போல்சனாரோ மீதான தொழிலாளர் கட்சியின் தேர்தல் வெற்றியும் பிரேசிலிய தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் தொழிலாளர் கட்சியும் (PT) பிரேசிலின் பாசிச ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிற்கு எதிராக நாட்டின் வரலாற்றில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், தொழிலாளர் கட்சியும் ஆளும் வர்க்கத்தின் மற்ற பிரதிநிதிகளும் தொழிலாளர் கட்சி தலைமையிலான 'ஜனநாயக' மற்றும் 'பாசிச-எதிர்ப்பு' பரந்த முன்னணியை உருவாக்குவதற்கான சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆபத்துகளும் திடீரென்று மறைந்துவிட்டன என்ற கூற்றுக்களை மீண்டும் மீண்டும் கூறுகிறனர்.

சாவோ பாலோவில் ஆசிரியர்களினதும் அரசு ஊழியர்களினதும் ஆர்ப்பாட்டம்

தேர்தல் நீதிமன்றத்தால் (TSE) முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, லூலாவின் வெற்றியை போல்சனாரோ அங்கீகரிக்கத் தவறியதை அர்த்தமற்றது என்று தொழிலாளர் கட்சி நிராகரித்துள்ளது. இதுவரை, தற்போதைய ஜனாதிபதி வாக்கு எண்ணும் மோசடி பற்றிய வெளிப்படையான குற்றச்சாட்டுகளில் இருந்து விலகி, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெரால்டோ அல்க்மின் தலைமையிலான ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுடன் பதவிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.

'முடிவு' பற்றி தொழிலாளர் கட்சியினதும் பெருநிறுவன ஊடகங்களினதும் போல்சோனாரிஸம் முடிவடைந்துவிட்டது என்ற பிரகடனங்கள் பாசிச ஜனாதிபதியின் எந்தவொரு அறிக்கைக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 45 மணிநேரங்களுக்குப் பின்னரும் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்டார். இதற்கிடையில், அவரை ஆதரிக்கும் விவசாய வணிக பெருமுதலாளிகள் போல்சனாரோவுக்கு ஆதரவாக ஆயுதப்படைகளின் தலையீட்டைத் தூண்டும் முயற்சியில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சாலைத் தடைகளுக்கு உத்தரவிட்டனர்.

தேர்தல் நீதிமன்ற பிரகடனத்திற்கு சில மணிநேரங்களுக்குள், பழமைவாத செய்தித்தாளான Estado de S. Paulo கூட ஒரு வெற்றிகரமான தலையங்கத்தில் சர்வதேச அளவில் 'பிரேசில் இனி ஒரு தனிமைப்படுத்த்தப்பட்ட நாடு அல்ல' என்று அறிவித்தது. இதுதான் தொழிலாளர் கட்சிக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் போல்சனாரோ அரசாங்கம் தொடர்பாக இருந்த மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும். இதுவரை இருந்த அரசாங்கத்தை பிரேசிலிய முதலாளித்துவத்தின் உலகளாவிய நலன்களுக்கு ஒரு தடையாக அவர்கள் பார்த்தனர்.

இதைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காங்கிரஸ் தேர்தலில் போல்சனாரோவின் வலதுசாரி ஆதரவாளர்களால் தொழிலாளர் கட்சியின் நசுங்கிய தோல்வி பொருத்தமற்றது என்று தங்கள் வாசகர்களுக்கு உறுதியளிக்க விரைந்த கட்டுரையாளர்கள், பிரேசிலின் ஊழல் கட்சிகள் போல்சனாரோவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளை ஆதரிப்பதை விட புதிய ஜனாதிபதியுடன் அரசியல் பேரத்தை விரும்புவார்கள் என்றன.

பிரேசிலில் போல்சோனாரிஸம் தோற்கடிக்கப்பட்டதைப் பற்றிய மாயையான விவரிப்பு தவிர்க்க முடியாமல் சாவோ பாலோ பங்குச் சந்தையை அடைந்தது. இது கடந்த திங்கட்கிழமை தொடங்கியதிலிருந்து விரைவான அதிகரிப்பைக் கண்டது. தொழிலாளர் கட்சியின் இரத்த சோகையான சீர்திருத்த வாக்குறுதிகள் புதிய அரசாங்கத்தால் நிதி சிக்கன நடவடிக்கை மற்றும் இலாப நலன்களைப் பாதுகாத்தல் என்ற பெயரில் நிராகரிக்கப்படும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக இந்த நடவடிக்கை முதலில் இருந்தது. ஆனால் போல்சனாரோவின் பாசிச அரசியல் மிகத் தீவிரமான வெளிப்பாடாக மட்டுமே இருந்த பிரேசிலிய முதலாளித்துவத்தின் உயிர்வாழ்விற்கான நெருக்கடி பற்றிய மக்கள்தொகையின் பரந்த புரிந்துணர்வை புதைப்பதற்கு தொழிலாளர் கட்சியும் முதலாளித்துவத்தின் ஏனைய பிரிவினரிடம் உள்ள திறனில் அது தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.

