மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இலங்கையின் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்புவதாகவும், இரண்டாவது தடவையாக பதவியேற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் விக்கிரமசிங்க, காலதாமதமான உள்ளூராட்சித் தேர்தலை ஏற்பாடு செய்வதற்கான நிதியை தற்போது நிறுத்தி வைத்துள்ளார்.
பத்து பில்லியன் ரூபாய்கள் (சுமார் 28 மில்லியன் டொலர்கள்) 2023 தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தேர்தல்களுக்காக முதலில் ஒதுக்கப்பட்டது. இதற்கு கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால் பின்னர், கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் 'அத்தியாவசிய செலவுகளை' மட்டுமே ஏற்க முடியும் என்று விக்கிரமசிங்க பிரகடனம் செய்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவது அவசியமில்லை என்று கூறினார்.
விக்ரமசிங்கவின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலைத் தொடர்ந்து, இலங்கையின் தேர்தல் ஆணையம் (EC) அடுத்ததாக ஏப்ரல் 25ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும் கடந்த ஏப்ரல் 17ம் திகதியன்று, தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
'கருவூலத்திலிருந்து நேர்மறையான பதிலுக்காக [தேவையான நிதிக்காக] காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என்று புஞ்சிஹேவா தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏப்ரல் 25 தேர்தல்கள் எதிர்கால தேதி அறிவிக்கப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பதாகும். இதை அடுத்த நாள் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தன.
அனைத்து நிதியும் 'பொருளாதார மீட்சிக்கு' பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம், விக்கிரமசிங்க தேர்தல் நிதியை முடக்குவதை நியாயப்படுத்த முயன்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையை திணிப்பதில் அனுபவமிக்க விக்கிரமசிங்க, உள்ளூராட்சித் தேர்தல்களில் ஏற்படும் தோல்வி, தேசிய பாராளுமன்றத்தையோ அல்லது அதன் ஜனாதிபதி பதவியையோ பாதிக்காத போதும், தனது அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கி, தனது மிருகத்தனமான சிக்கனத் திட்டத்தைத் திணிப்பதைத் தடம் புரளச் செய்துவிடும் என்று அஞ்சுகிறார்.
இலங்கையில் 340 உள்ளூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அதில் 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகள் செயலிழந்துள்ளன. அவை சிறப்பு ஆணையாளர்கள் என அழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்படாத மூத்த அரச அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் தற்போது இயங்குகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தேர்தல் தாமதங்கள் மற்றும் ரத்துகளை கண்டனம் செய்து, கடந்த பிப்ரவரி 21ம் திகதியன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கையானது 'அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்குவதற்கான தயாரிப்பில், ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்' என்று எச்சரித்துள்ளது.
கடந்த வாரம், இலங்கையின் முக்கிய ஆங்கில நாளிதழான டெய்லி மிரர், விக்ரமசிங்க சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்ததாகவும் விரைவில் தேர்தல் நடந்தால், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன் கலந்தாலோசித்ததன் பின்னர், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. சிறுபான்மை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் 'பொருளாதாரம் மேல்நோக்கிய போக்கில் உள்ளது என்றும், வரும் மாதங்களில் அது மேம்படும்' என்றும் விக்கிரமசிங்க கூறினார். இது, அவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் நம்புவதைக் குறிக்கிறது.
விக்கிரமசிங்கவை சந்தித்த சிறுபான்மை எம்.பி.க்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என ஏனைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் தற்போது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயாவுடன் (SJB) கூட்டணி வைத்துள்ளன.
SJB கட்சியையும், விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியையும் (UNP) இணைப்பதற்கு, தானும் ஹக்கீமும் முயற்சித்ததாக மனோ கணேசன் மிரருக்கு தெரிவித்தார். 2020 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற குழுவினரால் SJB உருவாக்கப்பட்டது.
இலங்கைப் பொருளாதாரத்தில் 'மேல்நோக்கிய போக்கு' பற்றிய விக்கிரமசிங்கவின் கூற்றுக்கள் பொய்யானவை ஆகும். ரூபாயின் மதிப்புக் குறைப்பில் சமீபத்திய தற்காலிக தளர்வு மற்றும் சுமார் 65 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதம் வரை பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் சரிவு என்பன இலங்கையை தாக்கும் ஆழமான பொருளாதார நெருக்கடியை குறைக்காது. கடந்த வாரம், சர்வதேச நாணய நிதியமானது, உலகம் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை போக்குகளுக்கும் மற்றும் உயர் பணவீக்கத்தையும் எதிர்கொண்டுள்ளதால், வட்டி விகிதங்களை தொடர்ந்து கடுமையாக்க வேண்டும் என்று தெற்காசிய நாடுகளை எச்சரித்துள்ளது.
நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கையின் அடுத்த சுற்று தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடமிருந்து வலுவான எதிர்ப்பை உருவாக்கும். இந்த நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், பொதுத்துறை மறுசீரமைப்பு என்பன நூறாயிரக்கணக்கான வேலைகளை அழிப்பதோடு, சமூக மானியங்களில் பெரும் வெட்டுக்களையும் ஏற்படுத்தும்.
