மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
100,000 க்கும் அதிகமான இரயில்வே தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்கு வெள்ளை மாளிகையின் நேரடித் தலையீடும், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், விற்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை திணிப்பதற்கான முயற்சியும் இரயில்வே தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் முக்கியமான அரசியல் கேள்விகளை எழுப்புகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த '60 நிமிடங்கள்' நிகழ்ச்சியின் நேர்காணலில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்க அரசியல் ஸ்தாபகம் உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார். ஒரு தேசிய இரயில்வே வேலைநிறுத்தம் ஏற்படுத்தக் கூடிய சாத்தியக்கூறு குறித்து பேசிய பைடென், “உண்மையில், அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், இந்த நாட்டில் விநியோகச் சங்கிலிகள் முடங்கிப் போகும். நாம் நிஜமான ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திபோம்,” என்றார். இதையே தொழிலாளர் நலத்துறைச் செயலர் மார்ட்டி வால்ஷ் கடந்த வாரயிறுதியில் Politico பத்திரிகையில் இன்னும் அதிக அதிர்வுகரமான வார்த்தைகளில் எதிரொலித்தார், அப்போது அவர், “பரிசுத்த கிறிஸ்துவே, என்ன நடக்க இருக்கிறதோ அதன் அளவை … எங்களால் ஒருபோதும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது, கடவுளுக்கே வெளிச்சம்,” என்றார்.
பைடெனையும் அரசியல் ஸ்தாபகத்தையும் இந்தளவுக்கு அச்சத்தில் நிறுத்தும் ஒரு தேசிய இரயில்வே வேலைநிறுத்தம் எது சம்பந்தப்பட்டது? (அவர்கள் கூறுவதைப் போல, பண்டங்களின் பற்றாக்குறையில் அல்ல, மாறாக இலாபங்கள் மற்றும் பங்கு விலை வீழ்ச்சிகளின் பாதிப்பில் உள்ள) ஒரு வேலைநிறுத்தத்தின் பொருளாதார பாதிப்பு, இரயில்வே தொழிலாளர்களின் அளப்பரிய சமூக சக்தியை எடுத்துக்காட்டும் விதத்தில், மிகப் பெரியளவில் உடனடியாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு பொதுவான மோதலை அது அபிவிருத்தி செய்து விடக்கூடும் என்பதே ஆளும் வர்க்கத்தை இன்னும் அதிகமாக பயமுறுத்துகிறது. அமெரிக்க வரலாற்றில் முதல் மிகப் பெரிய வேலைநிறுத்த இயக்கமான 1877 இல் நடந்த மாபெரும் இரயில்வே வேலைநிறுத்தத்தில் இருந்து, இரயில்வே தொழிலாளர்கள் வர்க்கப் போராட்ட அபிவிருத்தியில் எப்போதும் ஒரு மைய மற்றும் முக்கிய பாத்திரம் வகித்து வந்துள்ளனர்.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது, இலாபத்திற்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைத் தியாகம் செய்ததாலும், தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலையிட நிலைமைகளைப் பின்னோக்கி பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குக் கொண்டு சென்றதாலும், அது ஒரு வெடி உலையை உருவாக்கி உள்ளது என்பது ஆளும் வர்க்கத்திற்குத் தெரியும். அவர்கள் முடிந்த வரை ஒரு பாரிய சமூக வெடிப்பைத் தடுக்க, அல்லது குறைந்தபட்சம் தாமதப்படுத்த, உறுதியாக உள்ளனர்.
கடந்த வாரம், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் இரயில்வே தொழிலாளர்களுக்கு அதன் விரோதத்தை எடுத்துக் காட்டியது. வெள்ளை மாளிகை அறிவித்த உடன்படிக்கைக்கு முன்னர், பைடெனின் சொந்த ஜனாதிபதி அவசரநிலை ஆணையத்தின் (PEB) பரிந்துரைகளை, இந்தப் பரிந்துரைகள் இரயில்வே தொழிலாளர்கள் அனைவராலும் வெறுக்கப்படுகின்ற நிலையில், காங்கிரஸ் சபை உத்தரவின் பேரில், இதை நிறைவேற்றும் சட்டமசோதாவைக் குடியரசுக் கட்சியினர் முன்மொழிந்தனர்.