யதார்த்தத்திற்கு அப்பால் எதுவும் இல்லை. போல்சனாரோ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அங்கீகரிக்காததுடன், லூலாவை ஆட்சி செய்வதைத் தடுக்க 'தேவையான அனைத்தையும்' செய்வேன் என்று தனது ஆதரவாளர்களிடம் வலியுறுத்தினார். துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவோ கூறுகையில், லூலாவை முதலில் போட்டியிட அனுமதித்தது தீவிர வலதுசாரிகளின் 'தவறு' எனவும், புதிய அரசாங்கத்தை சட்டவிரோதமானது என்றும் அறிவித்தார். நாட்டின் உளவுத்துறை அமைப்பின் தலைவரான ஜெனரல் அகஸ்டோ ஹெலினோ, போல்சோனாரிஸவாதிகள் கூறுவது போல் லூலாவுக்கு உடம்பு நலமற்று இருக்கவில்லை என்று பகிரங்கமாக புலம்பி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் உடல்நிலை குறித்து அவரது அமைப்பு உளவு பார்ப்பதை வெளிப்படுத்துகிறது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரை 'குடிகாரன்' என்று கேலி செய்த அவர், லூலாவின் கைகளில் பிரேசிலுக்கு 'சிறந்த எதிர்காலம்' இருக்க முடியாது என்று அறிவித்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் சமீபத்திய அனுபவம், பதவிமாற்றத்தின் ஆரம்பம் தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடெனின் பதவியேற்பைத் தடுக்க ட்ரம்ப் பதவிமாற்ற பேச்சுவார்த்தைகளை அனுமதிக்கும் தனது 'பொதுவான கடமையை' அவர் நிறைவேற்றியபோதும் கூட கடைசி நிமிடம் வரை செயல்பட்டார். அது பின்னர் வெளிப்படுத்தப்பட்டது போல், அவர் இராணுவ அமைப்பின் சக்திவாய்ந்த பிரிவுகளின் ஆதரவைக் கொண்டிருந்தார். இது அமெரிக்க காங்கிரஸை பாசிச கும்பல்களிடமிருந்து பாதுகாப்பதைத் தடுத்து நிறுத்தியது. ஏனெனில் அவர்கள் ட்ரம்பின் வெற்றிக்கான சாத்தியம் குறித்து தங்கள் அரசியல் கணக்கீடுகளை செய்திருந்தனர்.

பிரேசிலில், போல்சனாரோ ட்ரம்பின் மாதிரியைப் பின்பற்றுகிறார் என்பது இரகசியமல்ல. போல்சனாரோவின் மகன் எட்வர்டோ ஜனவரி 6 நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வந்ததுடன், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி வெளிவரும்போது வாஷிங்டனில் ட்ரம்பின் உள் வட்டத்தின் கூட்டங்களில் பங்கேற்றிருந்தார்.

