மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சில நேரங்களில் ஒரு தனி நபர் வெளியிடும் ஒரு அறிக்கை ஒரு முழு சமூக வர்க்கத்தின் சிந்தனையை உள்ளடக்கியதாக இருக்கும். அப்படியான ஒன்று தான் ஆஸ்திரேலியன் ஃபைனான்சியல் ரிவியூவின் சொத்து உச்சி மாநாட்டில் செவ்வாய்க்கிழமை அன்று மில்லியனர் சொத்து மேம்பாட்டாளர் டிம் குர்னர் பேசிய கருத்துக்கள் இருந்தன.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட மற்றும் கண்டனம் செய்யப்பட்ட அந்த கருத்துக்களில், கோவிட்-19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட அத்தியாவசிய “பிரச்சினை” என்று தான் கருதுவதை குர்னர் அடையாளம் காட்டினார். இது 25 மில்லியன் மக்கள் இறந்தது குறித்து அல்ல, மேலும் மில்லியன் கணக்கானவர்கள் பலவீனமான நோயால் பாதிக்கப்பட்டனர் என்பதும் அல்ல.

இல்லை, குர்னரின் கூற்றுப்படி, “எங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை என்னவென்றால், கோவிட்டின் காரணமாக உண்மையில் இனி அதிகமாக வேலை செய்ய விரும்பவில்லை என்று மக்கள் முடிவு செய்தது தான், அது உற்பத்தித்திறனில் பிரமாண்டமான பிரச்சனையை உருவாக்கியது.”
10 பில்லியன் டாலர் கட்டுமானத் தொழிலில் அவர் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் கட்டிட வர்த்தகத் தொழிலாளர்களை குறிப்பிட்டு அவர்கள் “நிச்சயமாக உற்பத்தித்திறனில் பின்வாங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக வேலை செய்யாமல் இருப்பதற்காக அவர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நாம் பார்க்க வேண்டும்” என்று குர்னர் கூறினார்.
“அதிகமாக வேலை செய்யாமல் இருப்பதற்கு அதிகமான ஊதியம்” என்ற கூற்று ஒரு அபத்தமான மற்றும் சுய-ஏமாற்றும் பொய்யாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, சீனாவிற்கு வெளியே உலகெங்கிலும் உள்ள ஊதியங்கள் 2022 இல் மட்டும் 1.4 சதவிகிதம் சரிந்தன, அப்போது வாழ்க்கைச் செலவுகள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை அரித்தன. “அதிகமாக வேலை செய்யாமல்” இருப்பது என்பதை பொறுத்தவரை, கோவிட்-19 பெரும் தொற்றுநோய் 40-மணிநேர வேலை வாரத்திற்கு ஒரு மரண ஒலியாக இருந்தது, வாகனத் துறையில் 50-மணிநேர வேலை வாரங்கள் மற்றும் ரயில் பாதைகள் மற்றும் கப்பல்துறைகளில் 70-மணிநேர வேலை வாரங்கள் வழக்கமாகிவிட்டன.
“மக்கள் முதலாளிக்காக வேலை செய்கிறார்கள் என்பதை நாங்கள் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும், மற்ற மாதிரியாக அல்ல,” என்று குறிப்பிட்ட குர்னர் மேலும் தொடர்ந்தார். “மற்ற மாதிரியாக என்பதற்கு மாறாக, தங்களை வேலையில் வைத்திருப்பதனால் முதலாளி மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறார் என்று பணியாளர்கள் கருதுகின்ற ஒரு முறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இது மாற வேண்டிய ஒரு தார்மீக சக்தியாகும்” என்று குறிப்பிட்டார்.
