மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜோன்-லூக் மெலன்சோனின் “ஜனரஞ்சகமான” அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியால் உருவாக்கப்பட்ட புதிய மக்கள் முன்னணியானது (NFP) ஸ்ராலினிச நாளிதழான L’Humanité இன் சிறப்பு இதழாக, ஜூன் 30 மற்றும் ஜூலை 7 பிரெஞ்சு திடீர் பாராளுமன்ற தேர்தல்களுக்கான வேலைத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
ஜூன் 9 ஐரோப்பிய தேர்தல்களில் அதி தீவிர வலதுசாரிகளின் எழுச்சிக்குப் பிறகு, மக்ரோன் அழைப்பு விடுத்த திடீர் தேர்தல்களின் மையப் பிரச்சினையானது, போர் மற்றும் தீவிர வலதுசாரி ஆட்சியின் அச்சுறுத்தலாகும். அதி தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) அதிகாரத்தின் வாயிலில் உள்ளது. கருத்துக் கணிப்புகள் தற்போது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை விட சற்று குறைவாக அது இருப்பதாகக் காட்டுகிறது. பிரிட்டனில் ஜூலை 4 திடீர் தேர்தல்கள் மற்றும் ஜூலை 7 பிரெஞ்சு திடீர் தேர்தல்களுக்குப் பிறகு, ரஷ்யாவுடனான போரை ஒரு பாரிய விரிவாக்கத்திற்குத் தயார் செய்வதற்காக வாஷிங்டனில் ஜூலை 9 உச்சிமாநாட்டை நேட்டோ கூட்டணி நடத்துகிறது.
இந்த தீர்க்கமான கேள்விகளில், மக்ரோனின் பொலிஸ்-அரசு ஆட்சி அல்லது தேசிய பேரணி கட்சிக்கு ஒரு மாற்றீட்டை புதிய மக்கள் முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டமானது, “இம்மானுவேல் மக்ரோனின் கொள்கைகளை உடைப்பதற்கான ஒரு வேலைத்திட்டம்” என்று அது பிரகடனப்படுத்துவதோடு, “அதி தீவிர வலதுசாரிகளின் இனவெறி மற்றும் சமூக சிக்கன கொள்கைகளை” கண்டனம் செய்கிறது. ஆனால், அது பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS), ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), பசுமைவாதிகள் மற்றும் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவற்றுடன் அடிபணியாத பிரான்ஸ் கட்சியுடனும் கூட்டணியைக் கொண்டுள்ளது.
புதிய மக்கள் முன்னணியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் என்பது, இதிலிருக்கும் கட்சிகள் பிரெஞ்சு அரசியலின் வலதுசாரி மறுஒழுங்கமைப்பில் பங்கேற்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது, இது, வெளிநாட்டில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போருக்குத் தயாராகும் வகையில் ஆளும் வர்க்கம் முன்கூட்டியே உடனடித் தேர்தல்கள் மூலம் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உக்ரேனுக்கு துருப்புக்களை அனுப்பவும், இராணுவ போலீஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளை வலுப்படுத்தவும் அதன் வேலைத் திட்டம் அழைப்பு விடுத்துள்ளது.
புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டமானது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிபலிக்கவில்லை, மாறாக அதனுடன் இணைந்த கட்சிகளின் வர்க்க அடித்தளத்தின் நலன்களை பிரதிபலிக்கிறது. புதிய மக்கள் முன்னணி, 1930களின் காலகட்டத்தில் இருந்த மக்கள் முன்னணி அல்ல. தொழிலாள வர்க்கத்தில் பாரிய அடித்தளத்தைக் கொண்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிசக் கட்சி ஆகியவை அன்றைய மக்கள் முன்னணியில் உள்ளடங்கி இருந்தன. அதன் சமூக அடிப்படையானது கல்வித்துறையில் உள்ள நடுத்தர வர்க்கத்தின் முதலாளித்துவ மற்றும் வசதியான அடுக்குகளுக்கும் இன மற்றும் பாலின அடையாள அரசியலில் அடித்தளமிட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் இடையிலான கூட்டணியாக இருந்தது.
பிரான்சில், 1968 மே பொது வேலைநிறுத்தத்தை ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட கட்சி விற்றுத்தள்ளிய அரை நூற்றாண்டில், இந்த சக்திகளை “இடது” என்று ஊக்குவிப்பதற்காக பிரெஞ்சு ஆளும் வர்க்கம் பரந்த வளங்களை செலவிட்டுள்ளது. ஆனால் சோசலிசக் கட்சி, கம்யூனிஸ்ட கட்சி மற்றும் பசுமைக் கட்சிகள் பலமுறை அரசாங்கங்களை அமைத்துள்ளன - 1981-1995, 1997-2002 மற்றும் 2012-2017 - இவை போரை நடத்தி வாழ்க்கைத் தரங்களை வெட்டிக் குறைத்துள்ளன. புதிய மக்கள் முன்னணியின் உருவாக்கம் ஒரு எச்சரிக்கையாகும்: அடிபணியாத பிரான்ஸ் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற ட்ரொட்ஸ்கிசத்தின் ஓடுகாலிகளான போலி-இடதுகளின் வழித்தோன்றல்களும் அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று அச்சுறுத்தும் ரஷ்யாவுடனான ஒரு போர் உட்பட இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக உள்ளனர்.
ஏகாதிபத்தியம் பேரழிவுடன் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போர் விரிவாக்கம், காஸாவில் இனப்படுகொலை மற்றும் நவபாசிச ஆட்சிக்கு எதிராக, பிரான்ஸ் மற்றும் அனைத்து நேட்டோ நாடுகளிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பு உள்ளது. பிரான்சின் திடீர் தேர்தல்களில் இருந்து எந்த அரசாங்கம் தோன்றினாலும், அது புதிய மக்கள் முன்னணியை உள்ளடக்கியிருந்தாலும் கூட, தொழிலாள வர்க்கத்துடன் மோதும் போக்கில் தான் இருக்கும்.
