அமெரிக்காவின் மிக அதிகபட்ச இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கு "சீனா உடனான எதிர்கால மோதலுக்கு" தயாரிப்பு செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தீவிர பொது விவாதமோ அல்லது உரையாடலோ இல்லாமல், அமெரிக்க பிரதிநிதிகள் சபை உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான பினாமி போருக்கும் மற்றும் சீனாவுடனான இராணுவ மோதலுக்கான திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, அடுத்தாண்டு கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டாலர்களை இராணுவத்திற்காக செலவிட வியாழக்கிழமை வாக்களித்தது.

பிரதிநிதிகள் சபையில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினிரில் பரந்த பெரும்பான்மையினர் அமெரிக்க இராணுவத்திற்காக மற்றொரு 858 பில்லியன் டாலரைச் செலவிட வாக்களித்தனர், இது ஜனாதிபதி ஜோ பைடென் கோரியதை விட 45 பில்லியன் டாலர் அதிகம், கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டக்கணக்கை விட 8 சதவீதம் அதிகமாகும்.

இந்த சட்டமசோதா சீனாவை முக்கிய இலக்கில் வைத்துள்ளது, காங்கிரஸின் சட்ட வல்லுனர்கள், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டுடன் போருக்குத் தயாரிப்புகள் செய்வதை மூடிமறைப்பற்ற மொழிகளில் பகிரங்கமாக விவாதித்து வருகின்றனர்.

'அமெரிக்காவின் கடுமையான பலத்தில் முதலீடுக்ள் செய்வதன் மூலமும், இந்தோ-பசிபிக்கில் அமெரிக்க தோரணையைப் பலப்படுத்தியும், நம் கூட்டாளிகளை ஆதரிப்பதன் மூலமும், சீனா உடனான ஒரு எதிர்கால மோதலுக்குத் தயாராகும் வகையில், இந்த ஆண்டின் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (NDAA) உறுதியான நடவடிக்கைகளை எடுக்கிறது,” என்று விஸ்கான்சின் குடியரசுக் கட்சி பிரதிநிதி மைக் கல்லாகர் கூறினார்.

கல்லாகர், ஒரு செய்திக் குறிப்பில், இந்த மசோதா 'உக்ரேனைப் போலவே தைவானையும் ஆயுதமயமாக்குவதற்கு அதேபோன்ற உள்ளிழுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது' என்ற உண்மையைப் பாராட்டினார்.

இராணுவ செலவினங்களின் பாரிய அதிகரிப்புக்கு உக்ரேன் போர் ஒரு நியாயப்பாடாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சீனாவுடனான இராணுவ மோதலுக்கு அமெரிக்காவைத் தயார்படுத்துவதே அந்த மசோதாவின் மைய ஒருமுனைப்பாக உள்ளது.

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, அமெரிக்கா 10 ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர் ஆயுதங்களை வழங்கி, நேரடியாக தைவானை ஆயுதமயப்படுத்துகிறது. தைவானை நேரடியாக ஆயுதமயப்படுத்துவது ஒரே சீனா கொள்கைக்கு மற்றொரு மிகப் பெரிய அடியைக் கொடுக்கிறது.

அந்தச் சட்டமசோதாவில் தைவான் தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட புவியியல் பகுதியாக உள்ளது, 237 முறை குறிப்பிடப்பட்ட ரஷ்யாவை விட, 159 முறை குறிப்பிடப்பட்ட உக்ரேனை விட, தைவான் 438 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா தூண்டிவிட்ட இரத்தக்களரியான உக்ரேன் போரால் எரியூட்டப்பட்டு அதிகபட்ச இலாபங்களைப் பதிவு செய்து வரும் ரேதியோன், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் போன்ற இராணுவ ஒப்பந்த நிறுவனங்கள் பாரியளவில் விலை ஏய்ப்பு செய்வதற்குக் கதவைத் திறந்துவிடும் வகையில், இராணுவ கொள்முதல்களில் பென்டகன் மலிவான ஒப்பந்தங்களை வழங்க வேண்டுமென அந்த மசோதா நிறைவு செய்கிறது.

