இராணியின் மரண ஊர்வலத்திற்குப் பின்னர்: வர்க்கப் போராட்டம் மீண்டும் திரும்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணச் சடங்குகள் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பில்லியன்களில் உலகளாவிய பார்வையாளர்களும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், இறுதி ஊர்வலத்தின் வழியில் மில்லியன் கணக்கானவர்கள் இலண்டனில் காத்திருப்பார்கள்.

அவ்வாறு செய்பவர்களில் பலர் திரும்பிப் பார்த்து, “நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன்?” என்று ஆச்சரியப்படுவதற்கு அதிக நேரம் இருக்காது.

செப்டம்பர் 17, 2022 சனிக்கிழமை அதிகாலை, இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் மரணச்சடங்குகளுக்காக வைத்திருந்தபோது மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மரியாதை செலுத்துவதற்காக டவர் பிரிட்ஜின் முன் மக்கள் மைல்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். இராணி வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் செப்டம்பர் 19, 2022 அன்று அவரது இறுதிச் சடங்குவரை நான்கு நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பார் [AP Photo/Martin Meissner]

வர்க்க ஒடுக்குமுறை மற்றும் பரம்பரை சலுகைகளை உருவகப்படுத்திய 96 வயதான அரசியின் மரணம் குறித்து பலர் துக்கப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள். இத்தகைய ஒரு வெகுஜன நிகழ்வுக்கு விளக்கம் தேவையாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக பிரிட்டனில், ஆளும் வர்க்கம் மறைந்த மகாராணிக்கு அசாதாரணமான வரலாற்று முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி, தேசத்தின் பிரதிநிதியாகவும், 'பாட்டியாகவும்' காட்டப்பட்டு, கடமை மற்றும் தனிப்பட்ட தியாகத்தின் உருவகமாகவும், இரண்டாம் உலக போருக்கு பின்னான தலைமுறைகளின் வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இராணி 'தேசத்தினதும் பொதுநலவாய நாடுகளினதும் நனவில் கருணை மற்றும் நாகரிகத்தின் நிலைத்த புள்ளி' என்று ஒப்சேர்வர் தலையங்கம் கூறுகிறது. 'எலிசபெத் II இன் மரணத்திற்கு பொதுமக்களின் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பு பிரித்தானியாவின் வீழ்ச்சி பற்றிய கட்டுக்கதைக்கும், நாம் சமரசம் செய்யமுடியாமல் பிளவுபட்டுள்ளோம் என்ற கற்பனைக்கும்' ஒரு பரிகாரம் என்று டெலிகிராப் அறிவிக்கிறது.

சமுதாயத்தை துண்டாடும் முன்னோடியில்லாத வர்க்கப் பிளவுகளை எதிர்கொண்டு, அவர்களது சொந்த உடைந்த ஆட்சியை நிலைநிறுத்த ஆளும்தட்டு, தேசிய ஒற்றுமை மற்றும் இராணி பற்றிய புராணரீதியான வடிவங்களின் பின்னால் தொழிலாளர்களை அணிதிரட்ட வடிவமைக்கப்பட்ட குழப்பமான உணர்ச்சிகளுக்கு இது ஒரு வேண்டுகோளாகும்.

அதேபோல், உலக ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இணைந்து இந்த நிகழ்வை முக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக சித்தரிக்கின்றனர். எலிசபெத் வின்ட்சர் 70 ஆண்டுகள் பிரிட்டனில் முடியாட்சியாகவும் அரசு தலைவராகவும் பணியாற்றினார். ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும் அல்லது செய்தித்தாள் படிக்கும் எவரும் அவரை உலகின் கெளரவத்திற்குரிய மகாராணி என்று நினைத்துக்கொள்வர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடென் உட்பட கிட்டத்தட்ட 100 ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மணி நேர இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள். பங்கேற்பாளர்களின் பட்டியலை முழு நிகழ்வின் ஏகாதிபத்திய தன்மையை எடுத்துகாட்டுகின்றது.

செப்டம்பர் 18, 2022 அன்று இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் உள்ள திடலின் மீது இராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் பார்வையிடுகின்றனர். [AP Photo/Joe Giddens/Pool Photo via AP]

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட வலதுசாரி அரசியல் கழிவுகள் கெளரவ விருந்தினர்களாக கலந்துகொண்டிருக்கும் அதே வேளையில், ரஷ்யா, பெலாருஸ், மியான்மர், சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான் போன்ற பிரித்தானிய, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் விரோத நடவடிக்கைக்கு இலக்கான மற்ற அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சீன துணை ஜனாதிபதி வாங் கிஷானின் வருகை டோரி அரசாங்கத்திற்குள்ளும் தொழிற்கட்சி சகாக்களிடமிருந்தும் 'இணங்கிப்போகுதல்' என்றழைக்கப்படுவது பற்றிய சீற்றத்தை தூண்டியது.

