பிரேசிலிய ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று இராணுவத்தின் 'இணை வாக்கு எண்ணிக்கை' நிழலில் நடக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 30, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்று பிரேசிலிய ஜனாதிபதித் தேர்தல், முன்னொருபோதும் இல்லாத விதத்தில் 'இணை வாக்கு எண்ணிக்கை' மற்றும் அந்நாட்டின் இராணுவத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நடத்தப்படும் 'தணிக்கை' ஆகியவற்றின் நிழலில் நடக்கிறது. தோல்வி அடைந்தால் ஒப்புக்கொள்ள போவதில்லை என்ற அவர் அறிவிப்பை நியாயப்படுத்த, வாக்குப்பதிவு மோசடி பற்றிய பாசிச ஜனாதிபதி ஜயர் போல்சொனாரோ பயன்படுத்திய பொய்யான வாதங்களுக்கு ஏற்ப, ஆயுதப் படைகளின் கட்டளையகம் தன்னை மும்முரமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

பிரேசிலிய தேர்தல்கள் தொடர்பாக இராணுவ பொலிஸ் தலைவர்கள் தேர்தல் நீதிமன்றத்தை சந்திக்கின்றனர். [Photo: Alejandro Zambrona/Secom/TSE]

2018 தேர்தல்களில் அவருக்கு எதிராக போட்டியிட்ட தொழிலாளர்கள் கட்சியின் (PT) பெர்னாண்டோ ஹடாட்க்குச் சாதகமாக நடந்த வாக்கு மோசடிகள் மட்டுந்தான், முதல் சுற்றில் அவரின் வெற்றியைத் தடுத்ததாக போல்சொனாரோ நான்கு ஆண்டுகளாக கூறி வந்துள்ளார். தேசிய மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் சார்பாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது அவர் செயல்படுத்திய கடுமையான தாக்குதல்கள் ஏற்படுத்திய வெறுப்பின் விளைவுகளை அனுமானித்து, அப்போதிருந்து, போல்சொனாரோ இடைவிடாமல் பிரேசிலிய தேர்தல் முறையைத் தாக்கியதுடன், இத்தகைய தாக்குதல்களில் இராணுவத்தையும் பட்டியலிட்டு இருந்தார்.

இரண்டாம் சுற்றுக்கு முந்தைய கடைசி நாட்களில், தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் Luiz Inácio Lula da Silva க்குப் பின்னால் முதல் சுற்றில் 6 மில்லியன் வாக்குகளில் போல்சொனாரோ பின்தங்கியதும், இந்த நிலைமை முன்னெப்போதையும் விட அதிக ஆபத்தாக உள்ளது. இராணுவம் அவர்களின் 'தணிக்கை' குறித்து மவுனமாக உள்ளது, அதேவேளையில் தேர்தல் முடிவுகள் விஷயத்தில் அரசியலமைப்பு பங்கு எதுவும் இல்லை என்றாலும், தேர்தல் முடிவுகள் மீது இராணுவம் அதன் ஒப்புதலை அறிவித்தால் ஒழிய அவர் அதை ஏற்கப் போவதில்லை என்று போல்சொனாரோ மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

இன்னும் பயங்கரமாக, உச்ச நீதிமன்றமும் தணிக்கையாளர்களின் நீதிமன்றமும் இரண்டும் அதன் 'அறிக்கையை' வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சகத்தைக் கேட்ட போது, அதன் 'தணிக்கை' குறித்து முழுமையாக முடிவு எடுப்பதற்கு முன்னர் அது எந்த 'பகுதியான' பகுப்பாய்வையும் வெளியிடாது என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது, இது ஜனவரி 5 க்குப் பின்னர் தான் நடக்கும், அதாவது ஜனவரி 1 இல் அடுத்த ஜனாதிபதியின் பதவியேற்பு நடந்த பின்னர் தான் வெளிவரும்.