கூலி அடிமைகள் என்ற அந்தஸ்தை ஏற்க மறுக்கும் தொழிலாள வர்க்கத்தின் பிரச்சனைக்கு குர்னரின் பரிந்துரை எளிமையானது: “நாம் பொருளாதாரத்தில் வலியைக் காண வேண்டும்” இதில் “அபாரமான பணிநீக்கங்கள்” அடங்கும், அவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, அது “வேலைவாய்ப்பு சந்தையில் ஆணவம் குறைவதற்கு “ வழிவகுக்கும். அவர் மேலும் தொடர்ந்தார், “வேலையின்மை அதிகரிப்பை நாம் காண வேண்டும் - என் பார்வையில் வேலையின்மை 40 முதல் 50 சதவிகிதம் உயர வேண்டும்.”
உலக ரீதியாக 220 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். குர்னர் இந்த எண்ணிக்கை மேலும் 110 மில்லியனாக உயர வாழ்த்துகிறார், மிகப் பரந்த வேலையின்மையுடன் சேர்ந்து பசி, ஊட்டச்சத்து குறைபாடு, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் உடைந்த வீடுகள் ஆகியவற்றால் அளவிட முடியாத துன்பங்கள் உருவாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இவரது கருத்துக்கு ஆன்லைனில் கோபம் வெடித்த பிறகு, குர்னர் தனது கருத்துக்களுக்கு “ஆழ்ந்த கவலை” தெரிவிப்பதாக கூறினார். இந்த நேர்மையற்ற அறிக்கை, கடந்த காலங்களில், இதுபோன்று திடீரென உளறும் போது அது தலையை வெட்டுவதை ஊக்குவிக்கும் என்ற உண்மையால் தூண்டப்பட்டிருக்கலாம்
$929 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அல்லது $600 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்ட செல்வத்தைக் கொண்ட குர்னர், தனக்காக மட்டும் பேசவில்லை. முழுமையான ஆர்வத்துடன் வெளிப்படுத்திய அவரது கருத்துக்களில் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் உணர்வுகளுக்கு அவர் குரல் கொடுத்திருக்கிறார். இது தொழிலாளர்களின் ஊதியங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைவதை உறுதிசெய்ய, மிகப்பரந்த வேலையின்மையை ஒரு கனத்த தடியாக பயன்படுத்துகிறது.
தொழிலாள வர்க்கத்தின் ஆணவம் குறித்த “பிரச்சினை” அபாரமான வேலைவாய்ப்பின்மை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற அவரது பரிந்துரை, ஓரளவு நேரடியாகக் கூறப்பட்டால், உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளின் கொள்கைகளாக உள்ளது. ஆகஸ்ட் 2022 இல், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், COVID-19 தொற்றுநோய் “சமநிலைக்கு வெளியே” தொழிலாளர் சந்தையை உருவாக்கியுள்ளது என்றும், பணவீக்கத்தைக் குறைக்க “வலி” தேவைப்படும் என்றும் அறிவித்தார்.
“வலியை” செயல்படுத்துவது ஒவ்வொரு தொழில் மற்றும் நாடு முழுவதும் அதன் வழியில் செயல்படுகிறது. மேரி பார்ரா மற்றும் ஜிம் பார்லி போன்ற தலைமை நிர்வாக அதிகாரிகள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் அறிய விரும்பினால், அவர்கள் குர்னரின் கருத்துகளின் ஒரு நிமிட வீடியோவைப் பார்க்க வேண்டும். மிகக் குறைந்த உழைப்பு தேவைப்படும் மின்சார வாகனங்களின் (EV கள்) உற்பத்திக்கு மாறுவதன் மூலம் பெருமளவிலான வேலையின்மையை உருவாக்க கார் முதலாளிகள் திட்டமிட்டுள்ளனர். EV பேட்டரி ஆலைகளில் ஊதியங்கள் மற்றும் சலுகைகள் GM, Ford மற்றும் Stellantis இல் உள்ள தற்காலிக பகுதி நேர பணியாளர்களின் அளவிற்கும் கீழே குறைக்கப்படும்.