ஏகாதிபத்திய சக்திகளின் பொதுவான நலன்களைப் பின்தொடர்வதற்காகவே, உலகத் தலைவர்கள் இராணியின் மரணத்திற்கு உலக வரலாற்று முக்கியத்துவத்தை வழங்குவதற்கான அதன் முயற்சிகளில் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் பின்னால் வரிசையாக நிற்கின்றனர். அவர்களை பொறுத்தவரையில் இங்கிலாந்தில் முடியாட்சி எப்பொழுதும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதையே இராணி அவர்களுக்காக உருவகப்படுத்தியிருந்தார். ஒரு நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதி அல்லாது, பரந்த சமூக சமத்துவமின்மை, 'ஸ்திரத்தன்மை', 'ஒழுங்கைப்பாதுகாப்பது', தேசபக்தி மற்றும் அரசியல் பின்தங்கியநிலைமையின் ஒவ்வொரு வடிவத்தினதும் மத்தியில் பரம்பரை செல்வம் மற்றும் சலுகைகளை தன்னகத்தே கொண்ட தற்போதுள்ள முதலாளித்துவ சமூக ஒழுங்கின் பிரதிநிதியாக இருந்தார்.

ஐரோப்பா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நீண்டகாலமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட 'அரச குடும்பங்களின்' உறுப்பினர்களை ஒன்றுகூடுவது கடந்த காலத்திலிருந்தான ஒரு எச்சங்கள் மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டிலும் கூட 'மன்னர்கள்' இன்னும் முதலாளித்துவத்திற்கு ஒரு அரசியல் பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்பதற்கான சான்றாகும்.

இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கானவர்கள், சுயசரிதை பற்றிய ஊடக அறிக்கைகள் மூலம் மிகவும் கவனமான தொனியில் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முழு நாட்டையும் தங்கள் மரியாதையைக் காட்டும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். முடியாட்சி அமைப்பிற்கு எதிராக அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் பலரை கைது செய்வதன் மூலம், இராணியின் மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்ற வெளிப்படையான 'தேசிய ஒருமித்த கருத்தை' வலுப்படுத்துவதில் அரசால் திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் இன்றியமையாத பங்கைக் கொண்டுள்ளது

கூடுதலாக, குழப்பமான மக்கள் உணர்வை சூழ்ச்சியுடனான கையாளுதல் உள்ளது. பெரும்பாலான தொழிலாளர்களிடையே, ஏக்கம், தவறான பச்சாதாபம் மற்றும் ஒரு தனிநபராக இராணியின் மீதான மரியாதை ஆகியவை தேசபக்தி, தேசியவாதம் மற்றும் அவரது மரணத்தை சுற்றியுள்ள புலம்பல்களுடன் அடையாளம்காணும் ஒரு அமைப்பாக முடியாட்சிக்கு ஆதரவளிப்பதை விட முக்கியமான கூறுகளாக உள்ளது.

முதுமையினால் தனது படுக்கையில் அமைதியாக இறந்த எலிசபெத் வின்ட்ஸருக்கு வழங்கப்பட்ட எந்த அதிகாரபூர்வ தேசிய துக்க அனுஷ்டிப்பும் இல்லாமல், 200,000 க்கும் மேற்பட்ட அன்புக்குரியவர்களை தொற்றுநோயால் இழந்த ஒரு நாட்டில் உண்மையான ஆனால் தவறாக வழிநடத்தப்பட்ட துக்கம் உள்ளது. அவர் இறந்த நிலையில் கிடப்பதைக் காண வரிசையில் நிற்கும் நூறாயிரக்கணக்கானோர் கோவிட்-19 இனால் தேவையில்லாமல் இழந்த உயிர்களைக் குறிக்கும் கையால் வரையப்பட்ட இதயங்களால் மூடப்பட்டிருக்கும் இங்கிலாந்தின் தேசிய கோவிட் நினைவுச் சுவரைக் கடந்து சென்றனர்.

மே 2021 இல் 500 மீட்டர் நீளமுள்ள தேசிய கோவிட் நினைவுச் சுவரின் ஒரு பகுதி, கோவிட் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில் 150,000 இதயங்களைக் கொண்டிருந்தது. இலண்டனில் உள்ள பாராளுமன்ற மாளிகைக்கு எதிரே இந்த சுவர் உள்ளது. இங்கிலாந்தில் இறப்பு எண்ணிக்கை 200,000 க்கு மேல் உயர்ந்துள்ளது.