ஜனநாயகக் கட்சியினர் வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். கடந்த வியாழக்கிழமை காலை ஓர் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்த பைடென், வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தடுக்க இரயில்வே தொழிற்சங்கங்களின் சேவைகளை உள்ளிழுத்தார். இது யதார்த்தத்தில் வெள்ளை மாளிகை கட்டளை இட்ட ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவப் பொறிமுறையின் மூலம் நடைமுறைப்படுத்தும், வார்த்தைகளில் இல்லையென்றாலும், யதார்த்தத்தில் ஒரு கட்டளையாகும். உண்மையில் சொல்லப் போனால், இறுதி ஒப்பந்தம் ஏதும் இல்லை என்பதைத் தொழிற்சங்க அதிகாரிகளே பின்னர் ஒப்புக் கொண்டனர். வேலைநிறுத்தம் செய்யக் கூடாது என்பது தான் தொழிற்சங்கத்தின் எவரொருவரும் கொடுத்த ஒரே உறுதியான உறுதிமொழியாக இருந்தது.
கடைசியாக 1991 இல் நடந்த இரயில்வே வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்காக இருகட்சியினரின் பரந்த பெரும்பான்மையோடு சேர்ந்து வாக்களித்த வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸூம் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். பைடெனின் அறிவிக்கப்பட்ட உடன்படிக்கைக்கு வழி வகுக்க, புதன்கிழமை இரவு, செனட்டில் குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட மசோதாவை முடக்கினார். அதற்கடுத்த நாள் காலை பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி, ஒரு வேலைநிறுத்தம் வெடித்த உடனேயே நடைமுறைக்குக் கொண்டு வரக் கூடிய ஒரு சட்டமசோதாவைப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார்.
வாஷிங்டனுக்குள் உள்நாட்டுப் போர் சூழல் நிலவினாலும், இரண்டு கட்சிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு அவர்களின் எதிர்ப்பைக் காட்டுவதில் ஒற்றுமையாக உள்ளன.
வியாழக்கிழமை வெள்ளை மாளிகை மற்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்த ஒப்பந்தத்தில், இரயில்வே தொழிலாளர்களின் எந்த கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை. தொழிற்சங்கங்கள் உடனான பைடெனின் உடன்படிக்கையின் அடிப்படையில் அமைந்த ஜனாதிபதியின் அவசரகால ஆணையத்தை (PEB) ஏற்படுத்துவது உட்பட, தொழிலாளர்-விரோத இரயில்வே தொழிலாளர் சட்ட வழிவகைகளின் கீழ், அந்த ஒப்பந்தம் அரசாங்கத்தின் பல மாத கால தீவிர தலையீட்டின் உச்சக்கட்ட ஏற்பாடாகும்.
ஆரம்பத்தில் இருந்தே, இந்தச் செயல்பாட்டில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. வேலைநிறுத்தத்திற்கு 99 சதவிகிதத் தொழிலாளர்கள் வாக்களித்த பின்னர் தான், அவை 60 நாட்கள் பரிசீலனைக் காலத்திற்கும் (cooling-off period) PEB அமைப்பதற்கும் அழைப்பு விடுத்தன. ஒவ்வொரு விஷயத்திலும் நிறுவனங்களின் பக்கம் நின்ற ஜனாதிபதி அவசரகால ஆணையத்தின் பரிந்துரைகளுக்குத் தொழிலாளர்கள் சீற்றத்துடன் விடையிறுத்த போது, தொழிற்சங்கங்கள் தனித்தனி உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டும், நடத்துனர்கள் மற்றும் பொறியாளர்களில் இருந்து மற்ற தொழிலாளர்களைப் பிரித்து கையாண்டதன் மூலம் தொழிலாளர்களின் ஒற்றுமையை நாசப்படுத்த முயன்றன.