விக்கிரமசிங்க பெருவணிகங்கள், ஊடகங்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளின் ஆதரவிலும், சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு கடனைப் பெறுவதற்கான அவரது 'திறனுக்கான' ஆர்வத்திலும் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புக்கு ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கு 'வாழ்த்துக்கள்' தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட இலங்கை வர்த்தக சம்மேளனம் 'சீர்திருத்தங்களை அமுல்படுத்தி' சமூகத் தாக்குதல்களை தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மார்ச் 26 அன்று, சண்டே ஐலண்டில் வெளிவந்த ஒரு தலையங்கம் பிணை எடுப்பு கடனை 'புதிய ஆரம்பம்' என்று பாராட்டியது, அதே நேரத்தில் மற்ற முக்கிய செய்தி ஊடகங்கள் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை நாட்டின் 'பொருளாதார மீட்சிக்கு' இழுக்கு என்று கண்டனம் செய்தன.
ஏப்ரல் 25 அன்று பாராளுமன்றம் கூடும் போது 'தேசிய அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பை' விடுக்க இருப்பதாக விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக மனோ கணேசன் இந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தினுடனான அரசாங்கத்தின் கடன் ஒப்பந்தத்தை ஏப்ரல் 25 அன்று சமர்ப்பிக்க உள்ள விக்கிரமசிங்க, மூன்று நாட்கள் விவாதத்திற்குப் பிறகு, ஏப்ரல் 28 அன்று வாக்கெடுப்புக்கு விட உள்ளது. எதிர்க்கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெட்கமின்றி விக்கிரமசிங்கவின் சிக்கன நடவடிக்கைகளை விமர்சிக்கும் அதே வேளையில், அவர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கும் இலங்கை முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.
தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், விக்கிரமசிங்கவின் தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான அழைப்பும் மற்றும் அவரது இதர அரசியல் சூழ்ச்சிகளும், அவரது ஸ்திரமற்ற SLPP கட்சி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவைத் திரட்டும் முயற்சியாகும். இலங்கை முதலாளித்துவம் மற்றும் அதன் ஆளும் உயரடுக்கும் ஒரு வரலாற்று அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. இதனால்தான் விக்கிரமசிங்க தனது ஜனாதிபதி சர்வாதிகாரத்தை வலுப்படுத்தி, எந்தவொரு தொழிலாளர் எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அரச இயந்திரத்தை பலப்படுத்துகிறார்.
நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பாராளுமன்றம் அங்கீகரித்த பின்னர் விக்கிரமசிங்க, சிக்கன நடவடிக்கைகள் சட்டத்தில் எழுதப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இது பாரிய வெகுஜன எதிர்ப்பை சட்டவிரோதமாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.
ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் (ATB) நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் விவாதம் மற்றும் ஒப்புதலுக்காக முன்வைப்பார்.
விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு எதிரான ஒரு அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கம் தன்னையும் அதன் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், “2023 மே தினத்தை நோக்கி முன்னேறுவோம்! போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்! என்ற அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்:
முதலாளித்துவ அரசு இன்னும் அதிகளவில் மற்றும் அதிக தீவிரத்துடன், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரில், ஆளும் வர்க்கத்தின் சார்பாக நேரடி தலைமையை ஏற்று வருகிறது. இலங்கை மற்றும் பிரான்ஸ் போன்று பொருளாதார வளர்ச்சியில் வேறுபட்ட நாடுகளாக இருந்தாலும், இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் என தொழிலாள வர்க்கம் அரசின் தலைவரை அதன் முக்கிய எதிரியாக எதிர்கொள்கிறது. அரசியல்ரீதியில் பயனுள்ளதாக இருக்கும் போதெல்லாம் அவர்கள் ஜனநாயக வாய்வீச்சுக்களைப் பயன்படுத்தினாலும், அவர்களின் முடிவுகளை அமுலாக்குவதற்கு அவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தையே நம்பி இருப்பதுடன், அவை அப்பட்டமாக சர்வாதிகாரத் தன்மையைக் கொண்டுள்ளன. முதலாளித்துவ ஜனநாயகத்தின் தற்போதைய உலகளாவிய முறிவு லெனினின் பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது: அரசியல் எதிர்வினை என்பது ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பு அம்சமாகும்.
விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த அரசியல் மற்றும் தொழில்துறை அணிதிரட்டலுக்கு முக்கிய தடையாக இருப்பது முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் ஆகும்.
கடந்த ஆண்டு இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான எழுச்சியின் போது, வெகுஜன எதிர்ப்புகளையும் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தங்களையும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், முன்னிலை சோசலிஸ்ட் கட்சி போன்ற போலி இடது குழுக்களின் ஆதரவுடன், SJB மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் ஒரு இடைக்கால முதலாளித்துவ ஆட்சிக்கான கோரிக்கைகளுக்குப் பின்னால் திசை திருப்பிவிட்டன.
கடந்த மார்ச் 1 ம் திகதி மற்றும் 15ம் திகதிகளில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் இருந்த தொழிற்சங்கங்கள், வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசாங்கத்திடம் பயனற்ற முறையீடுகளை விடுத்து தம்மை மட்டுப்படுத்திக்கொண்டன.
அதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை தயாரிக்க ஒவ்வொரு பணியிடத்திலும் கிராமப்புற ஏழைகள் மத்தியிலும், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சாராமல், தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இத்தகைய மாநாடு, இந்த நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்.