போல்சொனாரோவை ஒரு 'பாசிசவாதி' என்பவர்களுக்கும் பிரேசிலிய ஜனநாயகம் உயிர்பிழைப்பதற்கு அவர் ஓர் அச்சுறுத்தல் என்று கூறுபவர்களுக்கும் இடையே மூடிய கதவுக்குப் பின்னால் நடக்கும் பேச்சுவார்த்தைகளின் ஒட்டுமொத்த போக்கும், முதலும் முக்கியமுமாக லூலா தலைமையில் உள்ள காங்கிரஸ் எதிர்கட்சிக்கும் தொழிலாளர்கள் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும், தேர்தல்களுக்கு இறுதி நடுவராக பாத்திரம் வகிக்க இதுவரை இராணுவத்தை மேலுயர்த்துவதில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

இப்போது, முதல் சுற்று முடிவுகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக கூறும் போல்சொனாரோ, இரண்டாம் சுற்றில் வாக்குச்சாவடிகளைக் முற்றுமையிட்டு வைக்க அவருடைய பாசிச ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார், எப்போது வேண்டுமானாலும் ஆகட்டும் அடுத்த ஆளுநர் பதவி ஏற்ற பின்னரே தேர்தல் முடிவுகள் அங்கீகரிக்கப்படும் என்று இதுவரையில் இராணுவம் அறிவித்துள்ளது.

பிரேசிலிய இராணுவத்தின் இரத்தம் தோய்ந்த வரலாற்றையும், பிரேசிலில் குறிப்பாக கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டு வருகின்ற உலக முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடியையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், இத்தகைய பிரகடனம் ஒரு பயங்கர அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், பிரேசிலிய தளபதிகள், 1964 இல், காங்கிரஸைக் கலைத்தும், அரசியல் கட்சிகள் மற்றும் ஆட்கொணர்வு மனுவை அகற்றியும், உச்ச நீதிமன்றத்தை முடக்கியும், ஆயிரக் கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொன்றும், சித்திரவதை செய்தும், நாடு கடத்தியும், ஓராண்டுக்குப் பின்னர் 'கலப்படமற்ற' தேர்தல்களுக்கு வாக்குறுதியளித்து, ஜோவோ கவுலார்ட்டின் (João Goulart) முதலாளித்துவ-தேசியவாத தொழிற் கட்சி அரசாங்கத்தை அகற்றினர். 21 ஆண்டுகள் நீடிக்க இருந்த அந்த பயங்கர ஆட்சி முறை, அக்கண்டம் முழுவதும் இரத்தக்களரியான ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளுக்கும், நூறு ஆயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவதற்கும் கூட விளைநிலமாக சேவையாற்ற இருந்தது.

முன்னாள் இராணுவத் தலைவரும், அந்த சர்வாதிகாரத்தின் அரசியல் மரண தண்டனைகளுக்கு வெட்கமின்றி வக்காலத்து வாங்கியவருமான பாசிச போல்சொனாரோ, முன்னணி வேட்பாளராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும், பிரேசிலிய ஆளும் வர்க்கத்தால் விரைவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்பதோடு, மொத்தத்தில் இந்த வரலாறு 'கடந்த காலத்திற்கு' உரியது என்று தொழிலாளர் கட்சியும் பெருநிறுவன ஊடகங்களும் வாதிட்ட நிலையில், அது அவ்வாறு இல்லை என்பதை போல்சொனாரோ தெளிவாக சமிக்ஞை செய்தார். பொது நிர்வாகத் துறைகளின் சட்டபூர்வத்தன்மை மீது அதிகாரம் செலுத்த தங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் கர்வத்துடன் கூறுகிறோம் என்று இப்போது இராணுவம் உரக்க தெளிவாக அறிவிக்கிறது.

சமீபத்திய அபிவிருத்திகள் தெளிவாக அம்பலப்படுத்துவது போல, போல்சனாரோவுக்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்புக்கு, அதாவது லூலா மற்றும் தொழிலாளர் கட்சிக்கு, வாக்களிப்பதன் மூலம் இத்தகைய ஆபத்துக்களை எதிர்த்துப் போராட முடியாது. பெருவணிகம் மற்றும் வெளிநாட்டு மத்தியஸ்தர்களுடன் எண்ணற்ற சந்திப்புகளில் பிரேசிலிய முதலாளித்துவத்திற்கு தங்கள் விசுவாசத்தை உறுதி அளித்துள்ள இந்த எதிர்கட்சிகளின் முக்கிய குறிக்கோளே, சர்வதேச அளவில் பாசிச சக்திகளின் வளர்ச்சியை உந்தி வரும், பிரேசிலிய மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தைச் சுற்றி வளைத்துள்ள இந்த நெருக்கடியின் முன்னால் பொதுக் கருத்தை மழுங்கடிப்பதாகும்.