அப்படியிருந்தும், பல தொழிலாளர்கள் இறப்பு பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள், அல்லது காட்டப்படும் காட்சிப்படுத்தலுக்கு விரோதமாக இருக்கிறார்கள். ஹீத்ரோவுக்குச் உள்வரும் மற்றும் புறப்படும் விமானங்களை இரத்து செய்தல், புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மருத்துவ நடைமுறைகள், மற்றும் தனியார் இறுதிச் சடங்குகளை ஒத்திவைத்தல் போன்ற 'மரியாதையின் அடையாளமாக' அவர்கள் மீது சுமத்தப்பட்ட அதிகப்படியான கட்டுப்பாடுகளினால் ஆத்திரமுற்றுள்ளனர்.

செப்டம்பர் மாதம் முழுவதும் இரயில் மற்றும் தபால் தொழிற்சங்கங்கள் தேசிய வேலைநிறுத்தங்களை நிறுத்திவைத்ததில் அதிக வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த கோபம்தான் இந்த எதிர்ப்பின் மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வெளிப்பாடாகும். இராணி இறந்த ஒரு மணி நேரத்திற்குள் ஆலோசனையின்றி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில் மிக வெடிக்கும் வர்க்கப் போராட்டங்களின் கோடைக்காலத்திற்குப் பின்னர் வருகிறது. இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் தலைமையில், அதிகாரத்துவம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து, சமூகக் கோபத்தை அடக்கி, தொழிலாளர்களை ஆங்காங்கே மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கு மட்டுப்படுத்தி, முடிவில்லாத சுற்று வாக்குப்பதிவு மூலம் மில்லியன் கணக்கானவர்கள் செயல்படுவதைத் தடுக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளர்களின் பிரிவுகள் முதலாளித்துவத்தின் பிரச்சாரத்தின் செல்வாக்கிற்கு ஆளாகின்றார்கள் என்றால், இது தொழிலாளர் இயக்கத்தின் சோசலிச மரபுகளுக்கு எதிராக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் சோசலிசத்தை இழிவுபடுத்துவதிலும், பின்னர் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதிலும் ஈடுபட்டுள்ள ஸ்ராலினிசத்தினால் உலகம் முழுவதும் பல தசாப்தங்களாக நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சேர் கெய்ர் ஸ்டார்மர் முதல் ஜெர்மி கோர்பின் வரை எந்த ஒரு தொழிற்கட்சி அரசியல்வாதியும் இராணியின் மரணத்திற்குப் பின்னர் அரச குடும்பத்தின் முன் முதுகுவைளைப்பதை நிராகரிக்கவில்லை.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரங்கல் தெரிவிக்கும் வகையில், வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில், கிங் சார்லஸ் III மற்றும் இராணி துணைவியார் கமிலா வருகையை முன்னிட்டு, அரசர பாதுகாவலர் அணிவகுத்துச் சென்றனர். தொழிற்.கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பின் புகைப்படத்தின் கீழ் இடதுபுறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளார். இலண்டன் செப்டம்பர் 12, 2022 [AP Photo/Ben Stansall/Pool Photo via AP]

எவ்வாறாயினும், இறுதிச் சடங்கிற்காக செலவழிக்கப்பட்ட 9 மில்லியன் பவுண்டுகள் மற்றும் முடியாட்சியை சுற்றியுள்ள 'தேசிய ஒற்றுமையை' ஊக்குவிப்பதற்காக செலவழிக்கப்பட்ட எண்ணற்ற மில்லியன்கள் வீணாக செலவிடப்பட்டதல்ல. இதைப்போன்று காட்டப்பட்ட தேசிய துயரத்தின் கடைசி பெரிய சந்தர்ப்பமான 1997 இல் இளவரசி டயானாவின் மரணத்தை தொடர்ந்து, அந்த நேரத்தில் தங்களின் விமர்சிக்கும் திறன்களை இழந்தவர்களால் கூட இப்போதைய நிகழ்வு திகைப்புடன் பார்க்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பெரும் மந்தநிலை மற்றும் சமூக சமத்துவமின்மையின் வீரியம் மிக்க வளர்ச்சிக்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு நெருக்கடி உட்பட, சமூக யதார்த்தத்தின் பாறைகளைக்கூட இந்தத் திட்டம் நொருக்கவிடும். பிரித்தானியா இப்போது பில்லியனர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது. 177 பேரின் மொத்த சொத்து 653£ பில்லியன் ஆக உள்ளதுடன், இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் உயர்ந்துள்ளது. 1815 ஆம் ஆண்டு வாட்டர்லூ போருக்குப் பின்னர் தொழிலாளர்கள் மிக நீண்ட கால ஊதிய வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்.