அமெரிக்காவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் உடனடி சூழ்நிலைகளில் இருந்து ஏதாவது வித்தியாசமாக இருந்ததென்றால், அது போல்சனாரோவிற்கு அரசுக்குள்ளும் குறிப்பாக அதன் அடக்குமுறை எந்திரத்திற்குள்ளும் இன்னும் நேரடி ஆதரவு உள்ளது என்பதுதான். 'இணையான எண்ணிக்கையை' ஏற்பாடு செய்வதன் மூலம் மின்னணு வாக்குப் பெட்டிகளை கேள்விக்குறியாக்கவதில் ஆயுதப்படைகள் பல மாதங்களாக ஜனாதிபதியுடன் தங்களை இணைத்துக் கொண்டன. தேர்தல் நாளில், தொழிலாளர் கட்சியின் தேர்தல் கோட்டையாக இருக்கும் மாநிலங்களில் வாக்காளர்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்காக மத்திய பெருந்தெருக்கள் போலீஸ் அணிதிரட்டப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில், சாலைத் தடைகளுக்கு ஆதரவை வழங்குவதும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவான எதிர்ப்பாளர்களுக்கு வணக்கம் செலுத்துவதும் நாடு முழுவதிலும் இருந்து போலீஸ் அதிகாரிகள் ஒளிப்பதிவுகளில் பதிவு செய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளியன்று, CNN அறிக்கை பிரேசிலின் அரசு நிறுவனங்களுக்குள் உள்ள தீவிர பதட்ட நிலையை அம்பலப்படுத்தியது. தேர்தல் நீதிமன்ற முடிவுகளின் மீது சவால் விட போல்சனாரோ முடிவு செய்தால், ஆயுதப்படைகளின் பிரிவுகளில் ஏதேனும் ஒன்று போல்சனாரோவுக்கு ஆதரவை தெரிவித்ததாகக் கூறியது. ஆனால் அந்த நடவடிக்கை இராணுவத்தின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. CNN இற்கான அநாமதேய தகவல் 'இராணுவ ஆதாரங்களின்' அறிக்கைகள் எதிர்காலத்தில் வெளிப்படையான அச்சுறுத்தல்களைக் குறிக்கின்றன: ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு விவாதிக்கப்பட்டது, இப்போது அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஆயுதப்படைகளின் தலைவர்கள் நிர்வாக அதிகாரிகளின் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள் என தெரிவித்திருந்தது.

ஆட்சிக் கவிழ்ப்பு தடுப்புகளை உடைத்த தொழிலாளர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காட்டுவது போல், போல்சனாரோ ஆதரவு எதிர்ப்புக்கள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு வெறிக்கு பிரேசிலிய தொழிலாள வர்க்கத்திற்குள் பரந்த எதிர்ப்பு உள்ளது. இந்த சுயாதீன இயக்கத்தின் பயம்தான் அரசியல் ஸ்தாபகத்தின் சரமாரியான அறிக்கைகள் மற்றும் 'எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று உறுதியளிக்கும் ஊடகங்களினதும் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பினரால் தடுக்கப்பட்ட சாலைகளை விடுவிக்க கலகப் படைகளை அனுப்பிய போல்சனாரோவுடன் இணைந்த ஆளுநர்களின் விரைவான நடவடிக்கை இரண்டையும் விளக்குகிறது. WSWS விளக்கியது போல், தொழிலாளர் கட்சி அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் பற்றி அஞ்சுகிறது. இது பாசிசத்தினதும், சர்வாதிகாரத்தினதும் அச்சுறுத்தலை விட அதிகமாக தவிர்க்க முடியாமல் முழு அழுகிய முதலாளித்துவத்திற்கும் சவால்விடும்.

இந்த நிலைமைகளின் கீழ், போல்சனாரோவின் ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த மிக வலதுசாரிக் கூறுகளுடன் தொழிலாளர் கட்சியின் கூட்டணி மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு ஆதரவு முற்றுகைகளுக்கு எதிராக அடக்குமுறை எந்திரத்தை வன்முறையுடன் பயன்படுத்துவதற்கான அதன் உற்சாகம் ஆகியவை அரசியல் ஸ்திரமின்மையின் ஒரு மேலதிக கூறுகளாக மாறிவிட்டன. தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களிடம் முறையிட முடியாமல், அதன் உட் பிரிவுகள் அல்லது 'சமூக இயக்கங்கள்' எதற்கும் விரோதமாக, தொழிலாளர் கட்சி அரசாங்க மாற்றத்தை அவ்வகையில் ஒழுங்கமைப்பதன் மூலம் தீவிர வலதுசாரிகளினதும், காவல்துறை மற்றும் இராணுவத்தினதும் பிடியில் அதிகரித்தளவில் இருக்கவைக்கும் வகையில் ஏற்பாடு செய்து வருகிறது.

ஒரு புதிய லூலா அரசாங்கம், அது பதவியேற்குமானால் அதன் தலையின் மேல் வாள் தொங்கிக் கொண்டு உருவாகின்றது. சமூக சமத்துவமின்மையின் முன்னோடியில்லாத அதிகரிப்பிற்கும், அடக்குமுறை அரசு எந்திரத்தின் பாரிய பலப்படுத்தலுக்கும் தலைமை தாங்கும் கண்டம் முழுவதிலும் உள்ள மற்ற 'இளஞ்சிவப்பு அலை' அரசாங்கங்களின் அடிச்சுவடுகளை இது தவிர்க்க முடியாமல் பின்பற்றும்.

