மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முன்னாள் ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் கருத்துப்படி, மின்ஸ்க் ஒப்பந்தம் உக்ரேனுக்கு மறுஆயுதமயமாக்குவதற்கான காலத்தை பெற்றுக்கொள்ள உதவியது. '2014 மின்ஸ்க் ஒப்பந்தம் உக்ரேனுக்கு கால அவகாசத்தை வழங்குவதற்கான முயற்சியாகும்,' என மேர்க்கெல் வாராந்திர பத்திரிகையான Die Zeit இடம் கூறினார். 'இன்று நீங்கள் பார்க்க கூடியதாக இருப்பதுபோல், அது பலமாக வருவதற்கு உக்ரேன் இந்தக் காலத்தை பயன்படுத்தியது' என்றார்.
கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவராகவும் இருந்த மேர்க்கெல், பதினாறு ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர், ஓராண்டுக்கு முன்பு ஓலாவ் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) சான்சிலராகியதிலிருந்து சில பொது அறிக்கைகளையே வெளியிட்டார். டிசம்பர் 7 அன்று Die Zeit ஆல் வெளியிடப்பட்ட இந்த விரிவான நேர்காணல் அரிதான விதிவிலக்காகும்.
எவ்வாறாயினும், திரைக்குப் பின்னால் மேர்க்கெல் அரசியல் ரீதியாக தீவிரமாக இருக்கிறார். முன்னாள் சான்சிலராக அவருக்கு கிடைக்கவேண்டிய அவரது அலுவலகத்தில், அவர் ஒன்பது பேரை பணியமர்த்தியுள்ளார். அதில் அங்கீகரிக்கப்பட்டவர்களை விட நான்கு பேர் அதிகமாக ஒரு அலுவலக மேலாளர், ஒரு துணை மேலாளர், இரண்டு உரை எழுதுபவர்கள், மூன்று அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். ஷோல்ஸுடன் அவர் வழக்கமான தொடர்பைப் பேணுவதாக அவரே தெரிவித்திருக்கிறார். பெரும் கூட்டணி அரசில் அவர் நிதியமைச்சராக இருந்தபோதே அவருடன் நல்ல உறவை வளர்த்து வந்திருந்தார்.
மின்ஸ்க் ஒப்பந்தம் உக்ரேனின் மறுஆயுதமயமாக்கலுக்கான காலத்தை பெற்றுக்கொள்ள உதவியது என்பதை அவர் ஒப்புக்கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது. 'இது ஒரு உறைந்துபோயிருந்த மோதல், பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்பது நம் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அதுவே உக்ரேனுக்கு பெறுமதிமிக்க கால அவகாசத்தைக் கொடுத்தது' என்று மேர்க்கெல் Die Zeit இடம் கூறினார்.
முன்னதாக, 2014 செப்டம்பரில் அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் மேர்க்கெல் கையெழுத்திட்ட மின்ஸ்க் ஒப்பந்தம், ரஷ்ய ஜனாதிபதியால் பின்னர் தூக்கிவீசப்பட்டு விட்டதாகக் கூறப்படும் சமாதானத்திற்கான முயற்சியாக சித்தரிக்கப்பட்டது.
உலக சோசலிச வலைத் தளத்தால் நீண்டகாலமாக கூறப்பட்டுவந்த மதிப்பீடான, நேட்டோ ஆரம்பத்தில் இருந்தே போரை விரும்பியது ஆனால் இராணுவரீதியாக தயார் செய்ய நேரம் தேவைப்பட்டது என்பதை இப்போது மேர்க்கெல் உறுதிப்படுத்துகிறார்.
1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, 'ஒற்றை உலக வல்லரசாக' நீடிக்க வேண்டும் என்ற இலக்கை அமெரிக்கா பின்பற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, வாஷிங்டன் பல குற்றவியல் போர்களை நடத்தி நேட்டோவை கிழக்கு ஐரோப்பாவிற்குள் விரிவுபடுத்தியுள்ளது. இப்போது அது உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் பிற முன்னாள் சோவியத் குடியரசுகளை நேட்டோவுடன் ஒருங்கிணைத்து அதன் வளங்களைக் கொள்ளையடித்து சீனாவைத் தனிமைப்படுத்த ரஷ்யாவை அடிபணியச் செய்ய விரும்புகிறது.