அடிமட்டத்திலிருந்து வரும் தாக்குதலைத் தடுப்பதற்காக, அந்த விதத்தில் வலதுசாரி தாக்குதலை இரட்டிப்பாக்க வழி வகுப்பதன் மூலம், மரணப்படுக்கையில் உள்ள பிரேசிலிய முதலாளித்துவ-ஜனநாயக ஆட்சிக்கு உயிரூட்டுவதே எதிர்கட்சியின் நோக்கமாகும்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், போல்சொனாரோ அவரின் முக்கிய பாசிச ஆதரவைக் கொண்டு தேர்தல் முடிவுகளை மாற்ற அழைப்பு விடுக்கும் விதத்தில், இராணுவம் தேர்தல் மோசடிகளைத் தடுக்க மறுப்பதை எதிர்கட்சிகள் முற்றிலுமாக உதாசீனப்படுத்தி வருகின்றன. திங்கட்கிழமை சாவோ பாலோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க பல்கலைக்கழக அரங்கில் நடந்த ஒரு பொது பேரணிக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், டஜன் கணக்கான புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களை ஒன்று திரட்டிய லூலா, ஞாயிற்றுக்கிழமை இரவு போல்சொனாரோ தன்னை அழைத்து தோல்வியை ஒப்புக்கொள்வார் என்று அவர் நம்புவதாக அறிவித்தார்.

போல்சொனாரோ அவருடைய சட்டபூர்வ விளம்பர அட்டவணைகளை வானொலி நிலையங்கள் ஒடுக்க அனுமதித்ததற்காக அவர் TSE ஐ சவால் விடுக்க இருப்பதாக அறிவிப்பதற்கு முன்னர் இராணுவத் தலைவர்களைச் சந்திக்க அவர் பிராச்சாரப் பாதையில் இருந்து தலைநகர் பிரேசிலியாவுக்கு அவசரமாகத் திரும்பி இருந்தார் என்று புதன்கிழமை இரவு செய்திகளுக்குப் பின்னர் லூலா இதேபோல விடையிறுத்தார். கவனமாக அபிவிருத்தி செய்யப்பட்ட அவருடைய ஆட்சிக்கவிழ்ப்பு சதித் திட்டங்களில் போல்சொனாரோவின் அறிவிப்பு மற்றொரு படி என்றாலும், அந்த ஜனாதிபதி 'மனரீதியில் உடைந்து' போயிருப்பதற்கு அதுவொரு அறிகுறி என்று லூலா அதை உதறித் தள்ளினார்.

பிரேசிலிய இடது மற்றும் 'பாசிச-விரோத' எதிர்கட்சி என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்ட முன்னணி தலைவரிடம் இருந்து வரும் இதுபோன்ற பிரகடனங்கள், அரசியல்ரீதியில் குற்றகரமாக உள்ளன. நடந்து வரும் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான திட்டங்களின் முன்னால், தொழிலாளர் கட்சியின் ஒரே வாதம் என்னவென்றால் அதன் கூட்டணி தொழிற்சங்க எந்திரம் மற்றும் போலி-இடது அடையாள அரசியலைப் பயன்படுத்தி ஒரு புதிய சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி தொந்தரவுபடுத்த சிறந்த கருவியாக அதை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று உள்ளது.

அடுத்த நிர்வாகத்தின் தலைக்கும் மேல் இராணுவம் கத்தியைத் தொங்கவிட்டுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், அது இன்னும் கூடுதலாக வலதுக்கு நகர்ந்து, இந்த இரண்டாம் கட்ட தேர்தலின் பிரத்யேக அடையாளமாக ஆகியுள்ள மதவாத, இராணுவவாத மற்றும் சட்டஒழுங்கு பிற்போக்குத்தனத்தை நோக்கி இன்னும் ஆழமாக திரும்பும் என்று மட்டுமே ஒருவர் எதிர்பார்க்க முடியும்.

