மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
முன்னாள் ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோவின் ஆதரவாளர்களது ஒரு பாசிச கும்பல் பிரேசிலின் அரசு தலைமையகத்தை ஜனவரி 8 இல் தாக்கிய சம்பவம், அந்த மிகப் பெரிய தென் அமெரிக்க நாட்டில் கட்டுப்படுத்தவியலாத ஜனநாயக வீழ்ச்சியை மிகவும் அப்பட்டாக எடுத்துக்காட்டி உள்ளது.
பிரேசில் தலைநகரான பிரேசிலியாவில் நடத்தப்பட்ட இந்த பாசிச தாக்குதல், ஜனாதிபதியாக தேர்வாகி இருந்த தொழிலாளர் கட்சியின் (PT) லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) பதவியேற்று சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர் நடத்தப்பட்டது.
2003 மற்றும் 2010 க்கு இடையே பிரேசிலிய அரசாங்கத்திற்குத் தலைமை வகித்த இந்த முன்னாள் தொழிற்சங்கவாதியின் தொழில் வாழ்வில் மூன்றாவது முறையாக அவர் வழங்கிய பதவியேற்பு உரையில், லூலா, இந்தச் சமீபத்திய தேர்தல்களின் அசாதாரண தன்மையை ஒப்புக் கொண்டார். 'எதேச்சதிகார அதிகாரத் திட்டம்' ஒன்று 'மக்கள் எந்திரத்தை' கைப்பற்ற இருந்ததாகவும், பரந்த 'பொதுத்துறை மற்றும் தனியார் ஆதாரவளங்களை அணித்திரட்டி' பிரேசிலில் ஜனநாயகத்தைத் தூக்கி எறிய முயன்றதாகவும் அவர் அறிவித்தார்.
லூலா சுட்டிக்காட்டிய அந்த அச்சுறுத்தல்கள், மில்லியன் கணக்கான பிரேசிலியர்களின் கவலைக்குரியதாகும். அந்நாட்டின் முன்னாள் பாசிச ஜனாதிபதி போல்சொனாரோ, ஜனநாயக அமைப்பு முறையின் மீது ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்தி, கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல்களின் சட்டபூர்வ முடிவுகளை மாற்றியமைக்க முயன்றுள்ளார்.
ஆனால், ஜனவரி 1 இல், இந்த 'பயங்கர அச்சுறுத்தல்' முறியடிக்கப்பட்டு இருப்பதாக லூலா பிரேசிலிய மக்களுக்கு உறுதியளித்தார். பாரம்பரிய வலதுசாரி கட்சிகளில் இருந்து சோசலிச மற்றும் தாராளவாத கட்சி (PSOL) வரை உத்தியோகபூர்வ முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு 'ஜனநாயக முன்னணியை' PT ஊக்குவிப்பதாலேயே, பிரேசிலில் திட்டவட்டமாக பாசிசத்தை நசுக்க முடிந்தது என்றவர் வாதிட்டார். 'இந்த தேர்தல் வெற்றி, ஜனநாயகத்தின் மிகப் பெரிய வெற்றி' என்று ஜனாதிபதி அறிவித்தார்.
ஆனால் அதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை, பாசிசவாதிகள் அவர்களின் 'பதவியேற்பு' விழாவை நடத்துவதற்கான முறையாக இருந்தது. போல்சொனாரோ ஆதரவாளர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று கருதி, லூலா பதவியேற்பின் போது முன்னோடியில்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த அதே பொலிஸ், ஜனவரி 8 தாக்குதலில் அரசு பதவிகளைக் கைப்பற்ற அந்த பாசிச கும்பலுக்குப் பாதுகாப்பு வழங்கியது.