சிலியில் தீவிர வலதுசாரிகளை திருப்திப்படுத்த, சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கேப்ரியல் போரிக், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புகழ்ந்தும், உக்ரேனின் நவ-நாஜிகளால் தொற்றுக்குட்பட்ட அரசாங்கத்துடன் 'ஒற்றுமையை' ஊக்குவித்தும், நாட்டின் தெற்கில் மிருகத்தனமான உள்நாட்டு எதிர்ப்பு இராணுவமயமாக்கலை நீட்டித்தார். கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற 10 நாட்களுக்குள் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக துருப்புக்களை அனுப்பினார். பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனை வரவேற்று கண்டத்தின் 'பெரிய நேட்டோ அல்லாத நட்பு நாடு' மற்றும் பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய இறங்குதுறையாக இருக்கும் என உறுதிப்படுத்தினார்.

பொலிவியாவில், லூயிஸ் ஆர்ஸின் அரசாங்கம் சாண்டா குரூஸ் தன்னலக்குழுவால் மூலையில் ஒதுக்கப்படுகிறது. இது இப்போது உணவுப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும்படி அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறது. ஆர்ஜென்டினாவில், 100 சதவீத வருடாந்திர பணவீக்கத்தின் காரணமாக பெரோனிசம் வானளாவிய வறுமைக்கு தலைமை தாங்குகிறது. இது துணை ஜனாதிபதி கிறிஸ்டினா கிர்ச்னரை படுகொலை செய்யும் முயற்சியில் இருந்து தீவிர வலதுசாரிகளை தடுக்கவில்லை. இறுதியாக, பெருவின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, இந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரிகளின் கடுமையான எதிர்ப்பையும், ஜனாதிபதி மாளிகையினுள் பாதுகாப்பாக மறைந்திருந்து தொழிலாள வர்க்கத்தால் அவரது அரசாங்கம் கைவிடப்பட்டதையும் எதிர்கொள்ளும் நிலையில், ஆயுதப்படைகளை மட்டுமே நம்பியிருக்கிறார்.

லூலாவின் பழைய தேர்தல் எதிரி தற்போது உப ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெரால்டோ அல்க்மின் தொடங்கி, கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு, ஒரு காலத்தில் போராடுவதாகக் கூறிவந்த பழைய உரிமைகளினால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு நிர்வாகத்தை உருவாக்குவோம் என்று உறுதியளிக்க இரவும் பகலும் பாடுபடும் பிரேசிலின் தொழிலாளர் கட்சி தவிர்க்க முடியாமல் இதேபோன்ற பாதையையே தொடரும்.

சர்வதேசரீதியாக இருப்பது போன்றே பிரேசிலில் தீவிர வலதுசாரிகளின் மீள் எழுச்சியானது, முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளின் முன்னோடியில்லாத ஆழத்தில் அதன் மூலகாரணங்களை கொண்டுள்ளது. ஒரு அரசியல் நிகழ்வாக, இது பெரும்பாலும் 'இடது' தலைமையிலான உத்தியோகபூர்வ கட்சிகளின் நடவடிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சிகள் நீண்ட காலத்திற்கு முன்பே சமூக சீர்திருத்தம் பற்றிய எந்த வாக்குறுதியையும் கைவிட்டு, முதல் உலகப் போருக்கு முன்பு இல்லாத அளவிற்கு உலக அளவில் சமூக அழிவு மற்றும் சமத்துவமின்மையை ஆழமாக்கியது. ஏகாதிபத்திய நாடுகளில், அவர்கள் முழு நாடுகளையும் பேரழிவிற்கு உட்படுத்திய போரின் விரிவாக்கத்தை ஊக்குவித்தனர். இது உள்நாட்டில் அடக்குமுறை மற்றும் உள் கண்காணிப்பு அமைப்பின் பாரிய வலுவூட்டலுடன் ஒன்றுகூடி நிகழ்ந்தது.

21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்கள் கடந்த நூற்றாண்டின் அனைத்து அழிவுகளும் அழுக்குகளும் மீண்டும் வெளிப்படுவதைக் கண்டன. அதில் பாசிசப் போக்குகள் அவற்றின் கூர்மையான அரசியல் வெளிப்பாடாக இருந்தன. சர்வதேச முதலாளித்துவம் தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்குத் திரும்புவதற்கான காரணம் இந்த முரண்பாடுகளுக்கு எந்த முற்போக்கான தீர்வையும் வழங்க இயலாமலிருப்பதாகும். இதற்கு மாறாக அது தொழிலாள வர்க்க எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதை நாடுகிறது.

