறுதிச்சடங்கைப் பற்றி குறிப்பதன் மூலம் அப்பட்டமாக எடுத்துக் காட்டப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றாசிரியர் பார்பரா டபிள்யூ. துச்மேன், முதலாம் உலகப் போரின் வெடிப்பு மற்றும் அதன் முதல் ஒன்பது மாதங்களைப் பற்றிய அவரின் அரிய படைப்பான, The Guns of August இன் அறிமுக அத்தியாயத்தில் அந்த நிகழ்வின் மீது ஒருமுனைப்படுகிறார், அது ஆகஸ்ட் 1914 என்ற தலைப்பில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அது வருத்தத்துடன் பின்வருமாறு தொடங்குகிறது:
“இங்கிலாந்தின் ஏழாம் எட்வார்ட் இறுதி ஊர்வலத்தில் ஒன்பது மன்னர்கள் கலந்து கொண்ட போது, 1910 மே மாதம் காலையில் அந்தக் காட்சி மிகவும் அழகாக இருந்தது, கறுப்பு உடையில் மவுனமாக நின்றிருந்த கூட்டம் அதன் வியப்பைச் சலசலப்பில் காட்டாமல் இருக்க முடியவில்லை. ஸ்கார்லெட், நீலம், பச்சை, ஊதா நிறங்களில், மூன்று மூன்று பேராக அந்த அரசர்கள் அரண்மனை வாயில்கள் வழியாகச் சென்றார்கள், இறகு பதித்த தலைக்கவசத்தில், தங்க நிற ஜடைத் தொங்க, கருஞ்சிவப்பு பட்டை அணிந்து, அலங்காரப் பதக்கங்கள் சூரிய ஒளியில் தகதகவென மின்னின. அவர்களுக்குப் பின்னால் ஐந்து வாரிசுகளும், இன்னும் நாற்பது ஏகாதிபத்திய அல்லது அரச தலைவர்கள், ஏழு மகாராணிகள் —அரசர் மறைவுக்குப் பின் ஆட்சி உரிமை ஏற்கவிருந்த நால்வர் மற்றும் ஆட்சி உரிமை ஏற்றிருந்த மூவர்— மற்றும் ஆங்காங்கே முடிசூட்டப்படாத மன்னர்களின் நாடுகளில் இருந்து சிறப்பு தூதர்கள் வந்தனர். ஒட்டுமொத்தமாக எழுபது நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்த அரச உயர் அதிகாரிகள் ஒரேயிடத்தில் மிகப் பெரியளவில் ஒன்றுகூடியமை அதன் வகையில் கடைசியாக இருந்தது. உடலைத் தாங்கி வண்டி அரண்மனையை விட்டு புறப்பட்ட போது பிக் பென் மணிக்கூண்டு சரியாக ஒன்பது மணி அடித்தது, ஆனால் வரலாற்றின் கடிகாரத்தில் அது சூரிய அஸ்தமனமாக இருந்தது, பழைய உலகின் சூரியன் மீண்டும் ஒருபோதும் காண முடியாத விதத்தில் பெருமையின் ஒளியில் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது.'
ஏழாம் எட்வார்ட் பெரும்பாலும் 'ஐரோப்பாவின் மாமா' என்று அழைக்கப்பட்டதாக டுச்மேன் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் கௌரவமான ஒன்றாக இருக்கவில்லை. இது ஜேர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்ஹெம் மற்றும் ரஷ்யாவின் இரண்டாம் ஜார் நிக்கோலஸ் உடனான அவரின் உண்மையான குடும்ப உறவுகளை சுட்டிக் காட்டியது, 'மற்ற உறவினர்கள், விக்டோரியா மகாராணியின் ஒன்பது மகன்கள் மற்றும் மகள்கள் நீங்கலாக பல சந்ததிகள், மற்ற உறவுகள்… ஐரோப்பிய நீதிமன்றங்களில் சிதறிக் கிடந்தவர்களில்,” அவரும் ஒருவர் என்று காட்டுவதாக இருந்தது. சாரினா அலெக்ஸாண்ட்ரா அவரது மருமகள் ஆவார்.
20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் நீண்டிருந்த எட்வார்டின் ஆட்சி, டுச்மேனால், 'ஒரு செல்வந்தரின் கொழுப்பு மதியவேளை... பத்தொன்பது பத்து அமைதியாகவும் செழிப்பாகவும் இருந்தது, மொராக்கோ நெருக்கடிகள் மற்றும் பால்கன் போர்களின் இரண்டாம் சுற்று அதற்குப் பின்னர் தான் ஏற்பட இருந்தன' என்று விவரிக்கப்படுகிறது. நிஜமான வெற்றியாளர் யாரும் இருக்கப் போவதில்லை என்பதால் போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு ஆளும் வட்டாரங்களில் பரவலாக முட்டாள்தனமான கட்டுக்கதையாகப் பார்க்கப்பட்டது, தேசங்களின் நிதி மற்றும் பொருளாதாரங்கள் ஒன்றையொன்று சார்ந்து இருந்ததற்கே இதற்காக நன்றி கூற வேண்டும்.