முடியாட்சிக்கான ஆதரவு முன்னொருபோதுமில்லாதவாறு மிகக் குறைந்த அளவாக சரிந்து வருவதிலும் ஆச்சரியமில்லை. சமூக ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCSR) 1994 ஆம் ஆண்டு முதல் முடியாட்சியை பற்றிய அணுகுமுறைகளை பட்டியலிட்டுள்ளது. அதன் மிக சமீபத்திய கணக்கெடுப்பில் முடியாட்சி 'மிகவும் அல்லது மிக முக்கியமானது' என்று நம்பும் முக்கிய குழு 55 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஸ்காட்லாந்தில் பாதிக்கும் குறைவான மக்கள் அதைத் தக்கவைத்துக்கொள்வதை ஆதரிப்பதாகக் கூறினர், அதே நேரத்தில் மிக முக்கியமாக 18 முதல் 24 வயதுடையவர்களில் 40 சதவீதம் பேரும் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியினால் அவர்களின் குடும்பங்களில் பலர் மிருகத்தனமான உண்மைகளை அனுபவித்திருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 37 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவாக உள்ளனர்.

2021 YouGov வாக்கெடுப்பில், 18 முதல் 24 வயதுடையவர்களில் 41 சதவீதம் பேர் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவர் இருக்க வேண்டும் என்று நினைத்தனர். உத்தியோகபூர்வ துக்கத்தின் வாரங்களில், #AbolishTheMonarchy மற்றும் #NotMyKing என்ற ஹேஷ்டேக்குகள் டிக்டோக்கில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டு ட்விட்டரில் தொடர்ந்து டிரெண்டாகி வருகின்றன.

முடியாட்சி தொடர்பான அணுகுமுறைகளை தீர்மானிக்கும் மக்கள் கருத்துக் கணிப்புகள் மிக முக்கியமான சமூக வேறுபாடான சமூக வர்க்கத்தினை பற்றி கவனத்திற்கெடுப்பதில்லை. ஆயினும்கூட, இளைஞர்கள் சமகால சமூக உறவுகளின் மிகவும் துல்லியமான பிரதிநிதிகளாகவும் மற்றும் எதிர்காலத்திற்கான ஒரு சுட்டிக்காட்டியாகவும் உள்ளனர். முடியாட்சியின் மீதான அவர்களின் அதிகரித்துவரும் விரோதப் போக்கு, மில்லியன் கணக்கானவர்களின் கஷ்டங்கள், சிறிய ஊதியத்திற்காக நீண்ட மணிநேரம் வேலை செய்தல், மேலும் மோசமாகிவிடும் வாய்ப்புகள் மட்டுமே உள்ள சமூகத்தை பிரதிபலிக்கிறது. அற்புதமான சம்பாதிக்காத செல்வம் மற்றும் சலுகைகளுடன் வாழும் ஒட்டுண்ணிகளின் நோயுற்ற கும்பலுடன் அடையாளம் கண்டுகொள்ளுமாறு இளம் தொழிலாளர்களைக் கேட்பது அவமானகரமானதாகவும் வினோதமான காலத்திற்கொவ்வாததாகவும் கருதப்படுகிறது.

இது அவர்களுக்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில், முதலாளித்துவத்தின் கீழ் உள்ள வாழ்க்கையின் யதார்த்தங்கள், அரசகுடும்ப பிரச்சாரத்தின் பிரளயத்தின் கீழ் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்ட பிறகு தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும்.

இராணுவவாதத்தின் இடைவிடாத பெருமைப்படுத்தல் பற்றி ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கை ஒலிக்கப்பட வேண்டும். அரச குடும்ப உறுப்பினர்கள் முழு இராணுவ உடையில் தோன்றிதும், அவர்களின் மார்பில் பதக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதும், ஆயுதப்படைகளின் தலைவராக மன்னரின் பங்கை வலியுறுத்துகிறது. திங்கட்கிழமை நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் 6,000 ஆயுதப்படை உறுப்பினர்கள் முழு உடை அணிந்து பங்கேற்பார்கள்.