பிரேசிலிய தீவிர வலதுசாரியை இயல்பானதாக்குவதற்கு தொழிலாளர் கட்சி முக்கிய ஊக்குவிப்பாளராக இருந்தது. 1964-1985 அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தின்போது இழிபெயர் பெற்ற சித்திரவதை செய்பவரான Mourão விற்கு உத்தியோகபூர்வ அஞ்சலியை ஒருங்கிணைத்த பின்னர், முன்னாள் தொழிலாளர் கட்சியின் ஜனாதிபதி டில்மா ரூசெஃப் மூலம் அவர் சுதந்திரமாக விடப்பட்டார். லூலாவின் மரணத்தைப் பிரசங்கிக்கும் ஜெனரல் ஹெலினோ, ஹைட்டியில் குற்றவியல் ஐ.நா தலையீட்டிற்கு தலைமை தாங்கினார். அதில் லூலா அரசாங்கம் ஆர்வத்துடன் இணைந்தது.

ஆனால் இன்னும் அடிப்படையில், தீவிர வலதுசாரிகள் 2015-2016 ஆண்டுகளில் தொழிலாளர் கட்சியின் 'தேசியவாத' மற்றும் பாதுகாப்புவாத கொள்கைகளின் பேரழிவுகரமான முடிவால் உருவான சமூக அழிவையும், அதேபோல் பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கியதன் மூலம் உருவாக்கப்பட்ட அரசியல் நோக்குநிலையின்மையையும் பயன்படுத்திக்கொண்டன.

தொழிலாளர் கட்சியினால் வளர்க்கப்பட்ட தேசியவாத மாயைகள் 20 ஆம் நூற்றாண்டின் முழு வரலாற்று அனுபவத்திற்கும் எதிரானதாகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் மார்க்சிசத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வரலாறு, பிரேசில் போன்ற காலதாமதமான முதலாளித்துவ வளர்ச்சியை கொண்ட நாடுகளில், முந்தைய நூற்றாண்டுகளில் புரட்சிகர முதலாளித்துவ வர்க்கத்தால் அடையப்பட்ட குறைந்தபட்ச ஜனநாயக கடமைகளுக்கான தீர்வு சோசலிச நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்கியிருக்கின்றது என்பதை நிரூபித்தது.

மேலும், இந்த தேசியவாத மாயைகள் இரண்டாம் உலகப் போரின் பேரழிவைத் தொடர்ந்து வந்த தேசிய அரசை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தங்களின் குறுகிய காலத்தில் தங்கியிருந்தன. இந்த சீர்திருத்தங்கள், போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சியை ஸ்ராலினிசம் நசுக்கியதன் மூலமும், ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்காவின் மேலாதிக்க பாத்திரத்தின் மூலமும் முதலாளித்துவத்தின் தற்காலிக ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

நான்காம் அகிலம் முன்னறிவித்தபடி, இத்தகைய நிலைமைகள் விரைவில் ஒரு புதுப்பிக்கப்பட்ட முதலாளித்துவ நெருக்கடிக்கு வழிவகுக்கும், அதில் முதலாளித்துவம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெற முற்படுவதுடன், உலக மறுபகிர்வுக்கான ஒரு புதிய பந்தயத்தில் ஈடுபடும். இது உலகப் போரை நோக்கிய உந்துதலால் இப்போது அம்பலமாகியுள்ளது.

லூலா மற்றும் ஸ்ராலினிசத்தின் வாரிசுகளைச் சுற்றியுள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்தை விடவும், தேசிய சீர்திருத்தவாத மாயைகளை ஊக்குவிக்கும் மையத்தில், முந்தைய தசாப்தங்களில் நான்காம் அகிலத்துடன் முறித்துக் கொண்ட துரோகிகளால் வழிநடத்தப்பட்ட தொடர்ச்சியான திருத்தல்வாத நீரோட்டங்கள் இருந்தன. ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த நஹுவேல் மொரேனோ மற்றும் பிரெஞ்சு பியர் லம்பேர் போன்றவர்கள். PSTU மற்றும் PSOL போன்ற கட்சிகளில் இப்போது இணைந்துள்ள இத்தகைய போக்குகள், 1964-1985 சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த புரட்சிக்கு முந்தைய நெருக்கடியின் மத்தியில், சோசலிசத்திற்கான ஒரு வாகனமாக தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் மார்க்சிசத்திற்கு விரோதமான தொழிலாளர் கட்சி போன்ற ஒரு கட்சி இருக்கக்கூடும் என்று வாதிட்டன.

