மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரேசில் ஜனாதிபதி தேர்தல்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்று தேர்தல் நடக்க உள்ள நிலையில், 35 ஆண்டுகளுக்கு முன்னர் அந்நாட்டின் பலவீனமான ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டதற்குப் பிந்தைய மிகக் கடுமையான அரசியல் நெருக்கடியை இது குறிக்கிறது.
அரசு மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகார அடுக்குகளது ஆதரவுடன் அந்நாட்டின் பாசிச ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ, வாக்கு முடிவுகளை நிராகரித்து, சட்ட விரோதமாக ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரமாக அதிகாரத்தில் தங்கி இருக்க பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதற்கிடையே, இராணுவமோ பிரேசிலின் கடைசி அரசியல் தீர்ப்பாயமாக அதன் பாத்திரத்தை மீண்டும் நிறுவி கொண்டுள்ளது. சூழ்ச்சி செய்யும் ஜனாதிபதி ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குவதை தடுப்பதே நோக்கம் என்று கூறிக் கொண்டு, தேர்தல்களை ஒழுங்கமைப்பதில் பங்கெடுக்குமாறு பொது நிர்வாக அதிகாரங்களால் அழைக்கப்பட்டுள்ள தளபதிகள், வாக்கெடுப்பு நடைமுறைகளை மதிப்பிழக்கச் செய்ய வடிவமைக்கப்பட்ட மோசடி தத்துவங்களுடன் பொது மக்கள் கருத்தில் நஞ்சூட்டவும் மற்றும் தேர்தல் ஆணையத்தைப் பலவீனப்படுத்தவும் செயல்பட்டு வருகின்றனர்.
தங்களைத்தாங்களே தேர்தல்களை சரிபார்க்கும் பங்கை சுவீகரித்துக் கொண்டு, இராணுவம் தற்போதைய ஆட்சியின் வரலாற்றில் முதல்முறையாக வாக்கு எண்ணிக்கைக்கு இணையாக மற்றொரு வாக்கு எண்ணிக்கையை நடத்த உள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வாக்குப்பெட்டிகளைத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து, அவை 'மோசடி இல்லாதவை' என்பதை உறுதி செய்யவும் சிப்பாய்கள் அனுப்பப்படுவார்கள்.
அதே நேரத்தில், 'தேர்தல் வன்முறையை' தடுக்கும் சாக்குப்போக்கின் கீழ், வீதிகளில் தலையீடு செய்வதற்காக நாடெங்கிலும் ஆயுதப் படைப் பிரிவுகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. போல்சொனாரோவின் ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சிக்கு எதிராக அவர்கள் செயல்பட வேண்டியிருந்தால், டாங்கிகளை யார் மீண்டும் திரும்ப படை முகாம்களுக்கு அனுப்புவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
அடுத்த பிரேசிலிய ஜனாதிபதியைப் பெயரிடுவது, தளபதிகளின் இறுதி வார்த்தைகளைப் பொறுத்தது என்பதோடு, மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்.
பிரேசிலிய அரசியல் நெருக்கடி என்பது, அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கத்தால் அரசாங்கத்தின் ஜனநாயக வடிவங்களைக் கலைப்பதற்கான உலகளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிகழ்ச்சிப்போக்கின் மையப்பகுதிகளில் ஒன்றாகும்.
அமெரிக்க ஆதரவுடன் 1964 ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து இரண்டு தசாப்தங்களாக இராணுவத் தளபதிகளின் இரத்தக்களரி ஆட்சியை அனுபவித்த பிரேசிலில் மீண்டும் இராணுவ சர்வாதிகாரம் ஏற்படுவதற்கான பேராபத்து, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்; இத்தாலியில் பெனிட்டோ முசோலினி பாசிச இயக்கத்தின் வாரிசாக ஜிஜோர்ஜியா மெலோனி அதிகாரத்திற்கு வந்திருப்பதும்; ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் நவ-நாஜிக்கள் புத்துயிர் பெற்றிருப்பதும்; பிலிப்பைன்ஸில் மார்கோஸ் சர்வாதிகாரத்தின் அரசியல் வாரிசு அதிகாரத்திற்குத் திரும்பி இருப்பதும்; மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அவற்றின் போரில் வாஷிங்டனும் நேட்டோவும் உக்ரேனிய பாசிச சக்திகளை வளர்த்திருப்பதும் என இவை உருவாக்கிய அதே உலகளாவிய நெருக்கடியிலிருந்து இது எழுகிறது.