லூலாவின் வாதங்களுக்கு நேர்முரணாக, இந்த சம்பவம், அந்த பிரேசிலிய மாநிலத்தில் ஒரு பாசிசவாத சதி செயலூக்கத்துடன் இருப்பதை அம்பலப்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அசாதாரண சம்பவங்களுக்கு விடையிறுக்கும் வகையில், தொழிலாளர் கட்சி அரசாங்கமும் அரசு துறைகளும் போல்சொனாரோ ஆதரவு கும்பலை ஒடுக்க நகர்ந்தன.
பிரேசிலியாவின் பாதுகாப்பை அவர் அரசாங்கமே கட்டுப்பாட்டில் எடுக்க அனுமதிக்கும் வகையில், பொலிஸை மீளப்பலப்படுத்த நாடெங்கிலும் இருந்து அதிகாரிகளை அழைத்து வந்து, அந்தக் பெடரல் மாவட்டத்தில் (Federal District - DF) மத்திய அரசு தலையீடு செய்ய லூலா ஆணை பிறப்பித்தார். அந்த பெடரல் மாவட்டத்தின் ஆளுநர் செர்ஜியோ இபானிஸ், உச்ச நீதிமன்றத்தால் (STF) தற்காலிகமாக நீக்கப்பட்டார், அவரது பாதுகாப்புத்துறை செயலர் ஆண்டர்சன் டோரஸ் கைது செய்யப்படுவார் என்று அச்சுறுத்தப்பட்டார். இராணுவத் தலைமையகத்தின் வாயில்களில் நவம்பரில் இருந்து தங்கியிருந்த போல்சொனாரோ ஆதரவாளர்களின் முகாம் கலைக்கப்பட்டது. அந்த முகாமிலும் மற்றும் பிரேசிலியா மீதான ஜனவரி 8 கலகத்திலும் பங்கெடுத்திருந்த ஆயிரத்து ஐந்நூறு பேர் கைது செய்யப்பட்டனர்.
லூலா மற்றும் அவர் அரசாங்கத்தின் தகவல்படி, இந்த நடவடிக்கைகள் 'பிரேசிலில் இது மீண்டும் ஒருபோதும் நடக்காது' என்பதை உத்தரவாதப்படுத்துமாம்.
நீதித்துறை அமைச்சர் Flávio Dino கூறுகையில், 'நாடு வேகமாக முழு இயல்புநிலைக்குத் திரும்பி வருவதாக' தெரிவித்தார். பிரேசில் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சி (PCdoB) சார்பாக மரன்ஹாவோ மாநிலத்தை ஆட்சி செய்திருந்த டினோ பின்வருமாறு கூறி நிறைவு செய்தார்: “பிரேசிலிய ஆயுதப்படைகள் இதுவரை ஜனநாயக சட்டத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளன. இந்த உண்மைக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும். பொதுவாக கூறுவதானால், மோசமானது முடிந்துவிட்டது என்று நான் கூறுவேன்,” என்றார்.
தொழிலாளர் கட்சியால் முன்வைக்கப்பட்ட ஆய்வறிக்கையுடன் ஒத்துப் போகும் வகையில், உத்தியோகபூர்வ ஊடகங்களின் அரசியல் ஆய்வாளர்கள் பிரேசிலியா மீதான இந்தப் படையெடுப்பைப் பிரேசிலில் தீவிர வலதுசாரி இயக்கத்தின் தோல்வியாக குறை கூற விரைந்தார்கள்.
'பிரேசிலியாவில் 'அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக' என்றழைக்கப்படுவதை ஊக்குவித்து போல்சொனாரிஸ்மோ (Bolsonarismo) தனக்குத்தானே நிலைமையை மோசமாக்கிக் கொண்டது,” என்று Estado de São Paulo குறிப்பிட்டது. “அரசின் இதயதானத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய இந்தத் தீவிரவாதிகளின் நடவடிக்கை, தற்காலிகமாக இருந்தாலும், ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை பலப்படுத்தும்' என்று அது நிறைவு செய்தது.