இந்த திருப்பம் லூலாவின் பயபக்தியான அதிவலது 'வாழ்க்கை சார்பு' பிரகடனங்கள், கருக்கலைப்புக்கு எதிரான நம்பிக்கைகளுடன் தொடங்கியது, உலக ஏகாதிபத்தியத்துடனான பிரேசிலின் உறவுகளை மேம்படுத்த பில்லியனர்களும் வணிகப் பெருமக்களும் தொழிலாளர் கட்சிக்கு அவர்களின் பகிரங்கமான ஆதரவை அறிவிக்க வேண்டும் என்ற அவரின் முறையீடுகளை அவர் ஆழப்படுத்தியதுடனும் தொடங்கியது. அதை என்ன பின்தொடர்ந்தது என்றால், அக்டோபர் 19 இல் 'சுவிசேஷகர்களுக்கு ஒரு கடிதத்தில்' லூலா அறிவித்தவாறு, தொழிலாளர் கட்சியின் ஒரு புதிய அரசாங்கத்தின் சமூகக் கொள்கைகளின் மீது சுவிசேஷ தேவாலயங்களுக்கு அதிகாரம் இருக்கும் என்று போல்சொனாரோவை ஆதரித்து வரும் அவற்றுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

இப்போது தொழிலாளர் கட்சி பொலிஸ் எந்திரத்திற்கான சரியான கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்வதில் முழுமையாக ஒருமுனைப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போல்சொனாரோவின் பாசிச ஆதரவாளர் ராபர்டோ ஜெபர்சனுக்கும் பெடரல் பொலிஸிற்கும் இடையே நிலவிய விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டை அது கைப்பற்றியது, அதில் ஜெபர்சன் ரியோ டி ஜெனிரோவின் புறநகர் பகுதியில் உள்ள அவர் வீட்டுக்கு வெளியே அவரைக் கைது செய்ய தயாராக இருந்த பொலிஸ் படைக்கு எதிராக ஒரு தாக்கும் துப்பாக்கியைக் கொண்டு 50 ரவுண்டுகள் சுட்டதுடன், மூன்று கையெறி குண்டுகளை வீசினார்.

2002 இல் லூலா முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தொழிலாளர் கட்சியின் ஆளும் கூட்டணியில் இருந்து முறித்துக் கொண்ட — போல்சொனாரோவைப் போன்ற — முதல் தீவிரவலது கூறுபாடுகளில் ஜெபர்சன் இடம் பெற்றிருந்தார். ஜெபர்சன் பின்னர், இப்போது போலவே, ஊழல்பீடித்த பிரேசிலிய தொழிற் கட்சிக்குத் (PTB) தலைமை கொடுத்ததுடன், தொழிலாளர் கட்சியின் ஓய்வூதியங்களுக்கான வெறுக்கப்பட்ட சீர்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியது உட்பட பிரேசிலிய அவையில் வாக்குகளுக்குப் கைமாறாக மாதாந்திர உதவித்தொகை வழங்குவதாக தொழிலாளர் கட்சி அரசாங்கத்தைக் கண்டித்தார். அந்தத் திட்டத்தில் அவரே பங்கெடுத்ததற்காக 2012 இல் ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, 15 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் விடுதலை ஆனார். பின்னர் அவர் பிரேசிலிய தொழிற் கட்சியை ஒரே சீராக பாசிச சக்திகளை நோக்கி வழிநடத்தினார், போல்சொனாரோவின் விசுவாசியாக மாறியதுடன், ஜூலை 2021 இல் பாரம்பரிய பிரேசிலிய பாசிச இயக்கமான Integralistas இன் கட்சி உறுப்பினர்களாக வெகுஜனங்கள் உள்நுழைய உதவிகள் செய்தார்.

பொய் செய்திகள் மீதான விசாரணை என்ற பெயரில், அரசுக்கு ஓர் அச்சுறுத்தலாக, தேர்தல் ஆணையத்திற்கு இப்போது தலைமை வகிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸின் உத்தரவுகளுக்குப் பின்னர் விரைவிலேயே அவர் கைது செய்யப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அவர், பெடரல் அதிகாரிகளைத் தடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதக் குவியலை வைத்திருப்பது உட்பட தண்டனையின் விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறினார்.