கார் முதலாளிகளுக்குப் பின்னால் முக்கிய வங்கிகள் மற்றும் நிதிய தன்னலக்குழுக்கள் ஒட்டுமொத்தமாக சாட்டையை கையில் பிடித்துள்ளன. ஒவ்வொரு தொழிற்துறையிலும், பைடென் நிர்வாகத்திலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களிலும் உள்ள அவர்களது அரசியல் சேவகர்களுக்கு அவர்கள் கொள்கைகளை ஆணையிடுகிறார்கள்.
வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்தல் மற்றும் இன்னும் கொடூரமான சுரண்டல் நிலைமைகளைத் திணிக்கும் ஆளும் வர்க்கக் கொள்கை பரந்த சமூக மற்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியாக திணிக்க முடியாது. தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்க அல்லது அடித்து நொறுக்க அரசின் நேரடித் தலையீடு அவர்களுக்கு தேவைப்படுகிறது. கடந்த டிசம்பரில் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடைசெய்து, அவர்களில் பலர் ஏற்கனவே நிராகரித்து வாக்களித்த ஒப்பந்தத்தை அவர்கள் மீது சுமத்துவதற்கு பைடென் நிர்வாகம் அதன் தலையீட்டின் மூலம் இதைப் பற்றிய முதல் பார்வையை வழங்கியது.
நாட்டிற்கு நாடு, முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பரந்த அடக்குமுறை மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் கருவிகளாக சேவை செய்ய சர்வாதிகார மற்றும் பாசிச இயக்கங்களை கட்டியெழுப்புகின்றனர். அமெரிக்காவில் இது டொனால்ட் டிரம்பின் கீழ் குடியரசுக் கட்சியின் மாற்றத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. ஜேர்மனியில் (AfD), பிரான்சில் (மரின் லு பென்னின் கட்சி), இத்தாலியில் (பாசிச ஜியோர்ஜியா மெலோனி இப்போது பிரதம மந்திரி) மற்றும் பல நாடுகளில் இதே போன்ற சக்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாரிசு என்ற தொலைக்காட்சித் தொடரானது, ஒரு பில்லியனர் ஊடகக் குடும்பம் (ரூபர்ட் முர்டோக் மற்றும் அவரது ஃபாக்ஸ் நியூஸ் பேரரசின் மெல்லிய கற்பனையான பதிப்பு) தனது வர்க்க நலன்களைச் செயல்படுத்த பாசிச அரசியல்வாதிகளின் கட்டமைப்பிற்குத் திரும்புவதைக் காட்டியது. கர்னரின் கருத்துக்களின்படி, இது கலை வாழ்க்கையைப் பின்பற்றுகிறதா அல்லது வேறு வழியா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்த் ட்விட்டரில் (X) கருத்துத் தெரிவித்தது போல்: “நான் ட்ரொட்ஸ்கி கூறியதை சுருக்கமாகச் சொன்னால், ‘ஒவ்வொரு தொழிலதிபரும் ஹிட்லராக இருக்க முடியாது, ஆனால் ஒவ்வொரு தொழிலதிபரிடத்திலும் கொஞ்சம் ஹிட்லர் இருக்கிறார்’ . கார்ப்பரேட் தலைவர்கள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்வதை வெளிப்படையாக குர்னர் கூறுகிறார். பாசிசம் மற்றும் மரண முகாம்களுக்கு அனுப்புகின்ற ஆளும் வர்க்க நலன்களுக்காக அவர் குரல் கொடுக்கிறார்.
டிம் குர்னர் வர்க்கப் போரின் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் பற்றி பேசவில்லை. ஆனால், தொழிலாளர்கள் தவறாக பார்க்கக்கூடாது: திரைக்குப் பின்னால், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ வர்க்கம், உழைக்கும் மக்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகளை வெட்டுவதை இலக்காகக் கொண்ட சர்வாதிகாரத்திற்கான நடவடிக்கைகளைத் தயாரித்து வருகின்றனர். தொழிலாள வர்க்கம் அதற்கேற்ப தனது சொந்த தயாரிப்புகளை செய்ய வேண்டும்.