இருந்தாலும் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், ஆகஸ்ட் 1914 இல், உலகம் ஒரு போரில் மூழ்கியது, அதில் 28 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர், ஐரோப்பா இடிபாடுகளாக ஆக்கப்பட்டது. தேசியப் பதட்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு 1910 இல் இலண்டனில் ஒன்று கூடியிருந்த மன்னர்கள், விரைவிலேயே போர்க்களத்தின் எதிர் பக்கங்களில் தங்களைக் கண்டார்கள்.
போரின் முடிவில் தோற்கடிக்கப்பட்டவை வீழ்ச்சியைச் சந்தித்தன.
ரஷ்யாவின் ஜார் மற்றும் ஜரினாவின் மரணங்கள் வரலாற்றில் மிகவும் குறிப்பிட்டத்தக்கவையாக இருந்தன, அந்தப் போரின் கொடூரங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட 1917 பெப்ரவரி புரட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது, லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகள் தலைமையிலான அக்டோபர் சோசலிசப் புரட்சியால் என்றென்றைக்கும் அது வரலாற்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் ஜேர்மன் புரட்சி, அதன் தலைமையில் போல்ஷிவிக் வகையான ஒரு கட்சி இல்லாததால், முதலாளித்துவத்தை தூக்கி எறியவில்லை என்றாலும், இரண்டாம் வில்ஹெல்ம் அரியணையைத் துறந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஜேர்மன் சாம்ராஜ்ஜியத்தின் மற்ற அரசர்களும் அதைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த கண்டம் தழுவிய புரட்சிகர எழுச்சியின் மத்தியில், ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடிய தலைவர்களும் அதே கதியைச் சந்தித்தனர்.
2021 இல், இராண்டாம் எலிசபெத் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த ஒன்றுகூடிய அரச பரிவாரங்கள் —அதாவது, ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசி, நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க், சுவீடன் மற்றும் நோர்வே நாடுகளின் அரசர்களும் அரசிகளும், லிச்சென்ஸ்டீன், லூக்சம்பேர்க் மற்றும் மொனாக்கோ ஆகிய சிறிய வரிப் புகலிடங்களின் ஆட்சியாளர்கள், மற்றும் மத்திய கிழக்கில் இருந்து பல்வேறு கொடுங்கோல் ஆட்சியாளர்கள்— அவர்களுக்கு முன்பிருந்தவர்களின் வெளுத்துப் போன நிழல்களாக மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் பிரதான ஏகாதிபத்திய சக்திகளை ஆட்சி செய்யும் ஜனாதிபதிகளும் பிரதம மந்திரிகளும் வரவிருக்கும் காலத்தில் கடந்த நூற்றாண்டின் ஐரோப்பிய அரச குடும்பங்களை விட கொடூரத்தில் குறைந்தவர்கள் இல்லை.
உலக ஏகாதிபத்தியத்தை வாட்டி வதைத்து வரும் இந்த நெருக்கடி 1910 இல் இருந்ததை விட மிகவும் கூர்மையாக உள்ளது. இது முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான காலகட்டம் இல்லை. மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளி வருகின்ற ஒரு பேராபத்து கட்டவிழ்ந்து வருகிறது. போர் கொள்கை, ஆளும் வர்க்கதால் நிராகரிக்கப்படவில்லை மாறாக ஈவிரக்கமின்றி பின்பற்றப்படுகிறது. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ தலைமையிலான போரில், ஐரோப்பாவில் ஒரு பேரழிவு கட்டவிழ்ந்து வருகிறது, அது 1914 பயங்கரங்களைக் கூட ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் — அது அணு ஆயுத நிர்மூலமாக்கலைக் கொண்டு மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது.
ஆனால் இந்த நெருக்கடி ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச புரட்சிகரப் போராட்டம் வெடிப்புக்கான நிலைமைகளையும் உருவாக்கி வருகிறது — அக்டோபர் 1917 இல் செய்ததைப் போல, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஓர் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது மட்டுமல்ல, மாறாக முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதன் மூலம் அது நடக்காமல் தடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
- இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம்: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு பெரிய அரசியல் நெருக்கடி
- இரண்டாம் எலிசபெத்திற்கான புகழாரம்: முதலாளித்துவ வர்க்கம் முடியாட்சிக் கோட்பாடுகளை கொண்டாடுகிறது
- தொழிலாளர்கள் சரமாரியாகப் பிரச்சாரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்றுகிறார்