ஜெபர்சன், நீதிமன்ற உத்தரவுகளை மீறி, தேர்தல் ஆணையத்தின் 'போலி-செய்திகள்' விரோத நடவடிக்கைகளைக் குறை கூற, சமூக ஊடகங்களின் வழியாக, போல்சொனாரோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி உத்திக்கு முழுமையாக உருவடிவம் கொடுத்தார், தேர்தல் ஆணையம் அதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் சமூக ஊடகங்களில் இருந்து நூற்றுக் கணக்கான போல்சொனாரோ காணொளிகள் மற்றும் புதிய பதிவுகளைத் திரும்ப பெற உத்தரவிட்டு இருந்தது, அவற்றை மீண்டும் பதிவிட்ட அதிவலது ஜோவெம் பன் ரேடியோவுக்குத் தடை விதித்திருந்தது. அவருடைய ஆத்திரமூட்டல் புதிய கைது உத்தரவாணையைக் கொண்டு வரும் என்பது தெரிந்தும், ஜெபர்சன் பொலிஸ் வருவதை ஒளிபரப்பத் தொடங்கினார், பின்னர் ஒரு கையெறி குண்டின் சிறிய பகுதியால் தலையில் தாக்கப்பட்டு ஒரு அதிகாரியின் தலையில் இருந்து இரத்தம் வடிவதை எடுத்துக் காட்டினார். அதன் விளைவாக, பலமான பொலிஸ் படைகள் வந்து இறுதியில் அவரைப் பிடிப்பதற்குள், போல்சொனாரோ ஆதரவாளர்கள் அவர் வீட்டைச் சுற்றி சூழ்ந்திருந்தனர்.

பின்னர் போல்சொனாரோ அவருடைய நீதித்துறை அமைச்சர் ஆண்டர்சன் டோரஸை அனுப்பினார், அவர் அருகிலுள்ள நகரமான ஜூயிஸ் டி ஃபோராவில் இருந்து தொலைபேசியில் ஜெபர்சனின் சரணடைய பேச்சுவார்த்தை நடத்தினார். போல்சொனாரோ பின்னர் 'சட்டத்தை மீறுபவர்' தண்டக்கப்பட வேண்டும் என்று ஜெபர்சனைக் கண்டித்தாலும், நீதித்துறை அமைச்சகத்தைப் பயன்படுத்தி அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றக் கட்டளைகளைப் பெற்றுள்ள அந்த ஜனாதிபதியின் பாசிசவாத ஆதரவாளர்களுக்கு ஒரு தெளிவான சேதியை அனுப்புகிறது.

அனுமானிக்கத் தக்க விதத்தில், பொலிஸூடன் நல்லிணக்கத்தைக் காட்டுவதும், இந்த நாட்டில் பாசிசவாத வன்முறைக்கு போல்சொனாரோ தான் ஒரே காரணம் என்ற பொய்யை இரட்டுப்பாக்குவதுமே தொழிலாளர்கள் கட்சியின் எதிர்வினையாக இருந்தது, அதேவேளையில் பிறப்பிலேயே தொழிலாளர்கள் கட்சி எதிர்த்து வந்த சர்வாதிகாரம் ஒருபோதும் இருந்ததே இல்லை என்பதைப் போல 'பிரேசிலிய அரசியலில் இது ஒருபோதும் நடந்ததே இல்லை' என்று லூலா அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை லூலாவும் தொழிலாளர் கட்சியும் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், அவர்களின் பதவியேற்பு மற்றும் எதிர்கால அரசாங்கத்தின் விதிமுறைகள் அதிவலது மற்றும் இராணுவத்தால் கட்டளை இடப்படும் என்பது தொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட வேண்டும். கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான நீண்ட தாக்குதல்களைத் திணிக்க தொழிலாளர்கள் கட்சி நிர்வாகத்தை ஒரு மூடுமறைப்பாக அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பது மட்டுமல்ல, மாறாக எதிர்காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற தங்களை மீண்டும் ஆயுதமேந்தவும் அதைப் பயன்படுத்துவார்கள்.

அதன் வெற்றி தவிர்க்க முடியாதது என்றாலும், வறுமை, சர்வாதிகாரம் மற்றும் போருக்கு மூல ஆதாரமான சர்வதேச முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போராட்டத்தின் அடிப்படையில் பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய தலைமையைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே அதை எதிர்க்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசிலியப் பிரிவைக் கட்டமைப்பதே இதன் அர்த்தமாகும்.

Loading