'போர்க்கால ஒப்பந்தம் அல்லது அவசரகால ஒப்பந்தம் என்று அதை நீங்கள் எப்படி அழைக்க விரும்பினாலும், நம்மால் இனி சுற்றி வளைத்து செயல்பட முடியாது,” என்று இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு மூத்த காங்கிரஸ் உறுப்பினர் Defense News க்குத் தெரிவித்தார்.

இந்த 'போர்க்கால ஒப்பந்தம்' என்பது, தீவிர மேற்பார்வையோ அல்லது ஒழுங்குமுறையோ இல்லாமல், ஆயுத வியாபார நிறுவனங்கள் அவற்றின் விருப்பம் போல வரி செலுத்துபவர்களிடம் இருந்து திறம்பட வசூலிக்க சுதந்திரமாக விடப்பட்டிருப்பார்கள்.

2 வது படைப்பிரிவு போர் அணிக்கு நியமிக்கப்பட்ட துருப்புகள், 101வது வான்வழிப் பிரிவு 2022 டிசம்பர் 2 அன்று ஜேர்மனியின் கிராஃபென்வோஹரில் பாதுகாப்புடன் நகரும் நடவடிக்கைகளை நடத்துகிறது. [Photo: US Department of Defense/Army Staff Sgt. Malcolm Cohens-Ashley ]

தடுப்பூசிகள் மற்றும் பரிசோதனைகள் உட்பட கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முக்கிய நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைத்து வருகின்ற காங்கிரஸ், பொறுப்பற்ற முறையில் பென்டகனுக்குப் பணத்தை வாரியிறைக்கிறது. ஒவ்வொரு ஆயுதச் சேவையின் ஒவ்வொரு துறையும் விதிவிலக்கின்றி அதிக பணம் பெறும். மூன்று Arleigh Burke ரக நடுத்தர போர்க்கப்பல்கள் மற்றும் இரண்டு Virginia ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட புதிய போர்க்கப்பல்களுக்காக அமெரிக்க கடற்படை 32 பில்லியன் டாலர்கள் பெறும்.

கூடுதலாக 36 F-35 ரக போர் விமானங்களை வாங்குவதைப் பென்டகன் அங்கீகரித்துள்ளது, இது ஒவ்வொன்றுக்கும் சுமார் 89 மில்லியன் டாலர் செலவாகும், அல்லது இந்தத் தொகை ஆறு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு போதுமானதாகும்.

இந்த மசோதா, அமெரிக்க இராணுவத்தை, முதன்மையாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற முன்னாள் காலனிகளை பயமுறுத்தி அடிபணிய வைக்கும் நோக்கம் கொண்ட ஒரு படை என்பதில் இருந்து, ரஷ்யா மற்றும் சீனா போன்ற 'நேரெதிர் போட்டியாளர்கள்' உடன் போர்கள் நடத்துவதற்குத் தயாரான ஒரு படையாக மாற்றுவதைத் தொடர்கிறது.

A-10 warthog ரக தாக்குதல் விமானம் திட்டமிட்டவாறு நீக்கப்பட இருப்பதைக் குறித்து கருத்துரைத்த விமானப்படை தலைமை தளபதி ஜெனரல் சார்லஸ் கியூ. பிரவுன் ஏப்ரல் மாதம் கூறுகையில், “A-10 க்கு [அனுமதிக்கப்பட்ட] சூழல் சிறந்த களமாக இருக்கும், என்றாலும் எதிர்காலத்தில் நாம் பல [அனுமதிக்கப்பட்ட] சூழல்களில் செயல்படுவோம் என்று நான் நினைக்கவில்லை,' என்றார்.

அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய இராணுவ வரவுசெலவுத் திட்டத்தைப் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றி இருப்பதை அமெரிக்க ஊடகங்கள் பெரிதும் புறக்கணித்துள்ளன, அவை அதை ஒரு வழக்கமான நிகழ்வாக கருதுகின்றன. ஆனால், அமெரிக்க இராணுவச் செலவினங்கள் குறித்து என்ன செய்திகள் வருகிறதோ அவை விரிவாக்குவதற்கான கோரிக்கைக்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க இராணுவத்தின் ஒரு கணிசமான பிரிவில் உள்ளடங்கி உள்ள பாசிச சக்திகளுக்கு மிகப் பெரிய விட்டுக்கொடுப்புகளும் இந்த மசோதாவில் உள்ளடங்கி உள்ளது, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு 30 நாட்களுக்குப் பின்னர் இராணுவத்தினருக்கான கட்டாய கோவிட்-19 தடுப்பூசியை அது இரத்து செய்கிறது.