ஜேர்மன் அரசாங்கம் உக்ரேன் போரைப் பயன்படுத்தி முன்னணி ஐரோப்பிய சக்தியாகவும், ஒரு பெரிய இராணுவ சக்தியாகவும் மாறுவதற்கான தனது உரிமையை உறுதிப்படுத்துகிறது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகியவற்றின் பெரும் கூட்டணியான மேர்க்கலின் மூன்றாவது அரசாங்கம், 2013ல் இந்த இலக்கை அதன் திட்டத்தின் மையத்தில் வைத்தது. வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், அது ஏகாதிபத்திய பேரரசு (Kaiserreich) மற்றும் நாஜி ஆட்சியின் பெரும் அதிகாரத் திட்டங்களின் வார்ப்புருவைப் பின்பற்றுகிறது.
'வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் முன்னதாகவே, இன்னும் தீர்க்கமாகவும் கணிசமாகவும் ஈடுபட ஜேர்மனி தயாராக இருக்க வேண்டும்' என்று இப்போது ஜேர்மன் ஜனாதிபதியும் அப்போதைய வெளியுறவு மந்திரியுமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) 2014 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அறிவித்தார். 'உலக அரசியலில் வெளியிலிருந்து மட்டுமே கருத்து தெரிவிக்க ஜேர்மனி ஒரு சிறிய நாடல்ல' என்றார்.
மேர்க்கெலின் மூன்றாவது அரசாங்கம் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பின்னர், பெப்ரவரி 2014 இல் அமெரிக்காவும் ஜேர்மனியும் உக்ரேனில் ஒரு சதியை ஏற்பாடு செய்தன. அது, பாசிச ஆயுதக்குழுக்களின் உதவியுடன், நேட்டோ சார்பு ஆட்சி அதிகாரத்திற்கு வர உதவியது. இருப்பினும் வாஷிங்டனுக்கும் பேர்லினுக்கும் பிரச்சனை இருந்தது. புதிய ஆட்சியில் வலதுசாரி தேசியவாதிகள், நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவின் அபிமானிகள் மற்றும் பாசிச ஆயுதக்குழுக்கள் ஆகியோர் வகித்த மேலாதிக்க பங்கு நாட்டை பிளவுபடுத்தியது. குறிப்பாக ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மையான கிழக்கில், உக்ரேனிய தீவிர தேசியவாதிகளால் ஆளப்படும் சாத்தியம் பெரும் அச்சத்துடன் பார்க்கப்பட்டது.
செவஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படைத் தளத்தை பற்றி அஞ்சிய ரஷ்யா, வாக்கெடுப்பின் உதவியுடன் கிரிமியாவை தன்னுடன் இணைத்தது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள், கிழக்கு உக்ரேனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இடங்களில் சுதந்திரக் குடியரசுகளை அறிவித்தனர்.
கியேவில் இருந்த புதிய ஆட்சியாளர்களால் இதைத் தடுக்க முடியவில்லை. உக்ரேனிய இராணுவம் வீழ்ச்சியடைந்தது. புதிய ஆட்சிக்காக தம்மைத் தியாகம் செய்ய விரும்பாத படையினர் தொகையாக வெளியேறினர்.
இந்தச் சூழ்நிலையில், மேர்க்கெல் இப்போது ஒப்புக்கொள்வது போல, மோதலை அடக்கி கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதற்காக மேர்க்கெலும் ஹாலண்டும் மின்ஸ்க் உடன்படிக்கையை ஒழுங்கமைத்தனர். இந்த ஒப்பந்தத்தில் போர்நிறுத்தம், கனரக ஆயுதங்களை திரும்பப் பெறுதல் மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு (OSCE) மூலம் கண்காணிக்கப்படும் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும். டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கும், அவர்களுக்கு அதிக சுயாட்சி வழங்குவதற்கும் அரசியலமைப்பை திருத்த உக்ரேனிய அரசாங்கம் உறுதியளித்தது.