பிரேசிலிய அரசியல் அமைப்பு முகங்கொடுத்து வரும் மரண நெருக்கடியின் மிகத் தீவிரமான அறிகுறிகளில் ஒன்று என்னவென்றால், முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (PT) தற்போதைய இந்தச் சூழல் முன்னிறுத்தும் ஆபத்துக்களை மூடிமறைக்க முயன்று வருகிறது.
2003 இல் இருந்து 2010 வரை பிரேசிலை ஆட்சி செய்த தொழிலாளர் கட்சி வேட்பாளர் லூலா டா சில்வாவை ஜனாதிபதி தேர்தல் போட்டியில் விருப்பத்திற்குரியவராக மீண்டும் மீண்டும் கருத்துக்கணிப்புகள் எடுத்துக்காட்டி உள்ளன. லூலாவுக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும், போல்சொனாரோ 36 சதவீதத்துடன் பின்னுக்குத் தள்ளப்படுவார் என்பதை வியாழக்கிழமை வெளியான சமீபத்திய DataFolha கருத்துக்கணிப்பும் காட்டியது. இருப்பினும், மோசடி மட்டுமே முதல் சுற்றில் அவரின் முற்றுமுழுதான வெற்றியைத் தடுக்கும் என்று போல்சொனாரோ பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் கூறி உள்ளார்.
தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு இடையேயான கடைசி பொது விவாதத்தில், லூலா போல்சொனாரோ மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், போல்சொனாரோவின் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி தயாரிப்புகள் குறித்து வாய் திறக்கவில்லை. போல்சொனாரோ 'ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்த உத்தேசிக்கிறாரா' என்று கேட்கும் அந்தப் பொறுப்பு, இந்த பாசிச ஜனாதிபதியின் முன்னாள் ஆதரவாளரான União Brasil இன் அதிவலது வேட்பாளர் Soraya Thronicke மீது விழுந்தது, அதற்கு அந்த ஜனாதிபதி 'பிரச்சினை அது அல்ல,” என்று பதிலளித்தார்.
லூலாவும் தொழிலாளர் கட்சியும், போல்சொனாரோ மற்றும் இராணுவத்தின் சூழ்ச்சிகளைப் பகிரங்கமாகக் கண்டிக்க மறுக்கின்றனர். முதலாளித்துவம் மற்றும் அதன் அரசுக்கு எதிராக திரும்பக்கூடிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கம் கட்டவிழ்வது குறித்து அவர்கள் மிகப்பெரியளவில் அஞ்சுகிறார்கள், பிரேசிலில் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் ஒரு நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக, தொழிலாளர் கட்சி ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளுடன் பின் அறை பேச்சுவார்த்தைகள் நடத்தி இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க முயல்கிறது.
மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்புவதற்கான முக்கிய ஆதரவுத் தளமாக தொழிலாளர் கட்சி பார்ப்பது பிரேசிலின் தொழிலாள வர்க்கத்தையோ மற்றும் ஒடுக்கப்படும் மக்களையோ அல்ல, மாறாக 2016 இல் தொழிலாளர் கட்சியின் ஜனாதிபதி தில்மா ரூசெஃப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் அதற்கடுத்து லூலாவையே சிறையில் அடைப்பதிலும் அதன் அரசியல் சேவைகளை வழங்கிய வலதுசாரி கட்சிகள், முதலாளித்துவ வர்க்கம், இராணுவம் மற்றும் நீதிபதிகளை அது அதன் ஆதரவு அடித்தளமாக பார்க்கிறது.
லூலா அவரது பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில், வங்கிகள் மற்றும் பெருவணிகங்களின் டஜன் கணக்கான பிரதிநிதிகளுடன் ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டார், அதில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூறியதாக Globo குறிப்பிட்டவாறு, “அங்கே கூடி இருந்தவர்கள் கேட்க விரும்பிய அனைத்தையும் அவர் கூறினார்.” Riachuelo அங்காடிகளின் உரிமையாளர் Flávio Rocha போன்ற போல்சொனாரோவின் வெளிப்படையான ஆதரவாளர்கள் அங்கே இருந்தவர்களில் உள்ளடங்கி இருந்தார்கள், லூலா 'இரவு விருந்தில் கூறிய பொறுப்புறுதிகளை நிறைவேற்றினால், தன்னை அவர் நம்பலாம்' என்று Flávio Rocha கூறியதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது.