இரண்டு தசாப்தங்களில், அதன் உருவாக்கம் முதல் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வது வரை, தொழிலாளர் கட்சி திருத்தல்வாதிகள் வழங்கிய 'கோட்பாட்டு' நியாயங்களில் தங்கியிருந்து பிரேசிலிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நலன்புரி அரசையும், சோசலிசத்தையும் கூட பிரத்தியேகமாக தேர்தல் பாதையால், எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளித்துவ அரசின் கட்டமைப்பை பாதிக்காது கட்ட முடியும் என்று உறுதியளித்தது. நிலமற்ற கிராமப்புற தொழிலாளர்கள் இயக்கம் (MST) போன்ற தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடைய வெளிப்படையான தீவிர 'சமூக இயக்கங்கள்' கூட, புனிதமான '1988 அரசியலமைப்பின்' குறுகிய வரம்புகளுக்குள் எப்போதும் இயங்கி வருகின்றன. இந்த அரசியலமைப்பு சர்வாதிகாரத்தின் சட்டங்களை மாற்றியமைத்து, முதலாளித்துவ இலாப நலன்களின் முழுமையான ஆட்சியின் வரம்புகளை ஒன்று அல்லது மற்றொரு பயனற்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவ அரசின் மீது அழுத்தங்களை மட்டுமே பிரயோகிக்க முயன்றது.

முற்றிலும் ஊகிக்கக்கூடியது போலவே, தொழிலாளர் கட்சியின் தேசிய அளவில் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் பொருட்களின் ஏற்றம் இடைக்கால நிலைமைகளில் சரிவைக் கண்டது. இது முதல் லூலா அரசாங்கத்தை குறைந்தபட்ச வறுமை நிவாரண திட்டங்களுக்கு நிதியளிக்க அனுமதித்தது.

இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான போராட்டத்தை நடத்துவதைத் தடுப்பதே தொழிலாளர் கட்சியின் முக்கிய அக்கறையாகும். இந்த முரண்பாடுகள் ஒரு திருப்புமுனையை எட்டியிருப்பதை தற்போதைய முன்னோடியில்லாத சூழ்நிலை வெளிப்படுத்துகிறது. 'பிரேசிலிய நிறுவனங்களின் பலம்' பற்றிய பிரச்சாரத்தின் குண்டுவீச்சுகள் இருந்தபோதிலும், நாடு உள்நாட்டுப் போரின் விளிம்பில் இருப்பதையும், தீர்க்க முடியாத உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியை எதிர்கொள்வதையும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர்.

பிரேசிலிய தொழிலாள வர்க்கம் ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டால், லூலா தீவிர ஸ்திரமற்ற ஒரு ஆட்சிக்கு தலைமைதாங்குவதுடன், மேலும் தாக்குதலுக்கான புதிய வாய்ப்பிற்காக காத்திருக்கும் தீவிர வலதுசாரிகளின் பிணைக் கைதியாக இருப்பார். ஆனால் தற்போதைய நெருக்கடி தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச சோசலிசப் புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கியெறிய வேண்டியதன் அவசியத்தையும் சாத்தியத்தையும் அது முன்வைக்கிறது.

இந்த சாத்தியத்தை உணர்ந்து கொள்வதற்கு, தொழிலாள வர்க்கத்தின் மையப் பணி தொழிலாளர் கட்சியின் மற்றும் அதன் அரசியல் துணைக்கோள்களான போலி இடதுகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து தீர்க்கமானதும், நனவானதுமான முறிவு ஆகும். இவர்கள்தான் தற்போதைய நெருக்கடிக்கு இட்டுச்சென்ற அரசியல்பாதைக்கான முக்கிய பொறுப்பாளிகளாவர்.

இது தொழிலாளர் கட்சியாலும், அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களாலும் ஊக்குவிக்கப்படும் தேசியவாத தீர்வுகள் பற்றிய அனைத்து தவறான கூற்றுகளையும் நிராகரித்து எதிர்க்கும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச தலைமையை கட்டியெழுப்பவேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகின்றது. சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசிலியப் பிரிவாக இந்தத் தலைமை கட்டமைக்கப்பட வேண்டும்.

Loading