ஆனால், போர், தேசிய பேரணி கட்சியின் எழுச்சி மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் அதனை ஊக்குவித்து வருவது என்பது ஒரு எச்சரிக்கையாகும்: தன்னிச்சையான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் அடுத்த அரசாங்கத்தை வீழ்த்தாது. சோசலிசக் கட்சி, அடிபணியாத பிரான்ஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிகளின் துரோகமும், தொழிலாள வர்க்கத்தில் அது உருவாக்கும் கசப்பும் நவ-பாசிஸ்டுகளுக்கு லாபம் ஈட்டுவதை உறுதி செய்ய ஆளும் வர்க்கம் அயராது உழைக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு எதிராகப் போரை நடத்தவும், மக்கள் எதிர்ப்பை நசுக்க ஒரு பாசிச போலீஸ் அரசைப் பயன்படுத்தவும் உறுதியாக இருக்கும் ஒரு ஆளும் வர்க்கத்தை, தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது.
புதிய மக்கள் முன்னணி அமைதியைப் போற்றுகிறது, ஆனால் ரஷ்யாவுடனான போரைத் தழுவுகிறது,
புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம் “அமைதியின் அவசரத்தை” பறைசாற்றுகிறது. ஆனால், உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புக்களை அனுப்ப மக்ரோனின் பெரும் செல்வாக்கற்ற அழைப்பை ஆதரிக்கிறது. அது, “ஆக்கிரமிப்புப் போரில் விளாடிமிர் புட்டின் தோல்வியடைவதற்கு” உறுதியளித்து, “உக்ரேனிய மக்களின் இறையாண்மை மற்றும் சுதந்திரம் மற்றும் அதன் எல்லைகளின் மீறல் தன்மையைக் பாதுகாக்க” அழைப்பு விடுக்கிறது. உக்ரேனுக்கு “அவசியமான ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும்” மற்றும் “அணு மின் நிலையங்களைப் பாதுகாக்க அமைதிப் படைகளை அனுப்ப வேண்டும்” என்று அது கோரிக்கை விடுக்கிறது.
நேட்டோ பேரழிவுகரமான போரின் விரிவாக்கத்திற்கு தயாராகி வரும் நிலையில், பொதுமக்களை அமைதிப்படுத்தும் இழிந்த முயற்சியாக இது இருக்கிறது. 94 சதவீத அமெரிக்கர்களும், 88 சதவீத மேற்கு ஐரோப்பியர்களும் உக்ரேனில் இடம்பெற்றுவரும் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக யூரேசியா குழு கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது. ஆனால், ஆளும் வர்க்கத்துடன் இணைந்து, புதிய மக்கள் முன்னணி நேட்டோவின் சூறையாடும் போர்களுக்கு “அமைதி காத்தல்” போன்ற ஒரு மாறுவேடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது.
உக்ரேனில் பிரெஞ்சு துருப்புக்கள் நிறுத்தப்பட்டால், புதிய மக்கள் முன்னணியினர் அமைதி காக்கும் பணியில் பங்கேற்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே அரை மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கிய ஒரு பேரழிவுகரமான போரில் நுழைவார்கள். அதே நேரத்தில், மக்ரோனும் அவரது நேட்டோ கூட்டாளிகளும் சோவியத்திற்கு பிந்தைய சகாப்தம் முழுவதும் செயல்படுத்த முயன்று, உலக ஏகாதிபத்தியம் மேற்கொண்டுவரும் துண்டாடலை அவர்கள் தீவிரப்படுத்துவார்கள்.
1991 இல் சோவியத் யூனியனின் ஸ்ராலினிசக் கலைப்பு, நவகாலனித்துவப் போர்களுக்கான முக்கிய அரசியல்-இராணுவத் தடையை அகற்றியதில் இருந்து சோசலிசக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இராணுவவாதத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. ஈராக்கிற்கு எதிரான 1991 வளைகுடாப் போர், 2001 ஆப்கானிஸ்தானின் நேட்டோ படையெடுப்பு மற்றும் 2010 களில், லிபியா, சிரியா மற்றும் மாலியில் நடந்த போர்கள் ஆகியவை இதில் அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், பிரான்ஸ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிரியா மற்றும் ஆபிரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், புதிய மக்கள் முன்னணியின் திட்டம் அதைப்பற்றி முற்றிலும் வாய்மூடி மௌனமாக இருப்பதாகும்.
உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்பு சந்தேகத்திற்கு இடமின்றி பிற்போக்குத்தனமானது மற்றும் எதிர்க்கப்பட வேண்டும். ஆனால், யார் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று கேட்பதன் மூலம், நேட்டோ ரஷ்யா போருக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை தொழிலாள வர்க்கம் தீர்மானிக்க முடியாது. இன்னும் பெரிய பேரழிவைத் தடுப்பதற்கும், போரை நிறுத்துவதற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்திய நேட்டோ சக்திகளால் மேலும் போர் தீவிரமடைவதை எதிர்ப்பதும் அவசியமாகும்.
இந்தப் போர் உக்ரேனில் “சுதந்திரத்தை” பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்ற புதிய மக்கள் முன்னணியின் கூற்று ஒரு பொய்யாகும். உக்ரேனிய ஆட்சி நேட்டோவால் ஆதரிக்கப்படும் சர்வாதிகாரமாகும். அதன் தலைவர், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தேர்தல்களை இடைநிறுத்தியுள்ளார். மேலும் அவரது ஆட்சி, இரண்டாம் உலகப் போரின் காலத்து நாசி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவின் விசுவாசிகளால் நடத்தப்படுகிறது. இது எதிர்க்கட்சிகளை தடை செய்கிறது, மேலும் அதன் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் வலுக்கட்டாயமாக பொதுமக்களை இராணுவத்திற்குள் இழுக்கிறார்கள். நேட்டோ உக்ரேனில் சுதந்திரத்திற்காக போராடவில்லை, மாறாக, ரஷ்யா மீது ஏகாதிபத்திய போரை நடத்துவதற்கு உக்ரேனை கடத்தியுள்ளது.
ரஷ்யாவுடனான போரில் நேட்டோவின் நோக்கங்கள், சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடந்த உக்ரேன் உச்சிமாநாட்டில் போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவால் அப்பட்டமாக முன்வைக்கப்பட்டது. “காலனித்துவத்திற்கு” எதிரான போர் என்ற மோசடிப் பதாகையின் கீழ், நவீன உலகில் ரஷ்யாவிற்கு “இனி இடம் இல்லை” என்று அறிவித்து, ஏகாதிபத்தியத்தால் ஆதிக்கம் செலுத்தக்கூடிய 200 சிறிய நாடுகளாக அதனை துண்டாடுவதற்கு அழைப்பு விடுத்தார்.