அரசாங்கத்துடனும் பிரதான பெருநிறுவனங்களுடனும் செயல்படும் நல்ல சம்பளம் பெரும் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் ஒரு கூட்டணியின் அடிப்படையில் பைடென் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பெருநிறுவன கொள்கையைப் பின்பற்றி வருகிறது. எல்லா தொழில்துறைகளின் தொழிற்சங்கங்களும் நிறுவனத்திற்குச் சாதகமான விற்றுத்தள்ளல்களைச் செயல்படுத்த பல தசாப்தங்களாக செயலாற்றி வந்துள்ளன, அதேவேளையில் அவற்றின் சொந்த சொத்துக்களும் உயர்மட்ட நிர்வாகிகளின் சம்பளங்களும் மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளன. அதிகரித்தளவில் அமைதியிழந்த தொழிலாள வர்க்கத்தை, ஏற்கனவே இருப்பதைப் பெரியளவில் விரிவாக்குவதன் மூலம் ஒடுக்குவதே, பதவிக்கு வந்ததில் இருந்து பைடெனின் கொள்கையாக இருக்கிறது.
இந்தக் கூட்டணிக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. முதலாவது, வெளிநாட்டில் போர் நடத்துவதற்கு உதவியாக அமெரிக்காவில் தொழிலாளர்கள் மீது தொழிலாளர் நெறிமுறைகளைப் அமல்படுத்த, வெள்ளை மாளிகை தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தக் கருதுகிறது. “60 நிமிடங்கள்” நேர்காணலில் எழுப்பப்பட்ட ஓர் இரயில்வே வேலைநிறுத்தப் பிரச்சினையின் உள்ளடக்கம் குறிப்பிடத்தக்கது. அது, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க பினாமி போரின் பொருளாதார பாதிப்புகள் மீது, குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலை மீதான ஒரு விவாதத்தின் மத்தியில் வந்தது.
இரண்டாவதாக, பணவீக்க விகிதத்திற்கு மிகவும் கீழே ஒப்பந்தங்களைத் திணிப்பதன் மூலம் கூலி உயர்வைக் குறைக்கத் தொழிற்சங்கங்களைப் பைடென் பயன்படுத்தி வருகிறார். உண்மையில், தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களை விட தொழிற்சங்கத்தில் இணையாத தொழிலாளர்களின் சம்பளங்கள் கடந்தாண்டு உயர்ந்திருப்பதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. வட்டி விகித உயர்வுகளைப் பாதுகாப்பதன் மூலம் தொழிற்சங்கங்கள் 'சம்பள அழுத்தத்தை' குறைக்கவும் முயன்று வருகின்றன, அவ்விதத்தில் அவை வேலைவாய்ப்பின்மை அதிகரிப்புகளைத் தூண்டி விடுகின்றன. இரயில்வே தொழிலாளர்களுக்கு இந்த விட்டுக்கொடுப்பு உடன்படிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், பெடரல் ரிசர்வ் ஒரு சதவீதத்தில் முக்கால் புள்ளியை அதிகரிப்பதற்கான மற்றொரு வட்டி விகித உயர்வை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பைடெனுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் உள்ள பிரச்சனை என்னவென்றால், அவர்களும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் மத்தியில் மதிப்பிழந்து இருப்பதுடன் வெறுக்கப்படுகிறார்கள். இந்தப் பெருந்தொற்று 'முடிந்துவிட்டது' என்று அறிவித்ததைப் போல, ஒரு வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதில் 'வெற்றி' பெற்றதாகவும் பைடென் அறிவிக்கலாம், ஆனால் அது முதிர்ச்சி அற்றதாக நிரூபணமாகும். கடைசி வார்த்தைத் தொழிலாளர்களின் வார்த்தையாகவே இருக்கும்.
ஓர் உடன்படிக்கை பற்றிய அறிவிப்பு தொழிலாளர்களிடையே குழப்பத்தையும் மனச்சோர்வையும் விதைக்கும் என்று வெள்ளை மாளிகை நம்பியது. யதார்த்தத்தில் அது தொழிலாளர்களைக் கோபப்படுத்தியதுடன், தொழிற்சங்க எந்திரம் மற்றும் இந்த ஒட்டுமொத்தப் பெருநிறுவனக் கட்டமைப்புக்கு எதிராக சாமானியத் தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சியை ஒழுங்கமைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டி உள்ளது.