மூன்றாம் சார்லஸ் மன்னரும் இளவரசர் வில்லியமும் இளவரசி ஆன் உடன் இளவரசர் ஆண்ட்ரூவுடன் வணக்கம் தெரிவிக்க, இராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி, ராயல் ஸ்டாண்டர்ட் மற்றும் இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ஊர்வலத்தைத் தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் கொண்டு செல்லப்பட்டார். லண்டன், புதன்கிழமை, செப்டம்பர் 14, 2022 [AP Photo/Ben Stansall]

இது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமி போரில் பிரிட்டனின் அதிகரித்து வரும் பங்கேற்புடன் ஒத்துப்போகிறது. பிரித்தானிய தொழிலாள வர்க்கம் அவர்கள் வெறுக்கும் ஒரு அரசாங்கத்தின் கீழ், ஒரு மனநோயாளியின் தலைமையில் அணுவாயுத மோதலைத் தொடங்குவதற்குத் தயாராக இருப்பதாகப் பெருமையாகக் கூறிக்கொள்ளும் ஒருவரின் கீழ், உலகப் போருக்கு இட்டுச்செல்லும் ஒரு மோதலுக்கு இன்னும் ஆழமாக இழுக்கப்படுகிறது. அரசியல்வாதிகளும் தளபதிகளும் உக்ரேனில் அணுசக்தி பரிமாற்றத்தின் சாத்தியக்கூறுகளை அமைதியாக விவாதிக்கையில் ஒரு குழப்பமான ஊடகம் அவர்களுக்கு உந்துதலளிக்கின்றது.

விஞ்ஞானிகளும் சுகாதார அதிகாரிகளும் தொற்றுநோயின் குளிர்கால மறுமலர்ச்சி குறித்து எச்சரித்து வருகின்றனர். இது ஏற்கனவே அதிக சுமை கொண்ட தேசிய சுகாதார சேவையை அழிக்கும் 'இரட்டைத்தொற்றின்' ஒரு ஆரம்ப மற்றும் இரட்டிப்பான பெரிய காய்ச்சல் பருவத்துடன் ஒத்துப்போகிறது.

பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து, மில்லியன் கணக்கான மக்கள் தொற்றுநோய் இலாபம் ஈட்டுபவர்களுக்கு பிணையெடுப்பிற்கும், உக்ரேனில் போரின் செலவு மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் போன்றவற்றிற்காக பணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தொழிலாள வர்க்கத்தின் நிலை இன்னும் சகிக்க முடியாததாக உள்ளது. வாழ்க்கை ஊதிய அறக்கட்டளையின் சமீபத்திய அறிக்கை, 4.8 மில்லியன் மக்கள் 'உண்மையான வாழ்க்கை ஊதியம்' ஒரு மணி நேரத்திற்கு £ 9.90 அல்லது லண்டனில் £11.05 ஐ விட குறைவாக சம்பாதிக்கின்றனர். 42 சதவீதம் பேர் நிதிக் காரணங்களுக்காக உணவைத் தவிர்த்துவிட்டனர். மேலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டில் உணவு வங்கியைப் பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளது.

தொழிற் கட்சியில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவமும் அதன் பாராளுமன்ற கூட்டாளிகளும் வர்க்க போராட்டத்தின் வரவிருக்கும் வெடிப்பை அடக்க முடியாது. செப்டம்பர் 19 மற்றும் 27ல் லிவர்பூல் மற்றும் ஃபெலிக்ஸ்டோவில் 2,500 கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாள வர்க்கத்தின் உணர்வின் வலிமை இதுதான். அக்டோபர் 1ம் தேதி, அவர்களுடன் 170,000 தொழிலாளர்கள் ஈடுபடும் வேலைநிறுத்தங்களுடன் பல்லாயிரக்கணக்கான இரயில் மற்றும் தபால் ஊழியர்கள் இணைந்து ஒரு புதிய சுற்று ஒன்றைத் தொடங்குவார்கள்.

ஆகஸ்ட் 21, 2022 அன்று ஃபெலிக்ஸ்டோவ் துறைமுகத்தில் வேலைநிறுத்த நடவடிக்கையின் முதல் நாள் மறியல் போராட்டம் [Photo: Unite/WSWS]

இந்த எழுச்சி பெறும் இயக்கம், முதலாளித்துவம், போர் மற்றும் வர்க்க சலுகைகளுக்கு எதிரான சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தில் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களை நேரடியாக நிறுத்தும்.

முடியாட்சியின் மோசமான மற்றும் சமூக ஆபாசமான கொண்டாட்டத்திற்குப் பின்னர் தவிர்க்க முடியாத இணக்கமற்ற நிலை வருகிறது. பிரித்தானியின் ஆட்சியாளர்கள் தங்கள் எதிரியான தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.