துடா பின்வருமாறு கூறினார்:
ரஷ்யா பெரும்பாலும் ஒரு நல்ல காரணத்திற்காக நாடுகளின் சிறை என்று அழைக்கப்படுகிறது. இது 200 க்கும் மேற்பட்ட இனக்குழுக்களின் தாயகமாகும். அவர்களில் பெரும்பாலோர் இன்று உக்ரேனில் பயன்படுத்தப்படும் முறைகள் மூலம் ரஷ்யாவில் வசிப்பவர்கள் ஆனார்கள். ரஷ்யா இன்று உலகின் மிகப்பெரிய காலனித்துவ சாம்ராஜ்யமாக உள்ளது. இது, ஐரோப்பிய சக்திகளைப் போலல்லாமல், காலனித்துவமயமாக்கல் செயல்முறையில் இருந்து விடுபடவில்லை. மேலும் அதன் கடந்த கால பேய்களை ஒருபோதும் சமாளிக்க முடியவில்லை. நவீன உலகில் காலனித்துவத்திற்கு இனி இடமில்லை.
இது இடதுபுறத்தில் இருந்து அல்ல, மாறாக ஸ்டாலினிசம் சோவியத் யூனியனைக் கலைத்ததன் மூலம் நிறுவப்பட்ட பிற்போக்குத்தனமான ரஷ்ய முதலாளித்துவ ஆட்சிக்கு வலதுபுறத்தில் இருந்து வந்த விமர்சனமாகும்.
ரஷ்யாவின் “மூலோபாய தோல்விக்கு” அழைப்பு விடுக்கும் நேட்டோ, உலகைக் கைப்பற்றுவதற்கான அவநம்பிக்கையான மூலோபாயத்தை முன்னெடுத்து வருகிறது. இது, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் பொருளாதார நிலையின் தொடர்ச்சியான நீண்டகால வீழ்ச்சியை, போர் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதே அதனது இலக்காக கொண்டுள்ளது. இது மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தை கட்டாயப்படுத்தவும், ரஷ்யாவைப் பிளவுபடுத்தி, அதன் எண்ணெய் மற்றும் மூலோபாய கனிமங்களை சூறையாடவும், சிரியா மற்றும் நேட்டோவால் குறிவைக்கப்பட்ட பிற நாடுகளில் இருந்து அதன் இராணுவ ஆதரவை திரும்பப் பெறவும், சீனாவிற்கு எதிரான ஒரு புதிய காலனித்துவ போருக்கு அதை அடிப்படையாக பயன்படுத்தவும் முயல்கிறது.
பிரெஞ்சு முதலாளித்துவமோ அல்லது ஐரோப்பிய முதலாளித்துவமோ காலனியாக்க செயல்முறையை கைவிட்டதும் இல்லை அல்லது “தங்கள் கடந்த கால பேய்களை” விரட்டவும் இல்லை. ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் வாஷிங்டனுடன் இணைந்து நடத்தும் நவகாலனித்துவ போர்த் தாக்குதல், உத்தியோகபூர்வ ஐரோப்பிய கொள்கையின் மையத்தில் உள்ள நவ-பாசிசத்தின் வேரூன்றி மற்றும் இனப்படுகொலைக்கான ஆதரவுடன் கைகோர்த்துச் செல்கிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரமடையும் ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரையும் அதற்கு புதிய மக்கள் முன்னணியின் ஆதரவையும் தீர்க்கமாக நிராகரிக்க வேண்டும்.
காஸாவில் இனப்படுகொலை: மெலன்சோன் தனது விமர்சனங்களை “ஆற்றில் வீசுகிறார்”
காஸா இனப்படுகொலையில் புதிய மக்கள் முன்னணியின் முற்றிலும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடு என்பது, சோசலிசக் கட்சி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு வரம்பற்ற சலுகைகளை வழங்கும் மெலன்சோனின் மூலோபாயத்தின் விளைவாக ஏற்பட்டது. அவர் புதிய மக்கள் முன்னணியை அறிவித்து, சோசலிசக் கட்சியுடன் ஒரு கூட்டணியை பகிரங்கமாக முன்மொழிந்தபோது, “[நாங்கள்] எங்கள் வேறுபாடுகளை ஆற்றில் வீசுகிறோம்” என்று அவர் அறிவித்தார். இந்த சூழ்நிலையின் விளைவுகளில் ஒன்று காஸா இனப்படுகொலையில் புதிய மக்கள் முன்னணியின் முற்றிலும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடு ஆகும். இது, இஸ்ரேலிய ஆட்சிக்கு சோசலிசக் கட்சி அரசாங்கங்களின் நீண்டகால ஆதரவுடன் ஒத்துப்போகிறது.
காஸாவில் ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருப்பதை புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம் அங்கீகரிக்கவில்லை. மேலும், அது சிடுமூஞ்சித்தனமான முறையில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவையும், காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் நடவடிக்கைகளையும் சமப்படுத்துகிறது. இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பலை தடுத்து நிறுத்துவதற்கும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை சக்தியை அணிதிரட்டுவதற்கான அழைப்புகளை நிராகரிக்கும் புதிய மக்கள் முன்னணி, அதன் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொள்கையை அது பராமரிக்கிறது.
“ஹமாஸின் பயங்கரவாத படுகொலைகளை கண்டிப்பதுடன், அதன் இறையாட்சி வேலைத்ததிட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்”. அத்தோடு, “ஹமாஸ் மற்றும் நெதன்யாகு அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு” ஒப்புதல் அளிக்கிறோம் என்று அறிவித்து, அது பின்வருமாறு குறிப்பிட்டது:
“நெதன்யாகுவின் அதி தீவிர வலதுசாரி மேலாதிக்க அரசாங்கத்திற்கு பிரெஞ்சு அரசாங்கத்தின் குற்றத்தனமான ஆதரவை முறித்து, இனப்படுகொலை ஆபத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தூண்டும் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணைகளை அமல்படுத்த காஸாவில் உடனடி போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.”