இந்த போராட்டம் நெடுகிலும், இரயில்வே தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக ஒருங்கிணைந்து போராடவே தொழிலாளர்கள் போராடி உள்ளனர். இது, இரயில்வே தொழிலாளர்களின் சாமானியத் தொழிலாளர் குழு கடந்த வாரம் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் 500 இரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டதில் பலமான வெளிப்பாட்டைக் கண்டது, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத ஓர் ஒப்பந்தத்தை அமலாக்கத் தொழிற்சங்கங்களுக்கும் வாஷிங்டனுக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதை அறிவிக்கும் ஒரு தீர்மானத்தை அக்கூட்டம் நிறைவேற்றியது.
அந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர், அந்தக் குழுவின் பணி கணிசமாக விரிவடைந்துள்ளது. கடந்த வார தீர்மானத்தை அமல்படுத்துவதற்கும் மற்றும் ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கும் ஒழுங்கமைப்பு செய்யுமாறு அழைப்பு விடுத்து, அக்குழு பலமான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரயில்வே தொழிலாளர்களின் இந்த இயக்கம், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சாமானியத் தொழிலாளர் கட்டுப்பாட்டை எடுப்பதற்கான இன்னும் பரந்த இயக்கத்தின் பாகமாக உள்ளது. அதிகாரத்துவத்தை ஒழிக்கும் ஒரு சாமானியத் தொழிலாளர் களத்தை அமைப்பதற்காக ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் வில் லெஹ்மன், இந்த வியாழக்கிழமை வேட்பாளர்களின் விவாதத்தில் பங்கெடுப்பார், அங்கே அவர் இப்போதைய UAW சங்கத் தலைவர்ரும் பைடெனின் நெருக்கமான கூட்டாளியுமான ரே கரியை எதிர்கொள்வார்.
இந்த அனுபவத்தில் இருந்து இரண்டு அடிப்படை தீர்மானங்கள் கிடைக்கின்றன.
முதலாவதாக, நிறுவனங்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதிலும், தொழிலாளர்களின் போராட்டத்தை வீணடிப்பதிலும் தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம், வேலையிடத்தில் தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் வகையில், தொழிற்சங்க எந்திரத்தின் நடவடிக்கைகளை எதிர்த்துக் கட்டளையிட அவர்களை அனுமதிக்கும் வகையில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தும் வகையில், சாமானியத் தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை விரிவாக்குவதற்கான அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகிறது.
இரண்டாவதாக, வெள்ளை மாளிகையும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தைத் திணிக்கும் முயற்சியில் தலையிடுவது, அரசின் வர்க்கத் தன்மையை அம்பலப்படுத்துகிறது. அதுவொரு நடுநிலையான அமைப்பு இல்லை, மாறாக ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாகும்.
ஆகவே இரயில்வே தொழிலாளர்கள் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு, ஆளும் வர்க்கத்தின் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. பெருநிறுவன மற்றும் நிதியத் தன்னலக்குழுவின் இலாப நலன்களைப் பூர்த்தி செய்வதற்காக, மக்களில் பரந்த பெரும்பான்மையினரான தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட இந்த முதலாளித்துவ அமைப்பை இவ்விரு கட்சிகளும் பாதுகாக்கின்றன.
அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினர் மத்தியிலும் ஏற்பட்டு வரும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பலமான மீளெழுச்சி, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க
- வேலைநிறுத்தத்தைத் தவிர்ப்பதற்காக இரயில்வே தொழிற்சங்கங்கள் பைடெனைச் சந்திக்கும் நிலையில், 500 இரயில்வே தொழிலாளர்கள் சாமானியத் தொழிலாளர் எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்
- அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு அமெரிக்காவில் வர்க்கப் பதட்டங்களை முறிவுப் புள்ளிக்குத் தள்ளுகிறது
- தொழிலாளர் தினம் 2022 இல் அமெரிக்கத் தொழிலாளர்கள் எதிர் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள்