இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
வட இந்தியாவின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) உள்ள உற்பத்தித் தொழிற்துறைகளில் வேலைசெய்யும் பல்லாயிரக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் ஏற்பட்ட விலை உயர்வுகளுக்கு எதிராக, ஏப்ரல் 10 அன்று தொடங்கிய, பற்றிப்பரவக் கூடிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். வாடகை, பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் குற்றவியல் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் தாங்க முடியாத விலை உயர்வுகளுக்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பு அலையின் ஒரு பகுதியாகவே வட இந்தியாவில் இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில், பிலிப்பைன்ஸ், ஹைட்டி, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) என்பது நாட்டின் தலைநகரான புது தில்லியைச் சுற்றியுள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதில் பெருநகர புது தில்லி, பழைய தில்லி நகரம் மற்றும் ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள அருகிலுள்ள தொழில்மயமான மாவட்டங்கள் அடங்கும்.
இங்கு ஏறத்தாழ 4.5 மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற, சுமார் 15,000 சிறிய, நடுத்தர மற்றும் பெரிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் ஒப்பந்த அல்லது தற்காலிகத் தொழிலாளர்கள் ஆவர். போருக்கு முன்பு, தேசிய தலைநகர் பிராந்தியமும் பம்பாய் பெருநகரப் பகுதியும் நாட்டிலேயே மிக அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இருந்தன. இப்பகுதி முழுவதும் உள்ள தொழிலாளர்கள், மாதத்திற்கு சுமார் ரூ. 23,000 ($247) என்ற சீரான குறைந்தபட்ச வாழ்க்கைக்கு ஏற்ற ஊதியத்தை கோரி வருகின்றனர்.
இந்த சமீபத்திய தொழிலாள வர்க்க எழுச்சி நொய்டா தொழிற்பேட்டையில் தொடங்கிய போதிலும், தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவியது. இந்தியாவின் உழைப்பாளிகளின் நிலை மிகவும் அவலமானதாக இருப்பதால், சுயாதீன நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்கள் கூட இந்தப் போராட்டத்தில் இணைந்தனர்.
பெரும்பாலானோர் வாரத்தில் ஆறு நாட்கள், நாளொன்றுக்கு 10-12 மணி நேரம் நீடிக்கும் கடும் வேலைக்கு, மாதத்திற்கு வெறும் 10,000 ரூபா ($107) முதல் 15,000 ($160) ரூபா வரை மட்டுமே சம்பாதிக்குமளவுக்கு ஊதியங்கள் மிகவும் குறைவனாதாக இருக்கின்றன. தற்போதைய ஊதியங்கள் சுமார் ஒரு தசாப்த காலமாக பெரும்பாலும் மாற்றமின்றி உள்ளன.
போராட்டங்களுக்கு அரசாங்கம் வன்முறையான பொலிஸ் அடக்குமுறையைக் கையாண்டதுடன் ஏப்ரல் 13-14 திகதிகளில் அடக்குமுறை உச்சக்கட்டத்தை அடைந்தது. தொழிலாளர்களின் அன்றாடத் துயரங்களுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்காக, உள்ளூர் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையிலான பொலிசாரை அனுப்பினர்.
அதிக அளவில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், பல போராட்டக்காரர்களை ஈவிரக்கமின்றித் தாக்கியும், ஏப்ரல் 14 அன்று பொலிஸ் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கைது செய்தது. கோபமடைந்த தொழிலாளர்கள் கற்களையும் பட்டாசுகளையும் வீசியும், பல பொலிஸ் வாகனங்களைக் கவிழ்த்தும் பதிலடி கொடுத்தனர்.
இதற்கும் மேலாக, முஸ்லிம்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராகப் பொலிஸ் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தின் இந்து மேலாதிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்தத் தொழிலாளர் எழுச்சியை ஒரு 'நக்சல்' மற்றும் 'பாகிஸ்தானுடன் தொடர்புடைய' சதி என்று முத்திரை குத்தினார். நக்சலைட்டுகள் என்பவர்கள் 1960களின் பிற்பகுதியில் ஆயுதமேந்திய விவசாயிகளின் கிளர்ச்சிகளைத் தொடங்கிய இந்திய மாவோயிஸ்டுகள் ஆவர். அவர்கள் மோடி அரசாங்கத்தின் கொலைகார வன்முறையால் பெருமளவில் ஒடுக்கப்பட்டுள்ளனர்.
அவரது அச்சுறுத்தும் பேச்சுகளுக்கு மத்தியிலும், குறைந்தபட்ச ஊதியத்தில் 21 சதவிகித உயர்வை அறிவிக்க ஆதித்யநாத் நிர்ப்பந்திக்கப்பட்டார். முதலமைச்சர் இந்த அற்ப ஊதிய உயர்வை அறிவித்தபோதே, 'சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராகக் கண்காணிப்பில் ஈடுபடுமாறு' பொலிசுக்கு உத்தரவிட்டதுடன், 'வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக' தங்களை ஒடுக்கும் அதே முதலாளிகளுக்கு தொழிலாளர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அயல் மாநிலமான ஹரியானாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மாநில அரசு, குறைந்தபட்ச ஊதியத்தில் 35 சதவிகித உயர்வை கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து, நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஏப்ரல் 10 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது, கடந்த சில மாதங்களாக, குறிப்பாக குர்கான்-மானேசர் தொழில்துறைப் பகுதியில் பரவலாகவும் தீவிரமாகவும் நடந்த தொழிலாளர் போராட்டங்களுக்குப் பதிலிருப்பாகவே இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மானேசர் நகரிலேயே, மாருதி-சுசுகி கார் ஆலைத் தொழிலாளர்கள் 2011ல் தொடங்கி, பல ஆண்டுகளாக ஒரு துணிச்சலான மற்றும் கசப்பான போராட்டத்தை நடத்தி வந்தனர்.
தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாக விளங்கும் அடிமைத்தனமான ஊதியமும், வேலைச் சூழல்களும் சமீபத்தில் தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன. ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் துலாராம் என்ற தொழிலாளி “நான் இந்தத் தொழிலில் 5 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். எனது மாதச் சம்பளம் வெறும் 2000 ரூபா அதிகரிக்கப்பட்டு 13,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. எனது சம்பளம் வெறும் 10 நாட்களில் தீர்ந்துவிடுகிறது,” என்று அந்த பத்திரிகையிடம் கூறினார்.
ஹரியானா அரசு 35 சதவீதமும், உத்தரப் பிரதேச அரசு 21 சதவீதமும் ஊதிய உயர்வு அறிவித்த போதிலும், தொழிலாளர்களுக்கு அவர்களது வாழ்க்கையை நடத்துவதே பெரும்பாடாக உள்ளது. இந்த சொற்ப ஊதிய உயர்வுகள் குறித்து ஹரியானா தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் ஸ்டாலினிஸ்டுகளுடன் தொடர்புடைய இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சி.ஐ.டீ.யு) அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இந்தத் தன்னிச்சையான எழுச்சிக்கு இரண்டு காரணிகள் பெருமளவில் காரணமாக அமைந்துள்ளன. முதலாவது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம். பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய், உரம் மற்றும் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் இந்தியா, பற்றாக்குறை மற்றும் விலை உயர்வுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது உணவுப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தியுள்ளது.
இரண்டாவது முக்கிய காரணி, பெருவர்த்தகர்-சார்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தேசிய அரசால், கடந்த நவம்பரில் அமல்படுத்தப்பட்ட நான்கு புதிய 'தொழிலாளர் சட்டங்கள்' ஆகும். இது, தொழிலாளர்களுக்கு முற்றிலும் எதிரான மோடி அரசால், 'தொழில் செய்வதை எளிதாக்குவதை' மேம்படுத்தும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாகும். இது, உலக வங்கியால் தொடங்கப்பட்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட முற்றிலும் பிற்போக்கு நிலைப்பாடாகும்.
ஸ்டாலினிச தொழிற்சங்கங்களான சி.ஐ.டீ.யு., பழைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPI) தொடர்புடைய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவை இந்த எழுச்சியால் முற்றிலும் திகைத்துப்போனதாகத் தெரிகிறது. சி.ஐ.டீ.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும், குறிப்பாக, அவற்றுக்கு கனிசமான செல்வாக்கு உள்ள தமிழ்நாட்டில் வேலைநிறுத்தங்களைக் காட்டிக்கொடுப்பதில் நீண்ட வரலாறு உண்டு. வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் தலையிடுவதற்காகப் பிரதிநிதிக் குழுக்களை அனுப்பி, இந்த இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவை இப்போது தீவிரமாக முயன்று வருகின்றன.