ஆனால், காஸாவில் இனப்படுகொலைக்கான “ஆபத்து” இருப்பதாகக் கூறுவது தவறானது. காஸாவில் ஒரு இனப்படுகொலை நிகழ்நேரத்தில் இடம்பெற்று வருகிறது, இஸ்ரேலிய ஆட்சி பாதுகாப்பற்ற குடிமக்கள் மீது குண்டுகளை வீசி வருவதுடன், காஸாவின் எஞ்சியுள்ள சில மருத்துவமனைகளில் காயமடைந்த மற்றும் நோயாளிகளைக் கொல்ல கொலைப் படைகளை அனுப்புகிறது, மேலும் 2 மில்லியன் மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருத்துவ சேவையை மறுக்கிறது.
காஸாவில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனப்படுகொலையின் யதார்த்தத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கான புதிய மக்கள் முன்னணியின் முடிவு ஒரு எச்சரிக்கையாகும்: ஒரு புதிய மக்கள் முன்னணியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், அது சியோனிச ஆட்சிக்கு பாரிஸின் “குற்றவாளி ஆதரவு” என்று ஒப்புக்கொண்டதைத் தொடர முயற்சிக்கும். பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஸ்பெயினின் நிலைமை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கு சமூக-ஜனநாயகவாதிகள் சுமர் கட்சியில் மெலன்சோனின் ஸ்பானிய கூட்டாளிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்துள்ளனர். மாட்ரிட், இனப்படுகொலையை கண்டித்தும், சுதந்திர பாலஸ்தீன அரசுக்கு அழைப்பு விடுத்தும் வெற்று அறிக்கைகளை வெளியிட்டது, அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அனுப்பி வருகிறது.
இனப்படுகொலை மற்றும் போரை நிறுத்துவதற்கு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், புதிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாகவும் அணிதிரட்டுவது அவசியமாகும்.
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கு உலகப் போர், இனப்படுகொலை மற்றும் முதலாளித்துவத்தை எதிர்ப்பது அவசியமாகும்
புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டமும் அதன் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்படும் பேச்சுப் புள்ளிகளும் சட்டபூர்வமான சமூக நடவடிக்கைகளின் ஒரு பெரிய வரிசையைக் கொண்டுள்ளன. “அனைத்து குடும்பங்களுக்கும் மானியங்களை வலுப்படுத்துவதன் மூலம் வீடுகள் முழுமையாக காப்பீடு செய்யப்படுவதை உறுதி செய்தல்” அல்லது “பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளில் 1 யூரோ உணவை உறுதி செய்தல்” போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். எவ்வாறாயினும், தேசிய பேரணி கட்சி, தொழிலாளர்களின் வாக்குகளை பெற முடிந்தால், அதற்குக் காரணம், சோசலிசக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வருடத்திற்குள் அல்லது வாரங்களுக்குள்ளேயே தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை ஏமாற்றியதில் தொழிலாளர்கள் நீண்ட அனுபவம் பெற்றுள்ளனர் என்பதை குறிக்கும்.
புதிய மக்கள் முன்னணியின் தேர்தல் வேலைத்திட்டத்தில் உள்ள முக்கிய சமூக நடவடிக்கைகள், இப்போது நடைபெற்று வரும் ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிரான வரலாற்றுத் தாக்குதலை நேரடியாக நிவர்த்தி செய்வதாகும். “உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருளில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைத் தடுப்பது”, “[மாதாந்திர] குறைந்தபட்ச ஊதியத்தை வரிக் கழிவுக்குப் பிறகு €1600 யூரோவாக உயர்த்துவதன் மூலம் சம்பளத்தை அதிகரிப்பது” மற்றும் “ஓய்வு வயதை 64 ஆக உயர்த்தும் மக்ரோனின் ஆணையை உடனடியாக ரத்து செய்வது” ஆகியவை இதில் அடங்கும்.
திவாலான இந்த வேலைத் திட்டம் அதன் தேசிய நோக்குநிலையிலிருந்து பாய்கிறது. பூகோளமயமாக்கப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உணவு மற்றும் எரிசக்திக்கான விலைகள் உலகச் சந்தைகளால் நிர்ணயம் செய்யப்படுகின்றன, அவை கடந்த நான்கு ஆண்டுகளில் விலைவாசிகளின் அழிவுகரமான உயர்விலிருந்து பாரிய அதிர்ஷ்டத்தை அறுவடை செய்கின்ற முக்கிய சர்வதேச வங்கிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. இது அரை நூற்றாண்டில் மிகப்பெரிய பணவீக்க அலை ஆகும். முதலாளித்துவ சொத்துக்களுக்கு எதிராக ஊடுருவாமல், முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருந்து இந்த வளங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சர்வதேச அளவில் ஒன்றாக இணைந்து வேலை செய்யாமல் தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க முடியாது.
குறிப்பாக, வாழ்க்கைத் தரத்தில் கீழ்நோக்கிய சுழலை நிறுத்துவதற்கு புதிய மக்கள் முன்னணி ஆதரிக்கும் போர்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதைக் கட்டுப்படுத்தும் நேட்டோவின் முடிவு மற்றும் பால்டிக் கடல் துறைமுகங்கள் வழியாக ரஷ்ய தானியங்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, உலகளாவிய பணவீக்க அலையில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இது அடிப்படை சமூக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கும் நேரடியாக வழிவகுத்துள்ளது.
கடந்த ஆண்டு, பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்களை திணித்ததன் மூலம் மக்ரோன் வேலைநிறுத்தங்களையும் பாரிய போராட்ட எதிர்ப்புகளையும் தூண்டினார். ஓய்வூதியம் பெறுபவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்கள், இந்த தசாப்தத்தின் எஞ்சிய காலப்பகுதியில் இராணுவ செலவினங்களில் 100 பில்லியன் யூரோக்கள் அதிகரிப்பதற்கான திட்டங்களுக்காக செலவிடப்பட்டது. எவ்வாறாயினும், மக்ரோனின் வெட்டுக்கள் மற்றும் அவரது ஜனநாயக-விரோத வழிமுறைகளுக்கு எதிரான பாரிய சீற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில் ஆரம்பத்தில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பின்னர் திடீரென எதிர்ப்பு போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து, இராணுவ வரவு செலவுத் திட்டத்தைக் விமர்சிக்கத் தவறின.