இதில் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, உக்ரேன் தரப்பு அனைத்து ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பவில்லை. போரிடத் தயாரான படையினர்கள் இல்லாத நிலையில், புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ அசோவ் பட்டாலியன் மற்றும் பிற பாசிச ஆயுதக்குழுக்களை அணிதிரட்டினார். அதற்கு கோடீஸ்வர தன்னலக்குழுவில் ஒருவரான இவர் தனது சொந்த சொத்துக்களிலிருந்து ஓரளவு நிதியளித்தார். அவர்கள் ஆயுதப் படைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு, உள்ளூர் மக்களை பயமுறுத்துவதற்கும், மோதலை தொடர்ந்து நடத்துவதற்கும் பிரிந்து சென்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
பொரோஷென்கோ அல்லது அவரது வாரிசான செலென்ஸ்கியின் கீழ் இருந்த கியேவில் உள்ள ஆட்சியும், பேர்லின் மற்றும் வாஷிங்டனில் அதன் ஆதரவாளர்களும் ஒருபோதும் சமாதானத்தீர்வில் ஆர்வம் காட்டவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்களுக்கு இது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தினாலும் போரைத் தீவிரப்படுத்துவதற்கு அவர்கள் கால அவகாசத்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
ஜேர்மன் அரசாங்கத்திற்கு நெருக்கமான மற்றும் ரஷ்யாவின் மீது எந்த அனுதாபமும் இல்லாத சர்வதேச, பாதுகாப்பு விடயங்களுக்கான ஜேர்மன் அமைப்பு (Stiftung Wissenschaft und Politik - SWP), தற்போதைய போர் வெடிப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2019 பிப்ரவரியில் 'டொன்பாஸ் மோதல்' என்ற கட்டுரையை வெளியிட்டது. இது ஒரு அழிவுகரமான விளக்கத்தை காட்டுகிறது. இது கியேவில் உள்ள ஆட்சி எப்போதுமே டொன்பாஸ் மோதலில் நேட்டோவுடன் இணைவது, ரஷ்யாவை தனிமைப்படுத்துவது என்ற புவிசார் அரசியல் இலக்குகளில் அக்கறை கொண்டுள்ளது. இதற்கு உக்ரேனிய மக்களின் தலைவிதியை இரக்கமின்றி தியாகம் செய்ய அது தயாராக இருந்தது.
'டொன்பாஸ் போர் பற்றிய கியேவின் விவாதங்கள் கிட்டத்தட்ட புவிசார் அரசியல் நிலை மற்றும் ரஷ்யாவுடனான உறவின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது' என்று அந்த செய்தித்தாள் கூறுகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் 'உள்ளூர் அளவிலான மோதல்' இல்லாதது 'பாதிக்கப்பட்ட குடிமக்களின் கருத்துகளுக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது'. இம்மக்கள் கியேவினால் பின்நோக்கி பார்க்கும், சோவியத் செல்வாக்கிற்குட்பட்ட, பயனற்ற மற்றும் சர்வாதிகாரமானவர்களாக உணரப்படுகிறது'. பெரும்பாலான உரையாசிரியர்களின் பார்வையில், 'டொன்பாஸில் தனிப்பட்ட இன அல்லது சமூக குழுக்களுக்கு இடையேயான 'நல்லிணக்கம்' இருக்க முடியாது'. கியேவின் பார்வையில், சமாதானத்தை கட்டியெழுப்புவது 'பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டவுடன் மட்டுமே சாத்தியமாகும். அதாவது, அவை மீண்டும் முழுமையாக உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் வந்தபின்னரே'.
உக்ரேனிய அரசியலில் பாசிச சக்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை SWP கட்டுரை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது: “வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகள் 2014 முதல் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடையவில்லை என்றாலும், தேசியவாத கருத்துக்கள் சமூக விவாதத்தில் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தன. உக்ரேன் கிழக்கில் மோதல் (அதே போல் மற்ற பிரச்சினைகள்). மீண்டும் மீண்டும், தேசியவாதிகளால் அரசியல் தலைவர்களை தங்கள் கொள்கைகளுக்கு இணங்கிப்போக கட்டாயப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார்கள்”.
SWP கட்டுரை கிழக்கு உக்ரேனில் நடந்த போரின் பேரழிவு தரும் மனித மற்றும் சமூக இழப்புகள் பற்றியும் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, 2017 இல், 'சீரான ஊட்டச்சத்துக்கான அணுகல் இல்லாத மக்களின் விகிதம்' டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளில் 86 சதவீதமாகவும், கியேவ்வின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 55 சதவீதமாகவும் இருந்தது. 2014 முதல், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்து அழிந்துள்ளன. OSCE இன் படி, இரு தரப்பும், ஆனால் குறிப்பாக உக்ரேனிய ஆயுதப்படைகள் பொதுமக்களின் சொத்துக்களை குறிவைத்தன.