பிரேசிலிய மூலதனத்தின் வளர்ந்து வரும் துறைகள் லூலாவுடன் அணிசேர்வது, லூலாவின் அரசாங்கத்தால் இரண்டு தரப்புகளில் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. முதலாவது அமெரிக்கா மற்றும் சீனா உடனான பிரேசிலின் உறவுகளைத் தொழிலாளர் கட்சி அரசாங்கம் சமநிலையில் வைக்கும், அவ்விதத்தில் முதலீடுகளை உள்ளீர்ப்பதை ஊக்குவிக்கும் என்று அவர்கள் கணக்கிடுகிறார்கள். இரண்டாவதாக, தொழிலாளர் சக்தியைத் தீவிரமாகச் சுரண்டுவதற்கு அனுமதிப்பதில், பெருநிறுவனத் தொழிற்சங்கங்களின் உதவியோடு, அது தொழிலாள வர்க்கத்தின் மீது ஓர் இறுக்கமான பிடியை வைக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
எவ்வாறாயினும், உலக முதலாளித்துவத்தின் வெடிப்பார்ந்த இந்த நெருக்கடி, பிரேசிலிய முதலாளித்துவத்தின் இத்தகைய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு பெரிய தடையாக இருக்கும்.
சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைவில் பிரேசிலும் இலத்தீன் அமெரிக்காவும் மொத்தத்தில் இன்னும் அதிகமாக ஒரு மூலோபாய போர்க்களமாக மாறி வருகின்ற நிலையில், புவிசார் அரசியல் நடுநிலைமை வகிப்பதற்கான இலக்கு மற்றும் அவ்விரு நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ளும் சூழல் என்பது வெறும் ஒரு கனவாக உள்ளது. வாஷிங்டனின் ஏகாதிபத்திய நலன்களுக்கு பயனளிக்கும் ஒரு பயங்கரவாத நாசவேலையாக, ரஷ்யா மற்றும் ஜேர்மனியை இணைக்கும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் பாதை சமீபத்தில் நாசமாக்கப்பட்டமை, தென் அமெரிக்க கண்டம் உள்ளடங்கலாக வரவிருக்கும் விஷயங்களின் வடிவத்தை சுட்டிக் காட்டுகிறது.
மேலும், தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை நாசமாக்குவதற்கு PT உடன் இணைந்த தொழிற்சங்கங்களின் முயற்சிகளுக்கு மத்தியில், ஆழமடைந்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி பிரேசிலில் வர்க்கப் போராட்டம் வெடிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.
பிரேசிலிய அரசின் ஒடுக்குமுறைத் திறனை விரிவாக்கும் சட்டங்களைப் பாதுகாக்கும் அவரது உரைகளில், போல்சொனாரோ கூறுகையில், “சிலியை விட மோசமான' ஒரு மக்கள் இயக்கம் உடனடியாக வெடிக்கலாம் என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார், அங்கே சிலியில் ஏராளமான தொழிலாளர்களும் இளைஞர்களும் 2019 இல் சமூக சமத்துவமின்மை மற்றும் அரசியல் ஆட்சி முறைக்கு எதிராக தெருக்களில் இறங்கினர்.
இத்தகைய நிலைமைகளின் கீழ், வரவிருக்கும் PT அரசாங்கம் அரசியல் ரீதியில் நிலையற்ற ஒரு பிற்போக்கான தன்மையைக் கொண்டிருக்கும். சிலியில் கேப்ரியல் போரிக் (Gabriel Boric) மற்றும் பெருவில் பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) போன்ற இலத்தீன் அமெரிக்காவின் 'பிங்க் பேரலை' அரசாங்கங்கள் சமீபத்தில் புத்துயிர் பெற்றதைப் போலவே, தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் மீது முதலாளித்துவம் கோரும் தாக்குதல்களைச் செயல்படுத்துவதும் மற்றும் சமூக எதிர்ப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு எதிராக மூர்க்கமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதும் PT வகிக்கும் அடிப்படை பாத்திரமாக இருக்கும்.
ஆளும் வர்க்கத்தின் பார்வையில் இருந்து, அத்தகைய ஓர் 'இடதுசாரி' அரசாங்கம் ஒரு காபந்து அரசாங்கமாக மட்டுமே இருக்கும், அதன் போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக போல்சொனாரோ இன்று அறிவுறுத்தும் வகையிலான ஒரு முழுமையான சர்வாதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கு சிறந்த தயாரிப்புகளைச் செய்ய முடியும். லூலா மற்றும் PT இன் முன்வரலாறு, குறிப்பாக தற்போதைய சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கு அவர்களின் விடையிறுப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரர்களுக்கு அவர்கள் ஒவ்வொரு விட்டுக்கொடுப்பையும் வழங்குவார்கள் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி எடுத்துக் காட்டுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரேசிலிய ஆதரவாளர்களான சோசலிச சமத்துவக் குழு (GSI), தற்போதைய சூழ்நிலையில் நிலவும் மரணகதியிலான அபாயங்களை அம்பலப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த எச்சரிக்கைகளை எழுப்புகையில், அதன் நிலைப்பாடு ஒரு கட்டவிழ்ந்து வரும் துயரம் மீதான அவநம்பிக்கையான கருத்தாக இருக்கவில்லை.
தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதும், இறுதியில் எந்த அரசாங்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் நிச்சயமாக முன் வரவிருக்கும் மோதலுக்கு தொழிலாள வர்க்கத்தைத் தயார் செய்வதுமே GSI இன் அடிப்படை இலட்சியமாகும்.
பிரேசிலிய தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தின் நீண்ட வரலாற்றையும், ஆழ்ந்த ஜனநாயக மற்றும் சோசலிச பாரம்பரியத்தையும் கொண்ட ஒரு பாரிய சமூக சக்தியாகும். பிரேசிலியத் தொழிலாளர்கள் அவர்களின் கைகளில் சக்தி வாய்ந்த உற்பத்திச் சாதனங்களைக் கொண்டுள்ளனர் என்பதோடு, உலகளாவிய பொருளாதார விநியோகச் சங்கிலிகள் மூலம் உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் புறநிலையாக இணைந்துள்ளனர்.
1970 களின் இறுதியில் மற்றும் 1980 களின் தொடக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய வேலைநிறுத்த அலைகளுக்கு முதலாளித்துவத்தின் ஒரு விடையிறுப்பாக பிரேசிலில் தற்போதைய இந்த மக்கள் ஆட்சி நிறுவப்பட்டது. பொருளாதார அவல நிலைகளால் தூண்டிவிடப்பட்ட இந்த இயக்கம் தான், இராணுவ சர்வாதிகாரத்திற்குப் பேராபத்தாக இருந்து குழிபறித்தது.
தொழிலாள வர்க்கத்தின் அரை-கிளர்ச்சிப் போராட்டங்களை வேண்டுமென்றே தடம் புரளச் செய்ததன் மூலம் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தால் இந்த மரண நெருக்கடியில் அதிகாரத்தில் தங்கியிருக்க முடிந்தது. சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (OSI) லம்பேரிசவாதிகளில் (Lambertites) இருந்து சோசலிஸ்ட் கன்வெர்ஜென்ஸின் (CS) மொரேனோய்ட்டுகள் வரையிலான, வெவ்வேறு பப்லோவாத போக்குகளே இந்தக் காட்டிக்கொடுப்பு நிகழ்ச்சிப்போக்கின் பிரதான அரசியல் முகவர்களாக இருந்துள்ளனர், இவர்கள் தான் லூலா மற்றும் PT இன் உண்மையான படைப்பாளிகள் ஆவர்.
இந்த ஆண்டு தேசிய எஃகு ஆலையை (CSN) தாக்கிய தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தம், வாகனத் துறை வேலைநீக்கங்களுக்கு எதிரான அடுத்தடுத்த போராட்டங்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் இன்னும் பலரின் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் போன்ற அதன் சமீபத்திய போராட்டங்களில், பிரேசிலிய தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்துடன் ஒரு புதிய பாரிய மோதலுக்கு வர அது தயாராக இருப்பதை எடுத்துக் காட்டி உள்ளது. இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகளில், அது PT மற்றும் அதன் கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரத்துவ, வணிக-சார்பு தொழிற்சங்கங்களுடன் மோதியுள்ளது.
சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி மூலம் சர்வதேச அளவில் ஒன்றிணைக்கப்பட்ட சாமானியத் தொழிலாளர் குழுக்களை, தொழிலாள வர்க்க போராட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும் ஜனநாயக அங்கங்களாக நிறுவுவதற்காக சோசலிச சமத்துவக் குழு போராடி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச சோசலிசப் புரட்சியின் பாகமாக பிரேசிலிய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தேவைப்படும் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதில் அது ஈடுபட்டுள்ளது.
சனிக்கிழமை GMT-3 நேரப்படி மாலை 3.00 மணிக்கு நடத்தப்பட உள்ள 'பிரேசிலில் ஜனநாயக நெருக்கடியும், சோசலிச புரட்சியின் முன்னோக்கும்' என்ற அதன் நிகழ்வில் GSI இந்த முன்னோக்கை வழங்கும். எமது வாசகர்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். https://youtu.be/oFcvuM1rb7k