இப்போது புதிய மக்கள் முன்னணியிலுள்ள மிகப்பெரிய சக்தியான அடிபணியாத பிரான்ஸ் கட்சி, நிதி ஆதாரங்களை போர் தயாரிப்புக்கு தொடர்ந்து திருப்புவதற்கு தனது ஆதரவை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. புதிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக சமூக வலைப்பின்னல்களில் இந்த அழைப்பை முதன்முதலில் துவக்கிய அடிபணியாத பிரான்ஸ் கட்சியின் தலைவரான பிரான்சுவா ரபின், ரஷ்யா மீதான தனது கொள்கை பிரெஞ்சு போர் இயந்திரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று Le Monde பத்திரிகைக்கு அறிவித்தார்.
அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
எங்கள் போர்த் தொழிலைக் கட்டியெழுப்புவதன் மூலம் அதை மிக எளிமையாகத் தொடங்கட்டும். ஆயுதங்கள், பீரங்கிகள், போர் விமானங்கள், முழு அளவிலான ஆயுதங்கள், ஆயுத தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐரோப்பா தனது இறையாண்மையை மீண்டும் பெற வேண்டும். அது இனி அமெரிக்கர்களைச் சார்ந்திருக்கக் கூடாது. மேலும் அதற்கான வழிமுறைகளை அது தனக்குத்தானே கொடுக்க வேண்டும். … போர் முயற்சிக்கு, தேசத்தின் ஒற்றுமைக்கு நாம் கவனமாக கவனம் செலுத்த வேண்டும்.
மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யும் போர்வெறிபிடித்த அரசாங்கங்களை எதிர்கொண்டு, தேசிய ஒற்றுமை மூலம் தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்கள் சமூக உரிமைகளை பாதுகாக்க முடியாது. புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக வாக்குறுதிகள் குறித்து வலுவான எச்சரிக்கைகள் செய்யப்பட வேண்டும். ஏகாதிபத்திய போரை எதிர்ப்பதன் மூலமும், புதிய மக்கள் முன்னணி அமைக்கக்கூடிய அரசாங்கத்தின் இராணுவவாத கொள்கைகளை எதிர்ப்பதன் மூலமும் மட்டுமே தொழிலாளர்கள் சமூக உரிமைகளுக்கான கோரிக்கைகளுக்காக போராட முடியும்.
நடுத்தர வர்க்க அடையாள அரசியலும் முதலாளித்துவ போலீஸ் அரசுக்கான ஆதரவும்
சோவியத்திற்கு பிந்தைய காலத்தில் “இடது” அரசியலின் உத்தியோகபூர்வ மறுவரையறையின் ஒரு முக்கிய கூறுபாடு, அதை வர்க்கத்திலிருந்து விலக்கி, இனம் மற்றும் பாலினப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகும். புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டத்தின் பெரும்பகுதி, இன அல்லது பாலின தப்பெண்ணங்களை எதிர்ப்பது என்ற பெயரில் முதலாளித்துவ அரசு ஆதரிக்கும் அதிகாரத்துவங்களுக்கு நிதியளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புதிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களில் கணிசமான பகுதியினர் இந்த அதிகாரத்துவங்களிலோ அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலோ பணியமர்த்தப்படுவது தற்செயல் நிகழ்வு அல்ல.
“இனவெறி, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் யூத-விரோத கருத்துக்கள் அல்லது இந்த செயல்களின் சூத்திரதாரிகளை தடைசெய்வதற்கு” “பாகுபாடுகளை கண்கானிக்க கூடிய ஆயுதங்களை சரிசமமாக கொண்டிருக்கும் நகர பொலிசை” உருவாக்குமாறு புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம் பிரெஞ்சு அரசை அழைக்கிறது. அது “பாலியல் மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கான கரிமச் சட்டத்தை” முன்மொழிகிறது, இது பட்ஜெட்டை 2.6 பில்லியன் யூரோக்களாகக் கொண்டுவரும்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு பெருநிறுவன எந்திரத்தில் அதிக பதவிகளை வழங்கவும் புதிய மக்கள் முன்னணி அழைப்பு விடுக்கிறது. “தொழிலாளர் குழுவில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு இடங்களை, அதாவது, பணிக்குழுவில் அமரும் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு ஒதுக்குவதன் மூலம், தொழிலாளர்களை பொருளாதார வாழ்வின் உண்மையான நடிகர்களாக” மாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவுகள் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியலின் ஒரு முக்கியமான யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன: ஆளும் வர்க்கம் “இடது” அரசியல் என்பதை முன்வைப்பதற்கு பில்லியன்களை செலவிடுகிறது. ஆளும் வர்க்கமானது, பல்வேறு அதிகாரத்துவவாதிகளுக்கு செலுத்தும் துல்லியமான தொகையானது, பிரான்சின் அணு ஏவுகணைகளின் விமானப் பாதைகள் மற்றும் வெடிக்கும் சக்தியைப் போலவே கவனமாகப் பாதுகாக்கப்பட்டுவரும் அரச இரகசியமாகும். 2012ல், தொழிற்சங்கங்களுக்கு வழுங்கப்படும் நிதியுதவி குறித்து கசிந்த Perruchot அறிக்கை, தொழிற்சங்கங்களின் சுமார் 4 பில்லியன் யூரோ பட்ஜெட்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை அரசு மற்றும் பெருநிறுவன மானியங்களில் இருந்து வந்ததாக வெளிப்படுத்தியது. தொழிற்சங்கங்களின் பல தசாப்தகால துரோகங்களால் அவர்களது நிலுவைத் தளம் சரிந்துவிட்டது.
புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம், தற்போதுள்ள முதலாளித்துவ நிறுவனங்களுக்குள் ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக பொது நிதியுதவிக்கான அதன் கோரிக்கைகளை முன்வைக்கிறது. “பொது உரிமைகள் தொடர்பாக ஒரு அரச பொது மன்றத்தை ஒழுங்கமைக்கவும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும்” இது முன்மொழிகிறது. இது பொலிஸ் வன்முறையை விமர்சிக்கிறது, “ரப்பர் தோட்டாக்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் கையெறி குண்டுகளை தடை செய்யவும் மற்றும் தொழிற்சங்க எதிர்ப்புக்கள் உட்பட எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அவர்களின் மிருகத்தனத்திற்கு மதிப்பிழந்த BRAV-M போலீஸ் மோட்டார் சைக்கிள் தாக்குதல் குழுக்களை அகற்றவும்” அழைப்பு விடுத்தது.