கியேவில் உள்ள ஆட்சி அதைப் பொருட்படுத்தவில்லை. 'கியேவில் உள்ள சில அரசியல்வாதிகள் டொன்பாஸை ஒரு தேவையற்ற பொருளாதாரச் சுமையாகவும், அதன் மக்கள் பின்தங்கியவர்களாகவும் அரசியல் ரீதியாக நம்பகத்தன்மையற்றவர்களாகவும் பார்க்கிறார்கள். மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமானக் கஷ்டங்களைத் தணிக்க முயல்வதற்கான அதன் விருப்பம் அதற்கேற்ப குறைவாக உள்ளது” என்று SWP அறிக்கை கூறுகிறது.
நேட்டோ இந்த பயங்கரவாதத்தால் கிடைத்த 'பெறுமதியான காலத்தை' (மேர்க்கெல்) மீண்டும் கட்டியெழுப்பவும், முழுமையாக ஆயுதமளிக்கவும், உக்ரேனிய ஆயுதப்படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தியது. எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் பாராளுமன்ற அறிக்கையின்படி, பிரிட்டிஷ் இராணுவம் 2014 முதல் உக்ரேனிய படையினர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதமயமாக்கிள்ளது. உக்ரேன் முறையாக நேட்டோவின் ஒரு பகுதியாக மாறவில்லை, ஆனால் நடைமுறையில் அவ்வாறு இயங்கின்றது.
உக்ரேனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ரஷ்யாவின் முடிவு, இந்த நேட்டோ தாக்குதலுக்கு முன்கூட்டியே எதிர்வுகூறக்கூடிய மற்றும் விருப்பமுடைய நோக்கமாக இருந்தது. ஆனால் இது, அதன் நடவடிக்கையை பிற்போக்குத்தனமற்றதாக ஆக்குவதில்லை. புட்டின் ஆட்சியானது, சோவியத் ஒன்றியத்தின் சமூகமயமாக்கப்பட்ட சொத்துக்களை சூறையாடிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்துடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய தன்னலக்குழுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஆனால் மேற்கத்திய ஜனநாயகத்தின் 'சொர்க்க்க பூமியில்' ரஷ்யா புகுந்ததால் போர் தூண்டப்பட்டது என்ற கூற்று பொய்யானது. முக்கிய பொறுப்பு நேட்டோ சக்திகளிடம் உள்ளது. இது போரை விரும்பியதோடு, வேண்டுமென்றே தூண்டியது.
போரின் தொடக்கத்திலிருந்து, அவர்கள் அதிநவீன ஆயுதங்களால் உக்ரேனை வெள்ளத்தில் மூழ்கடித்து வருகின்றனர். அவர்கள் தளவாட ஆதரவை வழங்குகிறார்கள், தாக்குதல் இலக்குகளைத் தீர்மானிக்கிறார்கள், சண்டையை வழிநடத்துகிறார்கள் மற்றும் உக்ரேனில் தங்கள் சொந்த உயரடுக்கு துருப்புக்களுடன் இரகசியமாக செயல்படுகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியையும் அவர்கள் முடக்குகிறார்கள். உண்மையில், நேட்டோ நீண்ட காலமாக அணுசக்தி கொண்ட ரஷ்யாவிற்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது. இது மனிதகுலத்தினை அணுசக்தியால் அழிவுக்குட்படுத்தும் ஆபத்தை விளைவிக்கும்.
போருக்கு எதிரான போராட்டத்தை அதன் காரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தால் மட்டுமே இந்த ஆபத்தை தடுக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அத்தகைய ஒரு இயக்கத்தைக் கட்டமைத்து, அதை ஒரு சோசலிச முன்னோக்கில் ஆயுதபாணியாக்கி வருகின்றன.
மேலும் படிக்க
- போர்-ஆதரவு வெறியை தூண்டிவிட பைடென் செலென்ஸ்கியைப் பயன்படுத்துகிறார்
- ரஷ்யாவிற்கு எதிரான அணுஆயுதப் போருக்காக F-35 போர் விமானங்களை வாங்க ஜேர்மன் பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது
- பிரிட்டிஷ் துருப்புகள் உக்ரேன் மண்ணில் “உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அபாய" செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன
- ஏகாதிபத்திய சக்திகள் மூன்றாம் உலகப் போருக்குத் தயாராகின்றன: அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி மிக அதிகபட்ச இராணுவச் செலவுகளுக்குத் திட்டமிடுகின்றன