NDAA ஐ பிரதிநிதிகள் சபை நிறைவேற்றுவதற்கு முன்னதாக, அமெரிக்க இராணுவம் ஆயுத உற்பத்தியில் 'வியத்தகு' அதிகரிப்பை அறிவித்தது, 155 mm பீரங்கி குண்டுகளின் வருடாந்திர உற்பத்தியை மூன்று மடங்கு உயர்த்த அது உறுதியளித்தது.

'வெறுமனே போர் தொடங்கிய போது இருந்த நம் கையிருப்புகளையே வைத்திருக்கக் கூடியவர்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை, மாறாக அதை விட அதிகமாக வைத்திருக்க விரும்புகிறோம். மூன்றாண்டுகளில், அணுஆயுதமல்லாத பீரங்கி குண்டுகளின் உற்பத்தியை அதிவேகமாக அதிகரித்துக் காட்டுவதற்காக நிற்கிறோம்,” என்று கொள்முதல், தொழில்நுட்பம், தளவாட பரிவர்த்தனைக்கான ஆயுதப்படையின் உதவி செயலர் டக் புஷ் கடந்த வாரம் கூறினார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டமை இந்தாண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பல தொடர்ச்சியான இராணுவ மூலோபாய ஆவணங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் உள்ளது, அவை உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் போராட்டத்தில் 2020 கள் 'தீர்க்கமான தசாப்தமாக' இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தன.

ஜூன் மாதம், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி ரஷ்யா மற்றும் சீனா போன்ற 'அணு ஆயுதமேந்திய நேரடி-போட்டியாளர்களுக்கு எதிராக அதிக சக்திவாய்ந்த பல தளங்களில் செயல்படக்கூடிய போர்முறைகளுக்கு' தயாராக இருப்பதாக உறுதியளித்தது.

அக்டோபரில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம் '21 ஆம் நூற்றாண்டிற்கான போட்டியில் ஜெயிக்க' சூளுரைத்தது.

'நம் மூலோபாயம் நமது தேசிய நலன்களில் வேரூன்றியுள்ளது' என்று பிரகடனம் செய்யும் அந்த ஆவணம், 'மூலோபாய போட்டி சகாப்தத்திற்கான அத்தியாவசியங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் நம் இராணுவத்தை நவீனமாக்கவும் பலப்படுத்தவும்' சூளுரைக்கிறது.

முக்கியமாக, வெளிநாட்டில் போர் என்பது உள்நாட்டு இலக்குகளை எட்டுவதற்கான ஒரு வழி என்று அந்த ஆவணம் அறிவிக்கிறது, 'வெளிநாட்டு சவால்களை… உள்நாட்டில் புத்துயிரூட்டுவதற்கான சந்தர்ப்பங்களாக … மாற்றும் ஒரு பாரம்பரியத்தை அமெரிக்கா கொண்டுள்ளது.”

ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபகமும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான அதன் மோதலை அதிகரிக்கும் திட்டங்களுக்குப் பின்னால் ஒன்றுபட்டுள்ளது, இதற்கான விலை அமெரிக்க மக்களின் சமூக உரிமைகளுக்கு எதிரான ஆழமான தாக்குதலின் மூலம் செலுத்தப்படும்.

இந்த போர் மற்றும் சிக்கன கொள்கைக்குத் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்தளவில் எதிர்ப்பு உள்ளது.

இந்த எதிர்ப்பை அணிதிரட்டவே, இந்த சனிக்கிழமை, டிசம்பர் 10 இல், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு, 'உக்ரேன் போரை நிறுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஒரு பாரிய இயக்கத்திற்காக!' என்ற இணைய வழி கூட்டத்தை நடத்துகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களும் இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Loading