எவ்வாறாயினும், இறுதிப் பகுப்பாய்வில், புதிய மக்கள் முன்னணியின் முக்கிய சமூக அடித்தளமாக இருக்கும் நடுத்தர வர்க்கம் அடிப்படையில் பொலிஸ் அரசை எதிர்க்கவில்லை. பொலிஸ் இயந்திரத்தை வலுப்படுத்துவதற்கான அதன் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அழைப்பில் இது வெளிப்பாட்டைக் காண்கிறது. இது “அனைத்து இராணுவ போலீஸ் பிரிவுகளையும் பராமரிக்கவும், புலனாய்வு, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் போலீஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளின் ஊழியர்களை அதிகரிக்கவும்” பரிந்துரைக்கிறது.
ஆளும் வர்க்கம் மக்களின் விருப்பத்திற்கு எதிராக வெளிநாட்டில் போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் அதிகரிக்கத் தயாராகி வரும் நிலையில், புதிய மக்கள் முன்னணியின் மார்க்சிச எதிர்ப்பு அரசியலுக்கு வலுவான எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டும். போலி-இடதுகளால் நடத்தப்படும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இன மற்றும் பாலின வளாகங்கள் இறுதியில் அதே ஆளும் வர்க்கத்தால் நிதியளிக்கப்படுகின்றன. ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பை அவர்கள் இருவரும் தங்கள் சொந்த பாணியில் அடக்குகிறார்கள்.
புதிய மக்கள் முன்னணியின் தீவிர வலதுசாரி-எதிர்ப்பு பாசாங்குகள் எளிதாகவும் விரைவாகவும் மறைந்துவிடும்: இன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லீம்களுக்கு எதிரான தப்பெண்ணங்களை விமர்சிக்கும் ஒரு அதிகாரி, நாளை காசாவுடன் ஒற்றுமை அறிக்கைகள் “யூத எதிர்ப்பு” என்று கூறி கடுமையான தண்டனையை கோரலாம்.
புதிய மக்கள் முன்னணி முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது
புதிய மக்கள் முன்னணியின் வேலைத்திட்டம், நிச்சயமாக, “கோடீஸ்வரர்களின் சலுகைகளை ஒழிக்க” அழைக்கிறது. வின்சென்ட் பொல்லோரே போன்ற பில்லியனர்கள் தீவிர வலதுசாரி சார்பு ஊடகப் பேரரசுகளை உருவாக்குவதால், நவ-பாசிசத்தின் வளர்ச்சியில் ஆபாசமான சமூக சமத்துவமின்மை வகிக்கும் பங்கை இது சுருக்கமாக எழுப்புகிறது. இது “ஒரு சில உரிமையாளர்களின் கைகளில் ஊடகங்கள் மற்றும் கலாச்சாரத் தொழில்களின் செறிவைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தவும் மற்றும் வெறுப்பைத் தூண்டும் அல்லது மக்களின் கண்ணியத்தை அச்சுறுத்தும் வகையில் குற்றம் சாட்டப்பட்ட ஊடகங்களை பொது மானியங்களில் இருந்து விலக்கவும்” முன்மொழிகிறது.
எவ்வாறாயினும் அதன் முன்னோக்கு, அதி தீவிர வலதுசாரிகள் மற்றும் போர் அல்லது முதலாளித்துவத்தின் கீழ், சமூக சமத்துவமின்மையின் கோரமான நிலைகளை ஒழிப்பதற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது அல்ல, அங்கு எட்டு தனிநபர்கள் மனிதகுலத்தின் பாதிக்கு மேல் செல்வத்தை குவித்து வைத்திருக்கிறார்கள். அது மக்ரோனின் கீழ் உருவாக்கக்கூடிய ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. உண்மையில், இது சில வரி சீர்திருத்தங்களை முன்மொழிகிறது: “வருமான வரியின் முன்னேற்றத்தை 14 நிலைகளுக்கு அதிகரிக்கவும்”, “செல்வ வரியை (ISF) மீட்டெடுக்கவும்” மற்றும் “திறமையற்ற வரி புகலிடங்களை அகற்றவும்” முன்மொழிகிறது.
ஆனால், பில்லியனர்களின் சில வரி ஓட்டைகளை அடைப்பதன் மூலம் அவர்களின் சிறப்புரிமைகளை ஒழிக்க முடியாது. ஒரு தனிநபர் ஒரு பில்லியன் யூரோக்களுக்கு மேல் வைத்திருக்கும் நிலைமைகளில், அதி தீவிர வலதுசாரி ஆட்சி மற்றும் உலகளாவிய போரின் அச்சுறுத்தல் போன்று, முழு சமூக அமைப்பும் முற்றிலும் திவாலாகிவிட்டதை இது வெளிப்படுத்திக் காட்டுகிறது. இந்த அதிர்ஷ்டங்களால் உருவாக்கப்பட்ட கோரமான சமத்துவமின்மை, சர்வதேச அளவில் பாரியளவில் தொழிலாளர்களை சுரண்டும் பெரும் பெருநிறுவனங்களின் இலாபங்களை முதலாளித்துவ கையகப்படுத்துதலின் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்துகிறது.
ஒரு சோசலிசப் புரட்சியில் தொழிலாளர்களால் முதலாளித்துவத்தை கையகப்படுத்துவது மட்டுமே இதற்கு முற்போக்கான பதில் ஆகும். ஆனால், சோசலிசப் புரட்சியை புதிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது.