இந்த மதிப்பீடுகள் முற்றிலும் தவறானவை. குறிப்பாக, இராணுவம் 'இதுவரை ஜனநாயக சட்டத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளது' என்ற டினோவின் வாதம், யதார்த்தத்தின் முன்னால் காணாமல் போய்விடுகிறது.
கடந்த சில மாதங்களாக, ஆயுதப் படைகள் முன்னெப்போதும் இல்லாதளவில் பிரேசில் அரசியலில் தலையிட்டுள்ளன. இராணுவப் படைகளைக் குறித்து படைத்துறைசாரா அதிகாரிகள் பாதகமாக பேசுவதைக் கண்டித்து இராணுவத் தளபதிகள் உத்தியோகப்பூர்வ குறிப்புகளை அனுப்பி உள்ளனர். தேர்தல் முறைகேடு அபாயம் இருப்பதாக பொய் குற்றச்சாட்டுக்களையும் இராணுவம் முன்வைத்துள்ளது.
இதற்கிடையில், ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அழைப்பு விடுத்து, இராணுவப் படைமுகாம்களைச் சுற்றி நடந்த ஆர்ப்பாட்டங்களை, சட்டபூர்வ 'மக்கள் இயக்கம்' என்று இராணுவத்தின் மூத்த உயரதிகாரிகள் பாதுகாத்தனர். 1964 இல் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி, இரண்டு தசாப்தங்களுக்கு இரத்தக்களரியான சர்வாதிகார வழிவகைகளில் ஆட்சி நடத்தப்பட்ட ஒரு நாட்டில் இதெல்லாம் நடக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, அவர்களது பாசிச ஆதரவாளர்களின் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மற்றும் அதற்கு முந்தைய வன்முறைத் தாக்குதல்களுக்கான தயாரிப்புகளைக் குறித்து இராணுவம் மவுனமாக இருந்தது. அரசு கட்டிடங்களை அடித்து நொறுக்கிய நடவடிக்கை, ஒரு தடைசெய்யப்பட்ட பகுதியான பிரேசிலியாவின் ஆயுதப்படை தலைமையக வாயில்களில் தளபதிகள் உடனிருக்க பாசிசவாதிகள் தங்க அனுமதிக்கப்பட்டிருந்த இடத்தில் தொடங்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டன.
லூலாவின் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு இதுவரை இராணுவம் ஒத்துழைத்துள்ளது என்ற உண்மை, அதன் முந்தைய நிலைப்பாட்டுடன் முரண்படவும் இல்லை, அல்லது ஓர் அரசியல் திருப்பத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை.
உண்மையில் பிரேசிலில் ஒரு பாசிச இயக்கத்தை உருவாக்குவதில் நேரடியாக ஈடுபட்ட எந்த அரசியல்வாதியும் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கவில்லை. போல்சொனாரோவும் அவரின் தாராளவாத கட்சி உறுப்பினர்களும், ஆளுநரும் மற்றும் பிரேசிலியாவின் பாதுகாப்புத்துறைச் செயலரும், பாசிசவாத இராணுவமும், அனைவருமே அந்த நடவடிக்கையை ஒரு பைத்தியக்காரத்தனமான தனித்த சம்பவமாக கண்டனம் செய்தனர்.
பிரேசிலியாவில் 5,000 'பயங்கரவாதிகள்' திடீரென முளைத்து, தன்னிச்சையாக அரசாங்க பதவிகளை ஆக்கிரமிக்க தொடங்கியதாக ஒருவர் நம்ப வேண்டுமென இந்த அரசியல் சக்திகள் விரும்பி இருக்கலாம். ஆனால் பிரேசிலியாவில் இந்த பாசிசவாத தாக்குதலை ஒழுங்கமைத்தவர்கள் அரசில், குறிப்பாக இராணுவத்தில், ஆழமாக வேரூன்றி உள்ளனர் என்பது வெளிப்படையாக உள்ளது.