இதை ஒரு நேரடி “வர்க்க மோதல்” என்று விவரித்த சி.ஐ.டீ.யு. பொதுச் செயலாளர், புதிய தொழிலாளர் சட்டங்கள் “தொழிற்சங்க உரிமைகளைப்” பலவீனப்படுத்துவதோடு, “கொடூரமான சுரண்டலுக்கும்” வழிவகுக்கின்றன என்று கூறினார். இதேபோல், ஏ.ஐ.டீ.யு.சி. பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர், கூட்டுப் பேரம்பேசலை அரசாங்கம் மறுத்ததன் விளைவே வர்க்க மோதல் வெடித்தது என்று கூறினார். புதிய தொழிலாளர் சட்டங்கள் இந்தியத் தொழிலாளர்களின் சுரண்டலைப் பெருமளவில் தீவிரப்படுத்தியிருந்தாலும், ஸ்டாலினிச தொழிற்சங்கத் தலைவர்கள் அவை அமுல்படுத்தப்படுவதை தடுக்க எந்தவொரு தொடர்ச்சியான நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, “வர்க்க மோதலைத்” தணியச்செய்து அடக்குவதற்கு ஆளும் வர்க்கத்திற்குத் தேவைப்படும் சக்திகளாகத் தங்களை அவர்கள் முன்னிறுத்திக் கொண்டனர்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் நடத்தி வரும் ஒரு பெரிய போராட்ட அலையின் ஒரு பகுதியாகவே இந்த சமீபத்திய எழுச்சி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக, பீகாரின் பரௌனி, குஜராத்தின் சூரத் மற்றும் ஹரியானாவின் மனேசர், பானிபட் ஆகிய இடங்களில் தொழில்துறை தொழிலாளர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புதிய தொழிலாளர் சட்டங்கள், மாபெரும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட முதலாளிகள், ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்துக்கொள்வதை அதிகரிக்க அனுமதித்துள்ளன என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையாக உழைக்கின்ற போதிலும், அவர்களுக்கு எட்டு மணி நேரத்திற்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கு மேலாக, அவர்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைப்பதோடு அவர்களின் சொற்ப ஊதியம் கூட அடிக்கடி தாமதமாகவே வழங்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் என்ற பெயரில் மோசடி செய்யப்படுவதாகவும், வேலைத் தளத்தில் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கூறினர்.
இந்தியாவின் உயர் அடுக்கினர், உலகின் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருப்பதாகப் பெருமை பேசிக்கொண்டாலும், இந்தியாவில் தொழிலாளர்களின் நிலை 19 ஆம் நூற்றாண்டைப் பிரதிபலிக்கிறது. 2025 ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி (PLFS), 23.6 சதவீதம் பேர் மட்டுமே வழக்கமான சம்பளம் அல்லது ஊதியத்தில் பணிபுரிகின்றனர். மீதமுள்ளவர்களில், 56.2 சதவீதம் பேர் 'சுயதொழில் செய்பவர்கள்' ஆவர். இது நடைபாதையில் பலகாரங்களை விற்றுப் பிழைப்பு நடத்துபவர்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பகட்டான சொல்லாகும். அதே சமயம், 20.2 சதவீதம் பேர், ஏதேனும் ஒரு கூலி வேலை கிடைக்கும்போதெல்லாம் வேலை செய்யும் தற்காலிகத் தொழிலாளர்கள் ஆவர்.
62 லட்சம் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் சி.ஐ.டீ.யூ., NCR தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 16 அன்று நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், தேசிய மற்றும் மாநில அரசுகள் தங்களின் தொழிலாளர் வர்க்க விரோதக் கொள்கைகளைத் தீவிரப்படுத்த அனுமதித்துள்ள இந்த இரண்டு தொழிற்சங்கக் கூட்டமைப்புகளின் செயல்பாடுகள், தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிடியை உடைத்து, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டமைப்புடன் தொடர்புடைய நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது உட்பட, தங்களின் சொந்த சுயாதீனமான போராட்ட வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் படிக்க
- ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய குற்றவியல் போரினால் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது
- பிற்போக்கை தோற்கடித்து சமூக சமத்துவத்தைப் பாதுகாக்க, தொழிலாளர்கள் தங்கள் சுயாதீன வர்க்க சக்தியை கட்டியெழுப்ப வேண்டும்!
- ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரில் இந்தியா முழு உடந்தையாக உள்ளது