முதலாளித்துவ வர்க்கத்திற்கான புதிய மக்கள் முன்னணியின் ஆதரவின் இலட்சணம், அதன் தற்போதைய Corrèze தொகுதி வேட்பாளரும், சோசலிசக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதியுமான பிரான்சுவா ஹாலண்டின் வேட்பாளர் தெரிவின் மூலம் அசிங்கமாக தெளிவாகியுள்ளது. அந்த நேரம், லண்டனில் தனது ஜனாதிபதி ஆகுவதற்கான முயற்சிக்கு நிதியுதவி செய்து கொண்டிருந்த பிரெஞ்சு வங்கியாளர்களிடம் பேசிய ஹாலண்ட், “இன்று பிரான்சில் கம்யூனிஸ்டுகள் இல்லை. இடதுசாரிகள் பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, நிதி மற்றும் தனியார்மயமாக்கலுக்கு சந்தைகளைத் திறநதுள்ளனர். ஆகவே, பயப்படுவதுக்கு ஒன்றுமில்லை” என்று கூறினார்.
ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்தபோது, ஹாலண்ட் மாலியில் ஒரு போரைத் தொடங்கினார், பிரான்சில் இருந்து ரோமா குழந்தைகளை வெளியேற்றுவதன் மூலம் பாரிய எதிர்ப்புகளைத் தூண்டினார், மேலும் பாரிய பணிநீக்கங்களை எளிதாக்கும் அவரது தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை காட்டுமிராண்டித்தனமாக அடக்கினார். நவ-பாசிசத்தை ஊக்குவிப்பதிலும், பிரெஞ்சு போலீஸ் அரசை நிறுவுவதிலும் அவர் பெரும் பங்கு வகித்தார். 2015 பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அவர் அதி வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் தலைவர் மரின் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார் மற்றும் ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தி இரண்டு வருட அவசரகால நிலையை அமுல்படுத்தினார்.
சோசலிசக் கட்சியை ஊக்குவிப்பதற்காக, புதிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் மெலன்சோனின் பங்கு காரணமாக ஹாலண்ட் இன்று பதவிக்கு போட்டியிட முடியும். “பல் இல்லாதவர்களைப்” போல பல் பராமரிப்புக்காக அதிக செலவு செய்ய முடியாத பிரெஞ்சு மக்களின் பெரும் பகுதியினரை தனிப்பட்ட முறையில் கேலி செய்த ஹாலண்ட், மிகவும் பரவலாக மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியதால், 2017 இல் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடத் துணியவில்லை, ஆனால் மக்ரோனை ஆதரித்தார். மெலன்சோன் மற்றும் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, ஹாலண்ட் போன்ற ஒரு அப்பட்டமான முதலாளித்துவ பாதுகாவலரை அணிதிரட்டுவது, தொழிலாளர்களுக்கு ஒரு பேரழிவை உருவாக்கும்.
புதிய மக்கள் முன்னணிக்கு எதிராக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்பு!
ஏகாதிபத்திய போர், நவ பாசிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஸ்ராலினிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய துரோகிகளின் பல்வேறு வழித்தோன்றல்களால் முன்வைக்கப்பட்ட தடையை எவ்வாறு சமாளிப்பது என்பது தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள மையப் பணியாகும். புதிய மக்கள் முன்னணி, பிரெஞ்சு ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அனைத்து நடுத்தர வர்க்க சக்திகளின் சந்ததியினரால் முதலாளித்துவத்தை தழுவும் ஒரு புதிய கட்டத்தைக் குறித்து நிற்கிறது.
பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் (NPA) அரசியல் முன்னோர்கள் ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்து, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்து, ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்துடன் கூட்டணி வைக்க முயன்றதோடு, அவர்களது ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு அரசியலை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு சென்றனர். NPA இன் பெயர் அதை “முதலாளித்துவ-எதிர்ப்பு” என்று பிரகடனப்படுத்துகிறது மற்றும் முதலாளித்துவ ஊடகங்கள் அதை ஒரு “ட்ரொட்ஸ்கிச” கட்சியாக தொடர்ந்து மற்றும் மோசடித்தனமாக முன்வைத்து வருகின்றன. ஆனால், அது “பணக்காரர்களின் தலைவரான” மக்ரோனின் கீழ் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்காக, முதலாளித்துவ சோசலிச கட்சி தலைமையிலான கூட்டணியான புதிய மக்கள் முன்னணியுடன் இணைந்துள்ளது.
1953 முதல் 1971 வரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவாக இருந்த பியர் லம்பேர்ட்டின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (OCI) மெலன்சோன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், புதிதாக நிறுவப்பட்ட சோசலிக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் ஒரு “முதலாளித்துவ ஜனரஞ்சக அரசாங்கத்திற்கான” வேலைத்திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான “இடதுசாரி ஒன்றியத்தை” ஆதரிப்பதற்காக ICFI உடன் பிரிந்த OCI இல் குறுகிய காலத்திலேயே அவர் இணைந்து கொண்டார். 1976 இல் சோசலிசக் கட்சியில் இணைந்த அவர், இறுதியில் 1997 முதல் 2002 வரை சோசலிசக் கட்சி தலைமையிலான “பன்மை இடது” அரசாங்கத்தில் அமைச்சரானார்.
பிரான்சில் ஏற்பட்ட 2002 தேர்தல் நெருக்கடி, இந்த நோக்குநிலையின் திவால்நிலையை அம்பலப்படுத்தியது. ஜனாதிபதித் தேர்தல் வலதுசாரி வேட்பாளர் ஜாக் சிராக்கிற்கும், நவ-பாசிச ஜோன்-மேரி லு பென்னுக்கும் இடையேயான மோதலாக மாறியதால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். சோசலிசக் கட்சியின் சிக்கன மற்றும் போர்க் கொள்கையால் வெறுப்படைந்த வாக்குகள் சரிந்ததால், சோசலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் NPA க்கு முன்னோடியான பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ் லீக் LCR ஆகியவை நவ-பாசிச லு பென்னுக்கு எதிராக ஜனநாயகத்தின் பாதுகாவலராக வலதுசாரி சிராக்கை ஆதரிப்பதன் மூலம் பதிலளித்தன. அவர்கள் உண்மையில் அதி தீவிர வலதுசாரிகளின் அரசியல் ஸ்தாபனத்திற்கு, எதிர்ப்பின் பாத்திரத்தை நடைமுறையில் விட்டுக்கொடுத்தனர்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு “சிராக்கும் லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணி ! என்ற தலைப்பில் அழைப்பு விடுத்தது.