ஜனவரி 8 தாக்குதல் இந்த சக்திகளின் ஒரு தோல்வியைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் தொழிலாளர் கட்சி நிர்வாகத்துடனான அவர்களின் 'ஒத்துழைப்பு' இந்த அரசாங்கத்தில் அவர்களுக்கு அதிக இடமளிக்கும் என்பதோடு, அதை இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்த்த உதவும், அதேவேளையில் அதைத் தூக்கியெறியவும் அவர்கள் தயாரிப்பு செய்து வருகிறார்கள்.
இதற்குப் பொறுப்பானவர்களை மறைப்பதிலும் நிலைமை சீராகிவிட்டதாக வேகவேகமாக பொய்யாக அறிவிப்பதிலும் தொழிலாளர் கட்சி நேரடியாக ஒத்துழைப்பது பின் வேறெதைக் காட்டுகிறது?
முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளாக, PT க்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது, வெடிப்பார்ந்த அரசியல் மற்றும் சமூக நிலைமைகளின் கீழ் பிரேசிலிய ஆளும் வர்க்கத்தால் அது பதவிக்குக் கொண்டு வரப்பட்டது. கோவிட்-19 க்கு விடையிறுப்பதில் முதலாளித்துவ-சார்பு கொள்கைகள் ஏற்படுத்திய பாரிய உயிரிழப்புகள், அதிகரித்தளவில் போரால் குறிக்கப்பட்ட ஓர் உலகளாவிய பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொருளாதார தேக்கநிலை, சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக அவலங்களைக் கடந்த ஆண்டுகள் கண்டிருந்தன.
இந்த நிலைமைகள் பிரேசிலில் கட்டுப்படுத்தவியலா வர்க்கப் போராட்ட வெடிப்புக்கு தயாரிப்பு செய்கின்றன. பாசிசவாத இயக்கத்தை மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் வளர்த்தெடுப்பதே இத்தகைய புறநிலைமைகளுக்கு ஆளும் வர்க்கம் காட்டும் விடையிறுப்பாக உள்ளது.
அதன் நடுத்தர வர்க்க போலி-இடது கூட்டாளிகளால் ஆதரிக்கப்படும் தொழிலாளர் கட்சி, இந்த முதலாளித்துவ வர்க்க பிற்போக்குத்தனத்தில் ஒரு கருவியாக பங்கு வகிக்கிறது. முதலாளித்துவ அரசு நெருக்கடியின் அளவை மூடிமறைப்பதில் ஈடுபட்டும், அதன் ஜனநாயக தன்மையில் பிரமைகளை ஊக்குவித்தும், தொழிலாள வர்க்க போராட்டங்களை ஒடுக்க அதன் தொழிற்சங்க எந்திரத்தைப் பயன்படுத்தியும், தொழிலாளர் கட்சி பாசிசவாத சக்திகள் தங்களை அபிவிருத்தி செய்து கொள்ளவும் மற்றும் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் பாதை வகுக்கிறது.
சர்வதேச தொழிலாள வர்க்கம் பிரேசிலியாவில் பாசிசவாதிகளின் இந்த நடவடிக்கையை மிகத் தீவிரமான ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதலாளித்துவ முரண்பாடுகளின் எரிமலை வெடிப்பை எதிர்கொண்டுள்ள ஆளும் வர்க்கம், சர்வதேச அளவில் பாசிசவாத இயக்கங்களை வளர்த்து வருகிறது.
பிரதான முதலாளித்துவ நாடுகளிலேயே கூட பாசிசவாத சர்வாதிகாரங்களை நிறுவுவதற்கு வெகுகாலம் ஆகுமென பார்க்கக் கூடாது. அணுஆயுத போர் நிர்மூலமாக்கல் அபாயத்தின் பக்கவாட்டில், இந்த அச்சுறுத்தலும் முற்றிலும் நிஜமானதே. பிரேசிலிலும் உலகம் முழுவதிலும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில், ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமாக மட்டுமே இவற்றை எதிர்க்க முடியும்.