அது தனது அறிக்கையில் பின்வருமாறு வலியுறுத்தியது
தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்க விரும்பும் ஒவ்வொரு அமைப்பும் (2002) மே 5 ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பை புறக்கணிக்க தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். லு பென் அல்லது சிராக்கிற்கு அரசியல் ஆதரவு இல்லை! இந்த தவறான மற்றும் ஜனநாயகமற்ற “தேர்வுக்கு” எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட வேண்டும். …
ஏன் புறக்கணிப்பு? ஏனென்றால், இந்த மோசடித் தேர்தலுக்கு எந்தச் சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்பதை மறுக்க வேண்டியது அவசியம்; ஏனெனில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் வழியை நிறுவுவது அவசியம்; ஏனெனில் ஒரு தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான புறக்கணிப்பு, தேர்தலுக்குப் பின் எழும் அரசியல் போராட்டங்களுக்கு சிறந்த சூழ்நிலையை உருவாக்கும்.
இது, லு பென்னின் முதல் சுற்றில் பெற்ற வெற்றியின் அதிர்ச்சியால் இயக்கத்தில் ஈடுபட்டுள்ள வெகுஜனங்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் அரசியல் ரீதியாக கல்வி கற்பதற்கு உதவும்.
சிராக்கிற்கு வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதையும், “பிரான்சின் கெளரவத்தைக் காப்பாற்றுவதையும் பிரதிபலிக்கிறது” என்றும், “பாசிச எதிர்ப்பு முன்னணியை” உருவாக்குகிறது என்றும் கூறுகின்ற முழு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் (அரசியல் வலது மற்றும் அரசாங்க இடது, அத்துடன் ஊடகங்கள்) பொய்களை, முக்கியமான அரசியல் பாடங்களை இந்தப் புதிய சக்திகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் பல…
இருப்பினும், நவ-பாசிசம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை நிராகரித்த மெலன்சோன், 2009 இல் சோசலிசக் கட்சியை விட்டு வெளியேறினார். சோசலிசத்தை வெளிப்படையாக நிராகரித்ததன் அடிப்படையில் அவர் அவ்வாறு செய்தார். அதற்குப் பதிலாக “மார்க்சிசத்திற்கு பிந்தைய” கல்வியாளர் சாண்டல் மௌஃப்பின் ஜனரஞ்சகத்தை தழுவினார். 2014 ஆம் ஆண்டு அவர் எழுதிய மக்கள் சகாப்தம் (The Era of the People) என்ற புத்தகத்தில், “ஒரு காலத்தில் இடதுசாரி அரசியலில் ‘புரட்சிகர தொழிலாளி வர்க்கம்’ ஆக்கிரமித்திருந்த இடத்தை மக்கள் கைப்பற்றுகிறார்கள்” என்று எழுதினார். “சோசலிசத்திற்கு அப்பால் செல்லுவதற்கு” அழைப்பு விடுத்த அவர், “பழைய சோசலிசப் புரட்சியல்ல” “மக்கள் புரட்சியை” ஆதரித்தார்.
ஹாலண்ட் மற்றும் மக்ரோன் மீதான அவரது விமர்சனங்களுக்காக வெகுஜன ஊடகங்களின் அணுகலுடன், அவர் 2022 ஜனாதிபதித் தேர்தலில் கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். எவ்வாறாயினும், மக்ரோனின் சட்டவிரோத ஓய்வூதிய வெட்டுக்கள், காசா இனப்படுகொலை அல்லது வேறு எதற்கும் எதிரான போராட்டத்தில், பெரும்பாலும் முக்கிய நகரங்களின் தொழிலாள வர்க்கப் பகுதிகளில், தனது வாக்காளர்களை அணிதிரட்ட அவர் அழைப்பு விடுக்க மறுத்துவிட்டார். 2022 இல் மக்ரோன் அல்லது ஒரு நவ-பாசிச ஜனாதிபதியின் கீழ் பிரதம மந்திரியாக பணியாற்ற விருப்பம் இருப்பதாக அறிவித்து, அவர் சோசலிசத்தின் நனவான எதிர்ப்பாளர் ஆனார்.
2016 இல் நிறுவப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES), புதிய மக்கள் முன்னணியின் மார்க்சிச எதிர்ப்பு அரசியல் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களை அடியோடு நிராகரிக்கிறது. பிரெஞ்சு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் போர் மற்றும் பாசிச ஆட்சியின் பரந்த மற்றும் வளர்ந்து வரும் ஆபத்துகள் குறித்து தொழிலாளர்களை எச்சரிக்கை விடுத்து PES போராடி வருகிறது. எவ்வாறாயினும், இது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம் பற்றிய வரலாற்று அடிப்படையிலான புரட்சிகர நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டுள்ளது.
ஏகாதிபத்திய சக்திகளின் போர்த் தாக்குதல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினுள் இருந்து ஆழமான மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும். இது பல தசாப்தங்களாக பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் வியத்தகு முறையில் விரிவடைந்த பில்லியன் கணக்கான மக்களின் வர்க்கமாகும். பிரான்சில், சமூக ஊடகங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட 2018-2019 “மஞ்சள் அங்கி” எதிர்ப்பு போராட்டங்கள், தொழிலாளர்கள் தேசிய அதிகாரத்துவங்களிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக போராடுவதற்கான சாத்தியத்தை எடுத்துக்காட்டின. ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்ப தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன சாமானிய அமைப்புக்கள் வெளிவரும் மற்றும் வெளிப்பட வேண்டும்.
அத்தகைய போராட்டத்திற்கு எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மார்க்சிய வரலாற்று முன்னோக்கு மற்றும் அரசியல் தலைமை அவசியமாகும். பப்லோவாதம், போலி-இடது மற்றும் புதிய மக்கள் முன்னணிக்கு எதிரான அக்டோபர் புரட்சியின் தொடர்ச்சியை, ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை இடையிறாது பாதுகாத்துவரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோசலிசத்திற்கான அதன் போராட்டத்தை, சோசலிச சமத்துவக் கட்சி அடித்தளமாகக் கொண்டுள்ளது. புதிய மக்கள் முன்னணி, அதி தீவிர வலதுசாரி சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்திய போரின் அச்சுறுத்தலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை கட்டியெழுப்ப வேண்டும்.